Tuesday, May 9, 2017


                                   
ஃபேஷன், டிரெண்ட் எனக் கருதி, தெருவோரக் கடைகளிலும் ஃபாஸ்ட்ஃபுட் கடைகளிலும் கிடைப்பதை  உண்டு, உடலை நோய்க்காடாக மாற்றி இருக்கிறோம். பாரம்பரிய உணவுகளில்தான் ஆரோக்கியம் நிறைந்திருக்கிறது. அவற்றை உண்டுதான் நம் முன்னோர் உடல் வளர்த்து; உயிர் வளர்த்து இன்புற்று வாழ்ந்தனர். 
அப்படி, ஆரோக்கியம் காக்கும் ஆறு உணவுகள் பற்றி இங்கே பார்ப்போம்...


சோளம்:
சோளத்தில் புரதம்,கொழுப்புச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, தயமின், நியாசின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. வயிற்றுப்புண்ணுக்கு மிகவும் உகந்தது. சர்க்கரை நோய் , ரத்தச்சோகை உள்ளவர்களுக்கு சோளம் மிக முக்கிய உணவாகக் கருதப்படுகிறது. உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை கொண்ட சோளம், சிறுநீரைப் பெருக்கும்.உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள், தங்களின் உணவில் சோளத்தை அதிக அளவில் பயன்படுத்தலாம்.
 
சாமை:
அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாக சாமை கருதப்படுகிறது. வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் சாமைக்கு உண்டு. மலச்சிக்கலைப் போக்கும்.  ஆண்களின் விந்து உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.  சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாமையில் தயாரித்த உணவை அதிகமாக உண்ணலாம். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த,  நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை  உண்ண வேண்டியது அவசியம். அதன் அடிப்படையில், மற்ற அரிசி வகைகளைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்ச்சத்து  அதிகம் உள்ள தானியம் சாமை.
 
  
கம்பு:
கிராமப்புறங்களில் இன்றும் கம்பங்களியும், கம்பங்கூழும் வெகு பிரசித்தம். இது, தாய்ப்பாலைப் பெருக்கும்.  உடல் வலிமையை அதிகமாக்கும். தானிய வகைகளில்  கம்பில்தான் 11.8 சதவிகிதம் அளவுக்கு புரோட்டின் உள்ளது. ஆரோக்கியமான தோலுக்கும் தெளிவான கண்பார்வைக்கும் உகந்தது. 100 கிராம் கம்பில்,  12 மி.கி இரும்புச்சத்து, 42 கிராம் கால்சியம், 0.38 மி.கி,  வைட்டமின் பி 11 ஆகியவை நிறைந்துள்ளன. கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுஉப்புக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. உடல் வெப்பநிலையைச் சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளைக் கரைத்து, பருமனைக் குறைக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். இரவு வேலைக்குச்  செல்பவர்கள், நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் காலை, மதிய வேளைகளில் கம்பை உணவாக எடுத்துக்கொண்டால், உடல் வலுவடையும்.
 
கேழ்வரகு:
தானியங்களில் அதிக சத்துமிக்கது ராகி எனப்படும் கேழ்வரகு. கிராமங்களில் ராகிக் களி, ராகி தோசை, ராகிப் புட்டு, ராகிக் கூழ் போன்ற உணவுகள் இன்றளவும் உண்டு. ராகியில் புரதச்சத்து, தாதுஉப்பு, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து மற்றும் உயிர்ச்சத்துக்கள் இருக்கின்றன. குடல் பிரச்னைகளைப் போக்கும். உடல் உஷ்ணத்தைச் சீராக்கும். உயர் ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா போன்ற பிரச்னைகளுக்கு உகந்தது. ராகியில் உள்ள லெசித்தின், மெத்தியோனைன்  ஆகிய அமினோஅமிலங்கள், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. உடலின் நைட்ரஜன் அளவைச் சமப்படுத்தவும், சேதமடைந்த திசுக்களைச் சரிசெய்வதற்கும் ராகி முக்கிய உணவாக விளங்குகிறது.
 
கோதுமை:
அரிசி மற்றும் சோளத்துக்குப் பிறகு, உலக நாடுகள் முழுவதும் அதிகம் பயன்பாட்டில் உள்ள உணவுப்பொருள் கோதுமையாகும். கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், நியாசின் போன்ற பல சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்த உணவாகும். வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள், கோதுமை ரவையில் கஞ்சி வைத்துக் குடிப்பது நல்லது. முதுகுவலி மற்றும் மூட்டு வலி உள்ளவர்களுக்கு கோதுமை மிகச் சிறந்த உணவாகும்.
பார்லி:
குழந்தை முதல் முதியவர் வரை, பார்லியில் தயாரிக்கப்படும் உணவுகளை உண்ணலாம்.   இரும்புச்சத்து உள்ளிட்ட தாதுஉப்புக்கள் பார்லியில் அதிகமாக இருக்கின்றன. காய்ச்சல் உள்ளவர்களுக்கு பார்லியில் கஞ்சி வைத்துக் கொடுக்கலாம். நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்களுக்குப் பார்லியில் கஞ்சி வைத்துக் கொடுப்பது நல்லது. உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி, உடல் எடையைக் குறைக்கும் ஆற்றல் பார்லிக்கு உண்டு. சிறுநீர் பிரச்னையைத் தீர்க்கும். உடலில் உள்ள நச்சுப்பொருட்களை அழிக்கவல்லது. உடல் வறட்சியைப் போக்கும். சளி, இருமலைத் தணிக்கும் ஆற்றலும் பார்லிக்கு உண்டு.

No comments:

Post a Comment