Friday, December 27, 2019

மரங்களும் மருத்துவ பயன்களும் thanks to dinamalar,com


 மரங்களும் மருத்துவ பயன்களும்
ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் ஆகிய தேவார மூவர் தங்களுடைய தீந்தமிழால், பண் சுமந்த பாடல்களை பாடினர். தமிழகம் முழுவதும் உள்ள தலங்களை வழிபாடு செய்து இசைத்தமிழால் பக்தி நீரூற்றி பண்பாட்டை வளர்த்தனர். ஒவ்வொரு திருக்கோயிலுக்கும், ஒரு தல மரம் உண்டு. மரத்தின் மருத்துவ குணத்திற்கும் அங்கு உறையும் இறைவனின் அருட்திறத்திற்கும் உள்ள தொடர்பினை தேவார மூவர் மற்றும் ஆழ்வார்கள் பாடியுள்ளனர்.இறைவனை உருவமாகவும் அருவமாகவும் வழிபடத் தொடங்கிய காலத்தில் அவ்வழிபாடு ஊர்ப்பொதுவில் ஊர்மக்கள் கூடுவதற்கு வசதியான நிழல்தரும் அழகு மிக்க மரத்தடியிலேயே வழிபாடுகள் நடைபெற்றன. இந்நடைமுறையை இன்றும் சிற்றுார்களில் காணலாம். அவ்வாறான மரங்களிலேயே இறைவன் தங்குவதாக நம்பி அம்மரங்கள் பட்டுப்போன பிறகு எஞ்சிய அடிமரத்தை வணங்கி வரலாயினர்.மதுரை சுந்தரேஸ்வரர் கோயிலில் பழைய கடம்ப மரம் வெள்ளித்தகட்டால் சுற்றப்பட்டு வழிபடப்படுவதை இன்றும் காணலாம்.
மரத்தடி கோயில்கள்
மரத்தையும் மரத்தடியில் வைக்கப்பட்ட இறை உருவத்தையும் வழிபட்ட பின்னர் மரத்தடியிலேயே கோயில்கள் கட்டப் பெற்றன. திருவானைக்காவில் கருவறைப் பக்கத்திலுள்ள பழமையான நாவல் மரம் இத்தகையதே. அம்மரம் தலமரம் எனப்பெற்றது. பல திருக்கோயில்களும் ஊர்களும் தலமரங்களின் பெயராலேயே அமைந்து உள்ளன. கடம்பந்துறை, ஆலங்காடு, நெல்லிக்கா முதலியன தலமரத்தின் பெயராலேயே அமைந்தவை. இறைவன் மரத்தின் கீழ் உறைவதாகத் திருமுறைகளிலும் திவ்விய பிரபந்தங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. சிவபிரான் கல்லால மரத்தின் கீழிருந்து அறநுால்கள் அருளியதைக் “கல்லாலின் கீழ் அறங்கள் சொல்லினான்காண்” என்றும் திருவானைக்காவில் நாவல் மரத்தின் கீழ் அமர்ந்துள்ளதை “வெண்ணாவலின் மேவியவெம் அழகா” என்றும் குறிப்பிட்டனர்.திருவேட்டக்குடி என்னும் தலத்தில் புன்னைமர நிழலில் இறைவன் அமர்ந்துள்ளதைப் “புன்னை நன்னிழல் கீழமரும் இறை” என்று திருஞானசம்பந்தர் குறிப்பிட்டார்.திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் இறைவன் குருவடிவாகி மாணிக்க வாசகருக்கு மெய்யறிவு உணர்த்தியதைத் “திருப்பெருந்துறையில் செழுமலர் குருந்தம மேவியசீர் ஆதியே” என்று திருவாசகம் குறிப்பிடுகிறது. மரத்தின் கீழோ மரத்திலோ உறைவதாகக் குறிப்பிடாமல் தலமரங்களின் பெயர்கள் தேவாரத்தின் பல பாடல்களில் காணப்படுகின்றன.

சித்த மருத்துவம்

தமிழகத்தின் தொன்றுதொட்ட மருத்துவம் சித்த மருத்துவமே. நாட்டு மருத்துவம், தமிழ் மருத்துவம் என்பதும் இதுவே. சித்த மருத்துவத்தில் மூலிகைகளே முதலிடம் வகிக்கின்றன. நம் உணவில் மிளகு, மஞ்சள், இஞ்சி, கொத்தமல்லி முதலிய மருந்துப் பொருள்களால் இயன்ற சாறு, குழம்பு வகைகள் மருத்துவப் பயன் கருதியே தொன்று தொட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்து உணவு, மருத்துவ முறையிலேயே சமைக்கப்பட்டு வருகிறது.பச்சரிசி உடற்சூடு ஏற்படுத்துவதால் புழுங்கலரிசியாக்கப்படுகிறது. வாழைக்காய் வாதம் பெருக்கும் என்பதால் அவித்து பயன்படுத்தப்படுகிறது. மசாலாச் சரக்குகளில் மஞ்சள் நெஞ்சுச் சளியை முறிக்கும். கொத்தமல்லி பித்தத்தைச் சமனப்படுத்தும், சீரகம் வயிற்றுச் சூட்டைத் தணிக்கும், மிளகு தொண்டைக் கட்டை அகற்றும், வெங்காயமும், பூண்டும் ரத்தக் குழாய்களைத் துாய்மைப்படுத்தும், கறிவேப்பிலை உணவுக்கு மணமூட்டும்.மோரும், உடலுக்கு உரமூட்டி மலக்கட்டினை நீக்கும் கீரையொடும், பித்தந்தணித்துக் குளிர்ச்சி தரும் எலுமிச்சை ஊறுகாயொடும் உண்டுவந்தால் நோயண்டாது. மரங்களை வழிபடுவதோடு நில்லாமல் மருந்தாகவும் பயன்படுத்தி நாம் நலம் பெறலாம்.

வில்வம்

நீரோடு கூவிளமும் நிலாமதியும் வெள்ளெருக்கும் நிறைந்த கொன்றைத்தாரோடு தண்கரந்தை சடைக்கணிந்த தத்துவனார் தங்குங் கோயில்காரோடி விசும்பளந்து கடிநாறும் பொழிலணைந்த கமழ்தார் வீதித்தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலுந் திருவை யாறே-- திருஞானசம்பந்தர் தேவாரம்.திருவையாறு, திருஎறும்பியூர், திருராமேஸ்வரம் முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் வில்வம் தலமரமாக அமைந்துள்ளது. சிவபிரானுக்குப் பூஜை செய்யும் மூலிகையான இது ஒரு கற்ப மூலிகையாகும். அதாவது, இன்ன பிணிக்கு மட்டுமே மருந்தென்று அமையாது எல்லா நோய்களையும் நீக்கும் தன்மையுடையது.திருவெண்காட்டிலுள்ள வில்வம் போல் முள் இல்லாத மரங்களும் உண்டு. இம்மரம் ஆற்றோரங்களில் தாமே வளர்கின்றன. வில்வத்தின் இலை, பூ, பிஞ்சு, பழம் வேர்ப்பட்டை, பிசின் மருத்துவப் பயன் உடையவை. சர்க்கரை நோயிக்கு வில்வம் சிறந்த மருந்து.

வன்னி
திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), திருவான்மியூர், மேலைத் திருக்காட்டுப்பள்ளி, திருப்பூந்துருத்தி முதலிய 15 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் தலமரமாக வன்னி விளங்குகிறது. வில்வத்திற்கு அடுத்தப்படியாக மிகுதியான கோயில்களில் தலமரமாக உள்ளது இதுவே.இது ஒரு முள்ளுள்ள இலையுதிர் மரம். மிகச் சிறிய கூட்டிலைகளைக் கொண்டது. சதைப்பற்றுடைய உருளைவடிவக் காய்களை உடையது. வடதமிழ்நாட்டில் கரிசல் நிலங்களில் தானே வளர்கிறது. தோட்டங்களில் ஆங்காங்கே முளைக்கும் மரங்களைப் பொதுவாக வெட்டுவதில்லை. அந்த அளவுக்குப் புனிதமாகக் கருதப்படும் மரம். மரம் முழுமையும் மருத்துவப் பயனுடையது. காய்ச்சல் நீக்கி சளி அகற்றும் பண்புகள் உடையது. வாதம், பித்தம், ஆகியவற்றை சமன்படுத்தும். திருத்துறையூர், திருப்பந்தணைநல்லுார், திருஅச்சிறுபாக்கம், திருக்கோவிலுார் கோயில்களில் தலமரமாகக் கொன்றை விளங்குகிறது.இது நீள் சதுரமான கூட்டிலைகளையும் சரஞ்சரமாய்த் தொங்கும் பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூங்கொத்துக்களையும் நீண்ட உருளை வடிவக் காய்களையும் உடைய இலையுதிர் மரம். இயற்கையாய் வளர்கிறது. பட்டை, பூ, வேர், காய் ஆகியவை மருத்துவப்பயனுடையவை. இந்த மரக்கட்டை நோய்நீக்கி உடல் தேற்றும்; காய்ச்சல் தணிக்கும், மலமிளக்கும். இதன் பூ வயிற்று வாய்வு அகற்றும், நுண்புழுக்களைக் கொல்லும். காயிலுள்ள சதை (சரக்கொன்றைப் புளி) மலமிளக்கும்.


புன்னை

மின்னியல் செஞ்சடை வெண்பிறை யன்விரி நுாலினன்பன்னிய நான்மறை பாடியா டிப்பல வூர்கள்போய்அன்னம்அன் னந்நடை யாளொ டும்மரும்மிடம்புன்னைநன் மாமலர் பொன்னுதிர்க் கும்புன வாயிலே -- திருநாவுக்கரசர், தேவாரம்.திருப்புனவாயில், திருப்புகலுார், திருமயிலாப்பூர், திருவெண்ணெய்நல்லுார், திருவேட்டக்குடி முதலிய சிவத்திருக் கோயில்களிலும் திருஇடவெந்தை, திருக்கோவலுார், திருப்பாடகம், திருப்புலியூர் திருப்புள்ளம்பூதக்குடி முதலிய திருமால் கோயில்களிலும் புன்னை தலமரமாக விளங்குகிறது. திருவேட்டக்குடியில் சிவபிரானை 'நறையுலவும் பொழிற் புன்னை நன்னிழற்கீ ழமலரும் இறை' எனத் தேவாரம் குறிப்பிடுகிறது. இம்மரம் தமிழகத்தின் கடற்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் தானே வளரும் இயல்புடையது. இலை சற்று நீண்டதாகவும், பளபளப்பாகவும் இருக்கும். உருண்டையான உள்ஓடுள்ள சதைக்கனியை உடையது. இதன் இலை, பூ, விதை, பட்டை, நெய் ஆகியவை மருத்துவப் பயன் உடையவை.புன்னை இலை அல்லது பூவை நீரில் ஊறவைத்துக் கழுவி வரக் கண்வீக்கம், சொறி சிரங்கு, மேகம் ஆகியவை தீரும்.
பலா

திருக்குற்றாலம், திருநாவலுார், திருவாய்மூர், திருப்பூவனம் முதலிய பத்துக்கும் மேற்பட்ட சிவத் திருக்கோயில்களிலும் திருக்கோட்டியூர், திருக்கடித்தானம் முதலிய திருமால் கோயில்களிலும் தலமரமாக விளங்குவது பலாமரம். பளபளப்பான கரும்பச்சை இலையையும், உருளை வடிவான புறம் முள்ளுள்ள இனிய சுளைகளுடைய பெருங்கனிகளையும் கொண்டது. திருக்குற்றாலத்துத் தலமரத்துப் பலாப்பழம் உண்ணப் படுவதில்லை. பலாப்பழம் உடல்நலத்துக்கு உகந்ததன்று என்பதைக் குறிக்கவே இம்மரபு ஏற்பட்டிருக்கலாம். இலை, பிஞ்சு, காய், பால், வேர் மருத்துவப் பயனுடையவை.இவை போன்றே நுாற்றுக்கணக்கான மரங்களுக்கும் தலங்களுக்கும் நோய் தீர்க்கும் இயல்பு இருப்பதை தேவார பாடல்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.முனைவர் தி.சுரேஷ்சிவன்இசைத்தமிழ் அறிஞர்மதுரை. 94439 3054

No comments:

Post a Comment