Saturday, July 22, 2017

ஸ்டார் ஃபிட்னெஸ் - தியானத்துக்குச் சாப்பாடு, ஃபிட்னெஸுக்குக் சிரிப்பு!

நடிகர் மாதவனின் ஹேண்ட்சம் அண்ட் ஹேப்பி சீக்ரெட்ஸ்!
``உடல் ஆரோக்கியத்தைத் தக்கவெச்சுக்கிறது  என்பது கூடுதல் வேலையெல்லாம் கிடையாது. அது நம்ம கடமை.  நம்மை நம்பி இருக்கிறவங்களுக்காகவாவது நம்ம உடல் ஆரோக்கியம் ரொம்பவே முக்கியம்.”  அழகாகப் பேசுகிறார் மாதவன். `அலைபாயுதே’ மேடி, தற்போது நரைத்த தாடியுடன் இருந்தாலும் தோற்றத்தில்  ஃபிட்டாகவே இருக்கிறார். முகத்தில் எந்தச் சுருக்கமும் இல்லை. அதே லவ்வர் பாய் மோடில் இருக்கிறார்.

“ஆரோக்கியமா இருக்கிறதுக்கு ஸ்பெஷல் மருந்து ஒண்ணு வெச்சிருக்கேன். இத்தனை வருஷங்களா சினிமாவில் இருக்கேன். நிறைய ஏற்றஇறக்கங்கள் வந்திருக்கு. பலவிதப் பிரச்னைகளையும் சோகங்களையும் சந்திச்சிருக்கேன். கெட்டநேரங்கிறது எப்போ வேணாலும் வரலாம். அதையெல்லாம் பெரிசாவே எடுத்துக்கக் கூடாது. நல்ல விஷயத்தை மட்டும்தான் தேடுவேன். அதை மட்டுமே மனசுல வெச்சுப்பேன். சோகத்தை மறந்துட்டு சந்தோஷத்தை மட்டும் மனசுல வெச்சுக்கிட்டா  வாழ்க்கை ஹேப்பியா இருக்கும்.

காலை 6.30 மணிக்கெல்லாம் எழுந்துடுவேன். 99 சதவிகிதம் டயட் சாப்பாடுதான். ‘இறுதிச்சுற்று’ படத்துக்காக உடற்பயிற்சியில் இருந்தப்போகூட சைவ உணவுகள்தான் எடுத்துக்கிட்டேன். நிறைய பழங்களும் தண்ணீரும் ரொம்ப முக்கியம்னு நினைக்கிறேன். எதைச் சாப்பிட்டாலும் நல்லா மென்று தின்று பழகணும்.  ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் குறைந்தது 40 தடவையாவது மென்றுதான் முழுங்குவேன். கடிச்சு மெல்லும்போது மனசுக்குள்ள எண்ணிக் கிட்டே இருப்பேன். அப்போதான் கவனம் சாப்பாட்டின்மேல் இருக்கும். சாப்பாடுங்கிறது எனக்குத் தியானம் மாதிரி.  
காலையில் எழுந்ததும் பல் தேய்க்கிறது ஒவ்வொருத்தருக்கும் கடமை. ஆனா, பலருடைய கவனம் பல் தேய்ப்பதில் இருக்காது. பல் தேய்ச்சுக்கிட்டே வேறு ஏதாவது சிந்தனைகள்ல  இருப்பாங்க. பல் தேய்க்கும்போது `குளிக்கலாமா... வேணாமா?’னு யோசிப்பாங்க. குளிக்கும்போது, `சாப்பிட டைம் இருக்குமா?’னு யோசிப்பாங்க. அப்படியெல்லாம் பண்ணக் கூடாது. எந்த ஒரு விஷயத்தைச் செய்யறோமோ, அதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தணும். ஒவ்வொரு விஷயத்தையும் அனுபவிச்சுச் செய்யணும்.

கடந்தகாலத்தையோ எதிர்காலத்தையோ யோசிக்க மாட்டேன். இந்த நிமிஷம், இந்த விநாடினு ஒவ்வொரு மொமென்ட்டையும் எனக்கானதா வாழ்கிறேன். ஒரு வேலை செய்றதுக்கு 30 விநாடிக்கு முன்னாடியே என்ன செய்யப்போறோம்னு யோசிச்சிடுவேன். செய்ய ஆரம்பிச்ச பிறகு வேறு எதையும் யோசிக்க மாட்டேன். நான் நடிக்கிற படத்திலும் சரி, குடும்ப வாழ்க்கையிலும் சரி... இதைத்தான் ஃபாலோ பண்றேன். எவ்வளவுக்கு எவ்வளவு மனசைத் தூய்மையா வெச்சிருக்கோமோ, அந்த அளவுக்கு உடலும் ஆரோக்கியமா இருக்கும். அதுக்கப்புறம்தான் உடற்பயிற்சி, ஃபிட்னெஸ் எல்லாமே. 

நல்ல சாப்பாடுதான் நம்மை இயக்குதுங்கிற விஷயம் எப்பவுமே மனசுல இருக்கணும். சாப்பாட்டுக்காகத்தானே இவ்வளவு கடினமா உழைக்கிறோம்... ஒருகாலத்தில் தயிர்சாதம்னா ரொம்பப் பிடிக்கும். இப்போ ஐ லவ் உருளைக் கிழங்கு. கிழங்கு வகைகளில் செய்யும் சாப்பாடு, ரொம்ப ஆரோக்கியமும்கூட. வயிறுதான் நமக்கான ரெண்டாவது மூளை. தனிப்பட்ட வாழ்க்கை, வேலைனு எதில் பிரச்னைன்னாலும் சாப்பாட்டைத் தான் முதலில் பாதிக்கும். என்னிக்குமே சாப்பாட்டின்மேல் கோபத்தையோ வெறுப்பையோ காட்டக்கூடாது. சாப்பாடுதான் நமக்குப் பிரதானம். அதைப் புரிஞ்சு நடந்தாலே போதும்.

சோகமா இருந்தாகூட வீட்டுக்கு வந்துட்டா எல்லாத்தையும் மறந்துடுவேன். அப்படியே ஏதும் மன அழுத்தம்னாலும் என்னோட ரெண்டு நாய்களையும் கட்டிப்பிடிச்சுட்டு இருப்பேன். 

உடற்பயிற்சிக்காக ஸ்டீராய்டு எதுவும் பயன்படுத்த மாட்டேன். படத்துக்காக உடலமைப்பை மாற்றணும்னா தீவிர உடற்பயிற்சி செய்வேன். அதுக்கேற்ற மாதிரியான சைவ உணவுகள்தான் என் டயட். மற்ற நாளில் ரெகுலர் உடற்பயிற்சிகள்தான். எப்பவுமே சிரிச்சுக்கிட்டே இருங்க. எவ்வளவுக்கு எவ்வளவு சிரிக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு  ஆரோக்கியம். சந்தோஷமும் திருப்தியும்தான் என் ஃபிட்னெஸுக்கான அருமருந்துகள்!”

No comments:

Post a Comment