Thursday, July 20, 2017

இந்துப்பே சிறந்தது!

இந்துப்பின் பயன் குறித்து விளக்கும், இயற்கை மருத்துவர் நாச்சாள்: உப்பு, மருந்தாக இருந்த காலம் போய், தற்போது உப்பே நோய்க்கு காரணமாக அமையும் சோகமாகி விட்டது. சுத்தம் என்ற பெயரில், கடலில் இருந்து இயற்கையாக கிடைக்கும் உப்பிலிருக்கும் மினரல்களை எடுத்து, வெள்ளை நிறமாக மாற்றி, செயற்கை மினரல்களை புகுத்தி விற்கின்றனர். இதனால், இயற்கை மருத்துவர்கள் பலரும், இந்துப்பைபரிந்துரைக்கின்றனர்.
இந்துப்பு என்பது, மலைப்பகுதியில் இருந்து எடுக்கப்படும் உப்பு. இமயமலை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மலையடிவாரங்களில், இது அதிகம் வெட்டி எடுக்கப்படுகிறது. கடல் உப்பில் சோடியம் குளோரைடு அதிகமாக இருக்கும்; இந்துப்பு, பொட்டாசியம் குளோரைடு அதிகம் நிரம்பியது.
கடல் உப்பு, 20 ஆண்டுகளுக்கு முன், நேரடியாக நமக்கு கிடைத்து வந்தது. இப்போது, அனைத்தும், செயற்கையாக அயோடின் சேர்க்கப்பட்டு வருகிறது. கடலோரப் பகுதிகளில் இருப்போருக்கு அயோடின் அதிகம் தேவைப்படாது. மலைப்பகுதிகளில் இருப்பவர்களுக்கு அயோடின் குறைபாடு இருப்பதால், உப்பில் அயோடின் சேர்க்கப்பட்டது.
அயோடின் குறைவாக இருந்தால், தைராய்டு உள்ளிட்ட பிரச்னை வரும். ஆனால், செயற்கையாக சேர்ப்பதால், உடல் அதன் உறிஞ்சும் தன்மையை இழந்துவிடுகிறது. இதற்கு ஒரே மாற்று இந்துப்பு; கலப்படமின்றி கிடைப்பதும் அது மட்டும் தான்.
நாட்டு மருந்துக் கடைகளில் கற்களாகவும், துாளாகவும் இந்துப்பு கிடைக்கும். கற்கள் எந்தப் பகுதியில் இருந்து கிடைக்கிறது என்பதை பொறுத்து வெள்ளை, வெளிர் சிவப்பு, இளஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கும். கற்களாக வாங்கி, வீட்டில் துாளாக்கி கொள்வது நல்லது.
சித்த மருத்துவத்தில் இந்துப்பின் பயன்பாடு அதிகம். கர்ப்பிணிகள் மற்றும் நீரிழிவுப் பிரச்னை இருப்போர், உப்பை குறைவாக பயன்படுத்த வேண்டும் என மருத்துவர் கூறுவர். 
காரணம், இப்போதுள்ள உப்பில் இருக்கும் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால், இவர்களும் இந்துப்பை தாராளமாகப் பயன்படுத்தலாம். சமையலுக்கு பயன்படுத்தும் போது, சாதாரண உப்பைப் பயன்படுத்தும் அளவை விட, சற்று கூடுதலாக இந்த உப்பை பயன்படுத்த வேண்டும்.
சோடியத்தால் வரக்கூடிய இதய நோய் உள்ளிட்ட பிரச்னை, நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் சுவையின்மை பிரச்னையை இந்துப்பு போக்குகிறது; ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. அயோடினால் வரக்கூடிய தைராய்டு பிரச்னையை தடுக்கிறது.
எலும்பு தேய்மானம் உள்ளிட்ட எலும்புகளில் ஏற்படக் கூடிய பிரச்னைகளை சரி செய்கிறது; பல சிக்கல்களுக்கு காரணமாக அமையும் மலச்சிக்கலில் இருந்து விடுபட வைக்கிறது; உடற்பருமன் ஏற்படாமல் தடுக்கிறது.
மெட்டபாலிசத்தை அதிகப்படுத்துகிறது; மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது; செரிமானத்தை துாண்டுகிறது. மூப்படைவதைத் தள்ளிப் போடுகிறது; சுவாசத்தை சீராக்கிறது; தசைப்பிடிப்பைக் குறைக்கிறது. சிறுநீரகம் மற்றும் பித்தப்பை ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது; சைனஸ் பிரச்னை வராமல் தடுக்கிறது.

No comments:

Post a Comment