Monday, July 31, 2017

வருத்தங்களில் திருத்தங்கள்!
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

30ஜூலை
2017 
00:00
நாம், யாரால் நன்றாக வளர்ந்தோமோ, யாரெல்லாம் நமக்கு உதவியாக இருந்தனரோ, யாரெல்லாம், நம் வாழ்க்கையில், நல்ல திருப்பங்களை ஏற்படுத்தினரோ, யாருக்கெல்லாம் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோமோ, அவர்கள் மீதும் கூட, எப்படியோ சில மனக்குறைகள், ஏற்பட்டு விட வாய்ப்பு உண்டு.
இரண்டாம் கருத்தே எழக் கூடாத, தாய் மீது கூட, ஒரு சிலருக்கு வருத்தம் இருக்கிறது. 'என்னைப் பார்த்து, அப்படி ஒரு வார்த்தை சொல்லிட்டார்; என்னை விட, என் உடன்பிறப்புகளுக்கே, சாதகமாக நடந்து கொண்டார்; என்னை நன்கு நடத்திய அளவு, என் பிள்ளைகளிடமோ, என் மனைவியிடமோ நடந்து கொள்ளவில்லை; சொத்து பிரிப்பில், நகை பிரிப்பில், அவர் நடந்து கொண்டது நியாயமில்லை...' என்கிற பாணியிலும், உள்ளூர சில வருத்தங்கள், மனதில் படிந்து விடுகின்றன.
உலகின் உன்னதமான பிறவியாம், தாய் பற்றியே இவ்வளவு எனில், தந்தை மற்றும் மற்ற உறவுகள் பற்றி கேட்கவே வேண்டாம்.
'என் அண்ணன் என்னை படாத பாடுபடுத்தினார்; என் தம்பி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டான்; என் வயதையும் பாராமல், என் தங்கை பேசிய வார்த்தைகளை, என் கட்டை வேகும் வரை மறக்க முடியாது...' என்றெல்லாம், நினைவுப் பேரேட்டை, புரட்டி பார்த்து, நினைவுபடுத்திக் கொண்டு இருப்பவர்களும் உண்டு.
முதலாளி, ஊழியர், பங்குதாரர்கள் மற்றும் வீட்டைச் சுற்றி இருப்பவர்கள் மீது வருத்தம்; தொண்டு நிறுவனத்தில், பொதுக்காரியத்தில் ஈடுபடும் போது, அந்த அமைப்பின் பொறுப்பாளர்கள்; உறுப்பினர்களின் செயல்களில்; சொற்களில் வருத்தம் என்று, இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். 
இதை கூட குறை கூற மாட்டேன்; ஆனால், பழையனவற்றையெல்லாம் கிளறி, அவற்றை வெளிக்காட்டி, சண்டையாக ஆக்கி, உறவை உடைத்து கொள்வோருக்குத்தான், சில திருத்தங்களை சொல்ல விரும்புகிறேன்.
பைபிளில் ஒரு அருமையான வாசகம் வரும்... 'வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்கள்...' என்று!
ஆம்... வருத்தம் என்பது ஒரு வகையில் பெரிய பாரமே!
இது, இனியும் தொடராதிருக்க, என்ன செய்வது என்று பார்ப்போம்...
ஒருவர், நமக்கு செய்த நன்மைகளை மறந்து, அவர்கள் நமக்கு இழைத்த கொடுமைகள், தீமைகள் மற்றும் பாதகங்களை மட்டுமே, கணக்கில் கொள்வதற்கு காரணம், நம் பக்குவமற்ற பார்வையே!
கூட்டி, கழித்துப் பார்க்கையில், அவர்கள் நமக்கு செய்த ஏதோ ஒரு நன்மையே பிரதானம் என்றால், இந்த நன்மைக்காக, மற்ற அனைத்தையும் மறந்து விடலாம்.
இல்லையில்லை, கெடுதலே அதிகம் என்றாலும், நமக்கு, வாழ்வின் மறுபக்கத்தை கற்று தந்தவர்கள் இவர்களே!
தடுக்கி விழுகிற குழந்தையும், சறுக்கி விழுகிற வாகன ஓட்டிகளும், அந்த நிகழ்ச்சிக்கு பின், சிறு அடிகளோடு தப்பி விடக் காரணம், இந்த அனுபவங்களால், கற்றுக் கொண்ட எச்சரிக்கை உணர்வே! இச்சம்பவம் தந்த விழிப்புணர்வால், இனி, இப்படி நிகழக் கூடாது என்று முன்னிலும் கவனமாக நடந்து கொள்ள ஆரம்பிக்கிறோம். 
அதுமட்டுமல்ல, 'இந்த அடிக்கு நான் பழக்கப்பட்டு விட்டதால், இனி, இப்படிப்பட்ட அடிகள், என்னை ஒன்றும் செய்யாது...' என்கிற மனத் தயாரிப்பும், நமக்குள் வந்து விடுகிறது.
இதையே, நமக்கு வலி தந்தவர்களுக்கும் பொருத்தி பார்க்க வேண்டும்.
ஒருவர் மீது வருத்தம் எழுகிற போது, கூடவே, சில சமாதானங்களும் எழ வேண்டும். 'போகின்றனர் விடு... அது, அவர்களது சுபாவம்...' என்றும், 'இப்படியே விட்டு விடுவோம்... வருத்தம் ஒரு தரப்பாக இருந்து விட்டு போகட்டும்; இதை கிளறப் போனால், புது வருத்தங்களே புறப்படும்...' என்றும் மனச் சமாதானம் செய்து கொள்ளுங்கள்.
மனித பராமரிப்பில் இல்லாத சில உயிரினங்கள், தங்கள் உடலில் காயம் ஏற்பட்டால், அதற்கு மருந்து தேடுவது இல்லை; தன் உமிழ்நீரையே மருந்தாக்கி, நாக்கால் தடவிக் கொள்கிறது.
இந்த முறை உயிரினங்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் பொருந்தும்!

No comments:

Post a Comment