Sunday, December 31, 2017

நீங்கள் மிளகாயா, மிளகா? thanks to vikatan.com

நீங்கள் மிளகாயா, மிளகா?

பதிவு செய்த நாள்

31டிச
2017 
00:00
ஒரு முனிவர் சொன்ன குட்டிக் கதை இது... கிராமத்திற்கு போகிற காட்டுப் பாதையில், போவோர் வருவோரை கடித்து வந்தது, ஒரு நாகம். உள்ளூர் சாமியாரிடம் முறையிட்டனர், கிராமத்து மக்கள். பாம்பிடம் சென்ற சாமியார், 'ஊர் மக்களை அநியாயமாக வதைக்கிறாயே... இனி யாரையும் கடிக்காதே...' என்றார். சாமியாருக்கு கட்டுப்பட்டு அடங்கிப் போயிற்று பாம்பு.
சில ஆண்டுகளுக்கு பின், அந்த பக்கமாக சென்றார், சாமியார். அங்கே குற்றுயிரும், குலையுயிருமாய் கிடந்தது, பாம்பு. 
'என்ன ஆச்சு உனக்கு?' என்று கேட்டார், சாமியார்.
'நீங்கள் தானே எவரையும் கடிக்கக் கூடாது என்று சொன்னீர்கள்... அதனால், யாரையும் நான் கடிக்கவில்லை. அதனால், இக்கிராம மக்களுக்கு என் மீது இருந்த பயம் போய், என்னை அடித்துப் போட்டு விட்டனர்...' என்றது பரிதாபமாய்! 
அதற்கு சாமியர், 'உன்னை கடிக்க வேண்டாம் என்று தான் சொன்னேன்; சீற வேண்டாம் என்றா சொன்னேன்...' என்றாராம்.
இதைப் போன்று தான் கோபமும்!
பாரதி கூட, 'ரவுத்திரம் பழகு' என்று தான் சொன்னான்.
மிளகாயில் வைட்டமின், 'சி' நிறைய உள்ளது. ஆனால், இதன் காரத்தை விட, மிளகின் காரம் மிக நல்லது. 
காரணம், காரத்தன்மையுடன், பல மருத்துவ குணங்களையும் கொண்டது, மிளகு; மிளகாயுடன் ஒப்பிடும்போது ஆபத்து குறைவானது.
ஒரு கல்லுாரி குழும தலைவரின் நம்பிக்கைக்குரிய நபர், பண விஷயத்தில் விளையாடி விட்டார். அவரது மாப்பிள்ளையும், மகனும், 'எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம்; அந்த நபரை வெளியேற்ற வேண்டும்...' என்று கோபத்தில் குதித்தனர்.
'கவனியாமல் விட்டதும், அதிகமாக நம்பியதும் நாம் மூவரும் செய்த தவறு; எனவே, அவரை எச்சரித்து, பண வரவு, செலவுகளை கையாள வேண்டிய அவசியமில்லாத நிர்வாக பணிக்கு அவரை மாற்றுகிறேன்...' என்று செய்து காட்டி, தான் எடுத்த முடிவு சரி என்று நிரூபித்து விட்டார், தாளாளர்.
நம்முடைய கோபம் என்பது மிளகாயை விட, மிளகாக இருப்பது மிக நல்லது.
இனி, மிளகாய் கோபத்திற்கும், மிளகுக் கோபத்திற்கும் உள்ள வேறுபாடுகளை பார்ப்போம்... 'அறிவிருக்கா உனக்கு?' என்று கேட்பது மிளகாய் கோபம்; 'அறிவாளி செய்ற செயலா இது...' என, பாராட்டோடு கூடிய திட்டு, மிளகுக் கோபம்.
'நீ ரொம்ப நல்லவம்மா; ஆனா, இந்த விஷயத்தில் நீ நடந்துகிட்டது சரியான்னு உன் மனசாட்சியையே கேட்டு பாரு...' என்பதை, மிளகு கோபத்திற்கு உதாரணமாக சொல்லலாம்.
ஒரு செயலுக்காக, ஒரேயடியாக போட்டுத் தள்ளி, 'நீ மகா மட்டமான ஆளுன்னு தெரிஞ்சும் உன்கிட்ட ஒப்படைச்சேன் பாரு, என் புத்திய செருப்பால அடிக்கணும்...' என்பதும், நடந்த தவறை மட்டும் கண்டிக்காமல், 'நீ எப்பவுமே இப்படித்தான்...' என, இதுவரை நடந்தவற்றை யெல்லாம் அடுக்கடுக்காக கோர்த்துச் சொல்லி, குதி குதியென்று குதிப்பது, மிளகாய் கோபம். 
நடந்துவிட்ட ஒரு செயலை மட்டும் கண்டிப்பது, மிளகுக் கோபம்.
ஒரு செயலை மன்னிப்பு அற்றதாகக் கருதி, தண்டனை தருவது, உறவை அறுத்துக் கொள்வது, வேலையை விட்டு துாக்குவது மிளகாய் கோபம்!
எச்சரித்து, மறுபடி நிகழக்கூடாது என்பதை மட்டும் உணர்த்துவது, மிளகுக் கோபம்.
பழி தீர்த்து முடிப்பது மிளகாய் கோபம்; பழி தீர்ப்பது என்பது ஒரு தொடர் கதையின் மோசமான ஆரம்பமே என்பதை உணர்ந்து விலகி இருப்பது, மிளகுக் கோபம்.
எனவே, மாறுவோம் மிளகுக் கோபத்திற்கு!

லேனா தமிழ்வாணன்
Advertisement

No comments:

Post a Comment