Thursday, December 5, 2019

பணி, குடும்பச்சூழல் உள்ளிட்ட பல காரணங்களால், இன்றைய உலகில், குழந்தைகள் வளர்ப்பு என்பது, பெற்றோருக்கு சவாலான ஒன்றாகி உள்ளது. இதை எளிதில் கையாளும் முறை குறித்து விளக்குகிறார், தாம்பரம், தேசிய சித்த மருத்துவ நிறுவனகுழந்தைகள் துறை பேராசிரியர் டாக்டர் மீனாட்சி சுந்தரம்.

சித்த மருத்துவத்தில் குழந்தைகளுக்கான பொது சிகிச்சை முறைகள் உள்ளதா?
சித்த மருத்துவம் என்பது, வாழ்வியல் முறையை சார்ந்தது. இதில், குழந்தைகளை பாதிக்கக்கூடிய நோய்கள், அவற்றை தடுக்கும் முறைகள், அதற்கான மருந்துகள் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது.

குழந்தைகள் வளரும் விதம் எவ்வாறு பார்க்கப்படுகிறது?
சித்த மருத்துவத்தில், குழந்தைகள் வளரும் விதம், 10 பருவங்களாக பார்க்கப்படுகிறது. காப்பு, செங்கீரை, தாலாட்டு, முத்தம், சப்பாணி, வருகை, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபரை என, இவை வகைப்படுத்தப்படுகின்றன.இதில், முதல் ஏழு பருவங்கள், இரண்டு குழந்தைகளுக்கும் பொதுவானது. பெண் குழந்தைகளுக்கு மட்டும், இறுதி மூன்று பருவங்கள் மாறுபடும். இவை, அம்மானை, ஊஞ்சல், கழங்கு எனப்படும்.

பருவங்களை வகைபடுத்த காரணம்?
தாயின் கைகளுக்குள்ளேயே இருந்து குழந்தை வளரும் பருவம் காப்பு. அதற்கு அடுத்து, தவழும் பருவம் செங்கீரை. இவ்வாறு ஒவ்வொரு பருவமும், குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் அதன் முதிர்ச்சி திறனை அடிப்படையாக வைத்து, டாக்டர்களால் வகைப்படுத்தப்படுகின்றன. பின், அதற்கேற்ப மருந்துகள், உணவுகள் வழங்க பெற்றோருக்குஅறிவுறுத்தப்படுகிறது.

நோய் பாதிப்பு ஏற்பட காரணங்கள் என்ன?
தாயின் வயிற்றில் கரு உண்டானது முதல், அதன், 10 மாத வளர்ச்சிக்குள், தாயின் உணவுப் பழக்க வழக்கங்களால், குழந்தைக்கு நோய் பாதிப்புகள் ஏற்படக்கூடும். இது, சித்த மருத்துவத்தில், அகக் கர்ணநோய் எனப்படுகிறது. குழந்தை பிறந்த பின், வெளி உலக சீதோஷ்ண நிலைகளாலும், அவற்றிற்கு உடல் நலக்குறைவு ஏற்படும். இது, புறக் கர்ணநோயாகும்.இது தவிர, சளி, இருமல், ஜீரண கோளாறால் ஏற்படும் பாதிப்புகளான வாந்தி, கழிச்சல் முதலியனவும்,குழந்தைகளை தாக்கும் பிரதான நோய்களாக பார்க்கப்படுகின்றன.

இந்த நோய்களுக்கான மருந்துகள் என்ன?
அகம் மற்றும் புறக் கர்ண நோய் பாதிப்புகளுக்கு, உள், வெளி மருந்துகள் உள்ளன. உள் மருந்துகளை பொறுத்தவரை, மூலிகைகள் அடங்கிய சூரணங்கள், லேகியங்கள், மாத்திரைகளும், வெளி மருந்துகளில், மசாஜ், வர்மம் போன்றவையும் அளிக்கப்படுகின்றன.சளி, வாந்தி, கழிச்சல் உட்பட பிரதான நோய்களுக்கு தீர்வாக, பூண்டு, பெருங்காயம், ஜாதிக்காய், திப்பிலி, சுக்கு, அதிமதுரம் உட்பட, 11 மூலிகைகள் அடங்கிய, 'உறை மாத்திரை' மருந்தாக வழங்கப்படுகிறது. இதை, ஒரு வயது முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கலாம்.

நோய் தடுப்பு வழிகள் என்ன?
குழந்தைகளுக்கான நோய் பாதிப்புகளை தடுக்க, கால, நாள் ஒழுக்கம் என, இருமுறைகள் பெற்றோருக்கு அறிவுறுத்தப்படுகின்றன.நாள் ஒழுக்கத்தில், குழந்தைகள், காலைக் கடன்களை கழிப்பது துவங்கி, தினசரி குளியலுக்கு பின், அவர்களின் தலைக்கும், வீடு முழுவதற்கும், சாம்பிராணி புகை போடுவது, வாரம் இருமுறை, எண்ணெய் தேய்த்து குளிக்க வைப்பது வரை, அனைத்தும் பெற்றோரால் தவறாமல் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.கால ஒழுக்கத்தில், நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, வாந்திக்கு மருந்தும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, பேதிக்கு மருந்தும் வழங்கப்பட வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது. பேதி மருந்தை பொறுத்தவரை, வேப்பிலைச் சாற்றை, கொடுத்தாலே போதும்.

தற்போதைய நிலையில் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிப்பது எது?
நவீன தொழில்நுட்பம், குழந்தைகளின் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கிறது. மொபைல் போன், டேப்லெட் உட்பட நவீன சாதனங்களால், மற்ற குழந்தைகளுடன் நெருங்கி பழகும் சூழல், முற்றிலும் தடைபடுகிறது. இதனால், அவர்கள், 'ஆட்டிசம்', அதிகபட்ச கவனச் சிதறல் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இவற்றை, குழந்தைகள் அதிகம் பயன்படுத்துவதை தவிர்ப்பதுடன், கபடி, தாயம், பல்லாங்குழி, நொண்டி, பச்சை குதிரை தாண்டுதல் உட்பட, நம் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாட அறிவுறுத்துவதால், மேற்கண்ட நோய் பாதிப்புகளில் இருந்து அவர்களை நாம் பாதுகாக்கலாம்.

பெற்றோருக்கு உங்களின் அறிவுரைகள்?
உணவு முறையை பொறுத்தவரை, பெற்றோர், துரித உணவுகளை தவிர்த்து, தினசரி, காய்கறிகள், கீரைகள், சிறு தானியங்களை உணவில் சேர்ப்பதுடன், நம் கை பதத்தில், வீட்டில் செய்யும் தின்பண்டங்களை சாப்பிட மட்டுமே, குழந்தைகளை அனுமதிக்க வேண்டும்.அதேபோல், உளவியல் ரீதியான குறைபாடுகளை தடுக்க, குழந்தைகளுடன் நீண்ட நேரம் செலவிட்டு, அவர்களுடன் மனம் விட்டு பேச வேண்டும், இரவு நேரங்களில், தலைக்கு மேல், மொபைல் போன், டேப்லெட் போன்றவற்றை வைத்து உறங்குவதையும் தவிர்க்க வேண்டும்.

சித்த மருத்துவர் மீனாட்சி சுந்தரம்













No comments:

Post a Comment