Thursday, December 14, 2017

Posted Date : 06:00 (07/12/2017) அடல்ட்ஸ் ஒன்லி - 10 thanks to vikatan.com

`ஆரோக்கியம் இல்லாமல் வாழ்க்கை என்பது வாழ்க்கையல்ல. வெறும் பலவீனமும் துயரமுமே. அது மரணத்தின் பிம்பம்!’’ - புத்தர்.  

குழந்தைகளின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் குறித்த விழிப்பு உணர்வு பெற்ற முற்போக்கான பெற்றோர்கூட குழந்தையின் ஆரோக்கியத்தில் பலவிதமான அறியாமைகளைக் கொண்டுள்ளனர்.

உங்களுக்கு ஒரு நூறு பேரைத் தெரியும் என வைத்துக்கொள்வோம். அவர்களிடம் உங்களுக்கு உடலில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்று கேட்டுப் பாருங்கள். சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, தலைவலி, சுவாசக் கோளாறு, தைராய்டு, மாதவிலக்குப் பிரச்னை, கருத்தரிக்காமை, குடல் வால், இதய நோய், மூட்டுவலி, புற்றுநோய், மனச் சோர்வு என அடுக்கிக் கொண்டே போவார்கள். ``அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை’’ எனச் சொல்லக் கூடிய ஒரே ஒருவர் இருப்பாரெனில், அவர்தான் இந்தத் தலைமுறையின் அதிசய மனிதர்.  

உடல் உறுப்புகள் 18 வயது வரை வேகமாக வளர்ச்சியடைகின்றன. இந்தக் காலத்தில் கண்ட ரசாயன மருந்துகளையும் பயன்படுத்துவதால் உறுப்புகளின் வளர்ச்சியும் ஆரோக்கியமும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. மருந்துக் கழிவுகள் சேர்ந்து பலவீனமடைந்த செல்களுக்கு நோயை எதிர்க்கும் சக்தி இருப்பதில்லை. இதனால் பல தீவிரமான நோய்த் தாக்குதலுக்குக் குழந்தைகள் ஆட்படுகின்றன. தன் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்பது தான் எல்லாப் பெற்றோரின் விருப்பமும். ஆனால், அதற்கான வழிகள் எதுவும் நமக்குத் தெரியாது அல்லது தப்பு தப்பாக நிறைய தெரிந்து வைத்திருக்கிறோம். மருந்துகள் இல்லாமல் நம்மால் வாழவே முடியாதா, என்ன?
உண்மையில் ஆரோக்கியம்தான் ஒரு சமூகத்தின் பொது அடையாளமாக இருக்க வேண்டும், நோயுறுதல் அல்ல. அதாவது...தமிழகத்தின் மக்கள் தொகை ஏழு கோடி எனில் சில பத்துப் பேர் ஆங்காங்கே நோயாளிகளாக இருக்கலாம். மற்றவர்கள் எல்லோரும் கச்சிதமான உடல்/மன ஆரோக்கியத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், நம் சமூகத்தின் நிலைமையோ தலைகீழ். எதிர்ப்படுகிற எல்லோருமே நோயாளிகள்! எதனால் இது நேர்ந்தது? அப்படி நாம் என்ன தவற்றை இழைக்கிறோம்?

நவீன வாழ்க்கைமுறை நமக்குப் பல செளகர்யங்களை வழங்கியிருக்கிறது. மாங்கு மாங்கெனச் செய்த வேலைகள்  இன்று ஒரு பொத்தானின் அழுத்தலில் நடந்து முடிகின்றன. நடந்தே கடந்த நெடுந்தொலைவுகளை மணிப் பொழுதில் சென்றடைகிறோம். உட்கார்ந்த இடத்தில் இருந்து பொருள்களை வாங்கவும் விற்கவும் சாத்தியப்பட்டிருக்கிறது. இவ்வளவு வசதிகள் வளர்ந்த காலத்தில் நாம் நலமாகத் தானே வாழ வேண்டும்?! ஆனால், அவ்வளவு வசதிகளையும் வாங்க முடிந்த நாம்  நல்வாழ் விற்கான அடிப்படைகளைத் தொலைத்து விட்டோம். நவீன வாழ்க்கை முறை பாரம் பர்யமாக நம்மிடம் இருந்த உடல் குறித்த அறிவைச் சிதைத்துவிட்டது. அதில் முக்கிய மானவை பசி, தாகம், ஓய்வு, தூக்கம் ஆகியவை குறித்த நமது புரிதல். ஆரோக்கியத்தின் இந்த நான்கு தூண்களையும் இடித்துத் தள்ளிவிட்டு எந்த நோயும் தாக்காமல் நலமாக இருக்க வேண்டுமெனக் கனவு காண்கிறோம்.

நோயைப் பொறுத்தவரை வரும் முன் காக்கும் வித்தைகளை நாம் புறந்தள்ளிவிட்டோம். பசியையும் கவனிப்பதில்லை, தாகத்தையும் பொருட்படுத்துவதில்லை, ஓய்வையும் மதிப்பதில்லை, தூக்கத்தையும் விரும்புவதில்லை. நோய் வராமல் தடுக்கும் இந்த நான்கு விஷயங்கள் குறித்து, பெற்றோராகிய நமக்கு என்னதான் புரிதல் இருக்கிறது என யோசியுங்கள்.

பசிக்கிறதோ இல்லையோ, திணிக்கும் அனைத்தையும் குழந்தை உண்டாக வேண்டும். குண்டாக, கொழு கொழுவென இருந்தால்தான் சத்தோடு இருப்பதாக நம்புகின்றனர். கொடுக்கும் அனைத்தையும் உண்டுவிட்டு குண்டாக இருக்கும் குழந்தைகளைக் கவனித்துப் பாருங்கள். அவை மந்தமாகவே இருக்கும். உணவு வேண்டாம் என மறுத்து, பசிக்கிற வேளையில் அது ஒரேயொரு இட்லியாக இருந்தாலும் பசிக்கிற அளவில் மட்டும் உண்ணும் குழந்தைகளைக் கவனியுங்கள். அவை சுறுசுறுப்பாக ஓடும். பசியின் அளவு எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது என்ற அடிப்படை உண்மைகூட நமக்குத் தெரியவில்லை. உண்ணாததால் அல்ல, அதிகம் உண்ணுவதாலேயே இன்று பல நோய்கள் குழந்தைகளைத் தாக்குகின்றன. எந்நேரமும் வயிற்றுக்குள் ஏதாவது போய்க்கொண்டே இருந்தால் உடலின் மொத்த ஆற்றலும் செரிமானத்திற்குப் போகுமே தவிர, குழந்தை ஓடியாடி விளையாடவோ, கற்கவோ பயன்படாது.

குழந்தைக்குப் பசியை உணரக் கற்றுக்கொடுக்க வேண்டியது ஆரோக்கியத்திற்கான முதல் அடி. ஒருவர் எவ்வளவு வசதி படைத்தவராக இருந்தாலும் பசி வந்த பின் உண்ண வேண்டும். பசித்து உண்பவர்கள் பக்கம் நோய் தலை வைத்தும் படுக்காது.      

அடுத்தது தாகம். நிறைய தண்ணீர் குடித்தால் ஆரோக்கியம் கொடுக்கும் என்பதும் மூடநம்பிக்கைதான். சில பெற்றோர் குழந்தைக்கு உணவு ஒரு வாய், தண்ணீர் ஒரு வாய் என மாற்றி மாற்றிக் கொடுப்பார்கள். தண்ணீருடன் போனால் உணவு வேகமாகச் செரிக்கும் என்பது அவர்களது புரிதல். உண்மையில் இது மிக மோசமான பழக்கம். சாப்பாட்டிற்கு இடையே நீர் அருந்துவது செரிமானத்தைக் கடுமையாக பாதிக்கும். உணவு உண்பதற்கு முன்பும் பின்பும் அரை மணி நேர இடைவெளியில்தான் நீர் அருந்த வேண்டும். காலை எழுந்தவுடன் ஒரு லிட்டர் தண்ணீர் மடக் மடக்கெனக் குடிப்பது போன்ற தாகம் குறித்துப் பல ஒழுங்கின்மைகளை வைத்திருக்கிறோம். இப்படி ஒரேயடியாக நீரை விழுங்குவதால் குடலின் நெகிழ்ச்சித் தன்மை அதிகரித்துக் குடல் விரிவடைகிறது. இதனால் விரிவடைந்த குடலுக்குத் தக்கவாறு உணவை நிரப்ப வேண்டிய தேவை உருவாகிறது. அதனால் தாகமெடுக்கும்போது மட்டும் டம்ளரிலோ வாட்டர் பாட்டிலிலோ வாய் வைத்து நீரை அருந்த குழந்தைக்குப் பழக்குங்கள். உமிழ்நீர் கலந்துதான் நீரோ உணவோ வயிற்றுக்குள் போக வேண்டும். நிதானமாகச் சப்பிக் குடிப்பதால் மட்டுமே அந்த நன்மை முழுமையாகக் கிடைக்கும்.

மூன்றாவது ஓய்வு. நமக்கே இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது. குழந்தைக்கு எங்கே இருந்து கற்பிக்க! உடல் சோர்வாக இருக்கும்போது ஓய்வைக் கேட்கிறது. சும்மா படுத்திருக்கலாம், அல்லது அமர்ந்திருக்கலாம். ஆனால், குழந்தை அப்படி இருந்தால் நமக்கு டென்ஷன் ஏறுகிறது. செல்போனிலாவது அது விளையாடிக் கொண்டிருக்க வேண்டும். உடல் ஓய்வைக் கேட்கும். அதைத் தர மறுத்தால், காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி போன்ற தொந்தரவுகளை உருவாக்கி அது ஓய்வெடுக்கும். அதனால், அம்மா டயர்டா இருக்கு எனக் குழந்தை சொன்னால், இந்த வயசுல என்ன டயர்டு வேண்டிக் கிடக்கு என விரட்டாமல், அரைமணி நேரம் அமைதியாகப் படுத்திருக்கப் பழக்குங்கள். உங்களுக்கும் இதுவே பொருந்தும். 

நான்காவது, மிக மிக முக்கியமானது தூக்கம். நமக்கெல்லாம் காலையில் சீக்கிரம் எழ வேண்டும் எனத் தெரியும். அப்படிச் சீக்கிரம் எழ வேண்டுமெனில் இரவு சீக்கிரம் உறங்கப் போக வேண்டுமென்பது தெரியாது. தீவிரமான உடல் தொந்தரவு எனப் புகார் செய்பவர்களிடம் நான் கேட்கும் முதல் கேள்வி, `இரவு எத்தனை மணிக்குத் தூங்குகிறீர்கள்?’ என்பதுதான். `எல்லா வேலையும் முடித்து, படுப்பதற்கு 12 ஆகிவிடும்’ என்பார்கள். அதுவும் படுத்தவுடன் ஆழ்ந்த உறக்கத்திற்குப் போக முடியாது. அப்படி இப்படி அசைந்து, அசைபோட்டு இரண்டு மணியாவது ஆகிவிடுகிறது என்ற பொதுவான பதிலை வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருமே சொல்வார்கள்.

அப்படி என்ன வேலை செய்கிறார்கள் என்று பார்த்தால், டிவி சீரியல்களிலோ, நியூஸ் சேனல்களின் விவாதங்களிலோ மூழ்கி இருப்பார்கள். வெளியில் சுற்றிவிட்டு அல்லது அலுவலகத்தில் அதிக நேரம் செலவழிக்கும் பழக்கம் ஆண்களுக்கு இருந்தால் அவ்வீட்டின் பெண்கள் விழித்திருக்க நேரிடும். இல்லையெனில் ஆளுக்கொரு  செல்போனை வைத்து முகநூலையோ வாட்ஸ் அப்பையோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

நான் புழங்கும் வட்டத்தில் இளவயதில் மரணித்தவர்கள் பற்றி ஆராய்ந்த போது, `இரவு தூக்கத்தைத் தொலைத்தவர்கள்’ என்ற ஒற்றுமை அவர்களுக்கு இருந்தது. தீவிரத் தொந்தரவுகள் உள்ளவர்களிடம் விசாரிக்கிறபோது அவர்கள் இரவுத்தூக்கத்தை அலட்சியம் செய்பவர்கள் என்பது புரிகிறது. பல ஆண்டுகளாக இரவு முழுவதும் விழித்துக்கிடந்து, பிற்பகல் வரை தூங்கும் ஒரு தோழிக்கு இரவு முன்னரே தூங்க வேண்டியதன் அவசியத்தைச் சொன்னபோது, சிரித்துக்கொண்டே அலட்சியம் செய்தாள். மன அழுத்தப் பிரச்னையால் அவதிப்படும் அவள் ஸ்டீராய்ட்ஸ்களாலும் வலி நிவாரணிகளாலும் தன் பிரச்னையைத் தீர்க்க முடியும் என நம்புகிறாள். அவள் பயன்படுத்தும் மருந்துகளின் பக்க விளைவுகள் குறித்து ஆராயச் சொன்ன போதும் புறக்கணித்துவிட்டாள்.   

இத்தலைமுறையின் மிகப்பெரிய சீரழிவே இதுதான். நம் ஒவ்வொருவரின் உடலிலும் எத்தனை எத்தனை தொந்தரவுகள்! நோயுற்ற சமூகமாக நாம் மாறியதற்கு முக்கியக் காரணம் தூக்கம் எனும் இயற்கையான அருமருந்தை நாம் தொலைத்ததே! இந்தியர்களில் 93% பேர் தூக்கமின்மையால் அவதிப்படுவதாக ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது. இதில் 87% பேருக்குத் தூக்கமின்மையே பல நோய்களுக்குக் காரணமாகவும் அமைந்திருக்கிறது. இதுபோன்ற உண்மைகளைத் தெரிந்துகொள்ளாமல் நம்மோடு சேர்த்துக் குழந்தைகளையும் பின்னிரவு வரை விழித்திருக்கப் பழக்குகிறோம்.

உயிரினங்களில் இரவில் தூங்குபவை, பகலில் தூங்குபவை என இரண்டு வகை உண்டு. மனிதர்கள் முதல் வகையைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு உயிரினமும் தனக்கு இயற்கை வழங்கியிருக்கும் உயிரியல் கடிகாரத்திற்கு உட்பட்டே இயங்குகிறது. `ஜெஃப்ரி சி.ஹால், மைக்கேல் ராஸ்பாஷ் மற்றும் மைக்கேல் டபுள்யூ.யங்’  ஆகிய அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு அறிவியல் பிரிவில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. வழக்கம் போல நமக்கு இது ஒரு செய்தியே அல்ல. ஆனால், அவர்களது கண்டுபிடிப்பு நம்  நல்வாழ்க்கையோடு தொடர்புடையது என்பதால் கண்டிப்பாக நாம் தெரிந்துகொண்டே ஆக வேண்டும். தாவரங்கள், மனிதர்கள் மற்றும் விலங்குகள்  ஆகியவை  பூமி சுழலும்போது, இந்தப் பிரபஞ்சத்தின் பகல், இரவு சுழற்சிக்குத் தக்கவாறு எவ்வாறு தம்மைத் தகவமைத்துக்கொள்கின்றன என்பதுதான் இம்மூவரும் செய்த ஆய்வு.
இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், வெளியில் இருக்கும் கடிகாரத்தை வைத்து நாம் பொழுதுகளை அறிந்து அதற்குத்தக்கவாறு செயல்படுகிறோம். அதே போன்ற ஒரு கடிகாரம் இயற்கையாகவே நம் உடலுக்குள் இயங்குகிறது. இதை `பாடி க்ளாக்’ (Body clock) அல்லது `சிர்காடியம் ரிதம்’ என்று அழைக்கிறார்கள். சீனப் பாரம்பர்ய மருத்துவத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உயிரியல் கடிகாரத்தைக் கண்டுபிடித்து விட்டார்கள். நவீன விஞ்ஞானிகளுக்கு இந்த நூற்றாண்டில்தான் சாத்தியப்பட்டிருக்கிறது.  நம் உடல் உள்ளுறுப்பு ஒவ்வொன்றுமே அதற்கு இயற்கை விதித்திருக்கும் பிரதான நேரத்தில் மட்டுமே இயங்குகிறது என்பதுதான் இவர்களது ஆய்வின் நிரூபணம்.  

பசிப்பது, தூக்கம் வருவது எல்லாம் இந்தக் கடிகாரத்தைப் பொறுத்துதான் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நமக்கு இது தெரியாது. நாம் நமது வாழ்க்கை முறைக்குத் தக்கவாறு உடலின் தேவைகளை வளைத்துக் கொள்கிறோம். அதாவது, பசிக்கிற நேரம் உண்பதில்லை. மாறாக 10 மணிக்கு அலுவலகம் என்றால், நேரம் பார்த்து 9 மணிக்கு உண்போம்.  இரவு 9 மணிக்கு உறக்கம் வந்தாலும் டிவி சீரியல் 11 மணிக்கு முடிகிற வரை விழித்துக்கிடப்போம். இதுதான் இயற்கை விதிமீறல். விதிமீறல்கள் எப்போதுமே ஆபத்தில்தானே முடியும்! நமது வெளிப்புற நடவடிக்கைகளால் உடல் உள்ளுறுப்புகளும் அதனதன் வேலையைச் செய்ய முடியாமல் தடுமாறுகின்றன. இதனால் பலவிதமான பாதிப்புகளை உடல் எதிர்கொள்ள நேரிடுகிறது.

இரவுத் தூக்கத்தின்போது மனித உடலில் உள்ள உறுப்புகள் பல முக்கியமான வேலைகளைச் செய்கின்றன. ஆழ்ந்த உறக்கத்தில் 11-3 மணி வரையிலான நேரத்தில் கணையமும் கல்லீரலும் தமது பணியைச் செய்கின்றன. இரவு 11-1 மணி வரை கணையம் செல்களை ரிப்பேர் செய்து ரத்த அணுக்களை உருவாக்குகிறது. 1-3 வரையிலான நேரத்தில், கல்லீரல் உடலின் கழிவுகளை நீக்கி, செல்களுக்கு ஓய்வு கொடுத்து, அடுத்த நாளைய பணிக்குத் தயார் செய்கிறது. இந்தப் பணியை நாம் ஆழ்ந்து உறங்கும் நிலையில்தான் இந்த உறுப்புகளால் செய்ய முடியும். விழித்துக்கிடந்தால் கழிவு நீக்கம் நடைபெறாது. 11-3 வரை உடல் ஆழ் உறக்க நிலைக்குப் போக வேண்டுமெனில் சுமார் 9 மணி அளவில் நாம் படுக்கையறைக்குள் போய் மனதளவில் உறக்கத்திற்குத் தயாராக வேண்டும். ஆனால், நம்மில் பலர் உறங்கப் போவதே 12 மணிக்குதான். நள்ளிரவில் பூமி குளிர்ந்து, தூக்கத்தில் உடலும் குளிர்ச்சியடையும்போது நமது ஆரோக்கியத்திற்கான அரும்பணியைக் கல்லீரலும் கணையமும் செய்யத் தொடங்குகின்றன.

இன்னொரு விஷயத்தையும் புரிந்து கொள்ளுங்கள். எட்டு மணி நேரம் கண்டிப்பாகத் தூங்க வேண்டும் எனத் தெரிந்த நமக்கு, அது எந்த எட்டு மணிநேரம் என்பது தெரியாது. இரவு முழுவதும் விழித்துக்கிடக்கும் பலரும் அதிகாலை தொடங்கி மதியம் வரை படுக்கையில் கிடந்து ஈடு செய்கின்றனர். இதனால் உடல் கடுமையான தடுமாற்றத்திற்கு உள்ளாகிறது. பகலில் தூங்குவதால் உடலில் சூடு அதிகரிக்கிறது. பகலில் உறங்கும் பழக்கமுள்ளவர்கள் எப்போதும் ஒருவித எரிச்சலையும், தூங்காததைப் போன்ற உணர்வையும் சுமந்துகொண்டிருப்பார்கள். எத்தனை பகல்கள் உருண்டு புரண்டு தூங்கினாலும் ஓர் இரவுத்தூக்கத்தின் பலனைப் பெற முடியாது.     

தூக்கமிழந்த தலைமுறை என்பது நோயுற்ற மனிதக் கூட்டம். அதனால் இந்த பூமிக்கு ஒரு பயனும் இல்லை. உடல்வலி, தலைவலி, காய்ச்சல், ரத்தசோகை, பசியின்மை, கோபம், எரிச்சல், மன அழுத்தம், மறதி, சர்க்கரை, கருப்பைக் கோளாறுகள், இதயநோய் எனத் தூக்கமின்மையால் உண்டாகும் நோய்களின் பட்டியல் மிகப்பெரியது. தூக்கமின்மையால் வந்த பிரச்னையை நல்ல தூக்கத்தால்தான் சரி செய்ய முடியும். ஆனால், நாமோ காஸ்ட்லி சிகிச்சைகளைத் தேடி ஓடுகிறோம்.

இன்று நாம் கட்டக்கடைசியாகக் கவலைப்படும் விஷயமாக ஆரோக்கியத்திற்கு இடம் கொடுத்தி ருக்கிறோம். சென்ற தலைமுறை வரை அதுதான் முதல் இடத்தைப் பிடித்திருந்தது. பாட்டி தாத்தாவோடு வாழ நேர்ந்தவர்களுக்கு அது தெரிந்திருக்கும். மாங்கு மாங்கெனப் புழுதியில் விளையாடிவிட்டு, கபகபவென வயிற்றில் பசியெடுக்க, சமையலறையில் ஏதாவது இருக்கிறதா எனப் பாத்திரத்தை உருட்டியிருப் போம். பழைய சோறோ, கறிச் சோறோ எதைத் தின்றாலும் செரித்து உடலுக்குத் தேவையான சத்தாக நம்முள் கரைந்தது. எனது பள்ளிக் காலம் வரையிலும் கிராமங்களில் எட்டு மணிக்கெல்லாம் ஊரடங்கியதாகவே ஞாபகம். அதிகாலை சூரிய உதயத்திற்குப் பின் உறங்க யாருக்கும் அனுமதியில்லை. கோழி கூவும்போது எழுந்து பொழுது சாயும்போது ஓய்வும் தூக்கமுமாக மனிதர்களும் சாய்ந்துவிடுவார்கள்.

ஆரோக்கியம் என்பது உடலோடு பிறந்து உடலோடு வளர்ந்து உடலோடு அடங்கிப் போவது. இந்த உண்மை புரியாமல் அதை நாம் வெளியில் தேடுகிறோம். பசி, தாகம், ஓய்வு, தூக்கம். ஆரோக்கியத்தின் இந்த நான்கு தூண்களையும் இடித்துத் தள்ளிவிட்டு உடலின் அத்தனை தொந்தரவுகளையும் மருந்து மாத்திரைகளால் சரி செய்துவிட முடியும் என்ற அறியாமை நம்மை ஆட்டிப் படைக்கிறது. படித்த பெற்றோர்கூட, குழந்தை உட்கொள்ளும் மருந்துகள் குறித்து ஆராயாமலே மிட்டாய்களைப் போலத் தின்ன வைக்கின்றனர். காய்ச்சல் வந்தால் குறிப்பிட்ட மாத்திரையை விழுங்கவும், இருமல் வந்தால் டானிக் புட்டியைத் திறந்து மடக்கெனக் குடிக்கவும் குழந்தைகள் பழகுகின்றன. நிறைய வீடுகளில் இந்தக் காட்சியைப் பார்க்க முடியும்.

மருந்துகள் இல்லாமலே நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டும். மருந்துகள் இல்லாமலே நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும். இந்த விஷயத்தை நீங்கள் நம்பி, குழந்தைகளுக்கும் கற்பியுங்கள். குழந்தைகளை அறிவார்ந்தவர்களாக வளர்ப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் ஆரோக்கியமானவர்களாக உருவாக்குவது. அதற்கு நீங்கள் பணத்தைச் செலவழிக்க வேண்டாம். எளிய சிகிச்சை முறைகள் கேலிக்குரியவை அல்ல.  உடல் குறித்த அறியாமைகளிலிருந்தும் மருந்துகள் குறித்த மாயைகளிலிருந்தும் வெளியே வாருங்கள். நம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை எதன் பொருட்டும் நாம் பணயம் வைக்கக் கூடாது.

- நிறைய பேசுவோம்...

யிரியல் கடிகாரத்தின் படி நம் உடலில் எந்தெந்த நேரம் என்னென்ன நிகழ்கிறது என்று தெரிந்துகொள்வோம். இதன்படி இயற்கை விதிகளை மீறாமல் இருந்தால் நோய்கள் அண்டாது! நம் உடலுறுப்புகள் நெருப்பு, நிலம், காற்று, நீர், மரம் என ஐந்து மூலகங்களாகப் பிரிந்து செயல்படுகின்றன. அவற்றின் பணிகள் இவைதாம்: 
 
அதிகாலை 5-7 மணி: காற்று மூலகமான பெருங்குடல் பணி செய்கிறது. தூங்கி எழுந்து மலம் கழித்தலுக்கான நேரம். இந்த நேரத்தில் தியானம் செய்யலாம்.

 காலை 7-9 மணி: நில மூலகமான வயிற்றுப் பகுதிக்கான நேரம். ஆரோக்கியமான உடல் என்றால் இந்த நேரத்தில் பசி எடுக்கும். சத்தான உணவுகளை உட்கொள்ளுங்கள். நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

முற்பகல் 9-11 மணி: நில மூலகமான மண்ணீரல் செரிக்கப்பட்ட உணவைச் சத்தாக மாற்றி ரத்தத்தில் கலக்கச் செய்கிறது. இந்த நேரத்தில் வேறெந்த உணவும் உட்கொள்ளாமல் இருப்பது நல்லது. சிந்தனை தெளிவாக இருக்கும்.

  மதியம் 11-1 மணி: நெருப்பு மூலகமான இதயத்திற்கான நேரம். ரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது. உடல் ஆற்றலோடு இயங்கும். மதிய உணவுக்கான நேரம்.

 பிற்பகல் 1-3 மணி: நெருப்பு மூலகமான சிறுகுடலுக்கான நேரம். உணவிலிருந்து சத்துகளைப் பிரித்து உறிஞ்சுகிறது. உடலின் ஆற்றல் குறைவாக இருக்கும். குட்டித் தூக்கம் போடலாம்.

 பிற்பகல் 3-5 மணி: நீர் மூலகமான சிறுநீர்ப்பையின் வேலை தொடங்குகிறது. இழந்த ஆற்றல் மீட்கப்படுகிறது. திரவக் கழிவு  வெளியேறுகிறது. வேலை செய்யவும் படிக்கவும் உகந்த நேரம். வொர்க் அவுட் செய்யலாம்.

மாலை 5-7 மணி: நீர் மூலகமான சிறுநீரகத்திற்கான நேரம். சத்துகளைச் சேமிக்கிறது. எலும்பு மஜ்ஜையை உறுதி செய்கிறது. இரவு உணவை 7 மணிக்குள் முடித்துவிட வேண்டும்.

மாலை 7-9 மணி: நெருப்பு மூலகமான இதய மேலுறை உடலைப் பாதுகாக்கிறது. வாசிக்கலாம். ஓய்வெடுக்கலாம்.

இரவு 9-11 மணி: நெருப்பு மூலகமான மூவெப்ப மண்டலம் பணியைத் தொடங்கும். நாளமில்லா மற்றும் வளர்சிதை மாற்றங்களை பேலன்ஸ் செய்கிறது. தூங்கத் தயாராகுங்கள்.

 இரவு 11 - 1: மர மூலகமான கணையத்தின் பணி தொடங்குகிறது. பித்தத்தை வெளியேற்றுகிறது. செல்களை ரிப்பேர் செய்கிறது. ரத்த அணுக்களை உருவாக்குகிறது. நீங்கள் தூங்க வேண்டும்.

  இரவு 1-3 மணி: மர மூலகமான கல்லீரலுக்கான நேரம். நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வேண்டும். உடலின் கழிவுகளை நீக்குகிறது. உடலுக்கு ஓய்வளித்து மீட்டெடுக்கிறது.

 அதிகாலை 3-5 மணி: காற்று மூலகமான நுரையீரலுக்கான நேரம். ஆழ்ந்த உறக்கம் தேவை. கனவுகளும் நினைவுகளும் வரும். நுரையீரலிலிருந்து கழிவு வெளியேற்றம் நடக்கிறது.

No comments:

Post a Comment