Sunday, December 15, 2019
விவேக சிந்தாமணி - ஈனருக்கு உரைத்திடில்
விவேக சிந்தாமணி - ஈனருக்கு உரைத்திடில்
ஒரு ஊரில் ஒரு தூக்கணாம் குருவி இருந்தது. அது ஒரு மரத்தில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. அப்படி இருக்கும் போது ஒரு நாள் பெரு மழை வந்தது. குருவிக்கு ஒரு பயமும் இல்லை. தான் கட்டிய கூட்டில் அது சுகமாக இருந்தது. கூட்டில் இருந்து அது வெளியே எட்டிப் பார்த்த போது, அந்த மரத்தில் ஒரு குரங்கு இருந்தது தெரிய வந்தது. அந்தக் குரங்கு மழையில் நனைந்து , குளிரில் நடுங்கியபடி இருந்தது.
அதன் மேல் இரக்கப்பட்டு, அந்த தூக்கணாம் குருவி "ஏ குரங்கே..நீ ஏன் இப்படி மழையில் துன்பப் படுகிறாய். என்னை போல் ஒரு கூடு கட்டிக் கொண்டு சுகமாக வாழலாம் தானே...நான் உனக்கு கூடு கட்டச் சொல்லித் தருகிறேன் " என்றது.
அதைக் கேட்ட குரங்குக்கு கடுமையான கோபம் வந்தது.
"போடா ஊசி மூஞ்சி மூடா...நீயா எனக்கு புத்தி சொல்வது " என்று வெகுண்டு, அந்த தூக்கணாங் குருவி கூட்டை பிய்த்து எரிந்து விட்டது.
கீழானவர்களுக்கு உயர்ந்த கருத்தைச் சொன்னால், இதுதான் நிகழும் என்கிறது விவேக சிந்தாமணி.
பாடல்
வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறிசொலத் தாண்டி பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக்கு உரைத்திடில் இடர்அது ஆகுமே!
பொருள்
வானரம் = குரங்கு
மழைதனில் நனையத் = மழையில் நனைய
தூக்கணம் = தூக்கணாம் குருவி
தானொரு = தான் ஒரு
நெறிசொலத் = வழி சொல்ல
தாண்டி பிய்த்திடும் = குதித்து வந்து பிய்த்து போடும்
ஞானமும் = ஞானமும்
கல்வியும் = கல்வியும்
நவின்ற நூல்களும் = நல்ல நூல்களும்
ஈனருக்கு உரைத்திடில் = கீழானவர்களுக்கு சொன்னால்
இடர்அது ஆகுமே! = அது துன்பத்தில் போய் முடியும்
உயர்ந்த நூல்களின் அர்த்தம் புரியாமல், அதன் நோக்கம் புரியாமல், அதைத் தரக்குறைவாக விமர்சிப்பவர்கள், அதை கிண்டல் செய்பவர்கள், அதைப் பற்றி குதர்க்கமாக கேள்வி கேட்டு கேலி செய்பவர்கள் எல்லாமே அந்த ஈனர் கூட்டத்தில் சேர்வார்கள்.
புரியவில்லை என்றால் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். கிண்டல் செய்வதும், குதர்க்கம் பேசுவதும் நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளும் வழியின்றி வேறில்லை.
No comments:
Post a Comment