சாப்பிட்டவுடன் செய்யக் கூடாத 7 விஷயங்கள்! #HealthAlert
`சாப்பிட்டவுடனே குளிக்கக் கூடாது’, `அது என்ன சாப்பிட்டவுடனே படுக்கிற பழக்கம்?', 'சாப்பிடும்போது தண்ணி குடிக்கக் கூடாது' - இதுபோன்ற உரையாடல்களை கேட்காதவர்களே இருக்க முடியாது. இந்தக் கருத்துகளெல்லாம் உண்மைதானா என்கிற சந்தேகமும் நமக்கு எழக்கூடும். 'வயிறார சாப்பிட்டதுக்கு அப்புறம் ஒரு குட்டி தூக்கம்... என்ன ஒரு சுகம் தெரியுமா’ என்று லயித்துப்போய்ச் சொல்பவர்களும் உண்டு. ஆனால், `அப்படியான தூக்கம் மிகவும் தவறான பழக்கம்’ என்கிறது மருத்துவம். "உணவின் தன்மையைப் பொறுத்து செரிமானத்துக்கான நேரமும் மாறுபடும். சாப்பிட்ட உணவு முழுமையாகச் செரிமானமாவதற்கு முன்னர், சில விஷயங்களைச் செய்யக் கூடாது. அப்படிச் செய்வது, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்" என்கிற ஊட்டச்சத்து நிபுணர் அனிதா பாலமுரளி, சாப்பிட்டவுடனே என்னவெல்லாம் செய்யக் கூடாது என்கிற பட்டியலையே தருகிறார்...
* சாப்பிட்டவுடன் தூங்குவது, மிக மோசமான பழக்கம். செரிமானப் பணியின்போது, சாப்பாடு குடல் பகுதிக்குச் செல்லும். தூங்கும்போது, குடல்வரை செல்லாமல், மீண்டும் தொண்டையை நோக்கி உணவு மேலெழும்பும். இது, நெஞ்செரிச்சல், மூச்சுக்குழாய் பிரச்னைகள் போன்றவற்றை ஏற்படுத்தும். இந்தப் பழக்கம் தொடர்ந்தால் மூச்சுக்குழாயில் பிரச்னை, ஸ்லீப் ஆப்னியா, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படலாம்.
* குளிக்கக் கூடாது. நம் உடலைப் பொறுத்தவரையில், சாப்பிட்டவுடனேயே செரிமானப் பணிகள் தொடங்கிவிடும். பொதுவாகவே குளியலின்போது, உடல் உஷ்ணமும், ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். குறிப்பாக, உடலின் மேற்புறத்தில் (தோலுக்கு அருகிலுள்ள பகுதிகளில்) சுறுசுறுப்பான ரத்த ஓட்டம் இருக்கும். அந்த வகையில், வயிற்றுப் பகுதியிலுள்ள ரத்தம் மற்ற பகுதிகளை நோக்கி வேகமாகச் செல்லும்போது, செரிமானப் பணிகள் பாதிக்கப்படும். வயிற்றுப் பகுதியில் எப்போதும் சீரான ரத்த ஓட்டம் இருக்கவேண்டியது மிகவும் அவசியம். இல்லாத பட்சத்தில், செரிமானப் பணியின் வேகம் குறைந்துவிடும்..
* பழங்கள் சாப்பிடக் கூடாது. ஒவ்வொரு பழ வகைக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு. உணவில் இருக்கும் புரதம், கொழுப்பு போன்றவற்றோடு பழங்களில் இருக்கும் வேறு சத்துகளும் சேரும்போது, செரிமானக் கோளாறு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். உணவுக்குப் பின், பழங்கள் சாப்பிட்டால், உணவின் மேல் அது அமர்ந்துக்கொள்வது மாதிரியான நிலை ஏற்பட்டுவிடும். இது, செரிமானத்தை தாமதப்படுத்தத் தொடங்கும். பழங்களை விரும்பிச் சாப்பிடுவோர், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரோ, சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்தோ அதைச் சாப்பிடலாம்.
* சிகரெட் பிடிக்கக் கூடாது. புகைப்பழக்கம் இருப்பவர்களுக்குச் சாப்பிட்டவுடன் புகைபிடிக்க வேண்டும் என்கிற வேட்கை தோன்றும். புகைபிடிப்பதே கேடு... அதிலும் சாப்பிட்டவுடன் புகைபிடிப்பது இன்னும் அதிகத் தீங்கை விளைவிக்கும். சாப்பிட்டவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், பத்து சிகரெட்டுக்குச் சமம் என்கிறது ஓர் ஆய்வு.
* கடுமையான வேலைகள் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால், செரிமானத்துக்குத் தேவையான சக்தி கிடைக்காது, செரிமானமாகும் சிறு உணவும் உடல் முழுக்கப் போய் சேராமல் தடுக்கப்பட்டுவிடும். உணவிலிருந்து கிடைக்கும் அனைத்துச் சக்தியும் வெகு எளிதாகக் குறைந்துவிடக்கூடும் என்பதால், கடுமையாக உடற்பயிற்சி செய்வது, வெகுதூரம் நடப்பது, வியர்வை வரும் அளவுக்கு வீட்டு வேலை செய்வது போன்றவற்றைச் செய்யக் கூடாது.
* டீ குடிக்கக் கூடாது. தேநீரில் உள்ள அமிலங்கள், செரிமானத்தைக் குறைத்துவிடும். அதிலும், புரதச்சத்து அதிகமுள்ள சாப்பாடாக இருந்தால், டீயில் உள்ள அமிலமும் அதோடு சேர்ந்துவிடும். அதனால், இரண்டும் சேர்ந்து செரிமானமாக வெகுநேரம் எடுத்துக்கொள்ளும். டீயில் உள்ள பாலிஃபினால் (Polyphenols) மற்றும் டானின்ஸ் (Tannins) போன்றவை, உணவில் உள்ள இரும்புச்சத்துகளை உறிஞ்சிக்கொள்ளும். இதனால், உணவு செரிமானமாவதில் சிக்கல் ஏற்படும். சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரும் பின்னரும் டீ குடிக்கக் கூடாது.
* சாப்பிட்டவுடன் மனஅழுத்ததுக்கு ஆளாகக் கூடாது. அப்படியொரு சூழல் எல்லோருக்குமே அவசியம் தேவை. மனமோ, உடலோ அதிக அழுத்தத்துக்கு உள்ளானால், செரிமானக் கோளாறுகள் ஏற்படும். மனஅழுத்தம், நரம்புகளுக்கு அதிக அழுத்தம் தந்து, செரிமானத்துக்குத் தேவையான ரத்த ஓட்டத்தையும், அதற்கு உதவியாக இருக்கும் சில சுரப்பிகளையும் பாதிக்கும்.'எந்த வகை உணவைச் சாப்பிட வேண்டும்', 'எந்த உணவு, எந்தப் பிரச்னைக்கு மருந்தாக அமையும்', 'சுவையான, சத்தான உணவு எது' என உணவு சார்ந்த பல விஷயங்களில் அக்கறை எடுத்துக்கொள்வதுபோல, 'சாப்பாட்டுக்குப் பின்னர் என்னவெல்லாம் செய்யக் கூடாது' என்பதையும் அறிந்துகொண்டு, அதன்படி நடக்கவேண்டியது எல்லோருக்குமே அவசியம்.
No comments:
Post a Comment