கருத்தை பதிவு செய்ய
Advertisement
பதிவு செய்த நாள்
10ஜூலை2017
00:00
ஆழ்ந்த உறக்கத்திற்கான ஆரோக்கிய உணவுகள்!
துாக்கத்தை வரவேற்கும் உணவுகள் குறித்து கூறும், ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சுரேந்திரன்: மன உளைச்சல், வாழ்வியல் முறை மாற்றம், தவறான உணவு பழக்கத்தால், எட்டு மணி நேரம் ஆழ்ந்து உறங்குவது அரிதாகி விட்டது. ஆழ்ந்த உறக்கத்திற்கு, ஆயிரக்கணக்கில் செலவழிக்க தேவையில்லை. சில உணவுகளுக்கு நல்ல துாக்கம் தரும் தன்மை உண்டு.
இரவு துாங்கச் செல்லும் முன், இளஞ்சூடான பாலை குடிக்கலாம். பாலில் உள்ள, 'டிரிப்டோபன்' எனப்படும் அமினோ அமிலம், மூளையிலுள்ள, 'செரட்டோனின்' என்ற, நரம்பியக்க கடத்திகளை துாண்டுகிறது. அத்துடன், துாக்கத்தை துாண்டும், 'மெலட்டோனின்' எனப்படும், ஹார்மோனையும் அதிகரிக்கிறது; இதனால், இரவு முழுவதும், ஆழ்ந்து உறங்கலாம்.
சிலருக்கு, நடு இரவில் பசியெடுப்பதால், துாக்கம் பாதிக்கப்படும். அவர்கள், இரவு உணவுக்கு பின், நான்கு பாதாம் சாப்பிட்டால், நிறைவு தன்மை கிடைக்கும். அத்துடன், இதிலுள்ள அமினோ அமிலம் மற்றும் மக்னீசியம், தசைகளை தளர்வாக வைத்திருப்பதால், நிம்மதியான துாக்கம் வரும்.பெரும்பாலான நபர்கள் காலையில், ஓட்ஸ் கஞ்சியை குடித்தால், அன்றைய தினம் முழுவதும் வெண் பொங்கல் சாப்பிட்டது போல, மந்தமாக இருப்பதாக கூறுகின்றனர். 'மெலட்டோனின்' எனும் ஹார்மோனை, ஓட்ஸ் உற்பத்தி செய்வதுடன், துாக்க சுழற்சியை ஒழுங்கு
படுத்துகிறது.ஒரு சிறிய கப் ஓட்ஸ், ஒரு கிளாஸ் பால், அரை டீஸ்பூன் தேன் சேர்த்து, இரவு உணவுக்கு பதிலாக சாப்பிட்டு பாருங்கள். காலையில், துாக்க கலக்கம் இல்லாமல், புத்துணர்ச்சியாக இருப்பீர்கள்; தேன், ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை அதிகரித்து, மூளையை தளர்வாக வைத்திருக்கிறது.
உடலில், நீர்ச்சத்து குறைவு; வைட்டமின், 'சி' நிறைந்த உணவுகளை குறைவாக சாப்பிடுவது; எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகளவு சாப்பிடுவதாலும், துாக்கமின்மை ஏற்படக் கூடும். ஆரஞ்சு, கீரை வகைகள், புரோக்கோலி, புதினா, குடமிளகாய், முட்டைகோஸ் மற்றும் பட்டாணி போன்ற உணவு வகைகளை, அதிகளவில் சேர்த்துக் கொள்வது, துாக்கத்துக்கு நல்லது.
முட்டை, உலர் பழங்கள், வாழைப்பழம், தோல் நீக்கப்பட்ட சிக்கன் மற்றும் சுண்டல் போன்ற, புரதம் நிறைந்த உணவுகளில், 'டிரிப்டோபன்' நிறைந்துள்ளதால், இவையனைத்தும், துாக்கத்துக்கு ஏற்ற உணவுகளாகும்.
அதே நேரத்தில், இத்துடன், மாவுச்சத்து நிறைந்த அரிசி உணவுகளையும் சேர்த்து சாப்பிடுவது அவசியம். ஏனெனில், கார்போஹைட்ரேட், இன்சுலின் வெளியீட்டை ஊக்கப்படுத்துகிறது. இது, ரத்த ஓட்டத்திலிருந்து, தேவையற்ற அமினோ அமிலங்களை வெளியேற்றி, 'டிரிப்டோபன்' அமினோ அமிலத்தை மூளைக்கு எடுத்து செல்ல உதவுகிறது.
துாங்க செல்வதற்கு, 6 மணி நேரத்துக்கு முன்பாகவே, காபி அல்லது டீ குடித்து விட வேண்டும்; இல்லையெனில், வழக்கமாக துாங்கும் நேரத்தை காட்டிலும், தாமதமாகத்தான் துாக்கம் வரும்.
இரவில், காரமான உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை செரிமான கோளாறுகளை உண்டாக்குவதோடு, உடலின் தட்பவெப்ப நிலையை அதிகரிக்க செய்யும்; இதனால், துாக்கம் தடைபடும். மது, உடலின் நீர்த்தன்மையை குறைப்பதோடு, துாக்க சுழற்சியையும் பாதிக்கும்.