Sunday, December 10, 2017

Posted Date : 06:00 (12/10/2017) அடல்ட்ஸ் ஒன்லி - 2 thanks to vikatan.com



ஜெயராணி

குழந்தை  வளர்ப்பில் நாம்  நேர்மையைக் கடைப்பிடிக்கிறோமா என்கிற கேள்வியை  இன்றைய காலகட்டத்தில் நம் எல்லோருக்குள்ளும் எழுப்ப வேண்டியது மிக முக்கியமானது. பெண் வெறுப்பு 2017-லேயும் தொடர்கிறதே இதற்கும் குழந்தை வளர்ப்புக்கும் சம்பந்தம் இருக்கிறதா? பெண்மீது ஆசிட் ஊற்றினான், பெண்ணைப் பாலியல் வல்லுறவு செய்தான், பெண்ணைக் கத்தியால் குத்தினான் என்றெல்லாம் செய்திகளில் பார்க்கிறோம். அந்த வெறுப்பை இங்கே வளர்த்தெடுத்ததில் நமக்கு எந்தப் பங்கும் இல்லையா? குற்றவாளிகள் எங்கோ அந்தரத்திலிருந்து குதித்து வருகிறார்களா என்ன? நம் வீடுகளில்தானே அவர்கள் உற்பத்தி செய்யப்படுகிறார்கள்?! இன்று குற்றங்கள் மிக அருகில் நடக்கின்றன. நேற்று வரை நம்மோடு கதை பேசிக்கொண்டிருந்தவர்கள் இன்று கைகளில் விலங்கு மாட்டப்பட்டு இழுத்துச் செல்லப்படுகின்றனர். சமூகத்தின் இந்த அவல நிலைக்கும் நம் வீடுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையா?  
நான் முன்னர் குடியிருந்த வீட்டின் அருகே ஒரு நடுத்தரக் குடும்பம் வசித்தது. பத்து வயதுச் சிறுமி அபிஷா எங்கள் வீட்டில் வந்து விளையாடுவது வழக்கம். அவளுக்கு அவள் அண்ணன்மீது அளவில்லாத வெறுப்பு இருந்தது. அதற்குக் காரணம் அவளின் பெற்றோர் மகன்மீது கொண்டிருந்த அளவற்ற அன்பு. அண்ணனுக்குக் கூடுதல் உணவு வழங்கப்பட்டது, அண்ணனுக்குக் கூடுதல் உடைகள் தந்தனர். அண்ணனுக்குக் கூடுதல் விளையாட்டுப் பொருள்கள் கேட்கும்போதெல்லாம் கிடைத்தன. அண்ணனுக்கு எப்போது வேண்டுமானாலும் வெளியில் போக அனுமதி இருந்தது. அண்ணன் நண்பர்கள் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டான். கூடுதலாக, தங்கையைக் கண்காணிக்கும் பொறுப்பும் அவனுக்குத் தரப்பட்டது.

அபிஷா எங்கள் வீட்டுக்கு விளையாட வந்தால், அவன் பின்னாலேயே வந்து வீட்டுக்கு வருமாறு நச்சரிப்பான். இரண்டு வயதுதான் வித்தியாசம் என்றாலும் அண்ணனும் தங்கையும் விளையாடி நான் பார்த்ததே இல்லை. அவனிடம் எப்போதும் ஓர் அதிகாரமும் பெரிய மனுஷத் தோரணையும் இருக்கும். அபிஷா என்ன கேட்டாலும் ‘இப்பவே உனக்குச் செலவு செஞ்சுட்டா உன் கல்யாணத்துக்கு என்ன பண்றது?’ என்று அவள் அம்மா கேட்பாள். அப்பாவுக்கு பயந்து, அண்ணனுக்கு பயந்து, நாளை எந்த ஆணைக் கண்டாலும் பயப்பட அபிஷா பழக்கப்படுத்தப்படுகிறாள். அவள் அண்ணனோ, அம்மாவை மதிக்காமல், தங்கைமேல் அன்பு செலுத்தாமல் நாளை எந்தப் பெண்ணைக் கண்டாலும் அடிமைப்படுத்தப் பயிற்றுவிக்கப்படுகிறான். ஏறக்குறைய எல்லா வீடுகளிலுமே இப்படியான பாலினப் பாகுபாடுகள் பெற்றோரால் வெவ்வேறு நிலைகளில் தீவிரமாக விதைக்கப்படுகின்றன.  

இந்தியப் பெற்றோர்கள் முன் சில நிரந்தமான கேள்விகள் பதிலற்று நிற்கின்றன. ஏன் பெண் குழந்தைகளைச் சரிசமமாக நடத்தமுடியவில்லை? பலவீனமானவர்களாக வளர்த்துவிட்டுப் பெண்களுக்கு வலுவே இல்லையென ஏன் பிரசாரம் செய்கிறோம்? பெண்ணை மதிக்க, நம்ப, நேசிக்க, கொண்டாட விடாமல் எது நம்மைத் தடுக்கிறது?

இந்தக் கேள்விகளுக்கான நேர்மையான பதிலை நாம் அனைவருமே கண்டறிய வேண்டும்.  நீங்கள்தான் உங்கள் மகளை இந்த பூமிக்குக் கொண்டு வருகிறீர்கள். உங்களுக்கு மகளாகப் பிறக்க வேண்டுமென்பது அவளது தேர்வில்லை. அவளுக்கு உரிய உரிமைகளையும் அன்பையும் மரியாதையையும் உறுதிப்படுத்தித் தருவதைத் தவிர வேறு என்ன பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. அடித்தால் வாங்கிக்கொள் என ஏன் பழக்குகிறோம், தலைகுனிந்தே இரு என ஏன் அடக்குகிறோம்,  உடலை மூடி வை என ஏன் சதா நச்சரிக்கிறோம்? அழு, கண்ணீர் விடு, பயப்படு என ஏன் சொல்லித் தருகிறோம்? இவற்றையெல்லாம் நம் அன்பு மகள் எங்கிருந்து கற்கிறாள்? நம்மிடமிருந்துதானே!

அதே போல...

நீங்கள்தாம் உங்கள் மகனையும் இந்த பூமிக்குக் கொண்டு வருகிறீர்கள். உங்களுக்கு மகனாகப் பிறக்க வேண்டுமென்பது அவனது தேர்வில்லை. அவனுக்கு உரிய கண்ணியத்தையும் வரையறைகளையும் கட்டுப்பாடுகளையும் ஏன் கற்பிக்கத் தவறுகிறோம்? நீ ஆண், யாரையும் அடிக்கலாம் என ஏன் ஊக்கப்படுத்துகிறோம்? ‘தவறிழைத்தாலும் தலைநிமிர்ந்தே நட’ என ஏன் கட்டவிழ்க்கிறோம், ‘உடலைத் திறந்து வை’ என ஏன் பெருமிதத்தோடு மெச்சுகிறோம்? அழக்கூடாது, அச்சப்படக் கூடாது என ஏன் சொல்லித் தருகிறோம்? செல்ல மகன் இவற்றையெல்லாம் எங்கிருந்து கற்கிறான்? நம்மிடமிருந்துதானே!

அடாவடியான ஒரு மகன் முதன்மையாகத் தன் தந்தை மற்றும் தன்னைச் சுற்றியுள்ள ஆண்களைப் பார்த்துதான் ஆதிக்க உணர்வைப் பெறுகிறான். பலவீனமான ஒரு மகள் தன் தாய் மற்றும் நெருக்கமான பெண்களைப் பார்த்துதான் பெரும்பாலும் அடிமை உணர்வைப் பெறுகிறாள். இதுபோன்ற குணக் கட்டமைப்புகள் ஒரு குழந்தைக்கு ஐந்து வயதிலேயே நடந்துவிடுகிறது. ஆக, குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வரும்போதே பெற்றோர் தம் சுயநலன்களை விட்டுவிட்டு, குணக்கேடுகளைத் தள்ளி வைத்து ஒரு பொது வாழ்வுக்குத் தயாராக வேண்டும். ஆம், குழந்தை வளர்ப்பென்பது பொது வாழ்க்கையின் அங்கம்தான். குடும்பத்துக்கு ஒரு வாரிசு எனக் குறுகிய நோக்கில் குழந்தை பெற்றுக்கொண்டாலும், சமூகத்துக்கு ஒரு மனிதரை நாம் அளிக்கிறோம். அந்த மனிதர் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதே பெற்றோராகிய நம்முடைய அடையாளமாகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் ஒரு முன்னாள் பாலியல் தொழிலாளியையும் அவரின் பருவ வயது மகளையும் சந்தித்தேன். அவர் பெயர் மஞ்சுளா. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அப்போது எய்ட்ஸ் விழிப்பு உணர்வுக்காக வேலை செய்துகொண்டிருந்த காலகட்டம். நான் மஞ்சுளாவைச் சந்திக்கும் போது அவர் தன்னை ஒரு என்.ஜி.ஓ-வில் வாலண்டியராக இணைத்துக்கொண்டு வேலை செய்தார். கைவிட்டு ஓடிப்போன கணவன், வேலை தருகிறேன் எனக் கூட்டிப் போய் விபச்சாரத்தில் தள்ளிய புரோக்கர் என மஞ்சுளாவுக்கு வலி மிகுந்த ஃபிளாஷ்பேக் இருந்தது. ஆனால், தனது துயர் அனைத்தையும் மறைத்துக்கொண்டு அவர் தன் மகளை வளர்த்த விதத்தைப் பார்த்து நிஜமாகவே நான் அசந்துபோனேன். அவரது ஒண்டிக் குடித்தன வீட்டிற்குள் நுழைந்ததுமே, `என் மகள் பள்ளி விட்டு வரும் நேரம் இது. எக்காரணத்தைக் கொண்டும் என்னைப் பற்றி எதுவும் அவளுக்குத் தெரியக் கூடாது’ என்றார்.

நாங்கள் பேசி முடித்திருந்த தருணம், அந்தச் சிறுமி வந்தாள். `உங்க அம்மா என்.ஜி.ஓ-வில் வேலை செய்றாங்கள்ல. அதுக்காகப் பேட்டி எடுக்க வந்திருக்கேன்’ என்றதும் அவளுக்குப் பெருமை தாங்கவில்லை. மகள் படிப்பதற்கென்று மஞ்சுளா அந்த வீட்டின் ஒற்றை அறையைத் தயார் செய்து கொடுத்திருந்தார். தன் அம்மாவைப் பற்றி எழுதிய ஒரு கவிதையை அந்தப் பெண் வாசித்துக் காண்பித்தாள்.

தான் ஒரு பாலியல் தொழிலாளி என்பது மகளுக்குத் தெரியாமல் இருக்க மஞ்சுளா எத்தனை முயற்சிகள் எடுத்திருப்பார்? மோசமான ஆண்களை நாள்தோறும் சந்தித்தபோதும் அவர் வாழ்க்கைமீது அவநம்பிக்கை கொள்ளாமல் மகளுக்கு ஓர் ஒளியாக இருந்தார். `ஆண்கள் எல்லோரும் கெட்டவர்கள் இல்லை. எல்லோரையும் மதிக்க வேண்டும். சுயமரியாதையோடு இருக்க வேண்டும்’ எனப் பாலியல் தொழிலாளியால் மகளுக்குக் கற்பிக்க முடிகிறதென்றால் உண்மையில் அந்தப் பக்குவத்தை என்னவென்று விவரிப்பது! அத்தனை பொறுப்பு உணர்வு, கரிசனம், பக்குவம் என அந்தத் தாய் - மகள் என் மனதைப் பறித்துக் கொண்டனர். நான் மதிக்கும் பெண்களை ஒரு பட்டியலிட்டால் நிச்சயம் அதில் மஞ்சுளா இடம் பிடிப்பார். இதுதான் சுயநலனைக் கடந்த வளர்ப்பு முறை.    
பொய் சொல்லக் கூடாது, திருடக் கூடாது, பிறரை மதிக்க வேண்டும், பாகுபாடுகள் கூடாது, நேர்மையாக இருக்க வேண்டும் என்பது போன்ற நற்பண்புகள் ஐந்து வயதில் போதிக்கப்பட வேண்டியவை. ஒரு குழந்தை பருவ வயதை எட்டும்போது அதன் குணக்கட்டமைப்புகள் ஏறக்குறைய முழுமையடைந்துவிடுகின்றன. ஆனால் நாம், வளரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிடுகிறோம். ஒரு பையனை அதிக செல்லமும் அதிகாரமும் கொடுத்து வளர்த்து, அவன் பருவ வயதில் முறுக்கிக்கொண்டு நிற்கும்போது, ஒழுங்காக நடந்துகொள் என மிரட்டுகிறோம். அவன் பதிலுக்கு முறைத்துவிட்டுப் போய்க்கொண்டே இருப்பான். அதனால் எல்லா நற்பண்புகளையும் ஐந்து வயதிலேயே சொல்லிக் கொடுக்கத் தொடங்குவோம். ஐந்தில் வளையாதது நிஜமாகவே ஐம்பதில் வளையாது.

என்னால் ஒரு விஷயத்தை உறுதியாகச் சொல்ல முடியும். பாலினச் சமத்துவத்தைக் கடைப்பிடிக்கும் பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தைகள் ஒருபோதும் ஆதிக்க உணர்வையோ அடிமை உணர்வையோ பெறுவதில்லை. குடும்பத்தில் ஏற்றத்தாழ்வையும் வன்மத்தையும் வெறுப்பையும் கற்றவர்கள் வெளியில் என்ன சமத்துவக் கல்வியைப் பெற்றாலும் தம்மை மாற்றிக்கொள்ள முடிவதில்லை. அதனால் வீட்டில் உள்ள பெண்களை மதிக்கத் தொடங்குவோம். அது மனைவியோ, மகளோ, சகோதரியோ! தோழியோ உடன் பணிபுரிபவரோ, எந்தப் பெண் குறித்தும் பிள்ளைகள் முன் தவறாகப் பேச வேண்டாம். பெண் குழந்தை பிறப்பை ஒரு சுமையாகவோ, சீரழிவாகவோ, துயரமாகவோ சித்திரிக்க வேண்டாம். ஆணோ, பெண்ணோ இருவருக்கும் சமமாகப் பொறுப்பு உணர்வைக் கற்பித்து, அன்பு செலுத்துவோம்.

குழந்தைகளுக்கு வீடுதான் முதல் பள்ளி. பெற்றோர்தாம் முதன்மையான ஆசிரியர்கள். பெற்றோரின் சொற்களை அல்ல, செயல்களையே குழந்தைகள் பின்பற்றுகின்றன. சொர்க்கம் எப்படி இருக்குமென நம் யாருக்கும் தெரியாது. ஆனால், வீட்டில் சமத்துவம் இருந்தால் அந்த வீடு நிஜமாகவே ஒரு சொர்க்கம். அப்படியெனில் இங்கே எவ்வளவு நரகங்கள் உள்ளன என்று யோசித்துப் பார்ப்போம். இந்நாட்டில் உள்ள நரகங்கள் அனைத்தையும் சொர்க்கமாக மாற்றிவிடப் பெற்றோரால் முடியும். நிச்சயமாக முடியும்.
 
-நிறைய பேசுவோம்

பாலின சமத்துவத்தை எப்படி போதிப்பது? 

மூகம் முழுக்கவே பால்பேதத்தால் நிரம்பியிருக் கிறது. வீடு, திரைப்படங்கள், தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் எனக் குழந்தைகள் புழங்குகிற எல்லாமே ஆணும் பெண்ணும் சமமில்லை என்கின்றன. குழந்தைகள் இவற்றைப் பார்க்காமல் நம்மால் தடுக்க முடியாது. ஆனால், இது தவறு எனப் புரிந்துகொள்ளச் செய்ய முடியும். குழந்தை பிறந்ததிலிருந்தே பால்சமத்துவத்தை நாம் செயல்படுத்த வேண்டும். கீழே கொடுக்கப்பட்ட விஷயங்களில் தாய் - தந்தை முரண்படக் கூடாது. பாலின சமத்துவம் கற்பிக்கப்பட்ட குழந்தைகள் பாலின ரீதியான வன்முறைகளில் ஈடுபடுவதில்லை.

1. மகன் - மகள் இருவருக்கும் எல்லா விதமான பொம்மைகளையும் வாங்கிக்கொடுங்கள். அவளுக்கு பார்பி பொம்மை, அவனுக்கு ஸ்பைடர்மேன் எனப் பிரிக்க வேண்டாம்.

2. எல்லா விதமான விளையாட்டுகளையும் சமமாக விளையாடுங்கள். கண்ணாமூச்சியை மகளோடும் கிரிக்கெட்டை மகனோடும் விளையாடாதீர்கள்.

3. பெண் - ஆண் இருவருமே ஹீரோவாக இருக்கும் கதைகள்/வரலாறுகள் கொண்ட புத்தகங்களை வாங்கிக்கொடுங்கள்.

4. உடைகளில் பேதம் காட்டாதீர்கள். குறிப்பாக மகளுக்குச் சமூகம் நிர்ணயித்த உடைகளை மட்டுமே அணியப் பழக்காதீர்கள். உடை என்பது வசதிக்கானது எனச் சொல்லிக்கொடுங்கள்

5. எல்லா வேலைகளிலும் ஒரே மாதிரி ஈடுபடுத்துங்கள். சாப்பிட்ட தட்டை எடுத்து வைப்பது, வீடு பெருக்குவது, துணிகளை மடித்து வைப்பது போன்ற வேலைகளுக்கு இருவரையுமே பழக்குங்கள். நீச்சலைப் போல சமையலையும் இருவருக்கும் கற்பியுங்கள்.

6. `பொம்பளைங்களே இப்படித் தான்’, `ஆம்பளைங்களே இப்படித் தான்’ எனப் பொதுமைப் படுத்தி குழந்தைகள் முன் பேசாதீர்கள். ஏனென்றால் அதில் உண்மையில்லை.

7.  ``மனைவியை நேசிக்கிறவங்க இந்த கேஸ் ஸ்டவ்வை வேணாம்னு சொல்ல மாட்டாங்க’’ மாதிரியான விளம்பரங்கள் குழந்தைகளுக்கு எளிதாக தவறான பாடத்தைக் கற்பிக்கின்றன. நகைக்கடை, சிவப்பழகு கிரீம்கள், ஊட்டச்சத்து விளம்பரங்கள் போன்றவை வரும்போது குழந்தைகளுக்கு அது குறித்து விளக்குங்கள்.

8. எல்லாப் படங்களுக்கும் குழந்தைகளை அழைத்துச் செல்லாதீர்கள். தன்னுடைய பராக்கிரமங்களை அடுக்கும் ஹீரோயிசத் திரைப்படங்கள், ஹீரோக்கள் பெண்களைத் துரத்தி லவ் டார்ச்சர் கொடுக்கும் திரைப்படங்கள், பெண்களை இழிவுபடுத்தி வரும் காமெடி சீன்கள் நிறைந்த திரைப்படங்கள் இவற்றைக் குழந்தைகளுக்குக் காண்பிக்காதீர்கள். ஒருவேளை பார்க்க நேர்ந்துவிட்டால் அது குறித்துக் குழந்தைகளுடன் உரையாடித் தெளிவுபடுத்துங்கள்.

9. குழந்தைகள் முன் பெற்றோர் இருவரும் மரியாதையோடு பேசுங்கள். குழந்தைகள் ஒருவரை ஒருவர் மரியாதையோடு பேச ஊக்கப்படுத்துங்கள்.

10. இருவருக்கும் சமமாகக் கல்வியின் முக்கியத்துவத்தைப் புரிய வையுங்கள். பொருளாதார ரீதியாக சுயசார்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை இருவருக்குமே புரிய வையுங்கள்.

11. எல்லா உணர்வுகளும் எல்லோருக்கும் பொதுவானவை. அழுகை, கோபம், வெட்கம், அன்பு, பணிவு, துணிவு,  சிரிப்பு ஆகியவற்றுக்குப் பால்பேதம் கற்பிக்காதீர்கள். பெண்களுக்கும் சத்தமாகச் சிரிக்க வரும். ஆண்களுக்கும் அடக்க முடியாமல் அழுகை வரும்.

உங்கள் குழந்தையின் பாலினப் புரிதலை அறிந்துகொள்ளுங்கள் இந்தக் கேள்விகள் வழியாக... 

1. உங்கள் வகுப்பிலேயே யார் அழகு?

2. உங்கள் வகுப்பிலேயே யார் பலசாலி?

3. வீட்டில் யார் சமைக்க வேண்டும்?

4. பைக், காரை யார் ஓட்ட முடியும்?

5. மேக் அப் யார் அதிகம் செய்துகொள்கிறார்கள்?

6. 
நியூஸ் சேனல் யாருக்கு? டிவி சீரியல் யாருக்கு?

7. யார் ஃபைட் பண்ணுவார்கள் பாய்ஸா, கேர்ள்ஸா?

8. யார் பணம் சம்பாதிக்க வேண்டும்?

9. ஓட்டலுக்குப் போனால் யார் பில் கட்ட வேண்டும்?

10. புத்தகமெல்லாம் யார் படிப்பா?

11.
 யார் கிசுகிசு பேசுவார்கள், யார் சேட்டை செய்வார்கள்?

12. 
பார்பி பொம்மை யாருக்கு, கார் பொம்மை யாருக்கு?

13. அழுவது யாருடைய இயல்பு?

14. பிங்க் கலர் யாருக்குப் பிடிக்கும்?

15 லீடர் என்றால் யார்?

16. சயன்டிஸ்ட்கள் பெயர் சொல்?

17. இருட்டில் போகும் தைரியம் யாருக்கு இருக்கிறது?

18. நீளமான கூந்தல் யாருக்கு இருக்கும்?

இந்தக் கேள்விகளுக்கான பதில் வழக்கமானதாக இருந்தால், ஏற்கெனவே உங்கள் குழந்தை பாலினப் பிரிவினையைக் கற்றுக்கொண்டுவிட்டதென அர்த்தம். நம்முடைய நடவடிக்கைகள் மட்டுமன்றி, டிவி விளம்பரங்கள், சினிமா, அண்டை வீடுகள் எனப் பல விஷயங்கள் ஆண் - பெண்ணுக்கான ஸ்டீரியோடிப்பிக்கல் குணங்களை போதிக்கின்றன. நாம் வாங்கிக் கொடுக்கும் பொம்மைகள் வழியாக 2-6 வயதில் குழந்தைகள் பாலின பேதத்தைக் கற்கின்றன. பெற்றோரின் பேச்சு மற்றும் நடவடிக்கைகளால் 7-10 வயதில் பாலின பேதத்தைப் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். 

No comments:

Post a Comment