Wednesday, August 23, 2017

கமலாவுடன் பேசணும்போல இருக்கு...” - நெகிழவைக்கும் இயக்குநர் எஸ்பி.முத்துராமன் thanks vikatan.com

கமலாவுடன் பேசணும்போல இருக்கு...” - நெகிழவைக்கும் இயக்குநர் எஸ்பி.முத்துராமன்

ஆணி வேரானவள்!த.கதிரவன், படம்: தி.குமரகுருபரன்
‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா... வரமாட்டாரா?’ என்ற கேள்விக்கு விடைதேடி நாம் எல்லோரும் நகம் கடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதே ரஜினிகாந்த், ‘தன் வாழ்வின் முக்கியத் தருணங்களில் எல்லாம் ‘அவர்’ தன்னோடு இருக்க வேண்டும்’ என்று `குறிப்பிட்ட’ ஒருவரின் வருகைக்காகக் காத்திருக்கிறார் என்றால் ஆச்சர்யம்தானே...?

பொங்கல், தீபாவளி மற்றும் வீட்டு விசேஷங்களில் ஆரம்பித்து சமீபத்திய ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வுவரை, `என் வாழ்க்கையின் வழிகாட்டி, உடன்பிறவாச் சகோதரர்’ என்றெல்லாம் ரஜினி நெகிழ்ந்து உருகும் அன்புக்குச் சொந்தக்காரரான ‘அவர்’, இயக்குநர் எஸ்பி.முத்துராமன். 

ரஜினியை வைத்து 25 வெற்றிப் படங்கள், கமல்ஹாசனோடு 10 படங்கள் எனத் தமிழ்த் திரையுலகின் உச்ச நடிகர்கள் இருவரையும் ஒருசேர இயக்கிய பெருமைக்குச் சொந்தக்காரர். பரபரப்பான அந்த நாள்களில் தன்னுடைய ஓட்டத்துக்கு உறுதுணையாக விளங்கிய தன் மனைவி கமலா மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்புகள் குறித்த நினைவுகளை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.
``1973-ல் ஆரம்பித்து 1993 வரையிலான 20 வருட காலமும் திரைத்துறையில் ஓய்வே இல்லாமல் உற்சாகமாக உழைத்துக்கொண்டிருந்தேன். காரணம், சிறுவயதிலிருந்தே சினிமா மீது எனக்கிருந்த வெறிபிடித்த ஆசை. ‘பத்து நாள்கள் கமல் பட ஷூட்டிங், பத்து நாள்கள் ரஜினி பட ஷூட்டிங்’ என்று இரவு பகலாக உழைத்தும் எனக்கு எதுவுமே போரடிக்கவில்லை.

சினிமாவில் மட்டுமே நான் கவனம் செலுத்திக்கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், என் குடும்பத்தைத் திறம்பட வழிநடத்திச் சென்றவள் என் மனைவி கமலா. என்னுடைய சுமைகளை அவள் தலையில் தூக்கிவைத்திருந்தேன். 

நான் வீட்டுக்கு வரும்போதெல்லாம், ‘கால்ல சக்கரம் கட்டின மாதிரி ஓடிக்கிட்டே இருக்கீங்களே… குடும்பம் பிள்ளைங்கன்னு இருக்கிறது ஞாபகத்துல இருக்கா, இல்லையா? ஒரு பத்து நிமிஷம் உக்காந்து பேசக்கூட நேரமில்லாம அப்படி என்ன வேலை… கொஞ்சநேரம் என்கிட்டே உக்காந்து பேசிட்டுத்தான் போங்களேன்...’ என்று அழாத குறையாகக் கெஞ்சுவாள். ஆனாலும், அவள் பேசுவது எதுவுமே என் கவனத்துக்குள் வராது. ‘நேற்று எடுத்த சீன் சரியாக வந்ததா? இன்றைய சீனை எப்படி எடுக்கலாம்…’ என்பது மாதிரியான சினிமா சிந்தனைகளே எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும்.

ஷூட்டிங் முடிந்து வீடுவந்த பிறகும்கூட திடீரென்று நள்ளிரவில் போன் வரும். ‘சார் இன்னிக்கு நான் நடிச்ச சீன் நல்லா வந்திருக்கா சார்… நாளைக்கு எனக்கு என்ன சீன் சார்…’’ என்று ரஜினி கேட்பார். அவரிடம் காட்சி பற்றி பேசி முடித்துவிட்டு தூங்கினால், மறுபடியும் அதிகாலையிலேயே எழுந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கிளம்பிவிடுவேன். இப்படி சினிமாவையே மூச்சாக நினைத்த காரணத்தினால், என் குடும்பத்தை முழுமை யாகக் கவனிக்க முடியவில்லை. பிள்ளைகள் என்ன படிக்கிறார்கள், வீட்டில் என்ன செலவு, என்ன பிரச்னை என்று எதுவும் தெரியாது எனக்கு.
ரஜினி நடித்த ‘பாண்டியன்’ திரைப்பட ஷூட்டிங் சென்னை துறைமுகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. திடீரென்று ஒரு போன்கால், அவசரமாக வீட்டுக்கு வரச்சொல்லி வந்தது. என்னமோ ஏதோ என்ற பயமும் பதற்றமுமாக வீடுவந்து சேர்ந்தேன். தெரு முழுக்க கனத்துக்கிடந்த அமைதி என் பயத்தை இன்னும் அதிகமாக்கியது. தெரு முனையிலேயே எங்கள் வீட்டைச் சுற்றி நின்றிருந்த கூட்டம் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை உறுதி செய்தது. கார் நிற்கும் முன்னரே அவசரமாக இறங்கி வீட்டுக்குள் ஓடினேன்.  

அங்கே... என் மனைவி கமலாவின் உடல் மாலைகளுக்கு மத்தியில் கிடத்தப்பட்டிருந்தது. மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோயிருந்தாள். உடலைப் பார்த்துக் கத்தினேன்... கதறினேன். போன உயிர் திரும்ப வருமா? 
‘கமலா இறக்கவில்லை... அளவுக்கு அதிகமான வேலைபளுவைக் கொடுத்து நானே அவளைக் கொன்றுவிட்டேன்' என்ற குற்ற உணர்வு இன்னமும் என்னுள் முள்ளாகக் குத்திக்கொண்டிருக்கிறது. இப்பவும் அவளிடம் மனம் விட்டுப் பேசணும் போல இருக்கு.
எல்லோருக்கும் நான் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான்... குடும்பம் என்ற அச்சாணியில்தான் நீங்கள் வெளியுலகைச் சுற்றிவருகிறீர்கள் என்பதை எப்போதும் மனதில் இருத்திக்கொள்ளுங்கள். உங்கள் லட்சியம், வெற்றி, பணம், புகழுக்காக வெறி கொண்டு செயல்படுங்கள்… தவறில்லை. ஆனால், உங்களின் ஆதாரமாகவும் ஆணி வேராகவும் இருக்கிற குடும்பத்துக்காகவும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். மனைவியிடம் அன்போடு பேசுங்கள். மாதம் ஒரு தடவையாவது குடும்பத்தோடு வெளியூர் பயணம் மேற்கொள்ளுங்கள். குழந்தைகளோடு குழந்தையாகக் குதூகலியுங்கள். தினமும் ஒருவேளையாவது குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுங்கள். மனைவிக்குக் கணவன் தேவைப்பட்டபோதெல்லாம் அவளுக்குத் துணையாக நான் இல்லை; இப்போது எனக்கு ஆறுதலும் அன்புமாக இருக்க என் மனைவி கமலா இல்லை.’’ 

அன்பின் ஏக்கம் தேங்கி நின்றது அவர் விழிகளில்!

No comments:

Post a Comment