Saturday, December 10, 2016

நிலவேம்பு... காய்ச்சலைக் குணமாக்கும் கண்கண்ட மருந்து!

நன்றி: பசுமை விகடன் - 10 டிஸம்பர் 2016

நிலவேம்பு... காய்ச்சலைக் குணமாக்கும் கண்கண்ட மருந்து!

மருத்துவம்சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு - படங்கள்: எல்.ராஜேந்திரன்
வ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இந்தத் தாவரம் குறிப்பிட்ட வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். ஆனால் நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும் அவற்றைப் பயன்படுத்தும் விதத்தையும் இத்தொடர் மூலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இத்தொடரில் உள்ள தகவல்கள் அனைத்தும் மூல நூல்களைத் தழுவியே இருக்கும் என்பதால், இதைக்கொண்டு சுய மருத்துவம் செய்துகொள்ள இயலும். இந்த இதழில் நாம் பார்க்க இருக்கும் மூலிகை ‘நிலவேம்பு’.
2009-ம் ஆண்டுக்கு முன்பு வரை காய்ச்சல் வந்தால் யாரும் பெரிதாகக் கவலைப்பட்டிருக்க மாட்டோம். காய்ச்சல் வந்தால், மருந்துகள் சாப்பிட்டாலும், சாப்பிடாவிட்டாலும் மூன்று நாட்களில் சரியாகிவிடும். அதற்கு மேல் காய்ச்சல் நீடிக்கும்பட்சத்தில்தான் ரத்தப் பரிசோதனை செய்யச் சொல்வார்கள், மருத்துவர்கள்.

 ஆனால் 2009, 2010, 2011, 2012-ம் ஆண்டுகளில் முறையே சிக்குன் குனியா, பன்றிக்காய்ச்சல், ஃப்ளூ காய்ச்சல், டெங்கு காய்ச்சல் என அடுத்தடுத்துப் பரவிய காய்ச்சல் மக்களை நிலைகுலையச் செய்துவிட்டது. இப்போதும்கூட டெங்கு தொடர்வது, வருந்தத்தக்க செய்திதான். டெங்கு காய்ச்சல் பரவிய பிறகுதான் காய்ச்சல் என்றாலே அச்சம் தொற்றிக்கொண்டுவிட்டது. மிக வேகமாக சிக்குன் குனியா மற்றும் டெங்கு ஆகியவை பரவி வந்த சமயத்தில் மக்களின் துயர் போக்கி குணமடையச் செய்தது, நிலவேம்புக் குடிநீர்தான். இதை ஒப்புக்கொண்ட அரசாங்கம், நிலவேம்புக் குடிநீர் குறித்துப் பரப்புரை செய்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இக்குடிநீரை இலவசமாக வழங்கி காய்ச்சலை குணமாக்கியதோடு, வராமல் தடுக்கவும் ஏற்பாடு செய்தது. 

சிக்குன் குனியா நோயின்போது இக்குடிநீரைக் குடித்தவர்களுக்கு மூட்டு வலி நன்கு குணமானது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. காய்ச்சல் பரவிய சமயத்தில், எங்கள் பகுதியில் சிறப்பு முகாம்கள் நடத்தி, நிலவேம்புக் குடிநீர் தயாரித்து மக்களுக்குக் கொடுத்து நோயின் பிணியில் இருந்து விடுபடச் செய்ததோடு, விழிப்பு உணர்வையும் ஏற்படுத்தினோம். நிலவேம்புக் குடிநீர் ஏதோ நேற்று கண்டுபிடிக்கப்பட்டதல்ல. காலங்காலமாக நம் முன்னோர் பயன்படுத்தி வந்ததுதான். இன்னும் சொல்லப்போனால், 1970-ம் ஆண்டிலிருந்தே, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் மக்களுக்குக் காய்ச்சி வழங்கப்பட்ட மருந்துதான் இது. 1900-ம் ஆண்டுகளில் வாழ்ந்த கண்ணுசாமிப்பிள்ளை என்னும் மருத்துவ அறிஞர், தனது நூல்களில் சர்வ சுரக்குடிநீர் மற்றும் காய்ச்சலைக் குணமாக்கும் மற்ற குடிநீர் வகைகளிலும் நிலவேம்பு சேர்ப்பது குறித்து எழுதியுள்ளார். நிலவேம்பை, வட மாநிலங்களில் ‘கிரிசாத்து’ என்கிறார்கள். தென்மாவட்டங்களில், நிலவேம்புக் குடிநீரை ‘விஷக்குடிநீர்’ என்று சொல்லி வருகிறார்கள்.

‘சிறியாநங்கை’ எனும் பெயரில் வீடுகளில் வளர்க்கப்படும் சிறு செடியே நிலவேம்பு ஆகும். மலைவேம்பு, துலுக்க வேம்பு, சிவனார் வேம்பு, நிலவேம்பு, கறிவேம்பு, மதகரி வேம்பு, நாய்வேம்பு, சர்க்கரை வேம்பு, சந்தன வேம்பு என வேம்பு இனத்தில் பல வகைகள் உள்ளன. இவற்றில் நிலவேம்பு, சிவனார் வேம்பு ஆகிய இரண்டு மட்டும் செடியாக வளரக்கூடியவை. மற்றவை அனைத்தும் மரமாக வளரக்கூடியவை. 

நிலவேம்பின் இலைகள் மிளகாய்ச்செடியின் இலைகளைப் போன்று இருக்கும். காய் முதிர்ந்ததும் வெடித்து விதைகள் பரவும். அதனால், ஒரு செடியை நட்டு வைத்தால்கூட மூன்றே மாதங்களில் கொத்துக்கொத்தாகப் பல்கிப் பெருகிவிடும். இதனுடன் சில சரக்குகளைச் சேர்த்து நாமே குடிநீர் தயாரித்துக் காய்ச்சலிலிருந்து மீளலாம்.
நிலவேம்புக் குடிநீரை, உணவுக்கு முன் அல்லது உணவுக்குப் பிறகு என எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம். எந்த வகைக் காய்ச்சலாக இருந்தாலும், ‘விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள்’ என்று சொல்வதற்கேற்ப மூன்று நாட்கள் கட்டாயம் குடிக்க வேண்டும். சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு முதலான நாட்பட்ட பிணிகளுக்குத் தொடர்ந்து ஆங்கில மருந்துகள் சாப்பிட்டு வருபவர்கள்கூட காய்ச்சல் சமயத்தில் நிலவேம்புக்குடிநீரை அருந்தலாம். இந்த மூன்று நாட்களில் உணவுக்கட்டுப்பாடும் (பத்தியம்) அவசியம். உடனே பத்தியம் என்றால் பயப்படத் தேவையில்லை. நோய்க்குத்தான் பத்தியம். மருந்துக்கு அல்ல. காய்ச்சல் சமயங்களில் உடலின் செரிமான மண்டல உறுப்புகள் சோர்வுற்றிருக்கும். அந்த நேரத்தில் எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளைத்தான் உண்ண வேண்டும். 

காய்ச்சல் சமயத்தில் காற்றோட்டமான இடத்தில் ஓய்வெடுக்க வேண்டும். அதிகளவில் வெந்நீர் குடிக்க வேண்டும். முதல் நாள் முழுவதும் அன்னப்பால் கஞ்சி அருந்த வேண்டும். இரண்டாம் நாள் இட்லி; தக்காளி, புளி ஆகியவை இல்லாமல் மிளகு, சீரகம் மட்டும் சேர்த்த ரசம், அரிசிச் சோறு சாப்பிட வேண்டும். மூன்றாம் நாள் இட்லி; முருங்கை, கத்திரி, அவரை சேர்த்துச் செய்யப்பட்ட பாசிப்பருப்பு சாம்பார், அரிசிச் சோறு சாப்பிட வேண்டும். காபி, தேநீர் ஆகியவற்றைக் குறைந்தளவில் குடிக்கலாம். இதுதான் பத்திய உணவு. ‘இலங்கணம் பரம ஔடதம்’ என்று முன்னோர் சொல்லியுள்ளனர். இலங்கணம் என்றால் உண்ணாவிரதம் கடைப்பிடிப்பது. அதாவது உண்ணாமல் இருப்பதே நல்ல மருந்து எனப் பொருள். 
சித்த மருத்துவ மெய்யறிவியல்படி, ‘குடல்தன்னில் சீதமலாது சுரம் வராது’ என்று சொல்லப்பட்டுள்ளது. வைரஸ், பாக்டீரியா போன்றவற்றால் சுரம் வருகிறது என நவீன மருத்துவ அறிவியல் சொல்கிறது. மனித உடலில் நுழைந்த நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகுவதற்கு உகந்த குளிர்ச்சியான சூழலைத்தான் சீதம் என்று சொல்லியுள்ளனர். காய்ச்சல் சமயத்தில் ரொட்டி, பன், பிஸ்கட், பழச்சாறு போன்றவற்றை உண்ணக்கூடாது. ரொட்டி, பன் போன்றவற்றால் மலச்சிக்கல் ஏற்படும். பழச்சாறு உடலில் புளிப்பை அதிகரிப்பதால் உடல் குளிர்ச்சியடையும். அதனால், காய்ச்சல் குணமாகத் தாமதமாகும். 

வாரம் ஒருமுறை இரவில் படுக்கப் போகும் சமயத்தில் 50 மில்லி நிலவேம்புக் குடிநீரைக் குடித்து வந்தால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். கை, கால் சோர்வு,  உடல்வலி, காய்ச்சல் முதலியன வராது. ராமநாதபுரம் மாவட்ட கிராமங்களில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று இக்குடிநீரைக் குடிக்கும் பழக்கம் உண்டு. அப்பகுதிகளில் இதை ‘ஞாயிற்றுக்கிழமை கஷாயம்’ என்று சொல்கிறார்கள். 
     
-வளரும்

நீங்களே தயாரிக்கலாம் நிலவேம்புக் குடிநீர்! 

நிலவேம்பு, வெட்டிவேர், விளாமிச்சைவேர், கோரைக்கிழங்கு, பற்படாகம், சந்தனச்சிறாய், பேய்ப்புடல், சுக்கு, மிளகு ஆகிய ஒன்பது சரக்குகளும் வகைக்கு 100 கிராம் எடுத்து ஒன்றாகக் கலந்து, ஒன்றிரண்டாக அரைத்து வெயிலில் 3 மணி நேரம் காய வைக்க வேண்டும். பிறகு, காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்த வேண்டும். இதை 6 மாதங்கள் முதல் ஓர் ஆண்டு வரை பயன்படுத்தலாம். இச்சரக்குகள் எல்லாமே நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும். 

மேலே சொன்ன கலவையில் 30 கிராம் எடுத்து, 1 லிட்டர் தண்ணீரில் இட்டு அது கால் லிட்டராக (250 மில்லி) சுண்டும் வரை கொதிக்க வைத்து இறக்கினால், நிலவேம்புக் குடிநீர் தயார். இதைப் ஃப்ளாஸ்கில் ஊற்றி வைத்துப் பயன்படுத்தலாம். காய்ச்சல் கண்டவர்கள், 3 மணி நேரத்துக்கொரு முறை, இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும். 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் வேளைக்கு 50 மில்லி குடிக்கலாம். 3 வயது முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள் வேளைக்கு 30 மில்லி குடிக்கலாம். மூன்று மாதங்கள் முதல் மூன்று வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வேளைக்கு 20 மில்லி கொடுக்கலாம்.

சளியைக் குணமாக்கும் மூலிகைகள்! 

சளியுடன் கூடிய காய்ச்சல் இருந்தால் நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கும்போது ஆடாதொடை இலை, தூதுவளை இலை, துளசி இலை, கண்டங்கத்திரி ஆகியவற்றில் கிடைக்கும் இலைகளில் கைப்பிடியளவு எடுத்து குடிநீர்ப் பொடியோடு சேர்த்துக் காய்ச்சிக் குடிக்கலாம். உடல்வலி அதிகமாக இருந்தால், கைப்பிடியளவு குறுந்தொட்டி வேர் எடுத்து ஒன்றிரண்டாக இடித்துக் குடிநீர்ப் பொடியோடு சேர்த்துக் காய்ச்சிக் குடிக்கலாம்.

காய்ச்சலுடன் அதிகமாக உடல்வலி, தலைவலி இருந்தால் நொச்சி இலை, எலுமிச்சை இலை, மஞ்சள் பொடி, கல் உப்பு ஆகியவற்றைக் கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம். இதை ‘வேதுபிடித்தல்’ என்பார்கள். உடல் முழுவதும் வியர்வை ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் வரை ஒரு மணி நேரத்துக்கொரு முறை தொடர்ந்து ஆவி பிடிக்க வேண்டும்.

கஷாயம்! 

குடிநீர் அல்லது கஷாயம் என்பது சித்த மருத்துவ உள்மருந்து வடிவங்களில் ஒன்று. இது காபி, டீ போன்று கொதிக்க வைத்து இறக்குவது அல்ல. மருந்துப் பொருட்களுடன் தண்ணீர் சேர்த்து நான்கில் ஒன்றாக, எட்டில் ஒன்றாக, பதினாறில் ஒன்றாக, முப்பத்திரண்டில் ஒன்றாக வற்ற வைத்து வடிகட்டி எடுப்பதுதான் கஷாயம்். இதை மூன்று மணிநேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும் என்பதால், தேவைக்குத்தான் தயாரிக்க வேண்டும். ஃப்ளாஸ்கில் சூடாகப் பராமரித்தால் 12 மணி நேரம் வரை வைத்திருக்கலாம். கஷாயம் தயாரிக்க மண்பானையும், விறகு அடுப்பும் சிறந்தவை. கஷாயத்துக்கான மருந்துப் பொடி, மிகவும் நுண்ணியதாக இருக்கக்கூடாது.

மருத்துவர் கண்ணுசாமிப் பிள்ளை!
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் வாழ்ந்த மாமனிதர் இவர். சித்தர்களின் மூல நூல்களில் சொல்லப்பட்ட மருந்துகளைத் தயாரித்து நோயாளிகளுக்கு வழங்கியதோடு அதுகுறித்த இவரது அனுபவங்களையும் தெளிவான உரைநடை வடிவில் பதிவு செய்துள்ளார். கண்ணுசாமி வைத்திய சிந்தாமணி, கண்ணுசாமி சிகிச்சாரத்னதீபம், கண்ணுசாமி பரம்பரை வைத்தியம், கண்ணுசாமியம் என்னும் வைத்திய சேகரம், பதார்த்த குண சிந்தாமணி ஆகிய நூல்கள் இவர் எழுதியவை. சென்னை, கொண்டித்தோப்பு, வெங்கட் ராமைய்யா தெருவில் உள்ள ரத்தினசாமி நாயக்கர் அண்ட் சன்ஸ் எனும் அச்சகத்தார், இவரது நூல்களைத் தொடர்ந்து பதிப்பித்து வருகிறார்கள்.

அன்னப்பால் கஞ்சி (புனர்பாகம்) 

50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இது அனைவருக்கும் தெரிந்த மருந்து உணவுதான். சிறிது அரிசியுடன், இரண்டு மிளகு, ஒரு ஏலக்காய் ஆகியவற்றை இளவறுப்பாக வறுத்து, ஒன்றிரண்டாக அரைக்க வேண்டும். அதனுடன் நிறைய தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கினால் அன்னப்பால் கஞ்சி தயார். இதுவே சித்த மருத்துவ நூல்களில் ‘புனர்பாகம்’ என்று அழைக்கப்படுகிறது. இதை இளஞ்சூட்டில் ஒரு மணி நேரத்துக்கொரு முறை குடித்து வந்தால் அயற்சி, சோர்வு, மயக்கம் முதலியன உடனே நீங்கும்.

கட்டியம் கூறும் மருத்துவ ஆய்வு!
நிலவேம்புக் குடிநீர் குறித்து ஆய்வு மேற்கொண்டு 2014-ம் ஆண்டில், ஆய்வறிக்கை வெளியிட்டிருக்கிறார், சென்னை, கிங்ஸ் மருத்துவ ஆய்வு நிறுவனத் தலைவர் மரு.குணசேகரன். அதில், ‘நிலவேம்புக் குடிநீர், வைரஸ் கிருமிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பது உறுதி. அதே சமயத்தில் 2013-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் அரசின் முயற்சியால் நிலவேம்புக் குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டதால், அந்த ஆண்டில் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைவிட தமிழக மக்களுக்கு சுவாசப் பாதை நோய்த் தொற்றுகள் மிக மிகக் குறைவாக இருந்ததைக் கண்டறிந்தோம்’ என்று சென்னையில் நடைபெற்ற நூல் வெளியிட்டு விழாவில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment