Sunday, December 10, 2017

அடல்ட்ஸ் ஒன்லி 1 thanks to vikatan.com

அடல்ட்ஸ் ஒன்லி

ஜெயராணி - படங்கள்: மதன் சுந்தர்
“உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல; 
அவர்கள் இயற்கையின் குழந்தைகள்.
உங்கள் குழந்தைகள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்களேயன்றி, 
உங்களிடமிருந்து அல்ல.
உங்கள் குழந்தைகள் உங்களுடன் இருந்தாலும்
உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல
உங்கள் அன்பை நீங்கள் அவர்களுக்குத் தரலாம்; 
உங்கள் எண்ணங்களை அல்ல.
அவர்களுக்கென்று தனிச் சிந்தனைகள் உண்டு.
அவர்களின் உடல்களுக்குத்தான் நீங்கள் பாதுகாப்பு தரமுடியும்;
ஆன்மாக்களுக்கு அல்ல.
அவர்களின் ஆன்மாக்கள் நாளைய வீட்டில் வாழ்பவை,
அங்கே நீங்கள் செல்லமுடியாது
உங்கள் கனவுகளிலும்கூட.
அவர்களைப்போலிருக்க நீங்கள் முயற்சி செய்யலாம்.
ஆனால், அவர்களை உங்களைப்போல் ஆக்கிவிடாதீர்கள்.
வாழ்க்கை பின் திரும்பிச்செல்லாது; 
நேற்றுடன் ஒத்துப்போகாது.
நீங்கள் வில்கள். உங்களிடமிருந்து எய்யப்படும் 
உயிருள்ள அம்புகளே குழந்தைகள்.
அம்பு எதை அடையவேண்டும் என்ற இலக்கை
வில் தீர்மானிக்காது;
அம்பை எய்துபவன்தான் தீர்மானிப்பான்,
அம்பை எய்துபவன் இயற்கையே, நீங்கள் அல்ல,
நீங்கள் வெறும் வில்தான்!’’
 -  கலீல் ஜிப்ரான்
ந்தக் கவிதையை முதன் முதலாகப் படித்தபோது மிகவும் பிடித்திருந்தது. எந்தப் பிரச்னையும் இல்லை. `அடடா என்னவொரு சிந்தனை!’ என ஆச்சர்யப்பட்டுப் போனேன். எந்தச் சட்டத்தாலும் சிக்காத சுதந்திரமான கல்லூரிப் பருவம் அது. அதனால் கலீல் ஜிப்ரானின் அந்த டிட்டாச்மென்ட் பிடித்திருந்தது. அப்புறம் இந்தக் கவிதை நினைவடுக்குகளில் கீழே போய்விட்டது. பின்னொரு முறை இதே கவிதையை வருடங்கள் கழித்து, எனக்குக் குழந்தை பிறந்திருந்த நேரத்தில், மறுபடியும் படித்தேன். அப்போது நான் அடைந்த தொந்தரவுக்கு அளவே இல்லை. 

பல முறை படித்தபோதும் அதே உணர்வெழுச்சி தொடர்ந்தது. இவ்வளவு அலட்சிய உணர்வோடு, மரக்கட்டைபோல யாரேனும் எழுதுவார்களா என்று திட்டத் தோன்றியது. இந்த மனிதனுக்குக் குழந்தைப்பேறு என்றால் என்னவென்றே தெரியவில்லை எனக் கொதிப்புற்றேன். எப்படி ஒரு தாயோ, தந்தையோ தன் பிள்ளையைத் தன் உணர்வுகளிலிருந்து இவர் சொல்வதுபோலப் பிரித்துப் பார்க்க முடியும்? அதிலும் `உங்கள் குழந்தைகள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல’ என்று சொல்வதற்குக் கல்நெஞ்சம்தான் இருக்க வேண்டுமெனத் தோன்றியது.

அக்கவிதையை நான் ஒவ்வொரு நாளும் பலமுறை படித்தேன். அதன் சொற்றொடர்களுக்குள் சிக்கிக்கொண்டதைப் போல அதிலிருந்து மீள முடியவில்லை.     அக்கவிதையிலிருந்த ஏதோவொன்று என்னை இறுகப் பிடித்து வைத்துக் கொண்டதாகப்பட்டது. அது என்னவென்று பலவாறு யோசித்து, குழம்பி, கடைசியில் தெளிந்தேன். படித்துவிட்டுக் கடந்து போக முடியாத அளவிற்கு அக்கவிதையில் எது என்னைத் தைத்து வைத்திருந்தது தெரியுமா? உண்மை.

ஆம், உண்மையேதான். `உன் குழந்தை உன்னுடையது அல்ல’ என்ற அந்தக் கவிஞனின் அறைகூவல் முற்றிலும் உண்மையே எனப் புரிந்தபோது, என் பரிதவிப்பு முடிவுக்கு வந்தது. அலைபாய்ந்த மனம் அமைதியடைந்தது. மூளைக்குள் விழுந்து அழுத்திக்கொண்டிருந்த பெருஞ்சுமை ஒன்று நீங்கிவிட்டதாக உணர்ந்தேன். இக்குழந்தை எனக்காகப் பிறக்கவில்லை... இப்பூமிக்காகவே பிறந்திருக்கிறது. கோடானு கோடி உயிர்களால் நடைவுறும் இப்பிரபஞ்சத்தின் தடையற்ற இயக்கத்துக்குப் பங்காற்றப்போகும் மற்றுமொரு உயிர் இது எனப் புரிந்தபோது என் சுயநலம் மொத்தமாக வடிந்துவிட்டது.

நம் அணுக்களைச் சுமந்து, நம் உதிரத்திலிருந்து உருவாகி வருவதாலேயே குழந்தைகள்மீது நாம் எல்லையற்ற உரிமை பெற்றவர்களாகிறோம். கல்லாப்பெட்டியில் இருக்கும் பணத்தைப் போன்றோ, லாக்கரில் இருக்கும் நகையைப் போன்றோ அல்லது வேலி போடப்பட்ட நிலத்தைப் போன்றோ நாம் அவர்களை உடைமையாக்கிக்கொள்ள முனைகிறோம். நான் சொல்வதை `எல்லாம்’ கேட்க வேண்டும், நான் சொல்வதை `மட்டுமே’ கேட்டு நடக்க வேண்டும்; என் எதிர்பார்ப்புகளின்படியே வாழ வேண்டும்; உனக்கெனத் தனிக்கருத்து எதுவும் இருக்கக் கூடாது; எனது விருப்பம்தான் உன்னுடைய விருப்பம்; எனது லட்சியம்தான் உன்னுடைய லட்சியம்; என் மூளையைக் கொண்டே நீ சிந்திக்க வேண்டும், என் கால்களால் நான் கைகாட்டும் திசைகளில் நடந்து, என் கண்களால் உலகைப் பார்த்து, என் காதுகளால் விஷயங்களைக் கேட்டு வளர வேண்டும்;  எனது கட்டளையே உன்னுடைய சாசனமாகட்டும் என்கிறோம்.நாம் என்ன, குழந்தையை வளர்க்கும் பெற்றோர்களா இல்லை, அடக்கியாளும் சர்வாதிகாரிகளா? ஒருமுறை தெருவில் நடந்து வந்துகொண்டிருந்தபோது, ஏழு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனை ஒரு பெண் துரத்தித் துரத்தி அடிப்பதைப் பார்த்தேன். அந்தப் பெண்ணின் முகத்தில் தாங்கவியலா கோபம்! கண்டபடி திட்டி அடி அடியென அடித்துத் துவைத்தார். ‘அம்மா, இனிமேல் பண்ணமாட்டேன்மா’ என அச்சிறுவன் காலில் விழுந்து கதறினான். சுற்றிலும் நின்றிருந்தவர்கள் இக்கொடூரத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். யாரும் தடுக்கவில்லை. நான் அந்தப் பெண்மணியிடம், `அடிக்காதீங்க, எதுக்கு இப்படி மோசமா நடந்துக்குறீங்க’ என்று கேட்டதும், `நீ யாரு கேக்குறதுக்கு, நான் அப்படித்தான் அடிப்பேன்’ என்று இன்னும் ஆவேசமாகி அந்தச் சிறுவனின் சட்டையைப் பிடித்து இழுத்து வீசினார். `என் மகனை, நான் அப்படித்தான் அடிப்பேன், மிதிப்பேன்’ என்று கத்திக்கொண்டே அவன்மீது பாய்ந்தார். `அடிக்குறத நிறுத்தலேன்னா, போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவேன்’ என்று அதட்டியதும், அந்தப் பெண் சற்று அதிர்ச்சியடைந்து, சுற்றி இருந்தவர்களிடம்... `என்ன கொடுமை இது. என் மகனை நான் அடிக்க உரிமையில்லையா? ரெண்டு பாடத்துல ஃபெயிலாகிட்டு அதை என்கிட்ட மறைச்சுப் பொய் சொல்லிட்டான். கண்டிச்சு வளர்க்கலேன்னா கெட்டுப் போயிர மாட்டானா?’ என்றதும், அங்கே நின்றிருந்த பெண்கள் அவரின் ‘நியாயத்தை’ புரிந்து கொண்டனர்.  `உனக்கென்னமா, உன் வேலைய பார்த்துட்டுப் போ. அவங்க பையன், அவங்க அடிக்கிறாங்க’ என்றனர். நான் விடவில்லை.

``யாரையும் அடிக்க யாருக்கும் உரிமையில்லை. நீங்க கொடுமைப்படுத்துறத கண்ணால பார்த்திருக்கேன். இவ்ளோ பேரும் அதுக்கு சாட்சி. நான் போய் போலீஸைக் கூட்டிட்டு வர்றேன். டேய் தம்பி, உங்கம்மா அடிச்சுக் கொடுமைப்படுத்துறத போலீஸ்ல சொல்லணும் என்ன’’ என்று சொல்லவும், அந்த மகனை இறுக்கிக் கட்டியணைத்துக்கொண்டார் அந்தப் பெண். அவரது கோபம் முழுவதுமாக என் பக்கம் திரும்பியிருந்தது. என்னைத் திட்டியபடி அந்தப் பையனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தார். `இவளுக்கென்ன வந்துச்சு’ என மற்ற பெண்களும் முறைத்துக்கொண்டு நின்றனர்.
நமக்குக் குழந்தைகள்மீது இருக்கும் உரிமை என்பது ஏறக்குறைய இதே தன்மையிலானதுதான். குழந்தைகளை அடிக்காத பெற்றோர் உள்ளனரா? உண்டென்றாலும் அவர்கள் மைனாரிட்டி பட்டியலில் இடம் பிடிப்பார்கள். உருவத்தில் சிறிதாக, உடல் வலுவின்றி பலவீனமாக, எல்லாவற்றிற்கும் நம்மையே சார்ந்திருப்பதாலேயே குழந்தைகள்மீது நமக்கு அதிகாரம் வந்துவிடுகிறது இல்லையா? `அறிவு வளர்ச்சி போதாது’, `அனுபவம் பத்தாது’, `சிந்திக்கும் திறன் கிடையாது’ எனக் குழந்தைகளை நம் கட்டுப்பாட்டில் வைக்க எத்தனை சாக்குகள்! உண்மையில் குழந்தைகளுக்கு இப்படியான எந்தக் குறைபாடும் இல்லை. குழந்தைகள் என்பவர்கள் யார்? சின்னஞ்சிறிய மனிதர்கள். நமக்குப் பின்னால் பிறந்தவர்கள் என்பதைத் தாண்டி அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை. பெரியவர்களைப் போலவே அறிவும், உணர்வும், சிந்திக்கும் ஆற்றலும் குழந்தைகளுக்கு உண்டு. இன்னும் கூடுதலாக எதிர்மறை விஷயங்களைச் சேகரிக்காத ஆரோக்கியமான மனநிலையையும் அவர்கள் கொண்டிருக்கின்றனர். சரியை சரி என்றும், தவறை தவறென்றும் அவர்களுக்குப் பிரித்துப் பார்க்கத் தெரியும். பிரச்னை என்னவென்றால் அதை நம்ப நாம் தயாராக இல்லை என்பதுதான்.

அதனாலேயே `எல்லாம் உன் நன்மைக்கு’ என்ற பெயரில் நம்மில் பலரும் ஒருவகையான வன்முறையை, வலுக்கட்டாயத்தைக் குழந்தைகள்மீது செலுத்திக்கொண்டே இருக்கிறோம். பெற்றோருக்குப் பிடித்த வகையில் உடையணிந்து, அவர்களுக்குப் பிடித்த பாடத்தைப் படித்து, அவர்களுக்குப் பிடித்த மாதிரியான வேலைக்குப் போய், அவர்கள் பார்க்கும் பெண்ணையோ, பையனையோ கல்யாணம் கட்டிக்கொண்டு, அவர்கள் விரும்புகிற அந்தஸ்திலேயே வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். அப்படியில்லாத பிள்ளைகளைப் பெற்றோர்களே அடங்காப்பிடாரி, வீட்டுக்கு ஆகாதது, தண்டச்சோறு, ஓடுகாலி, பிழைக்கத் தெரியாதவன் என்றுதான் அழைக்கிறார்கள்.

மருத்துவராக இருக்கும் பெற்றோர் பிள்ளையும் மருத்துவமே படிக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். போலீஸ், இன்ஜினீயர், சினிமா நடிகர் என யாரும் விதிவிலக்கல்ல. தான் பார்க்கும் வேலையை அப்படியே குலத்தொழிலாக மாற்றிவிட இன்றைய நவீன இந்தியாவின் படித்த பெற்றோரும் முனைகின்றனர். குழந்தைக்கு எதில் ஆர்வம் என்பது குறித்து அவர்களுக்குக் கவலையில்லை. எத்தனையோ இசைக் கலைஞர்களை, விஞ்ஞானிகளை, தொழில் முனைவோரை, விவசாயிகளை, ஓவியர்களை, விளையாட்டு வீரர்களைக் கொன்றுதான் இங்கே இத்தனை லட்சம் இன்ஜினீயரிங் பட்டதாரிகள் உருவாகினர். இவர்களில் எத்தனை பேருக்கு அது சொந்தத் தேர்வாக இருந்திருக்கும் என்பது நாமறிந்ததே! பி.இ சான்றிதழை வைத்துக் கொண்டு ரெஸ்ட்டாரண்டில் சர்வராக,  டாக்ஸி ஓட்டுநராக,  துணிக்கடையில் சூப்பர்வைஸராக வேலை செய்கின்றனர். இந்த வேலைகளைச் செய்வதில் எந்தத் தாழ்வும் இல்லை. ஆனால், இதற்கு ஏன் அவர்கள் ஐந்தாண்டுகள் சர்வாதிகாரக் கட்டுப்பாடுகள் நிறைந்த பொறியியல் கல்லூரியில் உழன்றிருக்க வேண்டும்?!

அண்மையில் போரூரிலிருந்து ராயப்பேட்டைக்குப் போக தனியார் காரை புக் செய்தேன். ஓட்டுநராக வந்தவர் ஒரு இன்ஜினீயரிங் பட்டதாரி என, பேச்சுக் கொடுத்தபோது தெரிந்தது. ``பொறியியல் படிச்சுட்டு ஏன் கார் ஓட்டுறீங்க, வேலை கிடைக்கலையா?’’ என்று கேட்டேன். ``அட நீங்க வேற, நான் இப்போதான் சுதந்திரமா இருக்கேன். நம்மளால கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துகிட்டு மெஷின் மாதிரி வேலை செய்ய முடியாது. ஆறு மாசம் போனேன். அப்பா சாமி விடுங்கடானு ஓடி வந்துட்டேன். கொஞ்ச நாள் சும்மா சுத்திட்டிருந்தேன். தண்டமா இருக்கேன்னு வீட்ல ஒரே பேச்சு. நல்லா யோசிச்சு, ஒரு காரை வாங்கி ஓட்டுறதுனு முடிவு பண்ணுனேன். வீட்டைப் பொறுத்தவரை இது கவுரவக் குறைச்சல்தான். ஆனா எனக்கு இது சுதந்திரம்.  இந்த டிரிப்போட போதும்னா முடிச்சுட்டு வீட்டுக்குப் போயிருவேன். லைஃப் நம்ம கன்ட்ரோல்ல இருக்கு’’ என்றார். கேட்க சந்தோஷமாக இருந்தது.
எல்லாப் பெற்றோருமே தன் பிள்ளைகள் தன்னைவிடப் பன்மடங்கு அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென ஆசைப்படுகின்றனர். தன்னைவிடப் பெரிய பதவியை வகிப்பதுதான் கெளரவம் என நினைக்கின்றனர். அதற்கான நிர்பந்தங்களைச் சிறுவயதிலிருந்தே விதைக்கத் தொடங்கிவிடுகின்றனர். கவனம் திசை திரும்பிவிடாதபடி கடிவாளங்கள் கட்டப்படுகின்றன. பெருஞ்சுமைகள் ஏற்றப்பட்ட வண்டியில் பூட்டப்படும் இந்தக் கன்றுக்குட்டிகள் மூச்சுமுட்டி, எச்சில் ஒழுகி, ஆற்றல் அனைத்தும் வடிந்து போகிற வரைத் துரத்தி ஓட்டப்படுகின்றன. பள்ளிக் கல்வியை முடிக்கும் போது பாதி வாழ்க்கையும், கல்லூரி படிப்பை முடிக்கையில் மீதி வாழ்க்கையும் முடிந்துவிடுகிறது. பள்ளியிலோ, குடும்பங்களிலோ வெளியுலகம் பற்றி எதுவுமே கற்பிக்கப்படாமல் வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் மூளையில் நிறைத்துக்கொண்டு சமூகம் எனும் சுழலுக்குள் தள்ளப்படுகின்றனர். சதா புரட்டிப் புரட்டிப் போடும் இந்தச் சுழலில் சிக்கி மடிந்துவிடாமல் சர்வைவ் ஆவதுதான் வாழ்க்கை என்றாகிவிடுகிறது இவர்களுக்கு.

உண்மையில் வாழ்க்கை என்பது என்ன? தப்பிப் பிழைத்துக்கொண்டே இருப்பதா? துரத்தத் துரத்த ஓடிக்கொண்டே இருப்பதா? நாம் அப்படித்தான் நம் குழந்தைகளுக்குக் கற்பிக்கிறோம். இல்லை அச்சுறுத்துகிறோம். வாழ்க்கை என்பது வாழ்தல்தானே! நம்மில் எத்தனை பேருக்கு வாழ்தல் என்ற சொல்லின் அர்த்தம் தெரியும்? அன்பு செலுத்தி, நோயின்றி, இளைப்பாறி, இன்புற்றிருத்தலே வாழ்தல்! பணம் உட்பட மற்றதெல்லாம் அப்புறம்தான். நாம் நம் குழந்தைகளுக்கு  வாழக்  கற்பிக்கவில்லை. மாறாக, தப்பிப் பிழைத்திருக்கச் சொல்லித் தருகிறோம்.

உயிர்களின் மகிழ்வில்தான் பூமியின் உயிர்ப்பு இருக்கிறது. உயிர்கள் அல்லலுற்று அழிவுறும்போது பூமியும் அழியத் தொடங்குகிறது. ஆனால், நாம் இதைப் புரிந்து கொள்வதில்லை. மனிதர்கள் சமூக விலங்கு எனில் குழந்தைகள் அதன் குட்டிகள். அவர்களை சமூகத்திற்குத் தகுதியானவர்களாக வளர்க்கும் பொறுப்பு ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கிறது. ஆனால், இதைப் புரிந்துகொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்ளுதலை தனிப்பட்ட குடும்ப விருத்திக்கான விஷயமாக நாம் பார்க்கிறோம். `என் குழந்தை வளர்ந்து, கல்வி கற்று, பெரும்பணமீட்டி, நல்ல அந்தஸ்துடன் வாழ்ந்து, என் வம்சத்தை விருத்தி செய்ய வேண்டும். அவ்வளவுதான்.’ உண்மையில், இயற்கையின் கண்ணி அறுபடாமல் பாதுகாக்கும் ஒரு சமூகச் செயல்பாடுதான் குழந்தை பெறுதல். நாம் நமக்காகக் குழந்தை பெற்றுக்கொள்வதாக நினைக்கிறோம். ஆனால், குழந்தைகள் இந்த பூமியின் இயக்கத்திற்காகப் பிறக்கிறார்கள். அதைத்தான் கலீல் ஜிப்ரான் சொல்கிறார்.

நம்மால் படைக்கப்படுவதாலேயே நம் பிள்ளைகளை நமக்கு வாய்த்த அடிமைகளென நினைக்கிறோம். குழந்தைகள் முன் இருக்கும் கடமை மிகப்பெரியது. அவர்கள் எதிர்கால சமூகத்தைக் கட்டமைக்கப் பிறக்கிறார்கள். அவர்களுக்கு முன்னர் பிறந்தவர்கள் என்ற முறையில் நமக்கு நிறைய பொறுப்புணர்வு இருக்கிறது. குழந்தை வளர்ப்புக்கென நவீன உத்திகளை நாம் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நம்முடைய தொன்மைச் சமூகங்கள், குழந்தைகளின் முக்கியத்துவத்தை, இப்பூமியில் குழந்தைகளுக்கான இடத்தை அறிந்து மதித்தவர்களாக இருந்தன. `நாம் இந்த பூமியை நம் முன்னோர்களிடமிருந்து உரிமையாகப் பெறவில்லை. நம் குழந்தைகளிடமிருந்து இரவல் பெற்றிருக்கிறோம்’ என்கிறது செவ்விந்தியச் சொல்வழக்கு. அதை நாம் இப்படியும் சொல்லலாம். இந்த பூமி குழந்தைகளை நமக்கு இரவல் தந்திருக்கிறது. இரண்டின் மதிப்பும் தெரியாததால் இரண்டையும் நம் போக்கில் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறோம்.

பெரியோரே, பெற்றோரே நமக்குக் குழந்தைகள்மீது பொறுப்புதான் இருக்கிறது, அதிகாரமில்லை. பொறுப்போடு நாம் செய்யப் பல கடமைகளும் காத்திருக்கின்றன.

முதலில் குழந்தைகள் முன் நீங்கள் கிழித்து வைத்திருக்கும் அந்த நேர்க்கோட்டை அழியுங்கள். நாம் அங்கிருந்து தொடங்குவோம்.

-நிறைய பேசுவோம்

No comments:

Post a Comment