Sunday, May 28, 2017

ஒரு வரி... ஒரு நெறி! - 14 - “பாடத்தை ரொம்பப் படிக்காதே... படிச்ச முட்டாள் பத்துப் பேரை தினமும் பார்க்கிறேன்!


இயக்குநர் கரு.பழனியப்பன்
ள்ளிக்காலத்தில் ஒவ்வொரு தேர்வின் போதும் அப்பா எனக்குச் சொல்கிற அறிவுரை இது. நான் மிகவும் சராசரி மாணவன். தேர்வுக்காலத்தில் கொஞ்சம் கூடுதலாகப் படிக்க முயல்வேன். அப்போதெல்லாம் அப்பா இந்த வரியைச் சொல்வார். ‘‘முதல் மதிப்பெண் எல்லாம் வேண்டாம்... ஐம்பது மதிப்பெண் வாங்கு, போதும்’’ என்பார். இந்த வாக்கியம் அப்பாவுடையது அல்ல. அவருடைய அப்பாவிடமிருந்து அவர் கடன் வாங்கியது. ‘‘படிச்சவன் என்ன செய்வான்? விசிறிக்குக் கீழே உக்காந்து வெள்ளைத் தாளைக் கறுப்பாக்குவான்... வேறென்ன தெரியும் அவனுக்கு?” என்று தாத்தா சொல்வதை நானும் கேட்டிருக்கிறேன். இந்த உலகத்தில் பிழைப்பதற்கான, சிந்தித்துச் செயல்படுவதற்கான அறிவைப் பள்ளிக்கூடப் படிப்பு தராது என்ற நம்பிக்கை, தாத்தா காலத்தில் இருந்து எங்கள் குடும்பத்திலிருக்கிறது. 

அதேநேரத்தில் தினமும் ஒருமுறையாவது என்னை அழைத்து, ‘‘இன்று என்ன படித்தாய்?’’ என்று கேட்பார் அப்பா. அவரைப் பொறுத்தவரைப் படிப்பு என்பது, பாடப்புத்தகத்தைப் படிப்பதல்ல. ‘‘பிற புத்தகங்களைப் படிக்க வேண்டும். அதில்தான் வாழ்க்கையின் திறப்பு இருக்கிறது. எல்லாவிதமான புத்தகங்களையும் படிக்கிறபோதுதான் சிந்தனை மேன்மையடையும். சிந்தனை மேன்மையடைகிற போதுதான் படைப்புத்திறன் உருவாகும்’’ என்பார். இதை நான் பிற்காலத்தில் அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.
அப்பா குறைந்த காலமே பள்ளிக்கூடம் போனார். ஆனால், வீடு நிறைய புத்தகங்கள் இருக்கும். அவ்வளவு வாசிப்பார். வீடு, எப்போதும் உரையாடல் களமாக இருக்கும். நாங்களும் அவற்றில் பங்கேற்றுப் பேசுவோம். என் வீடு மட்டுமல்ல... 80-களின் முற்பகுதியில் எல்லா வீடுகளுமே உரையாடல் மையங்களாகத்தான் இருந்தன. சினிமா பற்றி, அரசியல் பற்றி மக்கள் பேசுவார்கள். அதனால் அவை இரண்டுமே நன்றாக இருந்தன. 

இன்று வீடுகளில் உரையாடலே இல்லை. அப்படியே பேசினாலும் பிள்ளைகளைத் தனிமைப்படுத்தி விடுகிறோம். ‘‘ஏன் வாயைப் பாத்துக்கிட்டிருக்கே... போய்ப் பாடப்புத்தகத்தைப் படி’’ என்கிறோம். வீடுகளில் அனைவரும் ஒன்று சேர்வது, டி.வி பார்க்க மட்டும்தான். டி.வி-யை நிறுத்தினால் ஆளுக்கொரு மொபைல்போனை வைத்துக்கொண்டு தனிமையில் ஆழ்ந்து விடுகிறோம்.  

பள்ளிக்கூடத்தில் என்கூடப் படித்த நண்பன், நன்றாகப் படிப்பான். ப்ளஸ் டூவில் 1200க்கு 1120 மார்க் வாங்கினான். பிற்காலத்தில் நான் சினிமாவுக்கு வந்துவிட்டேன். அவன் அமெரிக்கா போய்விட்டான். அண்மையில் என்னைச் சந்திக்க வந்தான். ஏவி.எம் வளாகத்தில் ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் நான் இருந்தேன். அடையாளங் களைச் சொல்லி வரச்சொன்னேன். ஏவி.எம் வாசலிலிருந்து உள்ளே வருவதற்குள், வழி கேட்டு எனக்கு ஐந்து முறை போன் செய்துவிட்டான். அவனது படிப்பு, அவனைச் சக மனிதர்களோடு பேசவிடாமல் தடுத்திருக்கிறது. அருகில் நிற்கிற ஒரு வாட்ச்மேனிடமோ, வழியில் தென்படுகிற ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்டிடமோ கேட்டிருந்தால், அழகாக வழிகாட்டி இருப்பார்கள். மனிதர்கள் மீது அச்சத்தையும் தயக்கத்தையும்தான் அவனது படிப்பு அவனுக்கு வழங்கியிருக்கிறது. 

சுயமாகச் சிந்திக்கிற, முடிவெடுக்கிற தலைமுறை இப்போதில்லை. அப்பா சொன்னார் என்பதற்காகப் படிக்கப்போகிறார்கள். அம்மா சொன்னதற்காகத் திருமணம் செய்து கொள்கிறார்கள். பொண்டாட்டி சொன்னதற்காக வீடு வாங்குகிறார்கள். பக்கத்து வீட்டுக்காரன் வாங்கியதைப் பார்த்து, கார் வாங்குகிறார்கள். தனக்கு என்ன தேவை என்று சிந்திக்கும் ஆற்றலைக்கூடக் கல்வி வழங்குவதில்லை என்பதுதான் உண்மை. 

தாத்தா அப்பாவுக்குச் சொல்லி, அப்பா எனக்குச் சொன்னதை நான், இப்போது என் பிள்ளைகளுக்குச் சொல்கிறேன். பள்ளி தவிர வேறு எங்கே சென்றாலும் அவர்கள் கையில் ஏதாவது ஒரு கதைப்புத்தகம் இருக்கிறது. என் மகன் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பள்ளிக்கூடத்தில் பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு நடந்தது. பிள்ளைகளிடம் ‘‘என்ன ஆக ஆசைப்படுகிறீர்கள்’’ என்று கேட்டார் ஆசிரியை.  ‘‘இன்ஜினீயர் ஆகணும்’’, ‘‘டாக்டர் ஆகணும்’’ என்று பிள்ளைகள் சொல்லிக்கொண்டே வந்தார்கள். என் மகன், ‘‘முடிவெட்டும் கடை வைக்கப்போகிறேன்’’ என்றான். எல்லோரும் அதிர்ச்சியாகப் பார்த்தார்கள். நானும், என் மனைவியும் சிரித்துக் கொண்டிருந்தோம். ‘‘பிள்ளைக்கு உயர்வான விஷயங்களைச் சொல்லிக் கொடுங்கள்... இல்லையென்றால் இதுவே விதையாக விழுந்துவிடும்’’ என்று எல்லோரும் பதறினார்கள். ‘‘இதுவும் உயர்வான விஷயம்தான். இதுவரை அவன் பார்த்த ஆட்களிலேயே, ‘தலையைத் திருப்பு’, ‘குனி’, ‘ஆடாதே’ என்று அவனை அதட்டுபவராக, அடக்குபவராக இருந்த உயர்வான மனிதர், முடி திருத்துபவர்தான். அதனால், எல்லோரையும் அதட்ட வேண்டுமெனில் நாமும் அந்த இடத்தை அடைய வேண்டும் என்று நினைக்கிறானோ... என்னவோ? முதலில் குழந்தை சுயமாகச் சிந்தித்து, தானாக எதையாவது பேசட்டும்...’’ என்று சொல்லிவிட்டு வந்தேன். 

பள்ளிப்படிப்பு முக்கியம்தான். ஆனால், அது அவர்களின் சிந்தனையைத் தூண்டுவதற்குப் பதிலாக முடக்குகிறது. தயவுசெய்து குழந்தை களுக்கு வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குங்கள். அதற்கு முன்னதாக நீங்கள் வாசிக்கப் பழகுங்கள்! குழந்தைகள் எல்லா செயல்களையும் உங்களைப் பார்த்தே செய்யப் பழகுகிறார்கள். அவர்கள் படித்த முட்டாள்கள் ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

No comments:

Post a Comment