Sunday, December 17, 2017

பாராட்டுகளை வெளிப்படுத்துங்கள்! thanks to dinamalar.com

இந்த உடையில் ரொம்ப நல்லா இருக்காளே...' என்று, தன் மனைவியைப் பற்றி நினைக்கிறான், கணவன். ஆனால், அதை மனைவியிடம் சொல்கிறானா என்பது தான் பெரிய கேள்வி. சொல்லியிருந்தால் பூரித்துப் போயிருப்பாள், இல்லத்தரசியின் குறையை மட்டுமே சொல்ல வேண்டும் என்ற கொள்கை வைத்திருக்கின்றனர், பல கணவர்கள்.
தனக்கு வண்டி ஓட்டியவரைப் பற்றி, 'சூப்பர் டிரைவர்... பயமுறுத்தாம ஓட்டினதோட, சரியான நேரத்தில கொண்டு வந்து சேர்த்துட்டாரு...' என்று யாரிடமோ சொல்கிறோம். ஆனால், உரியவரிடம் சொல்வதில்லை. 
'நீ நல்லாப் படிக்கிறே... இதுல எனக்கு எவ்வளவு பெருமை தெரியுமா...' என்று மகனிடம், தாய் சொல்வதில்லை. மாறாக, தன் உறவினர் மற்றும் தோழியரிடம், மகனைப் பற்றி, ஏகமாய் தம்பட்டம் அடிப்பர். 
உரியவர்களுக்கு சொல்லாமல், ஊராரிடம் சொல்வதாலும், உள்ளத்திற்குள் பாராட்டுவதாலும் என்ன பயன்!
தங்க விளக்காக இருந்தாலும், அதைத் தூண்டி விட ஒரு குச்சி வேண்டாமா...
பாராட்டுகளை வெளிப்படையாக சொல்லும் போது, அங்கே விரும்பத்தக்க பல ரசாயன மாற்றங்கள் நிகழ்கின்றன.
'கணவன், தன்னை முன் போல் நேசிப்பதில்லை; அன்பு குறைந்து விட்டது...' எனும் ஐயப்பாடுகள், 100க்கு, 90 சதவீத மனைவியருக்கு காலமெல்லாம் தொடர்வது உண்டு. மீதமிருக்கிற, 10 சதவீதப் பெண்கள் கூட, கணவன் தன்னிடம் பிரியமாக இருக்க, இன்னன்ன உள்நோக்கங்களே காரணம் என்று முடிவுக்கு வருகின்றனர். இந்தச் சந்தேக நோய்க்கு, வெளிப்படையான பாராட்டே அருமருந்து.
என் தந்தை, தமிழ்வாணன் அடிக்கடி இப்படி சொல்வார்... 'இல்லறம் நல்லறமாக விளங்க, கணவன் ஒன்றை மட்டும் பின்பற்றினால் போதும்; அது, காலமெல்லாம் மனைவியை பாராட்டிக் கொண்டே இருப்பது...'
இந்தச் செயலை, பல கணவர்கள் சரிவரச் செய்யாததால்தான், காலமெல்லாம் சந்தேக வலைக்குள் இருந்து, சிக்கித் தவிக்கின்றனர்.
சரி, மனைவியாவது, கணவனை பாராட்டுகிறாளா என்றால் அதுவும் குறைவாகவே நடக்கிறது. பாராட்டினால், தான் சேர்த்து வைத்திருக்கிற சிறுவாட்டுப் பணத்திற்கும், அணிந்திருக்கும் நகைகளுக்கும், அம்மா வீட்டு சீதனங்களுக்கும் ஆபத்து வந்துவிடுமோ எனும் அச்சம்!
'யாரைப் பாராட்டுகிறோமோ அவர்கள் உடனே நம்மிடம் விண்ணப்பம் நீட்டி விட்டால் என்ன செய்வது... அவர்களுக்கு நாம் அதைச் செய்து கொடுக்க வேண்டுமே...' என்று பலருக்கும் ஏற்படும் அச்சமே, வாய் திறக்காதபடி செய்து விடுகிறது. 
பாராட்டுக் களையும், விண்ணப்ப மறுப்புகளையும் சம்பந்தப்படுத்திக் கொள்ளாதீர்கள். அது வேறு, இது வேறு!
ஓட்டுனரைப் பாராட்டினால், ஏதும் பணம் எதிர்பார்ப்பாரோ என்ற பயம் வேண்டாம்; தாட்சண்யமே இல்லாமல் மறுத்து விடுங்கள். நம் நன்மொழிகளை கேட்டு மகிழாமல், அதை, காசாக்கப் பார்க்கிறவர்களைக் கவனமாகவே கையாளுங்கள். மறுக்க நேர்வதற்காக வருத்தமும் பட வேண்டாம்.
'ஒரு விஷயத்தில், செயல்பாட்டில் நன்றாக நடந்தால், சரிவர நிகழ்த்தினால், அது அவர்களது கடமை; இதில் பாராட்ட என்ன இருக்கிறது...' என்று கருதுவதாலேயே, மற்றவர்களைப் பாராட்டுவதில் கஞ்சப் பிசினாறிகளாகி விடுகின்றனர், மனிதர்கள்.
எனவே, பாராட்டை மனம் திறந்து உடனே கொட்டிவிடுங்கள்; இச்செயல், உங்கள் உலகத்தை இனிதாக மாற்றி விடும்!

லேனா தமிழ்வாணன

No comments:

Post a Comment