Sunday, July 2, 2017


மருத்துவம் நலமா? - நிஜமும் நிழலும் - 25 - பிரஷர் குக்கர் வாழ்வு!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டாக்டர் வெ.ஜீவானந்தம்
ன்று யாரைக் கேட்டாலும் பொதுவாகச் சொல்வது, ‘‘ஏக டென்ஷன் சார்... என்ன செய்றதுனே புரியலை. பைத்தியம் பிடிச்சுடும் போல இருக்கு. எங்கயாச்சும் ஓடிடலாம்னு இருக்கு. இந்த வேலையே கூடாது. என்ன வாழ்க்கை... இதைவிடச் செத்துப்போயிடலாம். நாய்ப்பொழப்பு...’’ இப்படி ஆற்றாமை, சலிப்பு, வெறுப்பு, அதிருப்தி என்று சிறியவர் முதல் பெரியவர் வரை கொட்டிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்...

இதுபோன்று கொட்டுகிறவர்கள் எவ்வளவோ பரவாயில்லை. வால்வுள்ள பிரஷர் குக்கர் போலக் கொட்டித் தீர்த்துவிடுகிறார்கள். வேறு சிலர், பேசவே மாட்டார்கள்; அவர்கள் எல்லாவற்றையும் மனதில் அடக்கிக்கொண்டு வாழ்பவர்கள். வால்வு அடைத்த பிரஷர் குக்கர் போன்றவர்கள் இவர்கள். எப்போது வெடிக்குமோ... அந்தக் காட்டாறு எப்போது சீறுமோ... யாரை இழுத்துக்கொண்டு போகுமோ?
இப்படி முப்பது கோடிக்கும் மேற்பட்டோர் மன அழுத்த நோயால் (Mental Depression) பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். வாழ்க்கைத் தரம் குறைவது, செலவுகள் அதிகரித்து இருப்பது, நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டி இருப்பது, அதீத எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள் என மன அழுத்தத்துக்குக் காரணங்கள் நிறைய. ‘இந்தியாவில்தான் மன அழுத்த பாதிப்புக்கு ஆளானவர்கள் அதிகம்’ என்கின்றன புள்ளிவிவரங்கள். இங்கு 6 கோடி பேருக்கு ஏதோ ஒரு வகையான மன அழுத்தம் இருப்பதாக சொல்கிறார்கள். குறிப்பாக 15 முதல் 29 வயதுக்குள் இருப்பவர்கள் மத்தியில் இந்தப் பிரச்னை அதிகம். ஓயாத வேலை. எதற்கும் நேரமில்லை. உணவு, தூக்கம், குடும்பம், மகிழ்ச்சி என எல்லாவற்றையும் தியாகம் செய்து தங்கள் பணிவாழ்வைக் கட்டமைத்துக் கொள்பவர்கள் நிறைய பேர். சார்லி சாப்ளினின் ‘டைம் மெஷின்’தான் நினைவுக்கு வருகிறது. இயந்திர வாழ்வில் நாமும் ஒரு பகுதியாகி விட்டோம்.

பண மைய உலகம், மன மைய உலகை வென்றுவிடுகிறது. பம்பர்போல அதிர்ச்சிகளைத் தாங்கிய கூட்டுக்குடும்பம் சிதைந்துபோனது பற்றிப் புலம்புகிறோம். முதியோர் இல்லத்தில் செத்துப்போன அப்பாவுக்குக் காரியம் செய்ய அமெரிக்காவிலிருந்து காசு அனுப்பும் பிள்ளை எப்படி மன நிம்மதியுடன் வாழ முடியும்? அங்கு கிருஷ்ணர் கோயில், கதாகாலட்சேபம், இலக்கியச் சொற்பொழிவு என ஆள்களை இறக்குமதி செய்து, இழந்த சொர்க்கத்தை மீட்க நினைக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்... எழுத்தாளர் பாவண்ணன், ஐ.டி-துறையில் வேலை செய்யும் ஓர் இளைஞன் தன்னுணர்வின்றிக் கண்ணாடி ஜன்னலை உடைத்துக்கொண்டு, பல மாடிக் கட்டடத்திலிருந்து குதித்து இறப்பதாகக் கதை ஒன்றை எழுதியிருந்தார். நல்ல சம்பளம் வாங்கும், படித்த அந்த இளைஞன் ஏன் அப்படிச் சாக வேண்டும் என்ற கேள்வி அப்போது எழுந்தது. இன்று, அமெரிக்க வேலையை விட்டுவிட்டு, கசங்கிய நான்கு முழ வேட்டியுடன் சத்தியமங்கலம் மலையடிவாரத்தில் இயற்கை விவசாயம் செய்துகொண்டுள்ள ராம்கி போன்றவர்களுடன் பேசும்போது, ‘நிம்மதியை எந்தப் பணமும் தந்துவிடாது’ என்பது புரிகிறது. 

மன அழுத்தத்தால் தூக்கம் கெடுகிறது. தலைவலி, வயிற்றில் எரிச்சல், ரத்த அழுத்த உயர்வு, சர்க்கரை நோய், உடலுறவில் குறை எனப் பல நோய்கள் உண்டாகின்றன. மனமே அனைத்துக்கும் சூத்திரதாரி. மனம் கெட்டால் உடல் கெடும். நம் நாட்டில் நான்கு லட்சம் பேருக்கு ஒரு மனநல மருத்துவரே உள்ளதாகக் கூறுகின்றனர். இந்தியாவில் ஒன்றரை லட்சம் பேர் ஒவ்வோர் ஆண்டும் தற்கொலை செய்துகொண்டு சாகிறார்கள். அதிகம் படித்தவர்கள் உள்ள கேரளத்தில், தற்கொலைகள் அதிகம். மிகவும் முன்னேற்றம் அடைந்த ஜப்பான், தற்கொலையில் முதலிடம் பிடித்துள்ளது. படிப்பு, பணம் எதுவும் மனநலத்தைத் தருவதில்லை. ஆனால், மனநல மருத்துவரிடம் செல்வதையே கெளரவக் குறைவாக நினைக்கும் மனநிலை உள்ளது.
கியூபாதான் அதிகமான மனநல ஆலோசகர்கள் கொண்ட நாடாக இருக்கிறதாம். ஒரு நல்ல நாடு, தன் மக்களின் உடல்நலம் மட்டுமல்ல... மனநலம் குறித்தும் அக்கறைகொள்ள வேண்டும்.

1948-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் உருவானபோதே, ‘ஆரோக்கியம் என்பது இரண்டு பரிமாணங்கள் கொண்டது. ஒன்று, உடல்நலம்; இரண்டாவது மனநலம்’ என்று வரையறை செய்தது. ஆரோக்கியம் என்பது நோயற்று வாழ்வது மட்டுமே அல்ல. நல்ல உடல்நலத்தோடும், நல்ல மனநலத்தோடும் சமூகத்தில் இணைந்து வாழ முடிகிறவரே ஆரோக்கிய மனிதர். ஆனால், கிராமங்களில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி, நகர்ப்புற அரசு மருத்துவமனைகள் வரை எங்குமே நாம் மனநல மருத்துவத்துக்கு முக்கியத்துவம் தருவதில்லை. அதை ஒரு குறையாகவும் டாக்டர்களே நினைப்பதில்லை. 1982-ம் ஆண்டு தேசிய மனநலத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. ‘ஆரம்ப சுகாதார நிலைய சிகிச்சையிலேயே மனநல மருத்துவமும் சேர்க்கப்படும்’ என்று அதில் கொள்கைப் பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால், 35 ஆண்டுகள் ஆகியும் அப்படி எதுவுமே நடக்கவில்லை. 

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடந்த 99-ம் ஆண்டு முதல் ‘ஒருங்கிணைந்த மனநல சுகாதார சேவை’ திட்டம் செயல்படுகிறது. கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுக்கும், பணியாளர்களுக்கும், அடிப்படை மனநலப் பிரச்னைகளைக் கண்டறியும் பயிற்சி தரப்பட்டுள்ளது. ஒருவரின் மனநலப் பிரச்னையை அவர்களே கண்டறிந்து, மனநல மருத்துவருக்குப் பரிந்துரைப்பார்கள். மனநல மருத்துவர்கள் அடிக்கடி பல அரசு மருத்துவ மையங்களுக்கும் சென்று முகாம் நடத்தி சிகிச்சை தருகிறார்கள். தயக்கம் தவிர்த்து, செலவைக் குறைத்து, மனநலப்பிரச்னைகளுக்கு சிகிச்சை தரும் இந்த முன்மாதிரியை இந்தியாவே பின்பற்றலாம்.  

மன அழுத்தம் குறைய மருத்துவரும், மருந்துகளும் தேவைதான் என்றபோதும், வாழ்வு பற்றிய சமூக உறவு என மன நிறைவான வாழ்வின் மறுபக்கத் தேவையும் இருக்கிறது. ‘‘அடிபட்டால் முதலுதவி செய்வது போல, மனம் காயப்பட்டாலும் முதலுதவி தேவை’’ என்கிறார், புகழ்பெற்ற மனநல மருத்துவர் விக்ரம் படேல். அவர் சொல்லும் வழிகள்: 

உங்கள் உணர்வுகளைக் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். தனிமை உணர்வு குறையும்.

விளையாட்டு, உடற்பயிற்சி, வேறு ஏதாவது ஓய்வுநேரப் பழக்கம் என பிஸியாக இருங்கள். எப்போதும் ஏதாவது செய்துகொண்டிருந்தால், மனதில் எதிர்மறை எண்ணங்கள் வராது.

யோகா, தியானம் போன்றவை மனநலம் தரும் மருந்துகள்.

மன அழுத்தம் போக்க போதையை நாடாதீர்கள். அது, குறுகிய காலத் தீர்வுகளைத் தரலாம். ஆனால், நீண்ட நாள் வேதனையைத் தந்துவிடும்.

உங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், அதிலிருந்து விலகி ஓடாதீர்கள். அதைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள்.   

வாழ்க்கை என்பது இன்பம், துன்பம், உறவு, இழப்பு, பணம், தியாகம் என அனைத்தும் கொண்ட சோலைக்காடு. ஆனால், அதைப் பணம் மட்டும் கொண்ட ஓரினக் காடாக மாற்றிக்கொண்டுள்ளோம். ‘கொஞ்சம் வறுமை, கொஞ்சம் பசி, கொஞ்சம் குளிர்... இவற்றை உணர்ந்தவனாகக் குழந்தையை வளருங்கள்’ என்பார் காந்தி. குறைகளை ஏன் என்று கேட்க, சக மனிதன் இல்லாத காரணத்தாலேயே இத்தனை கோயில்கள் எழுகின்றன. ‘கடவுள் இல்லையென்றால், ஒரு கடவுளைக் கண்டுபிடிப்போம்’ என்றார் நாத்திகரான பெட்ரண்ட் ரஸ்ஸல். சக மனிதனின் குறைகளைப் பொறுமையுடன் கேட்டு... ஆறுதலுடன் பேசி... நம்பிக்கை கொடுக்கும் மருத்துவர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், சமூகத்தினர்கள் இருந்துவிட்டால்... அதுவே தற்கொலை, மன அழுத்தம் எனும் நோய்களைப் போக்கும் சிறந்த மருந்தாகும்.

No comments:

Post a Comment