''சரியான வயதில் திருமணம் செய்வது, வாழ்க்கை முறை, உணவு முறைகளை சரியாக பின்பற்றுவதன் வாயிலாக, குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு காணலாம்,'' என்கிறார் மகப்பேறு மற்றும் செயற்கை கருவூட்டல் சிறப்பு மருத்துவர் லட்சுமி கிருபா.
இன்றைக்கு தம்பதியர் மத்தியில், குழந்தை பேறு இல்லாமை அதிகரிக்க காரணம் என்ன?
கடந்த, 10,15 ஆண்டுகளாகதான், இந்த எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதற்கு காரணம் முன்பு, 20 அல்லது 25 வயதில் பலருக்கு திருமணம் ஆகிவிடும். இந்த வயது தம்பதிகளுக்கு குழந்தை உண்டாவதில் பிரச்னை வராது. இப்போது, 30 அல்லது 35 வயதில் திருமணம் செய்கின்றனர். பெண்களை பொறுத்தவரை, 30 வயதுக்கு மேல், கர்ப்பம் தரிப்பது சிரமம்.
குறிப்பிட்ட வயதுக்கு மேல், கருமுட்டை உற்பத்தியும், எண்ணிக்கையும் குறைந்து விடும். உதாரணமாக, 25 வயதுள்ள ஒரு பெண்களுக்கு, கருமுட்டைகளின் எண்ணிக்கை, 25 இருந்தால், 35 வயதுள்ள பெண்ணுக்கு, 10 முட்டைகள்தான் இருக்கும். 40 வயது என்றால் ஒன்றிரண்டுதான் இருக்கும். திருமணத்தை சரியான வயதில் செய்து கொள்வது நல்லது.
குழந்தைப்பேறில் சிக்கல் இருப்பதை, எப்படி தெரிந்து கொள்வது?
சாதாரணமாக திருமணம் ஆகி, ஆறு மாதங்களில் குழந்தை உண்டாகி விடும். சிலருக்கு ஓராண்டு கூட ஆகலாம். அதற்கு மேல் தள்ளிப்போனால், டாக்டரை பார்த்து ஒரு, 'ஜெனரல் செக்கப்' செய்து கொள்வது நல்லது.
35 வயது மேல் இயற்கையாக கர்ப்பமாக வாய்ப்பு இல்லையா?
35 வயதுக்கு மேல் என்றால், ஸ்கேன் செய்து உற்பத்தியாகும் கருமுட்டைகளில் எண்ணிக்கை, மாதவிடாய் சரியாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக ஒரு சிலருக்கு, முட்டைகள் போதிய அளவு இருக்கும். 35 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்வது நல்லது.
குழந்தையின்மைக்கு ஆண், பெண் இருவரில் யார் காரணம்?
இந்த குறைபாடு, 40 சதவீதம் பெண்களிடம் உள்ளது என்றால், அதே, 40 சதவீத குறைபாடு ஆண்களிடமும் உள்ளது. 20 சதவீதம் பேருக்கு, விவரிக்க முடியாத காரணங்களால் கருத்தரித்தல் இருக்காது. ஆண்களுக்கு, புகைப்பிடித்தல், அதிக மது பழக்கம் இருந்தாலோ, சிறுவயதில் அம்மை நோயால் தாக்கப்பட்டு இருந்தாலோ, அந்தரங்க இடத்தில் 'வெரிக்கோ பீல்' இருந்தாலோ குறையும். இருவருக்கும் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் பிரச்னைதான்.
குழந்தை இன்மை சிக்கல் தீர, வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் என்ன மாற்றங்கள் தேவை?
வாழ்க்கை முறையும், உணவு முறையும் சரியாக இருந்தால், குழந்தை பிறப்பதில் சிக்கல் வராது. கெட்ட பழக்க வழக்கங்கள் இருப்பதால் தான், ஆண்களுக்கு உயிரணு எண்ணிக்கை குறைகிறது. தாம்பத்திய வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உடல், சத்தான உணவு முக்கியம். புரோட்டீன், விட்டமின் சத்து அதிகம் தேவை. உணவு தட்டில் கிரீன், ரெட், எல்லோ என, கலர்புல்லான உணவு ஐட்டங்கள் இருக்க வேண்டும். பாதம் பருப்பு, வால்நட்ஸ் நல்லது. தினசரி ஏதோ ஒரு உடற்பயிற்சி அவசியம்.
இளம் தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடலாமா?
புதிதாக கல்யாணம் ஆனவர்கள், தள்ளிப்போடுவதால் பிரச்னை வராது. லேட் மேரேஜ் செய்தவர்கள் தள்ளிப்போட்டால் பிரச்னை வரும்.
செயற்கை கருத்தரிப்பு முறையில், ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள் என்ன?
போதுமான விந்தணு இல்லாதவர்களிடம், இன்ஜெக்ஷன் மூலம் எடுத்து, பெண்ணுக்கு செலுத்தும் வசதி உள்ளது. மரபணு பிரச்னை இருந்தால், சோதனையில் கண்டுபிடித்து விடலாம். விந்தையும், கருமுட்டையையும் எடுத்து, ஒன்றாக இணைத்து வளர வைத்து, தாயின் கர்ப்பப்பைக்குள் வைக்கலாம். இப்படி இன்னும் பல நவீன முன்னேற்றங்கள் வந்துள்ளன.
No comments:
Post a Comment