Sunday, December 17, 2017

சேர்ந்து போகிறதே என்று சோர்ந்து போவதா? thanks to dinamalar.com

Advertisement

பதிவு செய்த நாள்

05நவ
2017 
00:00
என் மேஜையில் தேங்கியிருந்த பைல்களைப் பார்த்த என் நெருங்கிய நண்பர் ஒருவர், 'உன்னை நல்ல உழைப்பாளின்னுல்ல நினைச்சேன்; இப்படிக் கடைஞ்செடுத்த சோம்பேறியா இருக்கியே... இத கொஞ்சங்கூட எதிர்பார்க்கல...' என்று சவுக்கடி கொடுத்தார், பாருங்கள்... 
'சுரீர்' என்றது.
எப்போது இந்த மேஜையில் கை வைக்கப் போனாலும், அந்த நேரம் பார்த்து, தொலைபேசி அழைப்பு வரும்; எதிராளியோ, நீண்ட நேரம் பேசும் மனநிலையுடன் இருப்பார். இல்லை என்றால் யாராவது ஒரு உறவினர் தேடி வருவார்.இரண்டு மணி நேரம் ஏதேதோ பேசி, வேலை செய்யும் எண்ணத்தை சிதறடிப்பார். பின், தொலைக்காட்சியில் சுவையான காட்சி ஓடும்; அதில் மூழ்க வேண்டியது தான்.
இவற்றையெல்லாம் விட, 'இப்போதைக்கு இதில் கையை வச்சா அவ்வளவு தான், எல்லா வேலையும் கெட்டுப் போகும். அப்புறமா, சாவகாசமா ஒரு ஞாயிற்றுக்கிழமை பார்த்துக்கலாம்...' என்று, சோம்பல் முறிக்கும், மனசு.
இதோடு விடுமா... தள்ளிப் போட, பல நியாயங்களைக் கற்பிக்கும்.
பார்த்தேன்... 'இந்த அணுகுமுறையே தவறு; தினமும் ஒரு பத்து நிமிடம் மட்டும் ஒதுக்குவோம்...' என, முடிவு செய்தேன். மேஜையில் இருந்த சில பைல்களில், சங்கிலித் தொடர்போல் வேலைகள் இருந்தன. எனவே, அவற்றை இதுவரை தொடாமலே இருந்தது தவறு என, உணர்ந்தேன்.
'உங்கள் வங்கிக் கணக்கை, நீங்கள், பல காலமாகப் பயன்படுத்தாததால், அதைப் பரணுக்கு அனுப்பி விட்டோம்; இன்னின்ன ஆதாரங்களுடன் வந்து கணக்கைப் புதுப்பித்துக் கொள்ளவும்...' என்று வங்கியிடமிருந்து வந்த கடிதத்தை எடுத்தேன். 
வங்கி கேட்ட ஆதாரங்களை மட்டும் எடுத்துத் திரட்டி, அந்த பைலில், 'கிளிப்' போட்டுச் சொருகி வைத்ததுடன், நாட்குறிப்பேட்டை எடுத்து, காலியாக இருந்த ஒரு தினத்தைத் தேர்வு செய்து, 'வங்கிக்குச் செல்லுதல்' எனக் குறித்தேன். அவ்வளவு தான் அந்த வாரத்தில் அந்த வேலை முடிந்தது. 
இதை, இரண்டு மாதங்களாகத் தூசிபடியும்படி விட்டு விட்டதன் காரணம், 'கேட்ட ஆதாரங்களைத் தேடணுமே; நேரில் போகணுமே...' என்கிற, 'மன அடைப்பு' தான்!
தேங்கிப் போன கடன்கள்; கட்டாமல் விட்ட தவணைகள்; வசூல் செய்யாமல் விட்ட வாடகைகள் என்று, பலவிதமான வேலைகள் நம்முன் சேரச் சேர, அவற்றை ஓர் அசுரனை போலப் பார்க்கும் சிறுவனாக ஆகிவிடுகிறோம். இந்நினைப்பு, மலைப்பாக ஆகி, நம்மைக் கட்டிப் போடுகிறது.
நூலாம்படை மலைப்புகளை, தாம்புக் கயிறுகளாக ஆக்கிக் கொள்வது நாம் தானே தவிர, காரியங்களின் தன்மைக்கு அத்தகைய வலிமை இல்லை.
ஒன்றைப் பார்த்து மலைப்பதை விட, அச்செயலை, பல கூறுகளாகப் பிரித்துக் கொண்டால், மலைப்பு நீங்கிவிடும்.
நமக்குள்ள கடன் பாக்கி நம்மை மலைக்க வைத்தால், கடன் வாங்கியவரிடம் சென்று நிலைமையை விளக்கி, 'இன்ன சூழ்நிலையில் சிக்கிக் கொண்டேன்; இதிலிருந்து விடுபட நீங்கள் உதவ முடியும்...' என ஆரம்பித்து, 'ஒரு சிறு நோட்டுப் புத்தகம் போட்டு, தவணைகளைத் தரும்படியான சவுகரியத்திற்கு மாற்றித் தந்து உதவுங்கள்; மெல்ல மெல்லக் கட்டி விடுகிறேன்...' என்று தயவாகவும், நயந்தும் பேசிப் பார்க்கலாம்.
கணக்கு எழுதாமல் சேர்த்து வைத்து விட்ட பில் மூட்டைகளை பார்த்து, பெருமூச்சு விடாமல், முதலில், தேதி - ஆண்டு வாக்கில் பிரித்து, பின், வேலையைத் துவங்கலாம்.
இப்படி, மலைக்கிற எந்த ஒரு விஷயத்தையும், ஏதோ சுட்டுவிடும் நெருப்பைப் போலப் பாராமல், கையில் எடுத்து, அதன் பலத்தை, மெல்லப் பலவீனப்படுத்த வேண்டும்.
'நான் ஆற்றலாளன்; இவை எல்லாம் எனக்கு தூசு. என்னையா இந்தச் சிறு செயல் அடிமைப்படுத்துவது... உன்னைத் தூள் தூள் ஆக்குகிறேன் பார்...' என்று, விஸ்வரூபம் எடுத்துப் புறப்பட்டால், எத்தகு மலைகளும், கடுகுகளே!
நம் செயல்பாடுகளில் நாம் தேங்கிப் போய்விடக் காரணம், நமக்குள் இருக்கும் மன அடைப்புகள் தாம். தவிர, நம் ஆற்றல்களின் குறைவோ, செயல்பாட்டுத் தன்மைகளோ அல்ல என, மனப்பூர்வமாக நாம் நம்பினால், அதிசயங்கள் நடக்கும்; அற்புதங்கள் சாத்தியமாகும்! 

லேனா தமிழ்வாணன

No comments:

Post a Comment