Sunday, July 2, 2017


இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கார்க்கிபவா, படம்: ப.சரவணகுமார்
`Cubicles assigned; corner offices earned.’

இந்த வாசகத்தை எங்கேயாவது பார்த்திருப்பீர்கள். பெரும்பாலான அலுவலகங்களில் பக்கத்துப் பக்கத்து டேபிள்களில் சின்ன பாகப்பிரிவினை செய்து தடுத்திருப்பார்கள். அவைதாம் Cubicles. மூலையில் இருக்கும் அறைகள், மேல் அதிகாரிகளுக்கானது. அங்கேதான் பிரைவசி கிடைக்கும். அவைதாம் Corner offices. ``நீங்க இந்த க்யூபிக்கிள்ல உட்காருங்க’’ என்றுதான் சொல்வார்கள். அதுதான் அசைன் செய்வது. அந்த கார்னர் ஆபீஸ் எனப்படுவதை நம் தொடர்ச்சியான வெற்றியின் மூலம் நாமே சம்பாதிக்க வேண்டும். ஒரு கெத்தோடு அந்த இடத்தைக் கைப்பற்ற வேண்டும். அதைத்தான் முதல்வரி சொல்கிறது.

க்யூபிக்கிளில் வேலைசெய்வது அவ்வளவு எளிதானது அல்ல. சென்ற வாரம் கமென்ட் செய்திருந்த கிருஷ்ணாவும் அதைத்தான் சொல்லியிருந்தார். கிருஷ்ணா வேலைசெய்யும் இடத்தில் நெருக்கமான வொர்க் ஸ்டேஷன்கள். ஆறு டிகிரி தலை சாய்த்தாலே அடுத்தவர் கம்ப்யூட்டர் தெரியும். 

``ஆபீஸ்ல நான் ஒண்ணும் தப்பா பார்க்கப் போறதில்லை. ஆனா, யாரோ நாம செய்றதை பார்த்துட்டே இருக்காங்கனு எனக்கு ஃபீல் ஆனா, வேலையே ஓடாது. அதனாலதான் காலைல 6 மணிக்கே ஆபீஸ் போய் என் வேலைகளை முடிக்கிறேன்’’ என்றார் கிருஷ்ணா.
`எட்டிப்பார்ப்பது’ என்பது நிச்சயம் பிரச்னை. காலம் காலமாக இருக்கும் பிரச்னை. சிலருக்கு, கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசும் பழக்கம் இருக்காது. அவர்களுக்குத் தானாக கண்கள், அருகில் இருக்கும் திரை மீதுதான் படியும். நிச்சயம் இது ப்ளஸ் கிடையாது. மைனஸ்தான்.

பேருந்தில் பேப்பர் படித்திருக் கிறீர்களா? பெரும்பாலும் அடுத்தவர் பேப்பரைத்தான் படித்திருப்போம். நம் கையில் பெஸ்ட் செல்லர் புத்தகமே இருந்தாலும், பக்கத்து பேப்பரில் இருக்கும் சுமாரான செய்திதான் நமக்கு சுவாரஸ்யமாகத் தெரியும். இப்போது பயணங்களின்போது வாசிக்கும் பழக்கம் ஸ்மார்ட் போனால் குறைந்திருக்கிறது. ஆனால், ஸ்மார்ட்போனை எட்டிப்பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. வாட்ஸ்அப் சாட்டோ, யூடியூப் வீடியோவோ... அடுத்தவர் திரையை எட்டிப்பார்ப்பதில்தான் எவ்வளவு திருப்தி?

அடுத்தவரின் மொபைல் அல்லது கணினித்திரையை பார்ப்பது என்பது, அவரது நிலத்தில் நாம் வீடு கட்டுவது போன்றது. அப்படி வீடு கட்டுவது சட்டப்படிக் குற்றம். எட்டிப்பார்ப்பது அறத்தின்படி குற்றம். 
அவ்வளவுதான். செய்தித்தாள், மொபைல், கணினித்திரை மட்டுமல்ல... அடுத்தவர்கள் தொடர்புடைய விஷயங்களை ’எட்டிப்பார்த்து’த் தெரிந்துகொள்ளும் ஆர்வம் மனிதர்களுக்கு எப்போதும் உண்டு. இதற்கு மூளையைக் காரணம் காட்டுகிறார்கள் ஆய்வாளர்கள்.

பெரும்பாலான நமது செய்கைகளை மூளை கட்டுப்படுத்துகிறது. ஆனால், சில விஷயங்களை மூளையால் கட்டுப்படுத்த முடிவதில்லை, அனிச்சைச் செயல்களைப்போல. ஆனால், நாம் வளரும் சூழல் சில கெட்டபழக்கங் களைக்கூட அனிச்சை செயல் என நம்பவைத்துவிடுகிறது. அதில் ஒன்றுதான் இந்த எட்டிப்பார்த்தல். இது அனிச்சை செயல் அல்ல. கெட்டபழக்கமே. தொடர்ச்சியான முயற்சியால் இந்தப் பழக்கத்தை நம்மால் விட முடியும். 

என்ன செய்யலாம்?

முதலில் இந்தப் பழக்கம் நம்மை டேமேஜ் செய்யும் ஒரு விஷயம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

*  உங்களை மீறி ஒருவரின் பிரைவசி விஷயத்தைப் பார்க்கத் தோன்றினால், அவரிடமே ``இது என்னன்னு பார்க்கலாமா?’’ எனக் கேட்டுவிடுங்கள். அவர் அனுமதி தந்தால், முடிந்தது பிரச்னை. அவர் முடியாதென்றால், உங்களுக்கே அதைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நீங்கிவிடும்.

அடுத்தவரிடம் இருக்கும் ஸ்மார்ட்போன் உங்களிடமும் இருக்கும். அதை எடுத்து, பிடித்த விஷயத்தைப் பார்க்கத் தொடங்குங்கள். சும்மா இருந்தால்தான் எட்டிப்பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்.

நாம் எட்டிப்பிடிக்க வேண்டிய விஷயங்களில் நம் கவனம் இருந்தால், எட்டிப்பார்க்க வேண்டிய விஷயங்களில் மனம் போகாது. எட்டிப்பார்க்கும் பழக்கத்தை எட்டி உதைத்து முன்னேறுங்கள்.

No comments:

Post a Comment