Sunday, July 23, 2017

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம்  செல்வம் செயற்கு (குறள் 375)
பொருள்
செல்வத்தை ஈட்டும் பணியில் (பிஸினஸில்) , கெட்ட காலம் இருந்தால் நல்லன எல்லாம் தீயதாகவே முடியும். நல்ல காலம் இருந்தாலோ கெட்டதும் கூட நல்ல பலன்களைத் தரும்.
திருவள்ளுவரின் திருக்குறளில் ஊழ் என்னும் அதிகாரத்தில் பத்து பாடல்களில் தீவினையின் சக்தியை விதந்து ஓதுகிறார். மேலும் சில குறள்களிலும் நல்வினை தீவினை பற்றிச் செப்புகிறார்.
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகாதம (குறள் 376)

இறைவனுடைய அருள் இல்லாவிடில் கோடிகோடியாய்ப் பொருள் வந்தாலும் அதைக் காப்பாற்ற முடியாது. எவ்வளவுதான் காப்பாற்ற முயன்றாலும் தனக்கு வினைப்படி உரியன அல்லாதவை நிற்காது. உரிய பொருளை வேண்டாமென்று தூக்கி எறிந்தாலும், அதே வினைப்படி, அது அவரிடமே திரும்பி வந்துவிடும்.

திருவள்ளுவரின் நெருங்கிய நண்பரான ஏலேல சிங்கன், திருவள்ளுவர் சொற்படி தான, தருமம் செய்துவிட்டு மிச்சத்தைத் தங்கக் கட்டிகளாக மாற்றி கடலில் எறிந்தபோதும், சுறாமீன் வயிற்றில் ஏலேல சிங்கன் முத்திரைகளுடன் அதைப் பார்த்த மீனவர்கள் அவரிடமே திருப்பிக் கொடுத்தனர்.

வித்யாரண்யர் தங்கம் வேண்டி தவம் செய்த போது லெட்சுமி அவர் முன்னால் தோன்றி இந்த ஜன்மத்தில் உனக்குச் செல்வம் வரும் நல்வினை இல்லை என்றவுடன் அவர் சந்யாசம் வாங்கினார். சந்யாசம் வாங்கினால் அது அடுத்த ஜன்மம் எடுத்ததாகிவிடும். அப் போதுதான் அவருக்குத் தெரிந்தது --- உண்மையான சந்யாசி தங்கத்தைத் தொட முடியாது என்று. உடனே அதை ஆடு மேய்க்கும் இடையர்களிடம் கொடுத்து மாபெரும் விஜயநகர சாம்ராஜ்யத்தைத் தாபித்து முஸ்லீம்களை தென்னாட்டை விட்டு விரட்டினார்.

ஆகவே ஒருவரின் வினைப்படிதான் செல்வம் ‘’வரும்- போகும்’’ என்பது துணிபு. ஆனால் இந்த ஜன்ம நல்வினையால் மேலும் செல்வம் பெறலாம். அதிக தவம் செய்து வினையையும் வெல்லலாம்.

இதே கருத்தை விளக்கும் வேறு சில பாடல்களைக் காண்போம்

நீதிவெண்பாவில் ஒரு பாடல் உள்ளது:
தானே புரிவினையாற் சாரு மிருபயனுந்
தானே யனுபவித்தல் தப்பாது - தானூறு
கோடி கற்பஞ் சென்றாலுங் கோதையே செய்தவினை
நாடிநிற்கு மென்றார் நயந்து
பொருள்:
பெண்ணே! அளவற்ற கோடி கோடி கற்பங்கள் கடந்துவிட்டாலும், ஒருவனை அவன் செய்த வினைகள் எப்படியும் வந்து சேரும் என்று பெரியோர் சொல்லுவர்.  ஒருவன் தானே செய்த வினையினால் வந்து சேரக் கூடிய இரண்டு பயன்களும் (நல்லதும், தீயதும்), செய்தவன் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அது தப்பவே தப்பாது

கற்பம்= பிரம்மாவின் ஆயுட்காலம், ஒரு ஊழி
‘நல்வழி’யும் இதையே சொல்லும்:

தாந்தாமுன் செய்தவினை தாமே அனுபவிப்பார்
பூந்தாமரையோன் பொறிவழியே - வேந்தே
ஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றாய்
வெறுத்தாலும் போமோ விதி
-- நல்வழி 60

நாலடியார் செய்யுளும் இதை உறுதி செய்யும்:
பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தே தற்செய்த
கிழவனை நாடிக்கொளற்கு

ஒரே கருத்தைப் பல புலவர்கள் சொல்லுவது படித்து ரசிக்கத்தக்கது.
TAGS: நல்வினை, தீவினை, குறள், நல்வழி, நீதிவெண்பா
---சுபம்—

No comments:

Post a Comment