Tuesday, July 11, 2017

நோய் பரப்பும் கொசுக்கள்... விரட்ட உதவும் ஆயுர்வேத வழிமுறைகள்!

"ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது" என்ற 'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோ வாசகம் மாதிரிதான், கொசுக்கடியிருந்து தப்புவதும். இண்டு இடுக்கானாலும், மூலை முடுக்கானாலும் சர்வ சுதந்திரமாகப் பறந்து வந்து தாக்கி வதைத்து விடுகிறது. மலேரியா, டெங்கு, சிக்கன் குன்யா, ஜிகா, எல்லோ பீஃவர் என உயிரைப் பறிக்கும் பல நோய்களைச் சாதாரணமாகப் பரப்பிவிட்டுவிட்டுப் போகிறது. அதோடு, புதிது புதிதாக, பெயர் தெரியாத பல மர்மக் காய்ச்சல்கள் உண்டாகவும் கொசுக்களே காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
 கொசுவை அழிக்கலாம்
மருத்துவத்தில் எத்தனையோ முன்னேற்றங்களை நாம் அடைந்திருந்தாலும், கொசுக்களை அழிப்பதோ, அதனால் உண்டாகும் நோய்களைத் தீர்ப்பது என்பதோ இன்றளவிலும் மாபெரும் சவாலான காரியமாகத்தான் இருக்கிறது. புலி, சிங்கம் போன்ற காட்டு விலங்குகளையும் பாம்பு போன்ற விஷ ஜந்துகளையும் கண்டு அஞ்சிய காலம் போய், தம்மாத்துண்டு கொசுக்களை கண்டு பீதி அடையவேண்டியிருக்கிறது. இன்னும் சில நாள்களில் மழைக்காலமும் தொடங்கப்போகிறது. வெறும் தூறல் மழையாக இருக்கட்டும், கொட்டும் பெருமழையாக இருக்கட்டும். சாதாரணமாக தேங்கி நிற்கும் மழைநீர்கூட கோடிக்கணக்கான கொசுக்களுக்குப் புகலிடமாக மாறிப்போகிறது. கொசுக்கடியிலிருந்து தப்பிக்க, மேட், கொசுவத்திச் சுருள், ஸ்பிரே, கொசுவிரட்டி... என எத்தனையோ வழிமுறைகளைப் பின்பற்றுகிறோம்.... இருந்தும் முற்றிலும் தப்பிக்க முடியவில்லை என்பதுதான் யதார்த்தம்.
``கொசுக்களை விரட்ட கெமிக்கல் கலந்த கொசுவிரட்டிகளைப் பயன்படுத்துகின்றனர். இவை, கண்கள், சருமத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்; நுரையீரலும் பாதிப்புக்கு உள்ளாகும். இப்படிப் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் கெமிக்கல் கலந்த கொசுவிரட்டிகளைப் பயன்படுத்துவதைவிட, எளிதாகக் கிடைக்கும் இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தி கொசுக்களை விரட்டலாம்’’ என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன். கொசுக்களிடம் இருந்து பரவும் நோய்களிலிருந்து எப்படி நம்மைத் தற்காத்துக்கொள்வது என்பது குறித்தும் ஆர்.பால முருகன்அவர் விளக்குகிறார்.
ஆயுர்வேதத்தில் உள்ள 8 சிறப்புப் பிரிவுகளில் ஒன்று, விஷ சிகிச்சை. பாம்பு, தேள், கொசு போன்ற விஷ ஜந்துகளின் கடியிலிருந்து காத்துக்கொள்வது எப்படி என்பது குறித்து விரிவாக இந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஆயுர்வேதத்தில் 'அகத தந்திரம்' என்றால், `விஷ சிகிச்சை’ என்று பெயர். விஷத்தினால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுத்து நிறுத்துவது என்று பொருள். (அதாவது, வடமொழியில், `கதம்’ என்றால் முடிந்தது. `அகதம்’ என்பது முடிவதை தடுத்து நிறுத்துவது என்று பொருள். `தந்திரம்’ என்றால் சிகிச்சை அல்லது தீர்க்கும் முறை என்று பொருள்.) இதை `அறுவை சிகிச்சையின் தந்தை’ என்று போற்றப்படும் சுஸ்ருதர் எழுதிய 'சுஸ்ருத சம்ஹிருதை' என்னும் ஆயுர்வேத நூலில் கூறியுள்ளார்.
ஆயுர்வேதத்தில்...
'ஸ்தாவரம்', 'ஜங்கமம்' என்று இரண்டு வகை உள்ளன. 'ஜங்கமம்' என்றால், இடம்விட்டு இடம்பெயர்வது (விலங்கு) என்று பொருள். இதில் நான்கு வகைகள் உள்ளன. `இந்த நான்கு வகைகளில் உலகில் உள்ள ஒட்டுமொத்த உயிரினங்களும் அடங்கும்’ என்கிறது ஆயுர்வேதம். அவை, தொப்புள்கொடி பிரிந்து பிறக்கும் (குட்டி போட்டு பால் கொடுக்கும்) உயிரினங்கள், முட்டையிலிருந்து உருவாகும் உயிரினங்கள், அசுத்தமான அல்லது சுத்தமான நீரில் இருந்து உருவாகும் உயிரினங்கள், மக்கிப்போன பொருள்களில் உருவாகும் உயிரினங்கள்.
தடிப்பு  
இதில் மூன்றாவது வகையான நீரில் உருவாகும் உயிரின வகையில்தான் கொசுக்கள் வருகின்றன. அதில், கிருமி, க்ருமி என இரண்டு வகை உள்ளன. கிருமி என்றால், கண்களால் காண முடியாதவை. க்ருமி என்பது கொசுக்களைப் போன்று கண்களால் காணக்கூடிய விஷ ஜந்து. கொசுவுக்கு ஆயுர்வேதத்தில் 'மசஹா' என்று பெயர். சில வகைக் கொசுக்கள் கடித்தால், அரிப்பு, தடிப்பு, சிவந்த கொப்புளம், வலி போன்றவை மட்டுமே ஏற்படும். ஆனால், குறிப்பிட்ட சில வகை கொசுக்கடிகளால் பரவும் நோயால் உயிரிழப்பேகூட உண்டாகும்.
கொசுக்கள் உருவாவதைத் தடுப்பது எப்படி?
இரண்டு நாள்களுக்கும் மேல் ஓர் இடத்தில் தண்ணீர்த் தேங்கினால், அங்கே இவை உருவாகும். கொசுவை விரட்டுவதோ, அழிப்பது என்பதோ மிகச் சிரமமான காரியம். எனவே, அவற்றை உருவாகாமால் தடுப்பதே சிறந்தது. அதற்கு, வீட்டிலோ, வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலோ, மொட்டை மாடியிலோ தண்ணீர்த் தேங்காமால் பார்த்துக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அசுத்தமான இடம் 
புகை கொசுவுக்குப் பகை!
புகை போடுதல் என்பது கொசுவை விரட்ட மிகச் சிறந்த வழிமுறை.
வேப்பிலை, நொச்சி இலை, யூகலிப்டஸ் இலை போன்றவற்றில் ஏதாவது ஒன்றைக் காயவைத்து வீடு முழுவதும் புகைபோட்டால், கொசுக்கள் வீட்டுக்குள் வராது.
காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால், அதில் இருந்து வரும் புகை அவற்றை எளிதில் விரட்டிவிடும்.
காலை, மாலை வேளைகளில் வீட்டுக்குச் சாம்பிராணிப் புகை போடலாம். இதுகூட கொசுக்களை விரட்ட உதவும்.
தப்பிக்க...
வேப்பிலை, நொச்சி, குப்பைமேனி போன்ற ஏதாவது ஒன்றின் இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து, உடலில் தேய்த்துக்கொள்வதன் மூலம் கொசுக்கடியிலிருந்து தப்பிக்கலாம்.
வேப்ப எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து, உடலில் தேய்த்துக்கொள்ளலாம்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர்விட்டு, அதில் கற்பூரத்தைப் போட்டுவைத்தால், அதில் இருந்து வரும் வாசனைக்கு, கொசுக்கள் வீட்டுக்குள் வராது.
ஸ்பிரே 
வேப்பிலை எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வீடு முழுவதும் தெளிக்கலாம்.
லெமன் கிராஸ் ஆயிலைத் தண்ணீரில் கலந்து, அதைக்கொண்டு தரையைத் துடைத்தால் அந்த வாசனைக்குக் கொசுக்கள் வீட்டுக்குள் வராது.
நில வேம்பு கஷாயம்
ஒரு கைப்பிடி வேப்பிலையை எடுத்து, நான்கு மடங்கு தண்ணீர் ஊற்றி, அதை இரண்டு மடங்காக வற்றவைத்து, அதைக் கஷாயமாக காலை, மாலை இரு வேளை குடிக்கலாம். இந்த நில வேம்பு கஷாயம் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே கிடைக்கும்.நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் படோலாதிக் கஷயாம் வாங்கிக் குடிக்கலாம்.

No comments:

Post a Comment