நல்மருந்து 2.0 - சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மூலிகைகள்! - சந்தேகங்களும் விளக்கங்களும்!
மருத்துவம் 13 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்!
ஒரு காலத்தில் மன்னர்கள், அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே சர்க்கரைநோய் இருந்தது. அதனால்தான் இதை ‘ராஜநோய்’ என்று பதிவுசெய்து வைத்துள்ளது சித்த மருத்துவம். பழங்காலங்களில் மன்னர் குடும்பத்தினர் மட்டும்தான் உடல் உழைப்பு இல்லாமல் உண்டு வந்தனர். நாட்டு விடுதலைக்குப் பிறகு எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்றாகிவிட்டதால், அனைவருக்குமே இந்த நோய் வரத் தொடங்கிவிட்டது. உடலுழைப்பு அவமானம் என்ற எண்ணமும், அதிக உணவும் நோய்களுக்கு வரவேற்பு வளையம் வைக்கின்றன.
வலிமை குறையச் செய்யும் மிகக்கொடிய நோய், சர்க்கரைநோய் என்பதைப் பதிவுசெய்து வைத்துள்ளது சித்த மருத்துவம். சர்க்கரைநோய்க்கு ‘மதுமேக சூரணம்’ அருமருந்து.
முன்னோர்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, காலைக் கடன்களை முடித்துவிட்டு, பழைய கஞ்சிப் பானையைத் தலையில் சுமந்து வேலைக்குச் செல்வார்கள். உடல் வியர்க்க வேலையைச் செய்துவிட்டு, வெயில் ஏறியதும் கஞ்சியைக் குடித்துவிட்டு நிழலில் இளைப்பாறுவார்கள். மீண்டும் வேலையைத் தொடர்ந்து முடித்துவிட்டு, மாலை 4 மணிக்குள் குளித்துவிட்டு, தோட்டங்களில் விளைந்துகிடக்கும் காய்கறிகள், கீரைகளைப் பறித்துக்கொண்டு வீட்டுக்கு வருவார்கள். ஒரே வேளை சமையலாக அரிசி அல்லது சிறுதானியங்களைச் சோறாகவும், காய்கறிகள், கீரைகளைத் தொடுகறியாகவும் சமைத்து உண்பார்கள். மீத உணவில் தண்ணீர் ஊற்றி, மறுநாள் உணவாகத் தயார் செய்துவிட்டு இரவு 8 மணிக்கெல்லாம் உறங்கிவிடுவார்கள். அன்றைக்கு மின்சாரமும் டி.வியும் இல்லை.
அந்த வாழ்க்கை முறையில் ஒரு வேளைதான் சமையல், இருமுறைதான் உணவு. ஆனால், தற்போது காலை எழுந்தவுடன் நிறைய வெள்ளைச்சீனி போட்டு காபி, காலை உணவுக்கு இட்லி, தொட்டுக்கொள்ள மூன்று வகையான சட்னி.
11 மணிக்கு அதிக எண்ணெயில் சுட்ட வடை, அதிகச் சீனி போட்ட தேநீர், மதியம் இரண்டு மூன்று வகையில் நிறைய அரிசிச்சோறு. குறைவாகக் காய்கறிகள். மாலை 4 மணிக்கு மீண்டும் சிற்றுண்டி, ஒரு தேநீர். பிறகு, இரவு உணவு. இத்தனையும் போதாமல் படுக்கப்போவதற்கு முன்பு பெரிய வாழைப்பழத்துடன் ஒரு டம்ளர் நிறைய சீனி போட்ட பால். ஆக, ஒரு நாளைக்கு 9 முறை சாப்பிடுகிறோம்; அதுவும் அதிக கலோரி நிறைந்த உணவுப் பொருள்களை. அதே வேளையில், உடல் உழைப்பை விடுங்கள், நடைப்பயணமே இல்லாமல் ஆகிவிட்டது.
சித்தர்கள் கூறிய, ‘நாள் இரண்டு’ (உண்பது) என்பதைத் தொலைத்துவிட்டோம். அரிசி, வெள்ளைச் சீனி, வெள்ளை மாவு (மைதா) என நாடு முழுவதும் மாறிவிட்ட உணவுப் பழக்கவழக்கங்களும், உடல் உழைப்பற்ற வாழ்க்கைமுறையும்தான் சர்க்கரை நோயாளிகள் பெருகக் காரணம். பல்லாண்டுகளாக உடலமைப்பு மாறாமலிருக்கும் நபர்களை, ‘உடல் கட்டுவிடாமல் இருக்கிறார்’ என்று வாய்மொழியாகச் சொல்வோம். இந்தக் ‘கட்டு’ என்பது சித்த மருத்துவம் கூறும் ஏழு உடற்கட்டுகளைக் குறிப்பது. செந்நீர் (ரத்தம்), ஊன் (தலை), மூளை (மஜ்ஜை), கொழுப்பு, எலும்பு, சுக்கிலம், சுரோணிதம் ஆகியவைதான் ஏழு உடற்கட்டுகள். அத்தனை கட்டுகளையும் பாதிப்படையச் செய்து, வலிமை குறையச் செய்யும் மிகக்கொடிய நோய் சர்க்கரைநோய் என்பதைப் பதிவு செய்துவைத்துள்ளது சித்த மருத்துவம். சர்க்கரை நோயை, ‘மதுமேகம்’ என்றே சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.
சித்த மருத்துவ நூல்கள், ஆவாரை ஒன்றையே மதுமேகத்துக்கான சிறந்த மருந்தாகக் கூறுகின்றன. ‘ஆவாரைப் பஞ்சாங்கம்’ என்று கூறப்படும் ஆவாரையின் வேர், பட்டை, இலை, பூ, காய் ஆகியவற்றுடன் மருதம்பட்டை, நாவல்பட்டை, கொன்றைப்பட்டை, கோரைக்கிழங்கு, பொன்குறண்டி கோட்டம் ஆகிய பொருள்களைச் சம எடை எடுத்துக் கலந்து, குடிநீரிட்டுக் குடித்துவர சர்க்கரைநோய் குணமாகும். குடிநீர் காய்ச்ச நேரமில்லை என்பவர்களுக்கு ‘மதுமேக சூரணம்’ அருமருந்து.
மதுமேக சூரணம் செய்முறை
ஆவாரம்பூ, கடுக்காய்த்தோல், நெல்லி வற்றல் மூன்றும் வகைக்கு 200 கிராம், நாவல்கொட்டை, கீழாநெல்லி, கறிவேப்பிலை, சீந்தில் தண்டு, கோரைக்கிழங்கு வகைக்கு 100 கிராம் (இவை அனைத்தும் உலர்ந்தவையாக எடுத்துக்கொள்ள வேண்டும்) இவற்றை நன்கு பொடியாக்கிச் சலித்து வைத்துக்கொள்ளவும். சர்க்கரைநோய் என அறிந்தவுடன், இதில் 3-5 கிராம் (அரை முதல் ஒரு தேக்கரண்டி) எடுத்து காலை, மதியம், இரவு உணவுக்குப் பிறகு மூன்று வேளை வெந்நீர் அல்லது தண்ணீரில் கலந்து உண்டுவரச் சர்க்கரையின் அளவு விரைவில் கட்டுக்குள் வரும். தொடர்ந்து உண்டு வரவும். ஆனால், உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மிகவும் அவசியம். இந்த மருந்துப் பொருள்கள்தான் வேறு வேறு ஆங்கிலப் பெயர்களில் மாத்திரைகளாக விற்பனைக்கு வருகின்றன.
இந்தச் சூரணத்தில் அளவு மிக முக்கியம். ஒரு மாத்திரையில் (கேப்சூல்) அதிகபட்சம் 400-500 மி.கி மருந்துதான் அடைக்க முடியும். நமக்குத் தேவையோ 3-5 கிராம். மேலும், மருந்து நமது உமிழ்நீருடன் கலந்து உடலுக்குள் செல்வதுதான் நல்ல பலனைக் கொடுக்கும். சர்க்கரைநோய்க்குக் கண்டிப்பாகச் சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் எனப் பரவலான ஒரு கருத்து நிலவுகிறது. நம் சித்த மருத்துவ மூலிகை மருந்தான மதுமேக சூரணத்தில் சர்க்கரைநோயை குணப்படுத்தும் ஆவாரம் பூவுடன், உடலுக்கு ஊட்டம் அளிக்கும் கோரைக்கிழங்கு, சீந்தில் தண்டு, சர்க்கரையின் தாக்கத்தைக் குறைக்கும் நாவல்கொட்டை, கல்லீரல் காக்கும் கீழாநெல்லி, கண்களைக் காக்கும் கறிவேப்பிலை, உடலை வளர்க்கும் கடுக்காய் மற்றும் நெல்லிக்காய் முதலான அனைத்துப் பொருள்களும் இருப்பதால் இது மிகவும் சிறந்த அமுதம்.
சர்க்கரைநோய் என்றால் ஆங்கில மருந்துகள் சாப்பிட்டால் மட்டுமே குணமாகும் என்ற பொய்யான கருத்து நிலவுகிறது. எனது 30 ஆண்டு மருத்துவ அனுபவத்தில், ரத்தத்தில் சர்க்கரை அளவு 500-க்கும் மேல் உள்ளபோது, முதலில் ஆவாரைக் குடிநீரை வழங்கி, சர்க்கரையின் அளவு 200 முதல் 300-க்கு வந்து, அதற்குப் பிறகு மதுமேக சூரணம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் முற்றிலும் குணமானவர்களை நான் கண்டுவருகிறேன். சர்க்கரைநோயால் மிகவும் உடல் மெலிபவர்கள், ‘சீந்தில் உப்பு’டன் (முற்றிய சீந்தில் தண்டுகளைக் கொண்டு தயாரிப்பது) மதுமேக சூரணம் சாப்பிட்டுவருவது நல்ல பலன் தருகிறது. ‘குடிஜிசத்துவம்’ என்ற பெயரில் சீந்தில் உப்புக் கடைகளில் கிடைக்கிறது. சர்க்கரைநோய் அதிகமாகி சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால், ஆவாரை வேர்ப்பட்டைக் குடிநீர் சிறந்த மருந்தாகும்.
இதய பாதிப்பு ஏற்படாமலிருக்க, இதய பாதிப்பைக் குறைப்பதற்கு ‘விளாம்பிசின்’ (விளா மரத்துப் பிசின்) சிறந்த மருந்து. இதைப் பொடி செய்து மதுமேக சூரணம் அல்லது ஆவாரைக் குடிநீருடன் சேர்த்துக் கொடுக்க நல்ல பயன் கிடைக்கும். இப்படிச் சித்த மருத்துவம் மிகவும் மேம்பட்ட, நவீன அறிவியலுடன் ஒத்துப் போகிற பல்வேறு அரிய முறைகளை வைத்திருக்கிறது. ஆனால், வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ்புக்கிலும் அறிவியல், மருத்துவ அனுபவம் இல்லாத பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, வெண்டைக்காயின் நுரையைச் சாப்பிட்டால் சர்க்கரைநோய் முற்றிலுமாகக் குணமாகும் என்றொரு பதிவு. எனவே, பதிவில் உள்ளது உண்மையா என்பதை ஆராய்ந்து பயன்படுத்துவது நல்லது.
சிறுகுறிஞ்சான் (அ) சர்க்கரைக்கொல்லி
இந்த இலையை வாயில் போட்டு சுவைத்துவிட்டு, சீனி அல்லது வெல்லத்தை வாயில் போட்டால் அவை இனிக்காது. காரணம், இலைகளில் உள்ள `குர்மரின்’ (Gurmarin) என்ற வேதிப்பொருள். நாவின் சுவை மொட்டுகளைச் சிறிது நேரம் செயலிழக்கச் செய்யும். சித்த மருத்துவப் பாடநூலான குணபாடம், கண்ணுசாமியின் பதார்த்த குண விளக்கம், சித்தர் இலக்கியங்களிலும் இது சர்க்கரைநோயைக் குணப்படுத்தும் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால், நவீன அறிவியல் ஆய்வு முடிவுகள் இது சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும் என்பதை உறுதிசெய்கின்றன. ஆனால், இதை மட்டுமே சாப்பிட்டு சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்த முடியாது.
இன்சுலின் செடி
இது வெளிநாடுகளிலிருந்து அறிமுகமான தாவரம். இதன் இலையை அப்படியே சுவைத்துச் சாப்பிட்டால் சர்க்கரை அளவு மிகவும் வேகமாகக் குறையும். அதிக அளவில் உட்கொண்டால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகக் குறைந்து மயக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்தச் செடி அப்போதைக்கு அப்போது சர்க்கரை அளவைக் குறைப்பதில் சிறந்தது. இதைப் பயன்படுத்துவதை நிறுத்தியவுடன் மீண்டும் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும்.
நாவல்
நாவல் மரப்பட்டையும், பழத்தின் கொட்டையும் சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தக்கூடியவை. இதில், பட்டையைக் குடிநீராகக் குடிப்பது நல்லது. பழக் கொட்டைகளை ஆடுதின்னாப் பாளைச்சாறு விட்டு அரைத்து, பட்டாணி அளவு உருண்டையாக உருட்டி, காயவைத்து உட்கொண்டு வந்தால், சிறுநீரில் சர்க்கரை அளவு குறையும். நாவல்பழச் சாறு சர்க்கரைநோயால், ஏற்படும் அதிக தாகத்துக்கு மிகவும் அருமையான மருந்து. இம்மரத்தின் வேர்ப்பட்டையை, சர்க்கரைநோயை குணப்படுத்தும் குடிநீர்களில் சேர்க்கிறார்கள்.
பொன்குறண்டி
இது மலைகளில் காணப்படும் மரம். இம்மரத்தின் வேர்ப்பட்டை பொன்போல மஞ்சள் நிறத்தில் இருப்பதால் இதற்கு, ‘பொன்குறண்டி’ என்று பெயர். இதை மலையாளத்தில் ‘ஏகநாயகம்’ என்பார்கள். இதைத் தனியாகப் பொடியாகவோ, பிற பொருள்களுடன் சேர்த்துக் குடிநீராகவோ செய்து உண்டுவர, ரத்தத்தில் சர்க்கரை அளவு நன்றாகக் குறையும். ஆவாரைக் குடிநீர் பாடலில், ‘கடலழிஞ்சில்’ என்று குறிப்பிடப்படுவது இதுதான். இதன் வேரைத் தோண்டி எடுப்பதால், இம்மர இனம் இன்று அழியும் நிலையில் உள்ளது.
‘‘ரத்தத்தில் சர்க்கரை அளவு 500-க்கும் மேல் உள்ளபோது, முதலில் ஆவாரைக் குடிநீரை வழங்கி, சர்க்கரையின் அளவு 200 முதல் 300-க்கு வந்து, அதற்குப் பிறகு மதுமேக சூரணம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் முற்றிலும் குணமானவர்களை நான் கண்டு வருகிறேன்.’’
சர்க்கரைநோய்க்குக் கைப்பக்குவமாக எத்தனையோ மூலிகை மருந்துகள் சொல்லப்பட்டாலும், `வேர் பாரு, தழை பாரு, மிஞ்சினக்கால் பற்ப, செந்தூரம் மெல்ல மெல்ல பாரு பாரே...’ என்ற சித்த மருத்துவ வாக்குக்கேற்ப, மனித உடலின் ஏழு உடற்கட்டுகளையும் வலிமைப்படுத்தும் கந்தம், அயம், தங்கம், வங்கம், நாகம், தாமிரம் ஆகிய தாதுப் பொருள்களால் ஆன பற்பம், செந்தூரங்களை வழங்கி, சர்க்கரைநோயை முழுமையாக குணப்படுத்திவிட முடியும் என்று ‘தேரையர் மருத்துவப் பாரதம்’ கூறுகிறது. நோய்களை கெளரவர்களாகவும், மருந்துகளைப் பாண்டவர்களாகவும் உருவகித்து எழுதப்பட்டுள்ள தேரையரின் இந்த மருத்துவப் பாரத நூல், அனைத்து நோய்களுக்கும் நிரந்தரக் குணம் கூறுகிறது.
No comments:
Post a Comment