இன்று நாம் நாகரிகம் என்ற பெயரில் இயற்கையை அழித்து பழமையை மறந்து வருகிறோம். இதனால் மண் வீடுகள் போன்ற மரபு சார்ந்த பாரம்பரிய வீடுகளை இழந்து விட்டோம். பாரம்பரியத்தை விரும்புவோருக்கு அதை மீட்கும் வகையில் பழங்கால மண் வீடுகளை கட்டிக்கொடுக்கிறார் இளம் கட்டடக்கலை நிபுணர் ஸ்ரீபு.
சொந்த ஊர் கோவை. கட்டடக்கலை படித்த இவர், நவீன பெண்ணாக இருந்தாலும் பழமையை பாதுகாப்பதில் ஆர்வமுள்ளவர். இயற்கைக்கு கெடுதி நினைக்காமல், இரும்பு, சிமென்ட் இன்றி மண், சேறு, சுட்ட கல், சுண்ணாம்பு கொண்டு பழமை மாறாது, நவீனமாக கட்டித்தருகிறார். அழகுக்கு மஞ்சள், வேப்பிலை, கடுக்காய், வெல்லம் கலந்த 'இயற்கை பூச்சு' செய்வதால் வீடு நோய் எதிர்ப்பு சக்தியுடன், கோடையில் குளிராகவும், குளிர் நேரம் வெதுவெதுப்பாக உள்ளது. சிமென்ட் வீடுகளை காட்டிலும் மண் வீடு கட்ட செலவு குறைவுதானாம்.
மும்பை, கோவை, திண்டுக்கல், கொடைக்கானலில் மண் வீடு, மூங்கில் வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கிறார்.தையல், துணிக்கடைகளில் வீணாகும் துணிகளை சேகரித்து கம்மல், வளையல், அலங்கார பொருட்களாக மாற்றி, இன்ஸ்டாகிராமில் 'அந்தாதி' என்ற பக்கத்தின் மூலம் பிசினஸ் செய்கிறார். வீசியெறியும் கந்தல் துணிகளையும் தானமாக பெற்று, கண்கவர் ஆபரணங்களாக்கி அசத்துகிறார். இந்த ஆபரணங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் பிசியான 'பிசினஸ் உமன்' ஆக வலம் வருகிறார்.
ஸ்ரீபு கூறியது: நாம் வசிப்பதற்காக இயற்கையை அழிக்க கூடாது. இயற்கை வாரி வழங்கிய மண்ணால் வீடு கட்டித்தான் நம்முன்னோர் வாழ்ந்தனர். இன்றும் அந்த வீடுகள் கம்பீரமாக நிலைத்து நின்று, கான்கிரீட் வீடுகளுக்கு சவால் விடுகின்றன. நாகரிகத்தை தேடும் நேரத்தில் நம் பாரம்பரியத்தை மறந்து விடுகிறோம்.
மரபு வீடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். வீடு கட்டும் முறை குறித்து மாணவருக்கு பயிற்சியும் அளிக்கிறேன்.பகுதிநேரமாக வீணாகும் துணிகளில் ஆபரணங்கள் செய்து ஆன்லைனில் விற்கிறேன். கொரோனா காலம் என்பதால் பிசினஸை கொஞ்சம் மாற்றி மூலிகை மாஸ்க், கிளவுஸூம் தயாரிக்கிறேன், என்றார்.
இவரை வாழ்த்த shrisha7.ss@gmail.com