Sunday, July 2, 2017


ஒரு வரி... ஒரு நெறி! - 22 - ‘எதையும் நாலு பேர் பாராட்டும்படி செய்!’

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டாக்டர் நாராயண ரெட்டி
து என் தாத்தா பங்காரு சுவாமி ரெட்டி சொன்ன வரி. 1976-ல் அவர் இறந்து விட்டார். ஆனால் அவர் சொன்ன இந்தச் சொற்களுக்கு மரணம் இல்லை. இப்போது எனக்கு 67 வயது. இன்றைக்கும் ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் முன்பு இந்த வரி என் நினைவில் வந்து போகிறது.
இதுதான், என் இத்தனை ஆண்டு கால வாழ்க்கையையும் வடிவமைத்திருக்கிறது. இதுதான் என்னைப் பள்ளியில் நன்றாகப் படிக்கத் தூண்டியது. கல்லூரி வரைக்கும் முதல் மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற வைத்தது. எம்பிபிஎஸ் முடித்து உயர் சிறப்புப் படிப்புக்கு இதயம், சிறுநீரகம், மூளை என எல்லோரும் வேறுவேறு துறைகளைத் தேடிச் சென்றபோது, எவரும் சீண்டாதிருந்த பாலியல் மருத்துவத்தைத் தேர்வு செய்ய வைத்ததும் இதுதான். ஒரு மருத்துவனாக  என் பணியை நிறுத்திக்கொள்ளாமல், எழுத்தாளனாக, மொழி பெயர்ப்பாளனாக, செயற்பாட்டாளனாக என்னை உற்சாகம் குறையாமல் இயங்கச் செய்வதும் இந்த வரிதான்.
பல தலைமுறைகளுக்கு முன்பே, ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்துவிட்ட குடும்பம் எங்களுடையது. விவசாயம்தான் தொழில். அம்மாவின் அப்பாதான் பங்காரு சுவாமி ரெட்டி. கார்ப்பரேஷனில் கான்ட்ராக்டராக இருந்தார். அவரிடம்தான் நான் வளர்ந்தேன்.

அவர் சிந்தனை எல்லாமே பெரிதினும் பெரிதாகத்தான் இருக்கும். ‘பாஸ் செய்து விட்டேன்’ என்று சொன்னால், ‘முதல் மதிப்பெண் வாங்கி பாஸ் செய்தாயா?’ எனக் கேட்பார். ‘முதல் மதிப்பெண் வாங்கியிருக்கிறேன்’ என்றால், ‘வகுப்பு அளவிலா, பள்ளி அளவிலா?’ என்பார்.  எந்த இடத்தில் பின்தங்குகிறோம் என்று பார்த்து, அதை மேம்படுத்துவார். 

எனக்கு ஆங்கிலம் பெரிய பிரச்னை. தெலுங்கு மீடியத்தில் படித்தேன். அதனால், ஆங்கிலம் தடுமாற்றமாக இருந்தது. பெர்ரி மேசன் நாவல்களை வாங்கித்தந்து வாசிக்க வைத்தார். அந்த நாவல்களைப் படித்து, அவரிடம் அதன் சாரம்சத்தைச் சொல்ல வேண்டும். அந்த நாவல்களைப் படித்துதான் ஆங்கிலம் கற்றேன். 

‘எந்தத் தொழில் செய்தாலும் அதில் அர்ப்பணிப்பு வேண்டும்... மற்றவர்களைப் போல நீயும் செய்தால், பத்தோடு பதினொன்றாகி விடுவாய்... அவர்களைவிட ஏதேனும் ஒரு விஷயத்தைக் கூடுதலாகச் செய்’ என்பார். எவ்வளவு வேலை இருந்தாலும் குடும்பத்துக்கு  அன்றாடம் குறிப்பிட்ட நேரத்தைச் செலவு செய்ய வேண்டும் என்று சொல்வார்.  தினமும் மாலையில் அருகில் அமரவைத்து  ராமாயணம், மகாபாரதக் கதைகள் சொல்வார். எதைப்பற்றியும் தைரியமாக, வெளிப்படையாக அவரிடம் பேசலாம். 

தாத்தாவிடம் கற்றதை இன்று என் குடும்பத்தில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் குடும்பத்திற்கென்று குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி விடுவேன். வேறெதிலும் கவனம் செலுத்தாமல் அந்நேரத்தை குடும்பத்திற்கு மட்டுமே செலவிடுவேன். மற்றவர்கள் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்பேன். தீர்வு சொல்வேன். என் பிரச்னைகளையும் வெளிப்படையாகப் பேசுவேன்.  

இன்று, பெரும்பாலான குடும்பங்களில் உரையாடலே நிகழ்வதில்லை. குழந்தைகளோ, தம்பதிகளோ தங்கள் தனிப்பட்ட பிரச்னைகளை மனம் விட்டுப் பேசுவதேயில்லை. குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்கள், சிதைவுகள் எல்லாவற்றுக்கும் காரணம், அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசாததுதான்.   

எம்பிபிஎஸ் முடித்துவிட்டு செக்ஸாலஜியை சிறப்புப் பாடமாகப் படிக்க முடிவெடுத்தபோது, பலர் அச்சமூட்டினார்கள். ‘நோயாளிகளே  வரமாட்டார்கள். ஒழுங்காக இதயமோ, சிறுநீரகமோ படி’ என்றார்கள். அந்தத் தருணத்தில், ‘மற்றவர்களைப் போல நீயும் செய்தால், பத்தோடு பதினொன்றாகி விடுவாய்...’ எனத் தாத்தா சொன்ன வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்தன. எது வந்தாலும் எதிர்கொள்வோம் என செக்ஸாலஜி படித்தேன். 

படிப்பை முடித்துவிட்டு சென்னையில் மருத்துவமனை ஆரம்பித்தேன். என்ன எதிர்பார்த்தேனோ அதுதான் நடந்தது. நாள் முழுவதும் சும்மாவே அமர்ந்திருப்பேன். யாரும் வரமாட்டார்கள். ஓராண்டில் என்னிடம் சிகிச்சைக்காக வந்தவர்களின் எண்ணிக்கை 32.  ‘ பொது மருத்துவத்தில் இறங்கி விடலாமா?’ என்று கூட யோசித்தேன். அந்தத் தருணத்தில் எனக்கு திருமணமானது. 2 குழந்தைகளும் பிறந்து விட்டார்கள். இதேமாதிரி இருந்தால் சாப்பாட்டுக்கு என்ன செய்வது? ஆனாலும், இன்னும் இரண்டாண்டுகள் பொறுத்திருந்து பார்க்கலாம் எனக் காத்திருந்தேன். 

பாலியல் சார்ந்த பிரச்னைகள் நிறைய பேருக்கு இருந்தன. ஆனால் யாரிடம் அதுகுறித்து பேசுவது, எங்கே தீர்வைத் தேடுவது என்று தெரியவில்லை. பத்திரிகைகளில் விளம்பரம் செய்த போலி மருத்துவர்களிடம் போய் ஏமாந்தார்கள். 1985-ல் டெல்லியில் உலக செக்சாலஜிஸ்ட் மாநாடு நடந்தது. உலகெங்கும் இருந்து 1,200 மருத்துவர்கள் பங்கேற்றார்கள். தமிழகத்திலிருந்து பங்கேற்றவர்கள், என்னோடு சேர்த்து 3 பேர்.

 அந்த மாநாட்டுக்குப் பிறகுதான் பாலியல் மருத்துவம் குறித்த விழிப்பு உணர்வு மெல்ல மெல்ல உருவானது. ஊடகங்கள் செக்ஸ் குறித்து வெளிப்படையாக எழுதத் தொடங்கின. அதன்பிறகுதான்,  பாலியல் பிரச்னைகளுக்குத் தீர்வு இருக்கிறது என மக்கள் உணர்ந்து ஆலோசனை பெற ஆரம்பித்தனர். என்னை நோக்கி பலரும் வரத் தொடங்கினார்கள். 

No comments:

Post a Comment