Friday, September 15, 2017

இயந்திரத்தனம் மறைந்தாலேஉடல்நிலை சீராகும்!

இயந்திரத்தனம் மறைந்தாலேஉடல்நிலை சீராகும்!

பெண்களுக்கு சர்க்கரை நோய் வருவது குறித்து கூறும், அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை, நிலைய மருத்துவ அலுவலர் பொறுப்பு வகிக்கும் டாக்டர் ஜெயந்தி: சர்க்கரை நோய் வர முக்கிய காரணம், உடல் பருமன் தான். வேலைக்கு செல்லும் பெண்கள் பெரும்பாலும், அலுவலக பணிக்குத் தான் செல்கின்றனர். அவர்களுக்கு உடல் உழைப்பு என்பதே கிடையாது.
அதிக கலோரி உள்ள உணவுகளை சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்யாவிட்டால், அதுவே உடல் எடையை அதிகமாக்கி விடும்.அரிசி உணவு, அசைவ உணவான சிக்கன் போன்றவற்றில், பூச்சிக் கொல்லி கள் ஏராளம் கலந்துள்ளன. இவை உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.இன்று விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக, வீட்டு வேலைகளை செய்ய இயந்திரங்கள் உதவுகின்றன. இந்த இயந்திரத்தனம் மறைந்தாலே, பலரின் உடல்நிலை சீராகும். அம்மிக்கல், ஆட்டுக்கல், உரல் போன்றவை எங்கே போயின என்றே தெரியவில்லை.
இளம் வயதிலே சிலருக்கு சர்க்கரை வியாதி வர, பரம்பரையும் முக்கிய காரணம். அம்மா, அப்பாவுக்கு சர்க்கரை நோய் இல்லாவிட்டாலும் தாத்தா, பாட்டிக்கு இருந்தாலே வந்துவிட வாய்ப்பு உண்டு.சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கவில்லை என்றால், கண் பார்வைக் குறைபாடு, இதயப் பாதிப்பு, சிறுநீரகப் பாதிப்பு, தோல் வியாதிகள் ஏற்படும். சர்க்கரை அளவைச் சரியான முறையில் பராமரித்தால், மேற்கண்ட பாதிப்பை தவிர்க்கலாம்.
சர்க்கரையை கட்டுப்படுத்த நடைபயிற்சியும், உணவுக் கட்டுப்பாடும் மிகவும் அவசியம். குறைந்தது, 45 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும்.ஆனால், ஆரம்பத்தில், 10 நிமிடம் நடப்பதே கடினமாக இருக்கும். தொடர்ந்து பயிற்சி செய்து வர, 45 நிமிட நடைப்பயிற்சி சாத்தியமாகும். சர்க்கரை நோய்க்கான மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
ஆவாரம்பூவை பாசிப்பயறுடன் சேர்த்து, கூட்டு வைத்து சாப்பிடலாம். வெந்தயக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.வெந்தயப் பவுடரை வெந்நீரில் கலந்து, காலை வெறும் வயிற்றிலும், மாலையிலும் சாப்பிட்டு வரலாம். திரிபலா சூரணம், காலை, இரவு வேளையில் வெந்நீரில் கலந்து சாப்பிடலாம்.நாவல் பழம் மற்றும் அதன் கொட்டையை பவுடராக்கி சாப்பிட்டு வர, நல்ல பலன் கிடைக்கும். முளை கட்டிய பயறு, மோர் சேர்த்துக் கொள்வது நல்லது.அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமைகளில், காலை, 7:30 மணி முதல், 12:00 மணி வரை, சர்க்கரை நோய்க்கான சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு வருபவர்களுக்கு, இங்கு தயாரிக்கப்படும் மதுமேக சூரணம் வழங்கப்படுகிறது. இதுவும் சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும்.
பெண்களுக்கு பெரும்பாலும் மாதவிலக்கு நின்ற பின்னரே சர்க்கரை நோய் வரும். இது, ஹார்மோன் சமநிலையின்மையால் உண்டாகிறது.

No comments:

Post a Comment