குழந்தையில் பழகும் துாங்கும் பழக்கம் வாழ்க்கை முழுவதும் தொடரும்
குழந்தைகளுக்கு துாக்கமின்மை பிரச்னை வருமா?
'என் குழந்தை, ராத்திரியில் துாங்கவே மாட்டேங்குது டாக்டர்' என்று சொல்லும் பெற்றோர், சமீபத்தில் அதிகரித்து உள்ளனர். குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு, ஊட்டச்சத்து மிக்க உணவு, போதுமான அளவு தண்ணீர் எவ்வளவு முக்கியமான அடிப்படை தேவையோ, அதற்கு சற்றும் குறைந்தது இல்லை, குறிப்பிட்ட மணி நேர துாக்கமும். இதை, பெற்றோர் புரிந்து கொள்வதே இல்லை.
குழந்தைகளின் துாக்கமின்மைக்கு என்ன காரணம்?
திட்டமிட்டே எந்தக் குழந்தையும், துாக்கத்தை தவிர்ப்பது இல்லை. காலையில் சீக்கிரம் எழுந்து, பள்ளி செல்ல வேண்டிய கட்டாயம். மாலை வீடு திரும்பியதும், டியூஷன், சிறப்பு வகுப்புகளுக்கு செல்கின்றனர். அவற்றை முடித்து வீட்டிற்கு வந்ததும், மொபைல் போன், 'டிவி' ஆகியவற்றை பார்க்கின்றனர். நம்மை தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி என, பெற்றோரும் கண்டு கொள்வதில்லை.அதன்பின், தாமதமாக இரவு உணவு சாப்பிட்டு, தாமதமாக துாங்கி, காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். இந்த பரபரப்பில், குழந்தைகளுக்கு போதுமான அளவு, துாங்குவதற்கு நேரமே இருப்பதில்லை.
இதனால் என்ன பிரச்னைகள் ஏற்படும்?
போதுமான அளவு துாக்கம் இல்லாத குழந்தையை, தினமும் குறிப்பிட்ட நேரம், ஆழ்ந்து உறங்கும் குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்த்தாலே, வித்தியாசத்தை எளிதாக புரிந்து கொள்ள முடியும். துாக்கம் இல்லாவிட்டால், வகுப்பில் கற்றுக் கொள்வது, மனதில் நிற்காது; மறந்து விடும். கேட்கும் கேள்விகளுக்கோ, விருப்பங்களுக்கோ சரியான பதில் தர முடியாது; எதிலும் ஆர்வம் இருக்காது. எது கேட்டாலும் பொறுமையில்லாமல், எரிச்சலாக பதில் சொல்வர். விளையாட்டில் ஆர்வம் இருக்காது. பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்கள், நண்பர்களுடன் இணக்கமான உறவு இருக்காது.
ஆழ்ந்த துாக்கத்தால் ஏற்படும் பலன்கள்?
எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பர். எந்த விஷயத்தையும் கற்றுக் கொள்வது சுலபம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பருவ நிலை மாற்றங்களால் ஏற்படும் காய்ச்சல், சளி போன்ற தொற்றுகளை எதிர்த்து போராடும் வலிமை கிடைக்கும்; கற்பனை திறன் அதிகரிக்கும். எப்போதும், குழந்தைகளின் இயல்பான, உற்சாக மனநிலையில் இருப்பர். அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை, அவர்களே சுலபமாக தீர்த்துக் கொள்ளும் திறன் வளரும்.
எத்தனை மணி நேரம் துாக்கம் அவசியம்?
மூன்று முதல் ஐந்து வயது வரையுள்ள குழந்தைகள், பதினொன்று முதல், பதின் மூன்று மணி நேரம் துாங்க வேண்டும். ஐந்து முதல் எட்டு வயதிற்கு, பத்து முதல், பதினொன்று மணி நேரம் துாக்கமும், ஒன்பது முதல் பதினொன்று வயது வரை, ஒன்பது முதல் பதினொன்று மணி நேரமும், வளர் இளம் வயதான, பதின்மூன்று முதல் பதினேழு வயது வரை, ஒன்பது முதல் பத்து மணி நேர துாக்கமும் அவசியம். துாக்கம் என்றால், இரவு முழுவதும் இடையில் எழுந்திருக்காமல், ஆழ்ந்து துாங்க வேண்டும்.
ஆரோக்கியமான துாக்கத்திற்கு வழி முறைகள்?
குறிப்பிட்ட நேரத்தில் துாங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்க பழக்க வேண்டியது முக்கியம். அதிகபட்சம், 9:00 மணிக்கு முன், குழந்தைகளை துாங்க வைத்து விட வேண்டும். துாங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன், இரவு உணவை கொடுத்து விட வேண்டும். துாங்கப் போகும் முன், பசித்தால் பால் தரலாம்.மாலை நேரத்தில், ஒரு மணி நேரம் விளையாட அனுமதிப்பது, துாங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன், மொபைல்போன், 'டிவி' போன்ற மின் சாதனப் பொருட்களை தராமல் இருப்பது மிகவும் முக்கியம்.
படுக்கை அறை, விரிப்புகள், திரைச்சீலைகள், போர்வை போன்ற, குழந்தைகள் பயன்படுத்தும் அனைத்தும், சுத்தமாக இருக்க வேண்டும். படுக்கை அறை, சத்தம் இல்லாமலும், இருட்டாகவும் இருப்பது முக்கியம். அவசியம் இருந்தால், 'ஜீரோ வாட்ஸ்' விளக்குகளை பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு பய உணர்வு இல்லாமல், பாதுகாப்பாக துாங்குவதற்கான சூழலை உருவாக்கி தர வேண்டும். குழந்தை பருவத்தில் உருவாகும் துாங்கும் பழக்கம், வாழ்க்கை முழுவதும் வரும் என்பதை மறந்துவிடக் கூடாது.
டாக்டர் லலிதா ஜானகிராமன்குழந்தைகள் நல மருத்துவர், சென்னை.)044 - 4200 1800
படுக்கை அறை, விரிப்புகள், திரைச்சீலைகள், போர்வை போன்ற, குழந்தைகள் பயன்படுத்தும் அனைத்தும், சுத்தமாக இருக்க வேண்டும். படுக்கை அறை, சத்தம் இல்லாமலும், இருட்டாகவும் இருப்பது முக்கியம். அவசியம் இருந்தால், 'ஜீரோ வாட்ஸ்' விளக்குகளை பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு பய உணர்வு இல்லாமல், பாதுகாப்பாக துாங்குவதற்கான சூழலை உருவாக்கி தர வேண்டும். குழந்தை பருவத்தில் உருவாகும் துாங்கும் பழக்கம், வாழ்க்கை முழுவதும் வரும் என்பதை மறந்துவிடக் கூடாது.
டாக்டர் லலிதா ஜானகிராமன்குழந்தைகள் நல மருத்துவர், சென்னை.)044 - 4200 1800
No comments:
Post a Comment