Sunday, December 17, 2017

விழாக்களா... விடாதீர்கள்! thanks to dinamalar.com

விழாக்களா... விடாதீர்கள்!
Advertisement

பதிவு செய்த நாள்

17டிச
2017 
00:00
எங்கும், எதற்கும் செல்லாமல், அரச மரத்தடி பிள்ளையார்களாகவே காலம் கழித்து விடும் மனிதர்கள் நம்மில் அநேகர் உண்டு. வாழ்வின் எல்லைகளை குறுகலாகவும், சிறிதாகவும் அமைத்து, இப்படி சிறை வாழ்க்கையை மேற்கொள்வோர், உண்மையில் இரக்கத்துக்கு உரியவர்கள்.
திருமணம், மற்ற நல்லது, கெட்டதுகளுக்கு ஒன்றாகக் கூட வேண்டும் என்பதே, சக மனிதர்களோடு கலந்து பழகுவதற்காக ஏற்பட்டது தான்!
ஆனால், இவ்வாறு பழகும் தன்மை பலரிடம் இல்லாமல் போக காரணம், எதிலும் லாப, நஷ்டக் கணக்கு பார்க்கும் குணமே!
இதுவே, இவர்களை, இருந்த இடத்தைவிட்டு நகர விடாமல் செய்யும் முக்கிய காரணியாக உள்ளது. இப்படி கணக்கு பார்க்கும் குணம் உள்ளோர்,'அவன் என் வீட்டு விசேஷத்தில் அரைமணி நேரம் தான் இருந்தான்; நான் அஞ்சு நிமிஷம் கூட, அதிகமாக இருக்க மாட்டேன்...' என்று எதிர்மறையாக நடந்து கொள்ளவோ, கணக்கு பார்க்கவோ வேண்டியதில்லை.
எதிராளிகளை வெற்றி கொள்வது, கணக்கு பார்த்து நடந்து கொள்வதில் இல்லை; பெருந்தன்மையாக நடப்பதில் தான் உள்ளது.
இரு நண்பருக்கு தெரிந்த ஒருவர் இப்படிச் சொன்னார்... 'அவன் தான் அப்படி நடந்துகிட்டான்... 
நம்மாளு ரொம்ப பெருந்தன்மை; எதையுமே வெளிக் காட்டிக்காம, ரொம்ப நேரம் கல்யாண வீட்டில் இருந்தாரு. அதுமட்டுமல்ல, சில வேலைகளைத் தானே எடுத்துப் போட்டு செஞ்சாரு... நம்மாளு மாதிரி யாரும் வரமாட்டாங்க...' என்று உச்சி முகர்ந்து சொல்லி விட்டார்.
கேள்விப்பட்ட, 'கணக்கு' மனிதருக்கு ரொம்பவும் வெட்கமாகப் போய் விட்டது.
ஓர் அழைப்பு என்பதை வெறும் காகிதமாக பார்க்கக் கூடாது; அதை, உணர்வும், உயிர்ப்பும் அடங்கிய இதயமாக பார்க்க வேண்டும்.
விசேஷம் மற்றும் நல்லது, கெட்டதுகள் இதயங்களை ஒன்று சேர்க்கின்றன; பல புதிய அனுபவங்களைக் கொடுக்கின்றன. பழைய உறவுகளை - நட்புகளை சந்திக்கிறபோது, அந்த இடத்தில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. 
புதிய அறிமுகங்கள், பல வகைகளில் நமக்கு பயன்படுகின்றன. நம் உறவு, நட்பு, ஏன், தொழில் கூட விரிவடைய வாய்ப்பு இருக்கிறது.
ஒரு கல்லுாரி தாளாளரின் அறிமுகம், வேலை வாய்ப்பிலோ, கல்வி அட்மிஷனிலோ முடிய வாய்ப்பு இருக்கிறது.
ஒரு மருத்துவரின் அறிமுகம், நல்ல மருத்துவத்திற்கும், அநியாய மருத்துவ பில் வழியே நாம் தீட்டப்படாமல் தப்பிப்பதற்கும் வாய்ப்பாக அமைகிறது. 
ஒரு பயணச் சீட்டு ஆய்வாளரின் அறிமுகம், தவிர்க்க முடியாத ஓர் அவசரப் பயணத்தின் போது, ஒரு, 'பர்த்' கிடைப்பதில் கூட முடியலாம்.
வீட்டிலேயே முடங்கிக் கிடந்தால், நுாலாம்படை உடலில் படிவதைத் தவிர, வேறு என்ன அதிசயம் நிகழ்ந்து விடும்!
'கல்லுாரி விழா; வாப்பா...' என்கிறாள் மகள். 'அடப் போம்மா... செம போரு; அதுங்க அடிக்கிற கூத்தை எவன் பாக்கறது...' என்று மறுக்கிற தந்தை, மிகப்பெரிய தவறை செய்கிறார்.
இவரது இலக்கு கல்லுாரி விழா கலை நிகழ்ச்சிகள் அல்ல; அழைத்த மகளின் அன்பிற்கு செவி சாய்த்து, அவளது உணர்விற்கு மதிப்பு கொடுப்பது தான்!
அவ்விழாவிற்கு போனால், மகளின் தோழிகள் பற்றி அறியலாம்; அவர்களது அப்பாக்கள், அம்மாக்களின் அறிமுகம் பிற்காலத்தில், தன் மகளின் எதிர்கால விஷயத்தில் நம்ப முடியாத நன்மையான முடிவுகளை எடுக்க உதவலாம்.
சரி, எங்கும் வராமல், இவர் சேமிக்கும் நேரத்தை, நல்லபடியாக பயன்படுத்தினாரா என்றால், இல்லை. வெட்டியான முறையில் இவர் போக்கிய பொழுதை, மகளுக்கென அளித்திருந்தால், வட்டியும், முதலுமாய் திரும்பி வர வாய்ப்பு இருக்கிறது தானே!
எந்த விழாக்களையும், விழாக்களாக பார்க்காதீர்கள்; வீழ்ந்து விடாமல் இருக்க உதவும் வாய்ப்புகளாகக் கருதுங்கள்.
விழாக்கள் எனில் கலந்துகொள்ளக் காரணங்கள் தேட வேண்டுமே தவிர, அவற்றை தவிர்ப்பதற்கான காரணங்களை தேடக் கூடாது!

No comments:

Post a Comment