Saturday, January 4, 2020

மழை வளம் அதிகரிக்க, மரம் வளர்ப்போம் thanks to dinamalar.com

மழை வளம் அதிகரிக்க, மரம் வளர்ப்போம்!
சமீபத்தில், ஒரு மாத இதழில் வெளியான, மழை பற்றிய தகவலை படித்தேன். இந்தியாவில், அதிக மழை பெய்யும் இடங்களில், பால் வரக்கூடிய மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருப்பதால் தான், மழை பொழிவு அதிகமாக உள்ளதாக, ஆராய்ச்சி மூலம் நிரூபித்துள்ளனர்.
பால் வரக்கூடிய மரங்களின் வகைகளான, அத்தி, எருக்கன், சப்போட்டா, பலா மற்றும் ஆல மரம் ஆகியவை, மழையை ஈர்க்கும் தன்மை கொண்டவை.
ஆகவே, மரம் வளர்க்கும் ஆர்வமுள்ள தன்னார்வலர்களும், அரசும், மேற்கொண்ட மரங்களை நட்டு வளர்த்தால், மழை வளம் பெருகும்; நீர்நிலைகள் நிரம்பும்; நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, தண்ணீர் பஞ்சம் வராது.
— எஸ். அமிர்தலிங்கம், கடலுார்.

பாட்டியின் பெருந்தன்மை!

கடந்த வாரம், நண்பனுடன் அவரது மகளையும் வெளியே அழைத்து சென்றிருந்தேன். அந்த குழந்தை, மண் உண்டியல் விற்றுக் கொண்டிருந்த ஒரு மூதாட்டியை கண்டதும், 'எனக்கு, உண்டியல் வேண்டும்...' என, கேட்டது.
மூதாட்டியிடம் விலை கேட்க, 30 ரூபாய் சொன்னார். ஐந்து ரூபாய் குறைத்து பேரம் பேசி, உண்டியலை வாங்கினான், நண்பன்.
அதன்பின், அந்த மூதாட்டியின் செயல், எங்களை கூனிக் குறுக வைத்தது.
உண்டியலை, நண்பரின் மகள் கையில் கொடுக்கும்போது, 'விரைவாக, இந்த உண்டியலில் பணம் நிறைய சேமிக்க வேண்டும்...' என வாழ்த்தி, ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை உள்ளே போட்டு கொடுத்தார்.
இதைக் கண்ட நானும், நண்பனும் வெட்கி தலை குனிந்தோம். பிறகு, அந்த மூதாட்டி சொன்ன விலையை கொடுத்தான், நண்பன்.
'பேரம் பேசி ஒரு விலைக்கு நான் ஒப்புக்கொண்ட பின், கூடுதலாக வாங்குவது நியாயமல்ல...' என்று, வாங்க மறுத்தார்.
ஒன்றும் பேச இயலாமல், கனத்த மனதுடன் வீடு திரும்பினோம்.
— டி. சந்திரமோகன், மதுரை.

No comments:

Post a Comment