Sunday, August 28, 2016

Posted Date : 19:32 (26/08/2016) விதியை மதியால் வெல்ல முடியுமா? thanks vikatan.com

விதியை மதியால் வெல்ல முடியுமா?

                                     
‘விதியை மதியால் வெல்ல முடியுமா?’ என்ற கேள்வி பல காலமாகக் கேட்கப்பட்டு வருகிறது. ‘விதிப்படிதான் வாழ்க்கை’ என்று ஒரு சாராரும்,  ‘மதிப்படிதான் வாழ்க்கை; விதியும் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது. சோம்பேறிகளின் சௌகரியமான தப்பித்தல், விதி’ என்று ஒருசாராரும் சொல்கிறார்கள்.
மூன்றாவதாக, இன்னொரு கோஷ்டி உண்டு. ‘முயற்சியும் இருக்கணும்; அது பலனளிக்க நல்ல விதியும் இருக்கணும்’னு சொல்வாங்க. ‘விதிச்சது நடக்கும்; விதிக்காதது நடக்காது’என்று  தீர்மானமாக சொல்கிறார் ரமண மகரிஷி. 
‘விதியை மதியால் வெல்ல முடியாது. ஜென்மத்தில் குரு; ராமர் வனவாசம். பத்தில் குரு வந்ததால், பரமசிவனும் பிச்சையெடுத்தார். அவதாரப் புருஷர்களே அப்படியென்றால், நாம் எம்மாத்திரம்?’ என்கின்றனர்  ஜோதிட வல்லுநர்கள். 
‘உங்களிடமிருந்து எடுக்கப்பட வேண்டியவையும், உங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டியவையும் என்றோ நிச்சயிக்கப்பட்டுவிட்டன’ என்கிறது, கிறிஸ்துவத்தின் புனித நூலான பைபிள்.
‘இந்த உலகில், இறைவன் கொடுத்ததை எவராலும் பறிக்க முடியாது; இறைவன் மறுத்ததை எவராலும் கொடுக்க முடியாது’ என்கிறது, இஸ்லாம் மிகத் தெளிவாக.
சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ அடிகள் ஜோதிடம் பொய் எனக் கூறி, அண்ணன் செங்குட்டுவனை அரியணையில் அமர்த்துகிறார். அப்படிப்பட்டவரே, சிலப்பதிகாரத்தில், கண்ணகியின் கூற்றாகச் சொல்லும்போது...
‘ஏசா சிறப்பினிசை விளங்கு பெருங்குடி 
மாசாத்து வணிகன் மகனையாகி 
ஊழ்வினை துறத்த சூழ்கலன் மன்னா... 
நின்னகர் புகுந்து இங்கு என் காற்சிலம்பு ஆற்றி நிற்ப...’ 
என்று ஊழ்வினை பற்றிக் குறிப்பிடுகிறார்.
நம் தெய்வப்புலவர் திருவள்ளுவரும்,
‘ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்’ என்கிறார்.
அதாவது, ‘விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ, வேறு ஒரு வழியிலேயோ அது மீண்டும் நம்முன் வந்து நிற்கும். விதியை விட, வேறு எவை வலிமையானவை?’ என்கிறார் வள்ளுவர்.
‘‘வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது’’ என்றும் கூறுகிறார். 
அதாவது, கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம் என்பது பொருள்.
விதியும் மதியும் உடலும் உயிருமாகச் செயல்படுகின்றன. விதி வழியே மதி செல்கிறது.    
挿எழுதிச் செல்லும் விதியின் கை
எழுதி எழுதி மேற்செல்லும்
தொழுது கெஞ்சி நின்றாலும்
சூழ்ச்சி பலவும் செய்தாலும்
வழுவிப் பின்னாய் நீங்கியொரு
வார்த்தை யேனும் மாற்றிடுமோ,
அழுத கண்ணீர் ஆறெல்லாம்
அதிலோர் எழுத்தை அழித்திடுமோ ・என்பது உமர்கய்யாம் பாடல்.
சரி... விதிப்படிதான் வாழ்க்கை என்றால் முயற்சி எதற்கு? மதிப்படிதான் வாழ்க்கை என்றால் கடவுள் எதற்கு?
இந்தக் கேள்விகள் பலருக்கும் வரலாம். நியாயமான கேள்விகள்தான் இவை.
இதற்கெல்லாம் பகவான் கிருஷ்ணர் , மகாபாரதத்தில் விடை சொல்கிறார். 
பாரதப்போர்  முடிந்த பிறகு, கிருஷ்ணரைச் சந்திக்கும் அவரின் பால்ய நண்பரான உத்தவன், தனக்கு எழுந்த சந்தேகங்களைக் கேட்கிறார். அது, eஉத்தவ கீதை’ எனத் தனியாகவே தொகுக்கப்பட்டுள்ளது.
அதில்...
உத்தவன்: “சூதாட்டத்தின்போது  தர்மருக்கு நீங்கள் ஏன் உதவவில்லை?”
கிருஷ்ணன்: “தனக்குப் பதிலாக தன் மாமா சகுனி விளையாடுவார் என்று கூறினானே துரியோதன்... அந்த விவேகம் ஏன் தர்மரிடம் இல்லை?”
உத்தவன்: “ ஆனாலும், தர்மர் உன் பக்தன் அல்லவா? அவருக்கு உதவ வேண்டியது உங்கள் கடமை அல்லவா?” 
கிருஷ்ணன்: “பக்தனா விவேகியா என்றால், பக்தனைவிட விவேகிக்குதான் முன்னுரிமை கொடுப்பேன்!”
 ஆகவே, உங்களின்  அனுபவ அறிவாலும், கல்வி கேள்விகளில் சிறந்தவரிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்ட  பாடங்களாலும் கிடைத்த ஞானத்தைக் கொண்டு, உங்கள் மதி சொல்கிறபடி வாழ்க்கையை நடத்துவதே சிறந்தது. பக்தி மார்க்கம் என்பது துயரங்களில் துவண்டுவிடாமலும், ஏமாற்றங்களால் சோர்ந்துவிடாமலும், eஏற்றதொரு கருத்தை என் மனம் ஏற்றால், எவர் வரினும் அஞ்சேன் நில்லேன்f  என கவியரசு கண்ணதாசன் சொன்னதுபோல் எதையும் ஏற்று, எதிர்கொள்ளும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும்  தருவது.
மதியால் விதியை வெல்ல முடியுமோ, முடியாதோ... ஆனால், எப்பேர்ப்பட்ட விதியையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும்  சாதுர்யம் மதிக்கு உண்டு.

ஒரு கதை சொல்வார்கள். மிகப் பெரும் தனவந்தனாக இருந்த ஒருவன் அடுத்த சில நாட்களில் அனைத்துச் சொத்துக்களையும் இழந்து, மரம் வெட்டிப் பிழைப்பான் என்று அவனது விதி சொல்லியதாம். முதலில் தளர்ந்துபோனாலும், சாதுர்யமாக அவன் ஒரு முடிவெடுத்தான். அதன்படி, அவன் வழக்கம்போல் தனவந்தனாகவே தொடர்ந்தது மட்டுமல்லாமல், முன்பைவிடவும் அதிக செல்வந்தனானான்.
அப்படி என்ன அவன் செய்தான்? மரம் வெட்டிப் பிழைக்க வேண்டும் என்பதுதானே அவன் விதி? அதனால், காட்டுக்குச் செல்வான். அங்கே கண்ட கண்ட மரங்களையும் வெட்டாமல், சந்தன மரம் இருந்தால் மட்டுமே வெட்டுவான். இல்லையென்றால், அன்றைய தினம் பொழுது சாய்வதற்குள் அவன் கண்களில் எப்படியாவது ஒரு சந்தன மரம் தட்டுப்பட்டுவிடும். ஆமாம், மரம் வெட்டிப் ‘பிழைக்க’ வேண்டும் என்பது அவன் விதியாயிற்றே!
அதுவும் ரொம்பவும் சிரமப்பட்டெல்லாம் உடல் வருத்தி வெட்டமாட்டான். இரண்டு அல்லது மூன்று வெட்டுக்கள் போட்டதுமே, மரம் சாய்ந்துவிடும். எடுத்துப் போய் ஊரில் நல்ல விலைக்கு விற்க அவனுக்கு ஆள் பலம் அம்பு எல்லாம் உண்டு!
அப்புறம், அவன் வளத்துக்குக் கேட்க வேண்டுமா என்ன?
ஆகையால், விதி எழுதிச் செல்கிறபடி செல்லட்டும். அதை எதிர்கொள்கிற பக்குவத்தையும், அதிலிருந்து மீள்கிற புத்தி சாதுர்யத்தையும், மதிநுட்பத்தையும் கடவுள் பக்தி நமக்குத் தரட்டும்
எஸ். கதிரேசன்

Thursday, August 18, 2016

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 23



சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி
சென்ற இதழ் கட்டுரையைப் படிச்சுட்டு, திருச்சிலேர்ந்து ஜவஹர்ங்கிறவர் போன் பண்ணியிருந்தாரு. “ஜூஜூக்கு டாய்லெட்டே இல்லியே, அங்கிள்? பாவம், அது எங்கே டூ பாத்ரூம் போகும்?”னு கேட்ட குழந்தை தன்னை ரொம்பவும் இம்ப்ரெஸ் பண்ணிட்டதா சொன்னார். எதிர்காலத்துல அந்தக் குழந்தை, உலகமே போற்றிக் கொண்டாடும்படியான ஓர் உயர்ந்த நிலைக்கு நிச்சயம் வரும்கிற தன்னோட நம்பிக்கையையும், ஆசிகளையும் பகிர்ந்துக்கிட்டார்.

கூடவே, இப்போ ஐ.டி-யில வேலை செய்துட்டிருக்கிற தன் மகன் ராஜீவ் பத்தியும் ஒரு தகவல் சொன்னாரு ஜவஹர். ராஜீவ் சின்ன வயசுல இப்படித்தான் சுட்டித்தனமா ஒரு கேள்வி கேக்க, அது தன் சிந்தனையை ரொம்பவே தூண்டினதா சொன்னார். குழந்தை ராஜீவ் ஏதோ ஒரு பிஸ்கட் பாக்கெட்டைப் பிரிச்சுத் தின்னத் தொடங்கறப்போ, ஜவஹர் யதேச்சையா அந்த பிஸ்கட் பாக்கெட்டை வாங்கிப் பார்த்திருக்காரு. 

அது நாள்பட்டது, எக்ஸ்பயரி டேட் முடிஞ்சு போனதுன்னு தெரியவும், அவர் உடனே ராஜீவைத் தடுத்து, “இந்த பிஸ்கட் வேண்டாம்ப்பா உனக்கு. வேற வாங்கித் தரேன். இது கெட்டுப் போனது! இதைத் தின்னா வயிறு வலிக்கும்”னு சொல்லி அதை வாங்கி, அங்கே இருந்த ஒரு தெருநாய்க்குப் போட்டாராம். அந்த நாய் அந்த பிஸ்கட்டை எடுத்துத் தின்னவும், “கெட்டுப் போனதை நாம திங்கக் கூடாதுன்னா, நாய்க்கு மட்டும் அதைப் போடலாமாப்பா? அதுக்கு வயிறு வலிச்சா பரவாயில்லையா? அது பாவமில்லையா? அதுக்கும் நல்ல பிஸ்கட்டைத்தானே வாங்கிப் போடணும்?”னு ராஜீவ் கேட்டானாம். 

“அப்பத்தாங்க எனக்கு உறைச்சுது. நம்மைப் போலத்தானே மத்த ஜீவராசிகளும்னு இந்தக் குழந்தைக்கு இருக்கிற அறிவு கூட நமக்கில்லையேன்னு தோணிச்சு. அதுவரைக்கும் என்கிட்ட இருந்த டிரெஸ்களில் கந்தலையும் கிழிசலையும் ஏழைகளுக்குக் கொடுத்து, ஏதோ பெரிய சேவை பண்ணிட்டதா மனசுக்குள்ள பெருமைப்பட்டுக்கிட்டிருந்தேன். மகன் கேட்ட இந்த கேள்விக்கப்புறம் அது உறுத்தலாயிடுச்சு. பேன்ட், சட்டைகள் கொஞ்சம் பழசானதும், நல்லா இருக்கிறப்பவே அதை வாஷ் பண்ணி, அயர்ன் பண்ணிக் கொடுக்கிறதை வழக்கமாக்கிக்கிட்டேன்”னார் ஜவஹர்.

வாழ்த்துக்கள் ஜவஹர்! ‘தகப்பன்சாமி’கள் எங்கெங்கும் நிறைந்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து அவ்வப்போது கிடைக்கும் இந்த மாதிரி குரு உபதேசங்களை எந்தவித ஈகோவுமின்றி நாமும் கடைப்பிடிப்போம். போன இதழ்ல சொன்ன மாதிரி, போகிற இடமெல்லாம் அன்புப் பயிரை விதைத்துக்கொண்டே செல்வோம். 

ஏன்னா, மனிதன்கிட்டே இருக்க வேண்டிய பல நல்ல குணங்கள்ல மிக முக்கியமான குணம் அன்புதாங்க. ஆனா, இன்னிக்கு ரெண்டு காலேஜ் பசங்க நீ பெரியவனா, நான் பெரியவனான்னு காட்ட, ஏதோ தாதாக்கள் போட்டி போடுற மாதிரி, கத்தியும், கம்பும், அரிவாளுமா திரியறதையும், பொது இடங்கள்ல ஒருத்தரை ஒருத்தர் வெட்டிக்கிட்டும் குத்திக்கிட்டும் தங்களோட `வீர’த்தைக் காட்ட நினைக்கிறதையும் பார்த்தா, மகா கேவலமா இருக்கு. இவங்களோட இந்தச் செயலால இவங்களுக்கு மட்டும் கேவலம் இல்லே; இவங்களைப் பெத்தவங்களுக்கும் கேவலம்; இவங்களோட குருமார்களுக்கும் கேவலம்; இவங்க படிக்கிற கல்லூரிகளுக்கும் கேவலம்; இந்தச் சமுதாயத்துக்கும் கேவலம்; இவங்களால இந்த நாட்டுக்கே கேவலம்!

ஒரு கல்லூரியில 1500 பேர் படிக்கிறாங்கன்னா, அவங்க அத்தனை பேருமே இப்படி நடந்துக்கிறது இல்லே. ஒவ்வொரு கல்லூரியிலயும் யாரோ ஒரு ஏழெட்டுப் பேர்தான் இப்படி மோசமான முன்னுதாரணமா நடந்துக்கிறாங்க. ஆனா, அவங்களால குறிப்பிட்ட காலேஜ் மொத்தத்துக்கும் கெட்ட பேர். ‘காலேஜ் பசங்களா..? அவங்க எங்கே உருப்புடப் போறாங்க? பொட்டைப் புள்ளைங் 
களை சைட் அடிக்கிறதுக்கும் ஒருத்தனோடு ஒருத்தன் வெட்டி மடியறதுக்கும்தானே அவங்க காலேஜுக்கே போறாங்க! படிச்சு உருப்புடறதுக்கா போறாங்க!”ன்னு ஒரு பெரியவர் மொத்த கல்லூரி மாணவர்களையும் சபிப்பதை என் காது படக் கேட்டு வருந்தினேன். தாங்கள் சிறந்த மாணவர்களாக விளங்குவது மட்டுமல்ல; தகாத வழியில் செல்லும் தங்களின் நண்பர்களையும் திருத்தி, பக்குவப்படுத்தி நல்ல வழியில் கொண்டு வரும் பெரிய பொறுப்பும் மற்ற மாணவர்களுக்கு இருக்கு.

வீரம்கிறது எதிராளியைப் பழிவாங்குறதில இல்லை; அவனை மன்னிக்கிறதுல இருக்கு. இதை, வன்முறையைக் கையில் எடுக்கும் இந்தப் பசங்களுக்கு நாம புரிய வெச்சிருக்கோமா? போற இடமெல்லாம் அன்பை விதைக்கச் சொல்லிப் பழக்கியிருக்கோமா? இனியாவது பழக்குவோமா?

அன்பை விதைக்கும் வழிமுறை அப்படி யொண்ணும் கஷ்டமானதோ, கடைப்பிடிக்க முடியாததோ இல்லை. சின்னச் சின்ன விஷயங்களை நாம தொடர்ந்து பண்ணினாலே போதுமானது. அது என்னன்னு பார்ப்போம்.

* உங்க முகத்தை எப்பவும் உர்ருனு வெச்சுக் காதீங்க. தெரிஞ்சவங்களோ, தெரியாதவங்களோ யாரைப் பார்த்தாலும் லேசா ஒரு புன்சிரிப்பை வெளிப்படுத்துங்க. போலியா நடிக்கிறதுன்னு இதுக்கு அர்த்தம் இல்லை. வெறுமே உதட்டுல சிரிக்காம உள்ளார்ந்து சிரிக்கப் பழகுங்க. உங்க உடம்பும் மனசும் லேசாகுறதை உணர்வீங்க.

 எதிராளியை மதிக்கக் கத்துக்குங்க. ஒவ்வொருவருக்கும் அவங்க சுயமரியாதை ரொம்ப முக்கியம். அதுக்கு மதிப்பு கொடுங்க. தன்னை மதிக்கிறவனைத்தான் எவன் ஒருவனும் மதிப்பான். தவிர, எதிராளியை மதிக்கிறதுனால உங்க கௌரவமோ, அந்தஸ்தோ குறைஞ்சுடாது. அப்படி நினைச்சீங்கன்னா, அது உங்க தப்பு.

 நன்றி சொல்லப் பழகுங்க. ஹோட்டல்ல உங்களுக்கு சர்வ் செய்யற சர்வருக்கு, கை கழுவத் தண்ணி எடுத்துக் கொடுத்த முகம் தெரியா நண்பருக்கு, உங்களை டிராப் பண்ணின ஆட்டோ டிரைவருக்குன்னு யார் யாருக்கெல்லாம் முடியுமோ, தேங்க்ஸ் சொல்லிப் பாருங்க. அதுக்காக ஆட்டோ டிரைவர்கிட்டே பேரம் பேச வேணாம்னு சொல்லலை. எது சரியான தொகையோ அதைத்தான் கொடுப்பேன்னு சொல்றது நம்ம உரிமை. ஆனா, பத்திரமா நம்மைக் கொண்டு வந்து இறக்கினவருக்கு தேங்க்ஸ் சொல்லி வழியனுப்பறது ஒண்ணும் தப்பில்லையே?

 பேசுங்க. தெரிஞ்சவங்ககிட்டே மட்டும்தான் பேசணும்கிறது இல்லை. தெரியாதவங்ககிட்டயும் பேசலாம். உங்க வாட்ச்மேன் பேரு தெரியுமா உங்களுக்கு? அவருக்கு எத்தனை பசங்கன்னு தெரியுமா? நீங்க வேலை செய்யற ஆபீஸ்ல தினமும் உங்களுக்குக் கதவு திறந்து விடுறாரே செக்யூரிட்டி, அவரோட பேர் தெரியுமா? அவருக்கு என்ன வயசுன்னு தெரியுமா? அவர் எங்கே வசிக்கிறார்னு தெரியுமா? கேளுங்க. அவர் கையில பேண்ட் எய்ட் ஒட்டியிருந்தா, ‘என்ன சார் கையில காயம்?’னு கேளுங்க. கால்ல பேண்டேஜ் ஏதாவது போட்டிருந்தார்னா, ‘என்ன சார் ஆச்சு, ஏதாச்சும் ஆக்ஸிடெண்ட்டா?’னு பரிவோடு கேளுங்க. நீங்க கைக்காசு போட்டு அவருக்கு மருந்து, மாத்திரை எதுவும் வாங்கிக் கொடுக்க வேணாம். உண்மையான அன்போடும் அக்கறையோடும் நீங்க கேக்குற ஒரு கேள்வியே அவர் காயத்தை ஆத்திடும். 

பேச எதுவும் இல்லையா, சும்மா ஜாலியா உங்களுக்குத் தெரிஞ்ச ஜோக்கை அவர்கிட்டே பகிர்ந்துக்குங்க. சினிமா பத்திப் பேசுங்க. ஒரு சினிமாவுல நடிகர் வடிவேலு, ஒரு சின்ன ஸ்டாம்ப்பை வெச்சுக்கிட்டு இந்தியாவுலேர்ந்து இங்கிலாந்து வரைக்கும் போய்ப் பேசுவாரே… பேசறதுக்கா டாபிக் கிடைக்காது! பேசுங்க. மனம் விட்டுப் பேசுங்க.

நான் வழக்கமா வாங்குற ரேஷன் கடையில பில் போடுறவர், கஸ்டமர்கள்கிட்டே எப்பவும் கடுகடுன்னுதான் இருப்பார். ஒரு நாள், அவரே பில் போட்டு, அவரே சாமான்களை எடை போட்டுட்டி ருந்தார். ‘பாவம் சார், ஒண்டியாளா சிரமப்படறீங்களே?’ன்னு சொன்னேன். ‘என்ன பண்றதுங்க, என் தலை யெழுத்து!’னு சலிச்சுக்கிட்டார். மறு மாசம் போறப்போ, கையில கட்டு போட்டுட்டிருந்தார். “என்ன சார் ஆச்சு?”னு கேட்டேன்.
“பைக்ல வரும்போது ஸ்லிப்பாகி விழுந்துட்டேன். நரம்பு பிசகிடுச்சு!”ன்னார். “ஃப்ராக்சர் எதுவும் இல்லையே?”ன்னேன் உண்மையான அக்கறையோடு. “எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தாங்க. ஃப்ராக்சர் இல்லைன்னுதான் சொன்னாரு டாக்டர். ஆனாலும், கடுகடுன்னு வலிக்குது!”ன்னார். “பார்த்துங்க சார், உங்களால 5 கிலோ சர்க்கரையை எடை போட்டுத் தர முடியுமா? நீங்க சிரமப்படறதைப் பார்த்தா எனக்குக் கஷ்டமா இருக்கே”ன்னேன். “விடுங்க. வாழ்க்கைன்னு வந்துட்டா நல்லதும் இருக்கும்; கெட்டதும் இருக்கும்; எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டுதான் போகணும்”னு சொல்லிக்கிட்டே எனக்கு வேண்டிய சாமான்களை எடை போட்டுக் கொடுத்தார். 

அடுத்த மாசம் போகும்போது ஞாபகமா, “இப்ப கை வலி பரவாயில்லீங்களா உங்களுக்கு?”ன்னு கேட்டேன். உண்மையிலேயே நெகிழ்ந்துட்டார். “இந்தக் காலத்துல யாருங்க இப்படியெல்லாம் ஞாபகம் வெச்சுக்கிட்டுக் கேக்கறாங்க. மனுஷனுக்கு மனுஷன் அன்பு செலுத்தறதே அபூர்வமா யிடுச்சே!”ன்னு தன் குடும்பக் கதை, சொத்துத் தகராறு, பங்காளி சண்டைன்னு என்னென்னவோ மனம் விட்டுப் பேசினாரு. என்னால முடிஞ்ச வரைக்கும் அவர்கிட்டே ஆறுதலா நாலு வார்த்தை பேசினேன். அவருக்குச் சந்தோஷமான சந்தோஷம். இதனால எனக்கென்ன லாபம்னா, அதுக்கப்புறம் எப்போ நான் ரேஷன் கடைக்குப் போனாலும், எவ்வளவு கூட்டம் இருந்தாலும், முதல்ல என்னை கவனிச்சு அனுப்பிடுவாரு. எடையும் சுத்தபத்தமா இருக்கும்.

சுய லாபம் கருதித்தான் அடுத்தவங்களை மதிக்கணும், அடுத்தவங்க கஷ்டத்தைக் காது கொடுத்துக் கேக்கணும்னு சொல்ல வரலை. உண்மையான அக்கறையோடு எதிராளியை விசாரிச்சா, அதுக்கு அவங்க காண்பிக்கிற எதிர்வினை அத்தனை அழகா இருக்கும்னு சொல்ல வரேன்; உங்களுக்காக அவர் எதுவும் செய்வார்னு சொல்றேன்.

ஒருத்தரைப் பார்த்ததுமே இவர் இப்படித்தான், இவர் யோக்கியம் இல்லை, டிராஃபிக் கான்ஸ்டபிளா, இவர் மாமூல் வாங்குவார்னு நீங்களா ஒரு முடிவுக்கு வந்துடாதீங்க. உண்மை என்னன்னு தெரியாமத்தான் நாம பல நேரங்கள்ல இது மாதிரியான முன்முடிவுகளை எடுத்துடறோம். “ஒருத்தரை இவர் யார், எப்படிப்பட்டவர்னு எடை போடுறதுல இறங்கிட்டோம்னா, அப்புறம் நமக்கு அன்பு செலுத்தவே நேரம் இல்லாம போயிடும்”னு அன்னை தெரசா சொன்னதை இங்கே ஞாபகப்படுத்த விரும்பறேன்.

ஒருவரோடு பேசுறதுக்கு முன்னாடி, அவர் நிலையில் இருந்து கொஞ்சம் பாருங்க. அவருடைய மனநிலை என்ன, அவரோட பிரச்னை என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு, உண்மையான அக்கறையோடு அவரை அணுகினீங்கன்னா அவருக்கும் சந்தோஷம்; உங்களுக்கும் சாதகம்!

கவனம் வெச்சுக்குங்க, இதையெல்லாம் நீங்க செய்யறது அவங்களோட நல்லதுக்காக மட்டுமில்லே; உங்களோட சந்தோஷத்துக்காகவும்தான்!

இதை எழுதிட்டிருக்கும்போதே, வாட்ஸப்பில் எனக்கு வந்த பத்து செகண்ட் கதை ஒண்ணைப் பகிர்ந்துக்க விரும்பறேன். ஒரு பணக்காரருக்கு காலையில ஒரு போன் வந்ததாம். “சார், நாங்க முதியோர் இல்லத்துலேர்ந்து பேசறோம். உங்க செல்ல லாப்ரடார் நாயை காணோம்னு விளம்பரம் கொடுத்திருந்தீங்களா?” “ஆமாம்”னார் பணக்காரர். “கவலைப்படாதீங்க சார், அது இங்கேதான் உங்க அம்மாவோடு விளையாடிக்கிட்டிருக்கு!”

இது எப்படி இருக்கு? தாய் மீதே அன்பு இல்லாம முதியோர் இல்லத்துல கொண்டு போய்ச் சேர்த்தவனுக்கு நாய் மீது மட்டும் அன்பு எங்கிருந்து வந்தது? யோசிச்சுப் பாருங்க, அது நாய் மீதான அன்பு இல்லை. அதன் விலை மீதான கவனம்; தனது அந்தஸ்தின் மீதான அக்கறை!

எதையும் முழுமையாக செய்யுங்கள்! by- முனைவர் இளசை சுந்தரம் from dinamalar


Advertisement
எந்த ஒரு செயலையும் முழுவதுமாக செய்வது வெற்றிக்கு அடிப்படை. ஒரு நிறுவனத்தில் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் நேர்முகம் நடந்தது. வந்திருந்த பலரில் அடிப்படை தேர்வு முறையில் பத்து பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்குள்ளும் இருவரை தேர்ந்தெடுக்க வேண்டி நிறைவாக ஒரு போட்டி நடந்தது. நிர்வாக மேலாளர் சொன்னார், 'உங்கள் ஒவ்வொருவரிடம் ஒரு தாள் கொடுக்கப்படும். அதில் நீங்கள் உடனே செய்ய வேண்டிய பத்து சிறு சிறு வேலைகள் இருக்கும். பத்து நிமிடங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும்' என்றார். ஒவ்வொருவர் கையிலும் ஒரு தாள் கொடுக்கப்பட்டது. அதில், உங்கள் தாய், தந்தையின் பெயரை எழுத வேண்டும். வரவேற்பு அறையில் எத்தனை பேர் அமர்ந்திருக்கிறார்கள் என்று எண்ணிச் சொல்ல வேண்டும். அதில் எத்தனை பேர் வெள்ளை உடை அணிந்திருக்கிறார்கள்? அருகில்
நிர்வாகியின் அறையில் இருக்கிற புத்தக அலமாரியில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து தரவேண்டும். இந்த ரீதியில் பத்து வேலைகள் குறிப்பிட்டிருந்தன. பத்து நிமிடங்களுக்குள் யாரும் அந்த வேலைகளை செய்து முடிக்க முடியவில்லை. ஆனால், அவர்கள் பத்தாவது வேலையை படித்திருந்தால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காது. பத்தாவது என்ன வேலை தெரியுமா? 'இந்த பேப்பரை கிழித்து குப்பை கூடையில் போட்டு விடுங்கள். நீங்கள் முதலில் செய்ய வேண்டிய வேலை இதுதான்'.பரபரப்பும், பதட்டமும், கவனக்குறையும் ஒரு வேலையை முழுமையாக செய்யவிடாமல் தடுத்து விடுகின்றன. ஏனோதானோ என்ற மனப்பான்மை நம்மை ஏதேனும் படுகுழியில் தள்ளிவிடும்.முழுமையை நோக்கி முழுமை என்பது மேதைகளின் குணமாகும். மேதைமை என்பது அளவற்ற அக்கறை எடுத்துக்கொள்ளும் ஒரு கலை. பொதுவாக காணப்படும் பிரச்னை என்னவென்றால், மோசமான வேலைகளை செய்துவிட்டு நல்ல பயனை எதிர்பார்க்கிறார்கள். மலிவு விலையென்று சொல்லி மக்கள் தலையில் கட்டப் பார்க்கிறார்கள்.
'கிட்டத்தட்ட' என்பது ஒரு அபாயகரமான வார்த்தை. கிட்டத்தட்ட, ஏறக்குறைய என்ற வார்த்தையால் வெற்றி படியில் இருந்து வீழ்ந்த மனிதர்கள் எவ்வளவு தெரியுமா? வீழந்த நிறுவனங்கள் எவ்வளவு தெரியுமா?ஒரு இளைஞன் ஒரு பிரமுகரின் சிபாரிசு கடிதத்தோடு ஒரு நிறுவனத் தலைவரை சந்தித்து வேலை கேட்டான். 'வேலை கொடுத்தால் சரியாக செய்வாயா?' என கேட்டார். 'கிட்டத்தட்ட சரியாக செய்வேன் என்று நினைக்கிறேன்' என்று பதில் சொன்னான் அந்த இளைஞன். 'கிட்டத்தட்ட உன்னைவிட முழுமையாக செய்கிறவன் தான் எனக்கு வேண்டும். நீ போகலாம்' என்றார் நிறுவனத்தின் தலைவர். எமர்சன் கூறுகிறார், 'ஒரு மனிதன் அடுத்தவரை விட ஒரு நல்ல எலிப்பொறி செய்பவராக இருந்தால், அவர் நடுக்காட்டுக்குள்ளே வசிப்பவராக இருந்தாலும் பலர் அவரை தேடிச் செல்வார்கள்'. ஒரு நிறுவனத்திற்கு தன்னம்பிக்கை சொற்பொழிவாற்ற நான் சென்றிருந்தபோது, அங்கு அதன் உரிமையாளர் அறையில் எழுதப்பட்டிருந்த வாசகம் என்னை பெரிதும் சிந்திக்க வைத்தது.'இங்கே மிகச்சிறந்தவை மட்டும் நல்லவை'
இதுதான் நமக்குள் ஒளிர வேண்டும்.

கவனக்குறைவால் ஆபத்து : பல ஆண்டுகளுக்கு முன் லண்டனில் உயிர் காக்கும் படகொன்றில் அடிப்பகுதியில் கசிவு ஏற்பட்டது. அதில் மூழ்கிச் சிலர் இறந்தனர். அந்த படகை உருவாக்கியவர்கள் கவனக்குறைவாக ஒரு சுத்தியலை அடிப்பகுதியில் விட்டு விட்டார்கள். படகின் அசைவில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த சுத்தியல் அடிப்பலகையை சேதப்படுத்தியிருக்கிறது.
நமது ஊர்களிலேயே சில சம்பவங்களை பார்க்கிறோம். நோயாளிக்கு வயிற்றில்
அறுவைசிகிச்சை செய்த மருத்துவர், கத்திரிக்கோலை நோயாளியின் வயிற்றுக்குள்ளேயே பத்திரப்படுத்தியிருந்த செய்தி நாம் படித்ததுதானே! வலது காலில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை இடது காலில் செய்த புண்ணியவான்களும் உண்டு. வலிக்கிற பல்லை விட்டு வலிக்காத பல்லை பிடுங்கிய பலசாலி மருத்துவர்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.
வெற்றிக்கு அடிப்படை தேவைகளில் ஒன்று, செய்வதை முழுமையாக செய்யும் ஆவல். ஒரு பெரிய பணியை செய்யும் அதே ஆர்வத்தை, அக்கறையை சிறிய காரியத்திலும் காட்டுவது. வெற்றியாளன் எதையும் சாதாரணமாக செய்வதில் திருப்தி அடைவதில்லை. சரியாக செய்வதில், நேர்த்தியாக செய்வதில் மட்டுமே திருப்தி அடைகிறான்.

தரத்திற்கு உத்தரவாதம் : தரத்துக்கு நிகரான விளம்பரம் வேறு எதுவும் கிடையாது. சில நிறுவனங்களின் உற்பத்தி பொருட்கள் நம்பகத்தன்மை பெற்றிருப்பதற்கு இதுதான் காரணம். கிரஹாம், டாம்பியன் போன்ற பெயர்கள் ஒரு காலத்தில் தொழில் திறமைக்கும், சந்தேகமற்ற தரத்திற்கும் உத்திரவாதமாக திகழ்ந்தவை.

கிரீன் வீச்சில் உள்ள கடிகாரம் கிரஹாமினால் உருவாக்கப்பட்டது. அவரும் டாம்பியனும், தங்களுடைய தொழில் நுட்பத்திற்காகவும், போலிகளை உற்பத்தி செய்து விற்காமல் இருந்ததற்காகவும் உலகப்புகழ் பெற்றனர்.இப்போது ஒரு பொருளை உண்மையானது என்று நம்பி வாங்க முடிகிறதா?உயரமான இடங்களில் இருந்து பாதுகாப்பாக கீழிறங்க பயன்படும் 'பாராசூட்' வாங்க ஒருவர் கடைக்கு போனார். ஒரு பாராசூட் பையை எடுத்துக்கொண்டு 'ஆபத்து நேரத்தில் உயரத்தில் இதை விரித்தால் சரியாக விரியுமா?' என கேட்டார். 'கவலையே படாதீங்க! அப்படி சரியாக விரியாமல் போனால் கொண்டு வாருங்கள். மாற்றித் தருகிறேன்' என்றார் கடைக்காரர். மாற்றி வாங்கிக்கொள்ள வாங்கிய மனிதர் இருந்தால்தானே!

வேலையில் முழுமை : 'பாகுபலி' படத்தில் 'சிவலிங்கத்தின் மீது நுாறு குடம் தண்ணீர் ஊற்றினால் உச்சி குளிரும். உன் மகனுக்கு நல்லது' என்று தாய்க்கு ஒரு மகான் ஆலோசனை தருவார். அவளும் ஒவ்வொரு குடமாக நீரை சுமந்து வந்து ஊற்றிக்கொண்டிருப்பாள். தாய் சிரமப்படுவதை பொறுக்க முடியாத மகன், சிவலிங்கத்தை அப்படியே பெயர்த்தெடுத்து ஓர் அருவியின் கீழே வைத்து விடுவான். இப்போது எப்போதும் அபிஷேகம்.ஒரு அற்புதமான வேலையை முழுமையாக செய்து முடித்த பிறகு, எவ்வளவு உயர்வான பெருமிதமான உணர்வு கிடைக்கிறது தெரியுமா? புத்துணர்வு சுரப்பதை புதிய பாதைக்கு வழி தெரிவதை உணரும்போது ஏற்பட்ட சிலிர்ப்பை அனுபவித்திருக்கிறீர்களா? படைப்பாளர்களுக்கும் இது பொருந்தும். சிறந்த முழுமை பெற்ற படைப்புகளே சிகரங்களை தொட்டிருக்கின்றன. முழுமைக்குள் மூழ்கிய இசைவாணர்களே முதல் வரிசையில் இருக்கிறார்கள். முழுத்திறனை காட்டியவர்களே விளையாட்டில் வித்தை புரிந்திருக்கிறார்கள்.

வழிகாட்டுதல் : நாதஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை, வயதான காலத்தில்கூட அதிகாலையில் நாதஸ்வரம் வாசித்து சாதகம் செய்வாராம். 'இந்த வயதிலும் இது தேவையா?' என்று கேட்டபோது, 'தேவைதான். ஒருநாள் சாதகம் செய்யாமல் கச்சேரிக்கு போனால் சின்ன சின்ன குறைபாடுகள் எனக்கே தெரியும். இரண்டு நாட்கள் சாதகம் செய்ய வில்லை என்றால், என்னை போன்ற வித்வான்களுக்கு தெரியும். மூன்றுநாட்கள் சாதகம் செய்யாமல் போனால் விஷயம் புரிந்து ரசிகர்களுக்கு அது தெரிந்துவிடும். கலைஞன் என்பவன் தொடர்ந்து சாதகம் செய்து கொண்டேயிருக்க வேண்டும்' என்றாராம். இன்றைய தலைமுறைக்கு இது ஒரு வழிகாட்டுதல்.
அரைகுறையாக கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டே ஒருவர், 'நான் அமிர்தவர்ஷினி பாடினால் மழை வரும். நீலாம்பரி பாடினால் துாக்கம் வரும். புன்னகவராளி பாடினால் பாம்பு வரும்' என அலட்டிக் கொண்டிருந்தார். கேட்டு கொண்டிருந்தவர், 'நீங்கள் பாடும்போது சில நேரங்களில் கல் வருதே! அது என்ன ராகம்?' என்று கேட்க, பாடியவர் ஓடியே விட்டார்.

செயலில் முழுமை : ஆதரித்தால் முழுமையாக ஆதரியுங்கள். எதிர்த்தால் முழுமையாக எதிர்த்திடுங்கள். விட்டு கொடுத்தால் முழுமையாக விட்டுக்கொடுங்கள் சமாதானம் என்றால் முழுமையாக சமாதானம் செய்யுங்கள். தியானம் செய்தால் முழுமையாக செய்யுங்கள்
ரசித்தால் முழுமையாக ரசியுங்கள் . விளையாடுவதானால் முழுமையாக விளையாடுங்கள்
முழுவதுமாக செய்வதற்கும் முழுமையாக செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. நாம் எல்லாவற்றையும் முழுவதுமாக செய்துவிட முடியாது. ஆனால், எடுத்துக்கொண்ட ஒரு செயலை முழுமையாக செய்ய முடியும். பிறகென்ன! நீங்களும் வாகை சூடலாம்.

Monday, August 15, 2016

உங்கள் செல்போனுக்குள் ஒரு வில்லன் ! - நன்றி: ஆனந்த விகடன் - 27 Jan, 2010

நன்றி: ஆனந்த விகடன் - 27 Jan, 2010

உங்கள் செல்போனுக்குள் ஒரு வில்லன் !
                                                        -         வினோத்குமார்,ப்ரீத்தி செய்யது இபுராகிம்



http://img.vikatan.com/av/images/white_spacer.jpg

முன் குறிப்புஇந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் அனைத்துச் சம்பவங்களும் உண்மையே. சம்பந்தப்பட்டவரின் நலன் கருதி பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டு இருக்கின்றன!
வரதராஜன், வயது 55, சென்னை: "என் மகனுக்கு தம், தண்ணின்னு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. ரோட்ல பொம்பளைப் பிள்ளை களைக்கூட நிமிர்ந்து பார்க்க மாட்டான். ஜெம் ஆஃப் தி ஜெம். ஆனா, திடீர்னு என்ன பிரச் னைன்னு தெரியலை... இந்த செமஸ்டர்ல நாலு அரியர்ஸ். என்ன கேட்டாலும் பதில் சொல்லாம ரூமுக்குள்ள போய் கதவைச் சாத்திக்குறான்!"
சியாமளா, வயது 43, கோவை: "எங்க காம்பவுண்டுக்கே ராஜாத்தி என் மகதான். ரொம்ப விவரமான பொண்ணு. லவ் லெட்டர் நீட்டுற பையன்கிட்டகூடப் 10 நிமிஷம் அட்வைஸ் பண்ணி, தன்னோட ஃப்ரெண்ட் ஆக்கிக்குவா. ஆனா, கொஞ்ச நாளா யார்கிட்டயும் மனசு விட்டுப் பேச மாட்டேங்குறா. எதைக் கேட்டாலும் எரிஞ்சு எரிஞ்சு விழுறா!"
பழனியப்பன், வயது 64, சிறுகுடி: "வயல் வேலைக்குக் கூடமாட ஒத்தாசைக்கு வந்துட்டு இருந்தான். ஒத்தைப் பய நமக்குப் பிறவு தோட்டந் துரவைப் பாத்துக்கிடுவான்னு நம்பிட்டு இருந்தேன். இப்பம் கொஞ்ச நாளா கண்ணுல தட்டுப்பட மாட்டேங்குறான். ராத்திரி முச்சூடும் அறைக்குள்ளாற மினுக் மினுக்னு வெளக்கு எரியுது. பக்கத்துல போய்ப் பார்த்தா அவன் அசந்து தூங்கிட்டு இருக்கான். என்னமோ நடக்குது!"
இது ஏதோ ஒரு சில பெற்றோர்களின் கவலை அல்ல. பல லட்சம் பெற்றோர்களை ஆட்டிப்படைக்கும் விடை தெரியாத கேள்வி. அந்த 'என்னமோ நடக்குது' என்பது என்ன? சிகரெட், ஆல்கஹால் போன்ற போதை வஸ்துகளுக்கு அடிமையாகாத உங்கள் மகனோ, மகளோ செல்போனுக்கு அடிமையாகி இருக்கலாம் என்று நீங்கள் கற்பனையாவது செய்திருப்பீர்களா?
'செல்போன்!' ஆம், உள்ளங்கைக்குள் உலகத்தை அடக்கும் அந்த வஸ்துவுக்குத்தான் தெரிந்தோ தெரியாமலோ... அறிந்தோ அறியாமலோ உங்கள் டீன்-ஏஜ் குழந்தைகள் 'அடிக்ட்' ஆகியிருக்கும் அபாயம் இருக்கிறது. ஒரு நாளில் எத்தனை மணி நேரங்கள் உங்கள் பிள்ளைகள் செல்போனில் செலவழிக்கிறார்கள் என்று கணக்கிட்டுப் பாருங்கள்! விடிய விடிய மெசேஜ், நள்ளிரவு ரகசிய கிசுகிசு, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மெசேஜோ அழைப்போ வராவிட்டால் பரிதவிப்பு, தனது செல்போனை வேறு எவரேனும் எடுத்துவிட்டால் பதறி ஓடி வந்து கைப்பற்றத் துடிக்கும் பரபரப்பு! தகவல் தொடர்புச் சாதனம் என்பதைத் தாண்டி, செல்போன் ஒரு மாணவனின் வாழ்வை எந்தளவு ஆக்கிரமித்திருக்கிறது? வாழ்வின் எந்த நிகழ்வையும் செல்போனுடன் தொடர்புபடுத்திக்கொள்ளும் வாழ்க்கை முறை. அப்பா, அம்மா வாரக் கணக்கில் ஊருக்குப் போனால்கூட அலட்டிக்கொள்ளாத பலர், ஒரு மணி நேரம் செல்போன் கையில் இல்லாவிட்டால் உயிரைப் பறிகொடுத்தது போலாகிவிடுகிறார்கள். சில உண்மைச் சம்பவங்களைப் பார்த்துவிட்டு, மேலும் தொடர்வோம்...
மெசேஜ் 1:
விடாமல் 'ஆட் ஆன் கார்ட்'தோழியுடன் பேசிக்கொண்டு இருந்ததில் மொபைல் சார்ஜ் அவுட். ஆனாலும், விடாமல் சார்ஜரில் மாட்டியபடி பேச்சுவார்த்தையைத் தொடர்ந்திருக்கிறான் விவேக். கால் மணி நேரம் போலக் கடந்திருக்கும். திடீரென்று 'டப்' என்று சின்ன வெடிச் சத்தம். தொடர்ந்து விவேக்கின் 'அம்மாரரர' என்ற அலறல். வகுப்பின் டாப் 3 மாணவர்களுள் ஒருவனான விவேக்குக்கு இன்று இரண்டு காதுகளும் கேட்காது. சமீபத்தில்தான் நாலரை லட்ச ரூபாய் வருட சம்பளத்தில் விவேக்கை ஒரு எம்.என்.சி நிறுவனம் வேலைக்கு அமர்த்தியிருந்தது. ஆனால், அந்நிறுவனத்தின் மருத்துவத் தேர்வில் விவேக் தேறாததால், இன்று அவன் அன் எம்ப்ளாய்ட். இப்போதும் காதில் இயர் போனுடன்தான் வளைய வருகிறான் விவேக். ஆனால், அது ஹியரிங் எய்டுக் கான இயர் போன்!
மெசேஜ் 2:
கோவையின் பெண்கள் கலைக் கல்லூரி ஹாஸ்டல் அறை அது. நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு சுசீலாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஆரம்பித்தன. சுசீலாவை அரை நிர்வாணப்படுத்தி, அவள் உடல் முழுவதும் கேக் தடவுகிறார்கள். தலைகால் புரியாத சந்தோஷத்தில் சுசீலாவின் தோழிகளும் 'பிறந்த நாள்' உடை 'அணிந்து' ஆட்டம் போட்டிருக்கிறார்கள். மலரும் நினைவுகளுக்காக மறக்காமல் செல்போன் ¨ட்டிங்கும் நடந்திருக்கிறது.
சில மாதங்களுக்குப் பிறகு தோழிகளுக்குள் ஏதோ மனஸ்தாபம் எழ, அந்த வீடியோ கல்லூரிக்குள் 'நீலப்பல்' காட்டிச் சிரித்திருக்கிறது. இப்போது இணையம் வரை அந்தப் பிறந்த நாள் கொண்டாட்டம் உலா வந்துகொண்டு இருக்கிறது. கல்லூரி நிர்வாகத்தின் கவனத்துக்கும் இந்த விஷயம் போக, கல்லூரி வளாகத்தில் செல்போனைத் தடை செய்திருக்கிறார்கள். ஆனாலும், வளாகத்தில் சத்தமில்லாமல் வைப்ரேட் மோடில் அதிர்ந்துகொண்டுதான் இருக்கின்றன செல்போன்கள்!
மெசேஜ் 3:
கிளாஸ் டாப்பர் இல்லையென்றாலும் பி.., படிக்கும் ரகு, நல்ல ஆவரேஜ் வைத்திருக்கும் மாணவன். இரண்டு வருட காலேஜ் வாழ்க்கையில் அரியரே வைத்திருக்காதவன். திடீரென்று அந்த செமஸ்டரின் அத்தனை பேப்பரிலும் அரியர். 'என்னடா பிரச்னை?' என்று விசாரித்தால், அவன் செல்போன் இன்பாக்ஸைக் காட்டுகிறான். exam tomorrowma... padika pogattumaa? தன் காதலியிடம் ரகு கேட்க, அதற்கான ரிப்ளை இது, Ennai vida exam mukkiyama pocha... sari poo en feelings nee purinjukalaila... ithellaam naan yaarkita share pannika Mudiyum? அதற்குப் பிறகான மெசேஜ்கள் எல்லாம் 'R' ரகம். 'செக்ஸ்டிங்' எனப்படும் அப்பா -அம்மா மெசேஜ் விடு தூது அது. பகலில் சாதுப் பூனையாக வளைய வரும் ரகுவின் காதலிக்கு இரவுகளில் இந்த விளையாட்டுகளில்தான் ஆர்வம். வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே பொதுஇடங்களில் காதலியைப் பார்க்கும் ரகுவுக்கு அந்த இரவு போதை தேவையாக இருந்திருக்கிறது. விளைவு... ரகு இப்போது அரியர்ஸ் இன்ஜினீயர்!
மெசேஜ் 4:
கீதாவுக்கு ஒரு பழக்கம். வீட்டிலிருந்து கல்லூரிக்கு அரை மணி நேரப் பேருந்துப் பயணம். பஸ்ஸில் ஏறி அமர்ந்த உடனேயே செல்போனில் கேம்ஸ் விளையாட ஆரம்பித்துவிடுவாள். ஒரு முறை தன்னை மறந்து கேம்ஸ் விளையாடிக்கொண்டு வர, டிக்கெட் எடுக்கவே மறந்து விட்டாள். கல்லூரி நிறுத்தத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டர் டிக்கெட் கேட்க, அவள் பேந்தப் பேந்த விழிக்க, கண்டக்டரின் நாராச வசவுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மொத்தக் கல்லூரி மாணவர்கள் முன் அவமானம். இதற்குப் பின் அவளை கல்லூரியில் 'வித் அவுட்' என்றே அனைவரும் அழைக்க, டி.சி. வாங்கிக் கொண்டு கல்லூரியைவிட்டே சென்றுவிட்டாள் கீதா. இப்போது பேருந்திலும் செல்வதில்லை. செல்போனில் கேம்ஸும் விளையாடு வதில்லை.
மெசேஜ் 5:
சில மொபைல்களில் ஆண், பெண், கிளி, கார்ட்டூன் என்று விருப்பப்பட்ட மாதிரி நம் குரலை மாற்றிப் பேசும் வசதி இருக்கிறது. அந்த வசதியைப் பயன்படுத்தி, தனது நெருங்கிய நண்பன் முகுந்திடம் பெண்ணின் குரலில் பேசியிருக்கிறான் ராம். 'இன்னிக்கு நீ ரொம்ப ஹேண்ட்சமா இருக்கே', 'நான் யார்னு தெரிஞ்சா பெப் இருக்காது', 'இன்னிக்கு கேன்டீனுக்கு பச்சை கலர் சுடிதார்ல வருவேன். பார்த்தாலும் சிரிக்காதே. நானும் உன்னைக் கண்டுக்க மாட்டேன்!' என்றெல்லாம் தினமும் ஒரு பிட்டாகப் போட்டிருக்கிறான் ராம். தன்னிடம் பேசுவது பெண் தான் என்று நினைத்து, உள்ளம் மகிழ்ந்து புளகாங்கிதம் அடைந் திருக்கிறான் முகுந்த். ஒரு கட்டத்தில் முகுந்த சின்சியராகவே அந்த கற்பனைக் காதலியைக் காதலிக்கிறான், அவளோடு மனதள வில் ஒரு வாழ்க்கை வாழ்கிறான் என்று விபரீதம் உறைத்திருக்கிறது ராமுக்கு. அதற்கு மேலும், அந்தக் காதல் கதையை நீட்டிக்க விரும்பாமல், முகுந்திடம் உண்மையைச் சொல்லியிருக்கிறான் ராம். ஆனால், 'ராம் பொறாமையில் பொய் சொல்கிறான், தன் காதலியை அபகரிக்கத் திட்டமிடுகிறான்' என்றெல்லாம் கற்பனை களை ஓடவிட்டு, மனச் சிதைவுக்கு ஆளாகிவிட்டான் முகுந்த். இன்று எங்கோ ஒரு மருத்துவமனையின் அடைக்கப்பட்ட சுவர்களுக்குள் சங்கிலி பிணைக்கப்பட்டு, உள்ளங்கையில் அழுத்தி அழுத்தித் தன் 'காதலி'க்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டு இருக் கிறான் முகுந்த்!
இவையெல்லாம் மிகச் சில சாம்பிள் சம்பவங்கள்தான். இன்னமும் நாம் எதிர்பார்க்கவே முடியாத விபரீத எல்லைகளுக்கு இளைஞர்களை இழுத்துச் செல்கிறது செல்போன் எனும் விஞ்ஞான அதிசயம்.
செல்போன் என்பது மற்றவர்கள் நம்மைத் தொடர்புகொள்ள உதவும் ஒரு தகவல் தொடர்பு சாதனம்தான். கீ பேட் தேய, கட்டை விரல் நோக, நிமிடத்துக்கு நூறு மெசேஜ்கள் பறக்க விடுவது, போர்வைக்குள் மொபைல் ஒளித்து இரவு முழுக்க மெசேஜ் அனுப்பி பார்வைத் திறனைக் குறைத்துக்கொள்வது, மணிக்கணக்கில் பேசிப் பேசி மாய்ந்து, செவித் திறனைப் பாதிக்கச் செய்வது என பிறருடனான நமது தகவல் தொடர்பு அங்கங்களை நாமே ஊனமாக்கிக் கொள்கிறோம்.
பன்னிரண்டு வயதுச் சிறுவன் மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் மெசேஜ்கள் அனுப்பும் பூஸ்டர் பேக் கார்டின் நிரந்தர வாடிக்கையாளன். சராசரியாக இரண்டு நிமிடங்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினால்தான் அந்த 20 ஆயிரம் கோட்டாவைக் காலி செய்ய முடியும். ஆனால், மாதத்தின் இருபதாவது நாளிலேயே அந்த கோட்டாவை முடித்துவிட்டு, அடுத்த பூஸ்டருக்கு அலைபாய் கிறான் அவன். நாள் முழுக்க மெசேஜுக்காகத் தேய்த்துவிட்டால், பிறகு அவன் விளையாடுவது எப்போது, பெற்றோருடன் மனம்விட்டுப் பேசுவது எப்போது, தம்பி தங்கைகளுடன் பேசிச் சிரித்து உறவு வளர்ப்பது எப்போது?
ஜி.பி-க்களில் நினைவுத் திறன்கொண்ட செல்போன்கள் மூளையின் சிந்தனை, நினைவுத் திறனையே மழுங்கடித்துவிடுகின்றன. எத்தனை பேருக்கு நமது வீட்டின் லேண்ட்லைன் நம்பர் அல்லது குடும்ப உறுப்பினர்களின் மொபைல் எண்கள் நினைவில் இருக்கின்றன? பலருக்குத் தங்களது சொந்த மொபைல் நம்பரே நினைவில் இருப்பதில்லை. எங்கேனும் வெளியே சென்றிருக்கும் சமயம் மொபைலில் சார்ஜ் இறங்கி சுவிட்ச் ஆஃப் ஆகிவிட்டால், போச்சு! வெளி உலகத் துடனான நமது தொடர்புகளும் அவ்வளவுதான். யாரை அழைக்க வேண்டுமென்றாலும், அவர்களின் நம்பர் மொபைலுக்குள்! சாதாரண கூட்டல் பெருக்கல் மனக் கணக்குகளைக்கூட செல்போன் கால்குலேட்டர்களுக்குத் தாரை வார்த்துவிட்டார் களே இன்றைய இளைய தலைமுறையினர்!
இறுதி மெசேஜ்:
தினமும் செய்தித்தாள்களைப் புரட்டினால் பதிவாகியிருக்கும் பெரும்பாலான குற்றச் சம்பவங் களுக்குத் துணை நிற்பவை செல்போன்கள்தான். உங்களின் அத்தனை அந்தரங்கச் சேட்டைகளுக்கும் எலெக்ட்ரானிக் சாட்சியாக இருக்கிறது செல்போன். நீங்கள் அதன் சேட்டிலைட் கண் காணிப்பில் இருந்து எந்த நொடியும் தப்பிக்க முடியாது என்பதை உணருங்கள்.
ஒரு நாளின் எத்தனை மணி நேரத்தை செல் போனுக்கு ஒதுக்கலாம் என்பதைத் தெளிவாகத் திட்டமிட்டுச் செலவழியுங்கள். விழிப்புடன் இருக்கும் சமயங்களில் ஒரு நாளின் சில மணி நேரங்களையாவது 'நோ சொல்போன் அவர்' ஆக கழிக்கப் பழகுங்கள்.
செல்போன் என்பது நமது மனம் மயக்கும் ஒரு ஜீபூம்பா பூதம். அதனிடம் வரம் கேட்பதும், சாபம் வாங்குவதும் நமது கையில் இருக்கிறது. உங்க ளுக்குத் தேவையான message delivered. அதனை உங்களுக்குள் எந்தளவுக்கு ஃபார்வர்ட் செய்கிறீர்கள் என்பதில் அமைந்திருக்கிறது உங்கள் சக்சஸ் சதவிகிதம்!
செய்யவே கூடாதவை!
1) எத்தனை நெருக்கமான நண்பராக இருந்தாலும் உங்கள் அடையாளச் சான்றிதழைப் பயன்படுத்தி அவருக்கு சிம் கார்டு வாங்கிக் கொடுக்காதீர்கள்!
2) காதலி அல்லது நெருக்கமானவரின் மிக அந்தரங்கமான மெசேஜ்களைப் பொக்கிஷம்போலப் பாதுகாத்து வைக்காதீர்கள்!
3) எதிர்முனையில் பேசுபவர் உங்கள் உரையாடலைப் பதிவு செய்யக் கூடும் என்பதால், மூன்றாம் நபரைப்பற்றி அவதூறாகப் பேசாதீர்கள்!
4) உங்கள் .டி.எம், வங்கிக் கணக்கு எண், ஆன்லைன் நடைமுறைகளுக்கான பாஸ்வேர்ட்களை செல்போனில் பதிவுசெய்து வைக்காதீர்கள்!
5) மெமரி கார்டு முழுக்க ஆபாசப் படங்களைச் சேமித்து வைக்காதீர்கள். உங்களுக்குத் தெரியாமல் உங்கள் அம்மாவோ, சகோதரியோ அவற்றைக் காண நேர்ந்தால் என்னவாகும் என்று யோசியுங்கள்!
- இரா.பரணீதரன்
நீங்கள் எந்த ஸ்டேஜ்?
இளைஞர்களின் இந்த செல்போன் போதை குறித்து மனநல ஆலோசகர் ஷாலினி யிடம் கேட்டபோது, '' 'செல் போனுக்கு நான் அடிக்ட்' என்று சொல்லிக்கொள்வது இப்போது இளைஞர்கள் மத்தியில் ஃபேஷனாக இருக்கிறது. 'செல்போனை ரொம்ப யூஸ் பண்ணாதேன்னு அதை ஒளிச்சுவெச்சா, எங்களையே அடிக்க வந்துடுறான்!' என்று கதறிவிட்டார் ஒரு தாய். அடிக்கடி 'லேட்டஸ்ட் மொபைல் வாங்கிக் கொடு' என்று நச்சரித்து, வீட்டில் பூகம்பத்தை உண்டாக்குகிறார்கள் பல டீனேஜர்கள். தங்கள் வேலைப் பளு காரணமாகக் குழந்தைகளிடம் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை பல பெற்றோர்களால். அந்தக் குழந்தைகள் வேறு வழியில்லாமல், செல்போனுடன் தங்கள் வாழ்க்கையைப் பிணைத்துக்கொள்கின்றன. கொஞ்ச நாட்களில் பெற்றோர் களிடம் பேசுவதையே அக் குழந்தைகள் நிறுத்தி விடுகின்றன. அப்போதுகூட சில பெற்றோர்கள் விபரீதம் புரியாமல் இருக்கிறார்கள். என்னதான் உலகத்தைக் கட்டி இழுத்துக்கொண்டு இருந்தாலும், தினமும் குறைந்தது 15 நிமிடங்களாவது தோளுக்கு மேலே வளர்ந்த பிள்ளை களிடம் நேருக்கு நேர் பேசுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் செல்போனுக்கு அடிமையாகிவிட்டீர்களா என்பதை இந்த நான்கு ஸ்டேஜ்களைவைத்து கணிக்கப் பாருங்கள். ஒருநாளில் ஒரு மணி நேரம் செல்போனில் செலவழிக்கத் தொடங்கி, அது குறைந்தது எட்டு அல்லது ஒன்பது மணி நேரம் வரை அதிகரிப்பது முதல் ஸ்டேஜ். காலையில் கண் விழித்ததும் முதல் வேலையாக மொபைலில் மெசேஜ் செக் செய்து, அதற்குப் பதில் அனுப்பிவிட்டுத்தான் படுக்கையிலிருந்து காலைக் கீழே வைக்கிறீர்கள் என்றால், இரண்டாவது ஸ்டேஜில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒரு மெசேஜுக்கு ரிப்ளை செய்ய முடியாத சூழ்நிலையிலோ, ஓர் அழைப்புக்குப் பதிலளிக்க முடியாத இக்கட்டிலோ சிக்கிக்கொண்ட சமயம் உங்களுக்கு கோபம், எரிச்சல் ஏற்பட்டால் அது மூன்றாவது ஸ்டேஜ். செல்போனுடன் நாம் இருக்கும் தருணங்களை யாரேனும் தொந்தரவு செய்தால் கோபம் வெடித்துக் கிளம்புவது நான்காவது ஸ்டேஜ். தங்கள் பிள்ளைகளின் முதல் ஸ்டேஜ் நடவடிக்கைகளைக் கண்டு கொண்டு, அவர்களைப் பக்குவமாக அரவணைத்து நடத்திச் சென்றால் நிச்சயம் செல்போனுக்கு அடிமை ஆகாமல் தவிர்க்க முடியும். அனைத்துக் குடும்ப உறுப்பினர்களும் மனம்விட்டுப் பேசிக்கொள்வது, அடிக்கடி குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவது என குடும்பத்தில் ஒவ்வொருவரும் நெட் வொர்க்கில் இருங்கள். செல்போன் நெட்வொர்க்கில் இருந்து உங்களை நீங்களே காத்துக்கொள்ளலாம்!"
- பா.பிரவீன்