Monday, December 9, 2019

நோய்களைத் தீர்க்கும் மழைக்கால மூலிகைகள் thanks to vikatan.com

Published:Updated:

நல்மருந்து 2.0 - நோய்களைத் தீர்க்கும் மழைக்கால மூலிகைகள்!

மருத்துவம் - 11 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!
ஒடு ஒடுக்கி
ஒடு ஒடுக்கி
ழைக்காலங்களில், நிலத்தில் தன்னிச்சையாக முளைத்துக் கிளம்பும் சில தாவரங்களே மழைக்கால மூலிகைகள். இவை ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் முளைக்கத் தொடங்கி, மார்கழி மாதத்தில் பூத்து, தை மாதம் காய், கனிகளை உருவாக்கி, மாசி, பங்குனி மாதங்களில் கோடை வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியவுடன் விதைகளை உதிர்த்துவிட்டு, வெயிலில் கருகி அழிந்துவிடும். வீழ்ந்த விதைகள், பத்திரமாக மண்ணில் உயிர்ப்புடன் ஆறு மாதங்கள் இருந்து, மீண்டும் ஐப்பசி மழை ஆரம்பித்தவுடன் முளைக்கத் தொடங்குவது இயற்கையின் விந்தை.
கலப்பைக் கிழங்கு (செங்காந்தள்)
கலப்பைக் கிழங்கு (செங்காந்தள்)
கலப்பைக் கிழங்கு (Gloriosa Superba)
கலப்பைக் கிழங்கு தாவரம் ‘செங்காந்தள்’ என அழைக்கப்படுகிறது. இதன் மலர், தமிழ்நாட்டின் மாநில மலராக இருக்கிறது. மழையின்போது இடி, மின்னல் விழுந்தால் மட்டுமே முளைக்கும் இயல்புடையது செங்காந்தள். இதன் பூ, `கண்வலிப் பூ’ என்றும் அழைக்கப் படுகிறது. சித்த மருத்துவத்தில் இது தனியாகக் கையாளப்படுவதில்லை. இதன் கிழங்கைத்தான் ‘வெண்ணாபி’ என்று சில மருந்துக் கடைகளில் விற்கிறார்கள். இதன் கிழங்கு, மிகவும் கொடிய நஞ்சுத் தன்மை வாய்ந்தது. `பாம்புக்கடி, தேள்கடி நஞ்சுகளை குணமாக்கும்’ என நூல்கள் கூறினாலும், அதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை. எனவே இதன் பூக்களின் அழகைக் கண்டு ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வது நல்லது. இதன் கிழங்குடன் கார்போகரிசி, கருஞ்சீரகம், காட்டுச்சீரகம், சந்தனத்தூள் சேர்த்து மேற்பூச்சாகப் பூச, மிக மோசமான தோல் நோய்கள், குறிப்பாக நாள்பட்ட பற்றுகள் மாறும்.
இம்பூறல்
இம்பூறல்
இம்பூறல் (Oldenlandia umbellata)
`இன்புறா’, `சாயவேர்’ போன்ற பெயர்களிலும் இது அழைக்கப்படுகிறது. மழைக்காலங்களில் தரிசு நிலங்களில் குறிப்பாக, செம்மண் தரைகளில் மிக வேகமாக முளைத்தெழும் புல்வகையைச் சேர்ந்த தாவரம். மிகச்சிறிய, சிறிது தடிமனான இலைகளையும் கொத்துக் கொத்தாக வெள்ளை நிறப் பூக்களையும் உடையது. ரத்தவாந்தி, ரத்த இருமல் ஆகிய அறிகுறிகள்கொண்ட காசநோய்க்கு இது மிகச்சிறந்த மருந்து.
இம்பூறல் அடை
இம்பூறல் இலைகளை நிழலில் உலர வைத்து, பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பங்கு பொடியுடன், இரண்டு பங்கு அரிசிமாவு சேர்த்து, தேவையான அளவு வெந்நீர்விட்டுப் பிசைந்துகொள்ளவும். அதை அடையாககத் தட்டி, பசுநெய்யில் சுட்டு காசநோயாளிகள் சாப்பிடலாம். அவர்கள் சாப்பிட்டுவரும் ஆங்கில மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டே இந்த அடையை உண்டு வரலாம். இதன் வேரைச் சேகரித்து மண்போகக் கழுவி, நிழலில் உலர்த்தி சூரணமாகச் செய்து கொள்ளவும். இந்தச் சூரணத்தில் 10 கிராம் எடுத்து, 100 கிராம் அரிசிமாவு சேர்த்து அடையாகச்சுட்டுச் சாப்பிட்டு வர, எல்லாவிதமான சளித் தொல்லைகளும், வறட்டு இருமலும் குணமாகும்.
விஷ்ணுகிரந்தி
விஷ்ணுகிரந்தி
விஷ்ணுகிரந்தி (Evolvulus alsinoides)
‘விடாத காய்ச்சலுக்கு விஷ்ணுகிரந்தி’ என்பது நாட்டார் வழக்கு. இது மழை பெய்தவுடன் தரிசு நிலங்களில் வேகமாகப் படர்ந்து வளரும். இதில் நீலநிறப் பூக்கள் பூக்கும். இதன் சமூலம், தூதுவளைக் கொடி, துளசி சமூலம், கண்டங்கத்திரி சமூலம், பற்படாகம், ஆடாதொடை இலை, நிலவேம்பு ஆகிய மூலிகைகளைப் பச்சையாக 30 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை உரலில் இட்டு, ஒன்றிரண்டாகச் சிதைத்து, அதனுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து 250 மி.லியாகக் காய்ச்சி வற்றவைக்க வேண்டும். அதை ஃப்ளாஸ்க்கில் வைத்துக்கொண்டு இரண்டு அல்லது மூன்று வேளை குடித்துவர எல்லா வகைக் காய்ச்சல்களும் குணமாகும்.
‘மாலாகச் சூரண மழையிட னுண்டியச்
சூலக மாந்தர்க்கு சூட்சிய தாக்குமே’ தேரன் காப்பியம்
விஷ்ணுகிரந்திப் பொடியை இளஞ்சூடான நீருடன் கலந்து குடித்து வர, பிள்ளைப்பேறு உண்டாகும் என்பது இதன் விளக்கம். இந்தக் குறிப்பு சித்த மருத்துவக் கல்லூரிப் பாடநூலில் இடம்பெற்றாலும், சித்த மருத்துவர்கள் இதை அதிகம் பயன்படுத்துவதில்லை. வட இந்திய ஆயுர்வேத மருந்து நிறுவனங்கள், பெண் மலடு நீக்கும் மருந்துகளில் விஷ்ணுகிரந்தியை அதிகம் பயன்படுத்துகின்றன.
சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு
சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு
நத்தைச்சூரி (Spermacoce hispida)
இது, மழைக்காலங்களில் தரையில், நீளமான கொடிகளாகப் படர்ந்து வளரும் தாவரம். வெண்மையான நீல நிறத்தில் சிறிய பூக்கள் காணப்படும். ‘எதையும் செய்யுமாம் நத்தைச்சூரி’ என்பது பழமொழி. நத்தைச்சூரி வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து, 200 மி.லி கொதிக்கும் நீரில் போட்டு, இரண்டு மணி நேரம் ஊறவைத்து, வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அதை வேளைக்கு 30 முதல் 50 மி.லி வீதம் தினமும் மூன்று வேளை குடித்துவந்தால், உடல் முழுதுமோ, ஏதாவது ஒரு குறிப்பிட்ட உறுப்பில் தாக்கும் நோயோ குணமாகும். இவ்வாறாகக் குடிநீர் வழங்கி ‘சரவாங்கி வாதம்’ எனப்படும் ரூமட்டாய்டு வாத (Rheumatoid arthritis) நோயாளிகளின் வலி நன்கு குறைந்துவருவதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.
நத்தைச்சூரி, அம்மான் பச்சரிசி
நத்தைச்சூரி, அம்மான் பச்சரிசி
நத்தைச்சூரிக் கொடி நன்கு முற்றியதும் பிடுங்கி, எள்ளுச்செடியை சண்டு அடிப்பதுபோல அடித்தால் அதன் விதைகள் கொட்டிவிடும். இது எள்போலவே மிகச் சிறியதாக இருக்கும். விதையைப் பொடி செய்து தனியாகவோ லேகியமாகவோ கிண்டி சாப்பிட்டுவர சீதபேதி, சூட்டுக்கழிச்சல் ஆகியவை குணமாகும். இதன் வேரை மட்டும் அரைத்து பற்றுப் போட, கல் போன்ற வீக்கங்கள் கரையும்.
அம்மான் பச்சரிசி (Euphorbia hirta)
இதற்குச் ‘சித்திரப் பாலாடை’ என்ற இலக்கியப் பெயர் உண்டு. ‘பாலாட்டங் கொழை’ என்பது பாமர மக்களின் வழக்குப் பெயர். இதில் வெள்ளைத் தண்டுடையதும், சிவப்பு நிறத்தண்டுடையதும் உண்டு. இதன் பூமஞ்சரி, பச்சரிசியைப்போலக் காணப்படுவதால் இந்தப் பெயர் வந்தது. இதன் தண்டை ஒடித்தால் பால் வரும். தண்டு, இலை, அரிசி என அனைத்தையும் சேகரித்து, பசுந்தயிர்விட்டு அரைத்துத் துவையல் பதத்தில் நெல்லிக்காய் அளவு காலையில் வெறும் வயிற்றில் உண்டுவர, நாள்பட்ட வெள்ளைப்படுதல், நீர்க்கடுப்பு, இந்திரிய ஒழுக்கு போன்ற மேகநோய்கள் குணமாகும். தொடர்ந்து 48 நாள்கள் உண்டுவர, உடல் குளிர்ச்சியாகி, தாதுக்கள் வலுப்பெற்று உடல் பலம் பெறும். கண்கள் குளிர்ச்சியடையும். வேர் நீங்கலாக முழுச்செடியை, காய்ச்சிய பசும்பாலில் அரைத்து வடிகட்டி, பாலூட்டும் தாய்மார்கள் உண்டுவர, பால் சுரப்பு அதிகரிக்கும். இதன் பாலை, நகச்சுற்று, சொத்தை நகம், மரு, பாலுண்ணிகள், முகப்பரு ஆகியவைமீது பூசிவர அவை தழும்பின்றி மறையும்.
நாய்த்துளசி, முள்ளுக்கீரை
நாய்த்துளசி, முள்ளுக்கீரை
நாய்வேளை (Cleome viscosa)
இது மூன்று கூட்டிலைகளைக்கொண்ட சிறு தாவரம். மஞ்சள் நிறத்தில் பூப்பூத்து, காய் காய்க்கும். இதன் விதைகள் கடுகுபோல இருக்கும். இதில், வெள்ளை கலந்த நீலநிற பூக்களுடைய இனமும் உண்டு. இதன் இலையுடன், சிறிது சின்ன வெங்காயம் சேர்த்து துவையல் பதத்தில் அரைத்து வழித்து, நல்லெண்ணெயில் வதக்கி, இளஞ்சூட்டில் வைத்துக் கட்டிவர மூலமுளை வலி குறைவதுடன் மூலமுளைக் கட்டிகளும் அமுங்கிவிடும். இதே பக்குவத்தை வேறு கட்டிகள்மீதும் பயன்படுத்தலாம். பூப்பதற்கு முன்னர் இளந்தளிராக இருக்கும்போது இதைப் பறித்து, பிற கீரைகளுடன் கலந்து சமைத்து உண்டுவந்தால், வாய்வுத் தொல்லை நீங்கும். பெண்களின் மாதவிடாய் சிக்கலுக்கும் இது நல்ல தீர்வு.
பேராமுட்டி, திருமேனி
பேராமுட்டி, திருமேனி
முள்ளுக்கீரை (Amaranthus spinosus)
இது, சாலையோரங்களிலும், நீர்நிலைகளின் கரையோரங்களிலும் மழை பெய்தவுடன் கூட்டம் கூட்டமாக முளைக்கும். பார்ப்பதற்குத் தண்டுக்கீரைபோலவே இருக்கும். இதன் இலைகளில் நிறைய முட்கள் காணப்படுவதால், `முள்ளுக்கீரை’ என அழைக்கப்படுகிறது. இதன் சாறு சேர்த்து தங்கபஸ்பம் தயாரிக்கப்படுகிறது. சிவப்புத் தண்டுடைய முள்ளுக்கீரை, `செம்முள்ளிக்கீரை’ என அழைக்கப்படுகிறது. இளந்தண்டாக இருக்கும்போது அதாவது, முள் முளைப்பதற்கு முன்னர் இதைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிட, சிறுநீர் நன்கு பிரியும்; உடலும் மெலியும். முற்றிய முள்ளுக்கீரையை வேருடன் பிடுங்கி, குறுகத் தறித்து நிழலில் உலரவிட வேண்டும்.
பிறகு, ஒன்றிரண்டாக இடித்து, 50 கிராம் பொடியுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து கால் லிட்டராக சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடித்துவர, மூன்று மாதங்களுக்குள் பருத்த உடல் நன்கு இளைக்கும். இலையைத் தண்ணீர்விட்டு அரைத்து, கட்டிகள் மீது பற்றுப்போட அவை அமுங்கும்.
கோபுரந்தாங்கி, கானவாழை
கோபுரந்தாங்கி, கானவாழை
அதேபோல வேரைச் சுட்டு சாம்பலாக்கி, சோறு வடித்த கஞ்சியில் குழப்பி, கட்டிகள்மீது போட அவை விரைவில் பழுத்து உடையும். வேருடன் முள்ளுக்கீரையை முழுமையாக இடித்து 500 மி.லி தண்ணீர் சேர்த்து எட்டில் ஒரு பங்காக வற்றவைத்து வடிகட்டிக்கொள்ளவும். இதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்துவர நீர்க்கட்டு நீங்கிச் சிறுநீர் பிரியும். இப்படி மூன்று முதல் ஐந்து நாள்கள் தொடர்ந்து செய்துவரவும்.
ஒடு ஒடுக்கி
ஒடு ஒடுக்கி
வெட்டுக்காயத்தைக் குணமாக்கும் பச்சிலைகள்
வெட்டுக்காயப்பூண்டு, கிணற்றுப்பூண்டு, தாத்தாப்பூச்செடி (Tridax procumbans); அரிவாள்மனைப்பூண்டு, அரிவாள் மூக்குப் பச்சிலை (Sida acuta); ஒடிவு அடக்கி, ஒடொடக்கி, ஒடு ஒடுக்கி (Justicia simplex)... இந்த மூன்று பச்சிலைகளுமே வெட்டுக்காயங்களை குணப்படுத்துவதில் மிகச் சிறந்தவை. இவற்றில் மூன்றாவதாகச் சொல்லப்பட்ட தாவரம், டெட்டனஸ் கிருமித்தாக்குதலைக் கட்டுப்படுத்துவதாக நூல்கள் கூறுகின்றன. மிக ஆழமான காயங்களைக்கூட இந்தப் பச்சிலைகள் குணப்படுத்தியுள்ளன. வெட்டுக்காயங்கள்மீது இந்தப் பச்சிலைகளில் ஏதாவது ஒன்றையோ கிடைப்பவற்றின் சாற்றையோ வடிகட்டிப் பூசிவர ஆறும். அரைத்துப் பூசினால் சில நேரங்களில் சீழ்பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே, சாற்றை மட்டும் பூசிவருவது நல்லது.
பேராமுட்டி (Pavonia odorata)
தரிசு நிலங்களில், மழைக்காலங்களில் தானே வளரும் இந்தத் தாவரம், பிசுபிசுப்பான இலைகளை உடைய குறுஞ்செடி. வெள்ளை நிறத்தில் பூப்பூக்கும் இந்தச் செடி `பிசுறு செடி’ என்றும் சொல்லப்படுகிறது. காய்ச்சல் கஷாயங்களில் இது சேர்க்கப்படுகிறது. இதன் வேர் சிறுநீரகக்கல்லைக் கரைக்க, மாவிலங்கப் பட்டைக் குடிநீரில் சேர்க்கப்படுகிறது. மழைக்காலத்தில் மட்டுமே இதைப் பார்க்க முடியும்.
‘‘கலப்பைக் கிழங்கு (செங்காந்தள்), மிகவும் கொடிய நஞ்சு. `பாம்புக்கடி, தேள்கடி நஞ்சுகளைக் குணமாக்கும்’ என நூல்கள் கூறினாலும், அதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை. எனவே இதன் பூக்களின் அழகைக் கண்டு ரசிப்பதோடு நிறுத்திக்கொள்வது நல்லது.’’
திருமேனி (Acalypha indica)
இது குப்பைமேனியில் ஒருவகை. இது ‘ஆண் குப்பைமேனி’ எனவும் சொல்லப்படுகிறது. வர்ம மருத்துவத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் காயத்திருமேனி தைலத்தில் இதன் சாற்றைச் சேர்க்கிறார்கள்.
கோபுரந்தாங்கி (Indoneesiella echioides)
மழைக்காலங்களில் மட்டும் காணக் கிடைக்கும் இதன் இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, முடி உதிர்வது நிற்கும்; கபாலச்சூடு குறைந்து முடி செழித்து வளரும்; கரப்பான், புழுவெட்டு, தலையில் ஏற்படும் சொரியாசிஸ், படைகள், செதில் உதிரல் நிற்கும்.
‘‘கானவாழை இலைகளை அப்படியே அரைத்துக் கட்டிவரப் படுக்கைப்புண், மார்புக்காம்பைச் சுற்றி வரும் ஆறாப்புண்கள் ஆறும்.’’
கானவாழை (Commolina benghalensis)
வயல் வரப்புகளில் மிக வேகமாகப் பரவிவளரும் தாவரம். வாழைபோலவே இலையமைப்புடையது என்பதால், `கானவாழை’ ஆனது. நீல நிறத்தில் பூக்கள் உடைய இந்தத் தாவரம் `கோழிக்கானான் கீரை’, `கன்றுக்குட்டிப்புல்’ எனவும் அழைக்கப்படுகிறது. இதன் இலைகளை அப்படியே அரைத்துக் கட்டிவரப் படுக்கைப்புண், மார்புக்காம்பைச் சுற்றி வரும் ஆறாப்புண்கள் ஆறும்.
சாறுவேளை, சாரணை, சத்திச்சாரணை, மூக்கிரச்சாரணை ஆகியவை குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்

No comments:

Post a Comment