Saturday, April 7, 2018

உடலை கவனித்து உணவை தேர்ந்தெடுங்கள் thanks to dinamalar.com

உடலை கவனித்து உணவை தேர்ந்தெடுங்கள்!

 Added : ஏப் 02, 2018 


Advertisement
உடலை கவனித்து உணவை தேர்ந்தெடுங்கள்!
சிறந்த உணவு சைவமா? அசைவமா? என்ற விவாதம் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், உடலைக் கவனித்து உணவைத் தேர்ந்தெடுப்பதன் அவசியத்தைத் தெளிவுபடுத்துகிறார் சத்குரு. முழுமையாகப் படித்து, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை உங்களுடையதாக்குங்கள்! 
கேள்வி: உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில், உணவின் பங்களிப்பு என்ன? ஒரு சாரார் சைவ உணவுதான் சிறந்தது என்றும், மற்றொரு சாரார் உணவில் அசைவம் சேர்க்காமற்போனால், உடல் ஆரோக்கியமாக இருக்காது என்றும் கூறுகின்றனர். இது குழப்பத்தை ஏற்படுத்துகிறது…
சத்குரு: நீங்கள் எந்த விதமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டுமென்பது, உங்களது உடலின் விருப்பத்தைப் பொறுத்தது. மற்றபடி உங்களின் எண்ணத்தைப் பொறுத்ததோ அல்லது உங்களின் மதிப்பீடுகள் மற்றும் நெறிமுறைகளைப் பொறுத்ததோ அல்ல. உணவு என்றாலே, அது உடலைப் பற்றிய ஒரு விஷயம்தான். வித்தியாசமான பல உணவுகளையும் முயன்று பாருங்கள். ஒரு குறிப்பிட்ட உணவைச் சாப்பிட்டதும் உங்களது உடல் எப்படி உணர்கிறது என்று கவனியுங்கள். உடல் மிகவும் சுறுசுறுப்பாகவும், சக்தி நிரம்பியிருப்பதாகவும் உணர்ந்தால், உங்கள் உடல் “மகிழ்ச்சி”யாக இருப்பதாகப் புரிந்துகொள்ளலாம். மாறாக உடல் சோம்பலாக இருப்பதை உணர்ந்து, அதைச் சுறுசுறுப்பாக்குவதற்கு உங்களுக்கு காபியோ அல்லது நிகோடின் புகையோ தேவைப்பட்டால், உடல் மகிழ்ச்சியாக இல்லை என்று புரிந்துகொள்ளலாம். நீங்கள் இதனைப் பரிசோதித்துப் பார்க்கலாம். 
உங்கள் உடலைக் கூர்ந்து கவனித்தால், அது எந்தவிதமான உணவினால் மகிழ்ச்சி கொள்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள். ஆனால் நீங்கள் எப்போதும் உங்கள் மனதையே கவனிக்கிறீர்கள், அது எப்போதும் பொய்தான் சொல்லிக்கொண்டிருக்கும். அது இன்றைக்கு ஒன்றைக் கூறுகிறது. மறுநாளே வேறொன்றைக் கூறுகிறது. முதல் நாள் கூறியதை நம்பியதற்காக அடுத்த நாளே அது உங்களை ஒரு முட்டாளாக உணர வைக்கிறது. ஆகவே உங்களது மனதின் பின்னால் செல்லாதீர்கள். உங்களது உடலைக் கேட்பதற்கு நீங்கள் கற்றுக்கொண்டால் மட்டும் போதுமானது. 
ஒவ்வொரு விலங்கும், ஒவ்வொரு உயிரினமும், தான் எதைச் சாப்பிட வேண்டும் மற்றும் எதைச் சாப்பிடக்கூடாது என்று அறிந்து வைத்துள்ளது. இந்த ஒட்டுமொத்த பூமியிலேயே மனித இனம் மட்டும்தான் அதிகபட்ச புத்திசாலித்தனத்துடன் படைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு என்ன சாப்பிடுவது என்பதுகூடத் தெரியவில்லை. உங்கள் உடல் கூறுவதைக் கேட்கக் கற்றுக்கொள்வதற்கு, ஒரு குறிப்பிட்ட கவனம் தேவைப்படுகிறது. அத்தகைய கவனம் இருந்தால் என்ன சாப்பிடுவது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். 
உங்களுக்குள் செல்லும் உணவின் தன்மையைப் பொறுத்தவரை, அசைவ உணவைக் காட்டிலும், நிச்சயமாக சைவ உணவே உடலுக்கு மிகவும் ஏற்றதும், சிறந்ததுமாகும். ஏதோ ஒழுக்கநெறியின் காரணமாக நாம் இதைச் சொல்லவில்லை. உடலுக்கு எது சிறந்ததாக உள்ளது என்பதை மட்டுமே நாம் பார்க்கிறோம். உடல் சௌகரியமாக உணரும் உணவுகளை மட்டுமே நாம் சாப்பிட வேண்டும் என்று சொல்ல முயற்சிக்கிறோம். நீங்கள் மாணவராக இருந்தாலும் அல்லது பணியாற்றுபவராக இருந்தாலும் எந்தச் செயலையும் சிறப்பாகச் செய்வதற்கு உங்களது உடல் தளர்வாகவும், சுகமாகவும் இருக்கவேண்டியது மிகமிக முக்கியம். எந்த உணவு சாப்பிட்டால் உடல் அதிகபட்ச தளர்வாகவும், சுகமாகவும் இருக்குமோ, எந்த உணவிலிருந்து எளிதில் ஊட்டச்சத்து பெறமுடியுமோ, அந்த வகை உணவுகளை நாம் சாப்பிடவேண்டும். நீங்கள் இதனைப் பரிசோதித்துப் பார்க்கலாம். சைவ உணவை அது “உயிருடன்” இருக்கும்போதே சாப்பிட்டுப் பாருங்கள். அது எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வீர்கள். எந்தெந்த உணவுகளை சமைக்காமல் பச்சையாக சாப்பிடமுடியுமோ, அது போன்ற உணவுகளை அதிகபட்சமாக சாப்பிடுவதுதான் சைவ உணவின் சிறப்பம்சம்.
உயிரோட்டமுள்ள ஒரு உயிரணு, உயிரைக் காப்பாற்றக்கூடிய அனைத்தையும் கொண்டுள்ளது. நீங்கள் உயிரோட்டமுள்ள உயிரணுவை உட்கொண்டால், மிகவும் சிறப்பான உடல் ஆரோக்கியத்தை உணர்வீர்கள். உணவை நாம் சமைக்கும்போது, அதிலுள்ள உயிர்ச்சத்து அழிக்கப்படுகிறது. உணவிலுள்ள உயிர்ச்சத்து அழிக்கப்பட்ட நிலையில் சாப்பிடுவதால், பச்சையாக சாப்பிடும்போது கிடைக்கக்கூடிய அதே அளவு உயிர்ச்சக்தியை, சமைத்த உணவு தருவதில்லை. உயிருள்ள உணவைச் சாப்பிடுவதால், அது நமக்குள் ஒரு முற்றிலும் வித்தியாசமான உயிர்த்தன்மையைக் கொண்டு வருகிறது. உயிருள்ள நிலையில் சாப்பிடக்கூடிய காய்கள், பழங்கள், முளைகட்டிய தானியம் என்று எதுவானாலும் குறைந்தபட்சம் முப்பதிலிருந்து, நாற்பது சதவிகிதம் வரை உங்களின் தினசரி உணவில் இருந்துவிட்டால், பிறகு அது உங்களுக்குள் இருக்கும் உயிருக்கு உறுதுணையாக இருக்கிறது. 
ஆனால், இன்றைய நாகரீக உலகத்தில், மூன்று நாட்களுக்கு முன்பு சமைத்த உணவைச் சாப்பிடுவது இப்போது சாதாரணமாகிவிட்டது. மக்கள் மேலை நாட்டு கலாச்சாரத்தைப் பின்பற்றுவது என்று முடிவு செய்தால், முதலாவதாக அவர்கள் செய்வது நாள்பட்ட உணவை, டின்னில் அடைத்துவைத்திருக்கும் உணவை சாப்பிடுவதே. ஒரு கிராமத்து பாமர மனிதரைக் கேளுங்கள், அவர் கூட பழைய உணவைத் தொடமாட்டார். நம் நாட்டில் அப்படிப்பட்ட பழைய உணவை சாப்பிடுபவரை பொதுவாக பிச்சைக்காரர் என்றுதான் கூறுவோம். ஆனால் இப்போது உலகளவிலேயே செல்வந்தர்கள் கூட பழைய உணவைத்தான் சாப்பிடுகின்றனர். உங்களுடைய உடல் ஒரு குறிப்பிட்ட சக்தி நிலையில் பராமரிக்கப்படுவதற்கு, நாள்பட்ட உணவாக இல்லாமலிருக்க வேண்டியது மிகவும் முக்கியம். சமைத்த உணவில் ஒவ்வொரு கணமும் உணவில் நுண்கிருமிகள் மெல்ல வளர்ச்சி பெறுகின்றன. உணவானது துர்நாற்றம் வீசும்வரை நீங்கள் அதை உணர்வதில்லை. ஆனால், நீங்கள் உணவை சமைத்த கணத்திலிருந்தே, அது கெடத் தொடங்கிவிடுகிறது. 
அனைத்திற்கும் மேலாக நீங்கள் உணரவேண்டியது ஒன்றுள்ளது. நீங்கள் சாப்பிடும் உணவும் ஒரு உயிர்தான். வேறொரு பரிமாணத்திலிருக்கும் ஒரு உயிரை நாம் சாப்பிடுகிறோம். உங்களது உயிர் நிலைத்திருக்க, வேறொரு உயிர் தன்னை வழங்குகிறது. உங்களது உயிரைக் காப்பதற்காக, தனது உயிரை வழங்கும் அந்த உயிர்களுக்கு மனப்பூர்வமான நன்றியறிதலுடன் நீங்கள் சாப்பிட முடிந்தால், அந்த உணவு, உங்களுக்குள் செயல்படும் விதமே மிக மிக வித்தியாசமானதாக இருக்கும்.

No comments:

Post a Comment