Wednesday, July 11, 2018

குறள் கதை — ‘உண்டிக்கழகு விருந்தோடுண்டல் thanks to tamil and vedas.com


குறள் கதை — ‘உண்டிக்கழகு விருந்தோடுண்டல்’ (Post No.5203)

by Tamil and Vedas
Written by London swaminathan

Date: 10 JULY 2018

Time uploaded in London – 11-59 am  (British Summer Time)

Post No. 5203

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

‘உண்டிக்கழகு விருந்தோடுண்டல்’---வெற்றி வேற்கை, அதி வீர ராம பாண்டியன்

சாப்பாட்டிற்கு அழகு, விருந்தாளிகளுடன் பகுத்து உண்ணுதல் ஆகும். விருந்தோம்பல் என்னும் பண்பு பாரத நாட்டில் மட்டுமே உண்டு. இமயம் முதல் குமரி வரை ஒரே கலாசாரம் என்பதற்கு இது மிகப்பெரிய சான்று

வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் விருந்தாளிக்குப் போட்டுவிட்டுத்தான் சாப்பிட வேண்டும் என்று சொல்லவில்லை. அதை ஒரு தர்ம கைங்கர்யமாகவும் சொல்ல வில்லை. அன்ன சத்திரங்கள் ஆயிரம் அமைக்கவுமில்லை. மநு ஸ்ம்ருதியும், சிலப்பதிகாரமும், திருக்குறளும் சங்க இலக்கியமும் மட்டுமே செப்பும் கருத்து இது.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள் 322)

பொருள்
தம்மிடமுள்ள உணவை எல்லோருக்கும் பகுத்துக் கொடுத்து தானும் உண்ண வேண்டும்; பிற உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும்; நல்லோர் கூறிய எல்லா அறங்களிலும் இதுவே சிறந்த தர்மம்.
தனக்கு மட்டுமே சமைப்பவன் பாவி என்று பகவத் கீதையில்ன் கண்ணன் நுவல்கிறான்.
யஜ்ஞசிஷ்டாசினஹ சந்தோ முச்யந்தே சர்வகில்பிஷைஹி
புஞ்சதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மாமகாரணாத்
(பகவத் கீதை 3-13)

பொருள்
யக்ஞம் செய்து மிஞ்சியதை உண்ணும் சாதுக்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றனர். ஆனால் எவர்கள் தமக்கெனவே சமைக்கின்றார்களோ அந்த பாபிகள் பாவத்தையே உண்கிறார்கள்.

இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டு பெரியபுராணத்திலுள்ள இளையான்குடி  மாற நாயனார் வரலாறு ஆகும்.
இளையான்குடி என்பது ஒரு சிறிய கிராமம். அங்கே ஒரு சிவ பக்தர் வாழ்ந்து வந்தார். அவர் பயிர்த் தொழில் செய்யும் வேளாளர் குலத்தில் உதித்த பெருந்தகை. வந்தோருக்கெல்லாம் விருந்தளிப்பவர். இதனாலேயே ஏழ்மை நிலை அடைந்தவர். இவர் புகழை உலகிற்கு அறிவிக்க இறைவன் ஒரு திருவிளையாடல் செய்தான்

ஒரு நாள் இரவில் மழை கொட்டித் தீர்த்தது. அப்போது ஒரு துறவி அவர் வீட்டின் கதவைத் தட்டினார். வந்தவர்க்கு நள்ளிரவானாலும் சாப்பாடு போட வேண்டுமே என்று எண்ணி மனைவியிடம் என்ன இருக்கிறது? என்று வினவினார். அவர் முகமே பதில் சொல்லிவிட்டது.
விருந்தினருக்கு உணவளிக்க பக்கத்து வீட்டுக்குக் கூட போக முடியாத மழை ஒரு புறம்; இருள் மறு புறம். திடீரென அவர் மனைவிக்கு ஒரு  விஷயம் ஞாபகம் வந்தது. அன்று காலையில்தான் நெல் வயலில் தானியத்தை விதைத்து இருந்தார்கள். கொட்டும் மழையில் கிடைத்த தானியங்களை அள்ளி வரும்படி மனைவி சொன்னவுடன் அவரும் தலையின் மீது துண்டைப் போட்டுக்கொண்டு வயல் வெளியில் சேற்றிலும் சகதியிலும் மிதந்த விதை நெல்லை பொறுக்கி எடுத்து வடிகட்டி வைத்து நெல்லை மட்டும் அரிந்து கழுவினார். அதை உலையில் ஏற்றி சோறு வைத்தார்.

இதற்குள் கறியமுது வேண்டுமே என்று சிந்திக்க கொல்லைப்புற கீரை செடிகள் நினைவுக்கு வந்தன. அவைகளையும் பறித்து தண்டு ஒரு கூட்டு இலை ஒரு கறியமுது என்று விதவிதமாகச் சமைத்துவிட்டு விருந்தாளியை அழைக்க திண்ணைக்கு வந்தார். ஆனால் விருந்தாளி மாயமாய் மறைந்து விட்டார்! வந்திருந்தவர் சிவ பெருமானே என்பதை அறிந்தார். அவரும் ஒளி வடிவில் ரிஷப ஆரூடனாகக் காட்சி தந்தார்.

யார் ஒருவன் பகுத்துக் கொடுக்காமல் சாப்பிடுகிறானோ அவன் குற்றம் புரிந்தவனே. அவன் தோழர்களுக்கு உணவு அளிக்காவிடில் அவனை நேசிப்போர் யாரும் இரார்– இது ரிக் வேத மந்திரத்தின் ஒரு பகுதி (10-117-4/6)

விருந்தினரை எப்படிக் கவனிக்க வேண்டும் என்று காசிக் காண்டம் என்னும் நூலில் அதிவீர ராம பாண்டியர் எழுதியுள்ளார். இதை ஒருவர் பின்பற்றினால் வந்தவரின் உள்ளத்தை வென்றுவிடலாம். சிலர் நன்றாகச் சாப்பாடு போடுவர். ஆனால் பேசத் தெரியாமல் பேசி, போட்ட சாப்பாட்டின் பலனைக் கெடுத்துவிடுவர்.
விருந்தினனாக ஒருவன் வந்தெதிரின்
வியத்தல் நன்மொழியினுரைத்தல்
திருந்துற நோக்கல் வருகென வுரைத்தல்
எழுதல்முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்றவன்றன் அருகுற விருத்தல்
போமெனிற் பின்செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல்லிவ் வொன்பான்
ஒழுக்கமும் வழிபடு பண்பே

No comments:

Post a Comment