Monday, July 31, 2017

வருத்தங்களில் திருத்தங்கள்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30ஜூலை
2017 
00:00
நாம், யாரால் நன்றாக வளர்ந்தோமோ, யாரெல்லாம் நமக்கு உதவியாக இருந்தனரோ, யாரெல்லாம், நம் வாழ்க்கையில், நல்ல திருப்பங்களை ஏற்படுத்தினரோ, யாருக்கெல்லாம் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோமோ, அவர்கள் மீதும் கூட, எப்படியோ சில மனக்குறைகள், ஏற்பட்டு விட வாய்ப்பு உண்டு.
இரண்டாம் கருத்தே எழக் கூடாத, தாய் மீது கூட, ஒரு சிலருக்கு வருத்தம் இருக்கிறது. 'என்னைப் பார்த்து, அப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டார்; என்னை விட, என் உடன்பிறப்புகளுக்கே, சாதகமாக நடந்து கொண்டார்; என்னை நன்கு நடத்திய அளவு, என் பிள்ளைகளிடமோ, என் மனைவியிடமோ நடந்து கொள்ளவில்லை; சொத்து பிரிப்பில், நகை பிரிப்பில், அவர் நடந்து கொண்டது நியாயமில்லை...' என்கிற பாணியிலும், உள்ளூர சில வருத்தங்கள், மனதில் படிந்து விடுகின்றன.
உலகின் உன்னதமான பிறவியாம், தாய் பற்றியே இவ்வளவு எனில், தந்தை மற்றும் மற்ற உறவுகள் பற்றி கேட்கவே வேண்டாம்.
'என் அண்ணன் என்னை படாத பாடுபடுத்தினார்; என் தம்பி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டான்; என் வயதையும் பாராமல், என் தங்கை பேசிய வார்த்தைகளை, என் கட்டை வேகும் வரை மறக்க முடியாது...' என்றெல்லாம், நினைவுப் பேரேட்டை, புரட்டி பார்த்து, நினைவுபடுத்திக் கொண்டு இருப்பவர்களும் உண்டு.
முதலாளி, ஊழியர், பங்குதாரர்கள் மற்றும் வீட்டைச் சுற்றி இருப்பவர்கள் மீது வருத்தம்; தொண்டு நிறுவனத்தில், பொதுக்காரியத்தில் ஈடுபடும் போது, அந்த அமைப்பின் பொறுப்பாளர்கள்; உறுப்பினர்களின் செயல்களில்; சொற்களில் வருத்தம் என்று, இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். 
இதை கூட குறை கூற மாட்டேன்; ஆனால், பழையனவற்றையெல்லாம் கிளறி, அவற்றை வெளிக்காட்டி, சண்டையாக ஆக்கி, உறவை உடைத்து கொள்வோருக்குத்தான், சில திருத்தங்களை சொல்ல விரும்புகிறேன்.
பைபிளில் ஒரு அருமையான வாசகம் வரும்... 'வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்கள்...' என்று!
ஆம்... வருத்தம் என்பது ஒரு வகையில் பெரிய பாரமே!
இது, இனியும் தொடராதிருக்க, என்ன செய்வது என்று பார்ப்போம்...
ஒருவர், நமக்கு செய்த நன்மைகளை மறந்து, அவர்கள் நமக்கு இழைத்த கொடுமைகள், தீமைகள் மற்றும் பாதகங்களை மட்டுமே, கணக்கில் கொள்வதற்கு காரணம், நம் பக்குவமற்ற பார்வையே!
கூட்டி, கழித்துப் பார்க்கையில், அவர்கள் நமக்கு செய்த ஏதோ ஒரு நன்மையே பிரதானம் என்றால், இந்த நன்மைக்காக, மற்ற அனைத்தையும் மறந்து விடலாம்.
இல்லையில்லை, கெடுதலே அதிகம் என்றாலும், நமக்கு, வாழ்வின் மறுபக்கத்தை கற்று தந்தவர்கள் இவர்களே!
தடுக்கி விழுகிற குழந்தையும், சறுக்கி விழுகிற வாகன ஓட்டிகளும், அந்த நிகழ்ச்சிக்கு பின், சிறு அடிகளோடு தப்பி விடக் காரணம், இந்த அனுபவங்களால், கற்றுக் கொண்ட எச்சரிக்கை உணர்வே! இச்சம்பவம் தந்த விழிப்புணர்வால், இனி, இப்படி நிகழக் கூடாது என்று முன்னிலும் கவனமாக நடந்து கொள்ள ஆரம்பிக்கிறோம். 
அதுமட்டுமல்ல, 'இந்த அடிக்கு நான் பழக்கப்பட்டு விட்டதால், இனி, இப்படிப்பட்ட அடிகள், என்னை ஒன்றும் செய்யாது...' என்கிற மனத் தயாரிப்பும், நமக்குள் வந்து விடுகிறது.
இதையே, நமக்கு வலி தந்தவர்களுக்கும் பொருத்தி பார்க்க வேண்டும்.
ஒருவர் மீது வருத்தம் எழுகிற போது, கூடவே, சில சமாதானங்களும் எழ வேண்டும். 'போகின்றனர் விடு... அது, அவர்களது சுபாவம்...' என்றும், 'இப்படியே விட்டு விடுவோம்... வருத்தம் ஒரு தரப்பாக இருந்து விட்டு போகட்டும்; இதை கிளறப் போனால், புது வருத்தங்களே புறப்படும்...' என்றும் மனச் சமாதானம் செய்து கொள்ளுங்கள்.
மனித பராமரிப்பில் இல்லாத சில உயிரினங்கள், தங்கள் உடலில் காயம் ஏற்பட்டால், அதற்கு மருந்து தேடுவது இல்லை; தன் உமிழ்நீரையே மருந்தாக்கி, நாக்கால் தடவிக் கொள்கிறது.
இந்த முறை உயிரினங்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் பொருந்தும்!
எதற்கும் மலைக்காதீர்கள்! 
 எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23ஜூலை
2017 
00:00
ஓட்டுனர் உரிமத்தை, உரிய நேரத்தில் புதுப்பிக்க தவறிய, இருவரது வாக்குமூலங்கள் இது...
'என்னை மாதிரியான ஒரு முட்டாளை நீங்க பார்க்கவே முடியாது. 'லைசென்ஸ்' முடிஞ்சு போனதை கவனிக்காம, இத்தனை நாளா, வண்டி ஓட்டியிருக்கேன்; ஏதாச்சும் விபத்து நடந்திருந்தா, என்ன ஆகியிருக்கும்... சே... இனிமே நடையா நடந்து, லஞ்சம் குடுத்து புதுப்பிக்கிறதுக்குள்ளே உயிர் போயிடும்...' 
மற்றொருவரோ, 'லைசென்ஸ் முடிஞ்சதை, எப்படியோ கவனிக்காம இருந்துருக்கேன்; ஒண்ணும் பிரச்னையில்லை... நாளைக்கே லீவை போட்டு, புதுப்பிக்கிற வேலையில இறங்கிட வேண்டியது தான்...'
'பொண்ணு, குதிரா வளர்ந்து நிக்குறா; இவளுக்கு, எப்படி, திருமணம் செய்ய போறேன்னே தெரியல...'
'ரொம்ப கஷ்டமான வேலை... முதலாளி சரியான சிடு மூஞ்சி; சும்மாவே திட்டி தீர்ப்பான்... எப்படா, ஒரு சின்ன தப்பு செய்வேன்னு, கண் கொத்தி பாம்பா, கவனிச்சிக்கிட்டே இருப்பான்; நெனைச்சாலே தலைய சுத்துது...'
'மேடையில், பெரிய பொறுப்பை குடுத்திருக்கீங்க... சரியா நடத்தி, உங்க எல்லார்கிட்டேயும், நல்ல பேர் வாங்குறது, ரொம்ப கடினம்கிற மாதிரி உணர்கிறேன். இப்ப கூட, ஒண்ணும் கெட்டுப் போகல; யாராவது முன் வந்தீங்கன்னா, என் பதவியை, விட்டு கொடுக்க, தயாரா இருக்கேன்; யார் முன் வர்றீங்க...'
- இப்படியெல்லாம், ஒவ்வொன்றிற்கும் மலைக்கிற மனிதர்களை, கடந்து வந்திருப்பீர்கள்.
உளவியலின் அடிப்படையில் சொல்கிறேன்... மலைப்புடன் ஒரு பணியை மேற்கொள்கிற போது, பொறுப்பின் கனத்தை, அதிகமாக்கி விடுகிறோம். அத்துடன், முதல் கட்டமாக, தங்களது சுவாரசியத்தை குறைத்து விடுகின்றனர்; சுவாரசிய குறைவாக ஏற்றுக் கொள்ளப்படும் பணிகள், மேலும் சிரமமானவையாக 
ஆகி விடுகின்றன.
மலைப்பு குணத்தின் இன்னொரு மோசமான அம்சம் என்ன தெரியுமா... சோம்பல் எனும் எதிர்மறை சக்தியை உருவாக்கி விடுவது தான். சுவாரசிய குறைவும், சோம்பலும் மோசமான இரட்டையர்கள்; இந்த இரண்டும் கை கோர்த்தால், வெற்றியையும், பணி நிறைவையும், நிர்மூலமாக்கி விடும்.
நம்மை மலைக்க வைக்கும் எதுவும், நமக்குரிய சவால்கள், நம் திறமைகளை பட்டை தீட்ட வந்த சாணை கற்களே தவிர, நம்மை நசுக்க வந்த சுத்தியல்கள் அல்ல! ஆக, நாம் வாழ்வின் பார்வைகளை, சிறிதளவு மாற்றிக் கொண்டால் போதும்.
எதிர்கொண்டே ஆக வேண்டிய சவால்களை, இது என்னுடைய கடமை என்று விரும்பி ஏற்று செய்தால், சுமையாக இருக்காது. 'கடனே...' என்று செய்தால், மலைப்பு தான்.
மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது, 'நான் கஷ்டப்பட்டு படிக்கிறேன் என்று சொல்லாதீர்கள்; இஷ்டப்பட்டு படிக்கிறேன் என்று சொல்லுங்கள். இப்படி சொன்னால், படிப்பு என்பது சுமையாகவும், மலைப்பாகவும் தெரியாது...' என்பேன். 
இது, மாணவர்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் தான்!
சொல்கிறார்கள்
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01ஆக
2017 
00:00
'கம கம' பற்பசையில் இருக்கு ஆபத்து!

இயற்கை மருத்துவர், நா.நாச்சாள்: இன்று நிறைய பேருக்கு மாங்காய், நெல்லிக்காய், புளியங்காய் உள்ளிட்ட புளிப்பு காய்களை சாப்பிட்டால் பல் கூசுகிறது. ஆரோக்கியமான பற்களின்றி, தேங்காயையே கடித்து சாப்பிட முடியாதவர்கள், கரும்பை எப்படி கடித்து சாப்பிட முடியும்! தவிர, பல் சொத்தை, பல் வலி, ஈறு வலி, ஈறு வீக்கம், பல் ஆட்டம், வாய் நாற்றம், சீழ் வடிதல் என, தொந்தரவுகளுக்கு குறைவே இல்லை.விளம்பரங்களுக்கும், தனிப்பட்ட நிறுவன சூழ்ச்சிக்கும், வியாபார தந்திரத்துக்கும் குழந்தைகளை நாம், காவு கொடுத்து கொண்டிருக்கிறோம். இதற்கு சிறந்த உதாரணம், 25 ஆண்டுகளுக்கு முன் வந்த ஒரு பற்பசை விளம்பரம், 'உடலுக்கு பாலும், பாதமும்... பற்களுக்கு உப்பும், கரித்துாளுமா... என்ன கேவலம்' என்றது. இன்றோ, 'உங்க டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா...' என்கிறது.பற்களை வெண்மையாக்கவும், நன்கு நுரை வரவும், நல்ல மணம், சுவையுடன் இருக்க அதிக ரசாயனங்களால் தயாரிக்கப்படுகின்றன இன்றைய பற்பசைகள். அது மட்டுமின்றி, பயன்படுத்துவோருக்கு ஒருவகை ஈர்ப்பை அளித்து, தொடர்ந்து அதையே உபயோகிக்கும் எண்ணத்தையும் துாண்டுகின்றன.தவிர, பற்பசையில், 'நிக்கோடின்' உள்ளிட்ட பொருட்களும் இருப்பதால், அதை பயன்படுத்துவதால், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் உருவாக காரணமாகிறது. ஒரு சிகரெட்டில் இருக்கும் நிக்கோடினின் அளவை விட, அன்றாடம் ஒருமுறை பயன்படுத்தும் பற்பசையில் அதிக நிக்கோடின் உள்ளது. பற்பசையில் சேர்க்கப்படும் சுவையூட்டிகளால் ஈர்க்கப்பட்ட குழந்தைகள், அதை முழுங்க, நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது.பற்பசைகளை அதிக அளவு எடுத்து கொள்வதாலும், அதிக நேரம் பற்களை துலக்குவதாலும் பற்களின், 'எனாமல்' பாதிக்கப்படுவதுடன், நாக்கின் சுவை மொட்டுக்கள் உணர்விழந்து, நரம்பு மண்டலம் வரை பாதிப்பை உருவாக்குகிறது.வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணம், சீரான உணவு பழக்கமின்மை தான். இதை மாற்றிக் கொள்ளாமல், 'கம கம' பற்பசையை கொண்டு சரி செய்து விடலாம் என்று நினைக்காதீர்கள்.மேலும், வெந்நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளித்தல், நல்லெண்ணெயை வாயில் ஊற்றி கொப்பளித்தல், ஒவ்வொரு வேளை உணவிற்கு பின் வாய் மொத்தத்தையும் நடுவிரலால் தேய்த்து சுத்தப்படுத்துவது என, பற்களை சுத்தப்படுத்த சிறந்த வழிகள் உள்ளன. இது தவிர, வீட்டிலேயே இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட பற்பொடிகளை பயன்படுத்தியும், சுத்தம் செய்யலாம்.புதினாவை காய வைத்து பொடித்து, சரி சமமாக இந்துப்பு சேர்த்தும்; சுக்கு, கடுக்காய், இந்துப்பு சம அளவில் சேர்த்தும்; ஆலமர விழுதுப்பொடி, கருவேலம் பட்டை துாள், லவங்கப்பட்டை துாள், மிளகுத் துாள், சீரகத்துாள், இந்துப்பு ஆகியவற்றை சரி சமமாக சேர்த்து பற்பொடி தயாரித்து பயன்படுத்தலாம்.
மஞ்சள் கரிசலாங்கண்ணி, புதினா, நாவல், கொய்யா, மாந்துளிர்களை காயவைத்து, அவற்றுடன் இந்துப்பு சேர்த்து, மூலிகை பற்பொடி தயாரித்து பயன்படுத்த, பற்கள் உறுதியாகும்; பற்களில் ஏற்படும் தொந்தரவுகளும் சரியாகும்.மாற்றத்தை நோக்கி நாம் மாறாதிருந்தால், விரைவில் வேப்பங்குச்சிகளையும், ஆலங்குச்சிகளையும் அயல்நாட்டு, உள்நாட்டு நிறுவனங்கள், 'ஏசி' போட்ட சூப்பர் மார்க்கெட்டுகளில் சந்தைப்படுத்திவிடும்.

Sunday, July 23, 2017

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம்  செல்வம் செயற்கு (குறள் 375)
பொருள்
செல்வத்தை ஈட்டும் பணியில் (பிஸினஸில்) , கெட்ட காலம் இருந்தால் நல்லன எல்லாம் தீயதாகவே முடியும். நல்ல காலம் இருந்தாலோ கெட்டதும் கூட நல்ல பலன்களைத் தரும்.
திருவள்ளுவரின் திருக்குறளில் ஊழ் என்னும் அதிகாரத்தில் பத்து பாடல்களில் தீவினையின் சக்தியை விதந்து ஓதுகிறார். மேலும் சில குறள்களிலும் நல்வினை தீவினை பற்றிச் செப்புகிறார்.
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகாதம (குறள் 376)

இறைவனுடைய அருள் இல்லாவிடில் கோடிகோடியாய்ப் பொருள் வந்தாலும் அதைக் காப்பாற்ற முடியாது. எவ்வளவுதான் காப்பாற்ற முயன்றாலும் தனக்கு வினைப்படி உரியன அல்லாதவை நிற்காது. உரிய பொருளை வேண்டாமென்று தூக்கி எறிந்தாலும், அதே வினைப்படி, அது அவரிடமே திரும்பி வந்துவிடும்.

திருவள்ளுவரின் நெருங்கிய நண்பரான ஏலேல சிங்கன், திருவள்ளுவர் சொற்படி தான, தருமம் செய்துவிட்டு மிச்சத்தைத் தங்கக் கட்டிகளாக மாற்றி கடலில் எறிந்தபோதும், சுறாமீன் வயிற்றில் ஏலேல சிங்கன் முத்திரைகளுடன் அதைப் பார்த்த மீனவர்கள் அவரிடமே திருப்பிக் கொடுத்தனர்.

வித்யாரண்யர் தங்கம் வேண்டி தவம் செய்த போது லெட்சுமி அவர் முன்னால் தோன்றி இந்த ஜன்மத்தில் உனக்குச் செல்வம் வரும் நல்வினை இல்லை என்றவுடன் அவர் சந்யாசம் வாங்கினார். சந்யாசம் வாங்கினால் அது அடுத்த ஜன்மம் எடுத்ததாகிவிடும். அப் போதுதான் அவருக்குத் தெரிந்தது --- உண்மையான சந்யாசி தங்கத்தைத் தொட முடியாது என்று. உடனே அதை ஆடு மேய்க்கும் இடையர்களிடம் கொடுத்து மாபெரும் விஜயநகர சாம்ராஜ்யத்தைத் தாபித்து முஸ்லீம்களை தென்னாட்டை விட்டு விரட்டினார்.

ஆகவே ஒருவரின் வினைப்படிதான் செல்வம் ‘’வரும்- போகும்’’ என்பது துணிபு. ஆனால் இந்த ஜன்ம நல்வினையால் மேலும் செல்வம் பெறலாம். அதிக தவம் செய்து வினையையும் வெல்லலாம்.

இதே கருத்தை விளக்கும் வேறு சில பாடல்களைக் காண்போம்

நீதிவெண்பாவில் ஒரு பாடல் உள்ளது:
தானே புரிவினையாற் சாரு மிருபயனுந்
தானே யனுபவித்தல் தப்பாது - தானூறு
கோடி கற்பஞ் சென்றாலுங் கோதையே செய்தவினை
நாடிநிற்கு மென்றார் நயந்து
பொருள்:
பெண்ணே! அளவற்ற கோடி கோடி கற்பங்கள் கடந்துவிட்டாலும், ஒருவனை அவன் செய்த வினைகள் எப்படியும் வந்து சேரும் என்று பெரியோர் சொல்லுவர்.  ஒருவன் தானே செய்த வினையினால் வந்து சேரக் கூடிய இரண்டு பயன்களும் (நல்லதும், தீயதும்), செய்தவன் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அது தப்பவே தப்பாது

கற்பம்= பிரம்மாவின் ஆயுட்காலம், ஒரு ஊழி
‘நல்வழி’யும் இதையே சொல்லும்:

தாந்தாமுன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தாமரையோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றாய்
வெறுத்தாலும் போமோ விதி
-- நல்வழி 60

நாலடியார் செய்யுளும் இதை உறுதி செய்யும்:
பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தே தற்செய்த
கிழவனை நாடிக்கொளற்கு

ஒரே கருத்தைப் பல புலவர்கள் சொல்லுவது படித்து ரசிக்கத்தக்கது.
TAGS: நல்வினை, தீவினை, குறள், நல்வழி, நீதிவெண்பா
---சுபம்—