திருப்பதி பெருமாளின் வாயிற்படிக்கு `குலசேகரப்படி’ எனப் பெயர் வந்தது எப்படி?
திருப்பதி பெருமாளின் கருவறைப் படியைக் கடந்து தயிர்சாதம் நிறைந்த ஒரு மண்சட்டியைத் தவிர வேறு எந்தப் பிரசாதமும் செல்வதில்லை. இந்தக் கருவறைப் படியும் சரி, மண்சட்டி தயிர்சாதமும் சரி இரண்டின் பின்னணியில் பக்திபூர்வமான வரலாறு உண்டு. கருவறைப் படி குலசேகரப்படி என்றே அழைக்கப்படுகிறது. யார் இந்தக் குலசேகரன்?
சேரநாட்டு திருவஞ்சைக்களத்தில் சேரர் குலத்தில் தோன்றிய அரசர்தான் குலசேகரர். கொல்லிக் காவலன், கூடல் நாயகன், கோழிக்கோ, மாதவன் மாமன் என்றெல்லாம் சிறப்பித்துப் போற்றப்பெறும் குலசேகரர் பரந்தாமனிடம் கொண்ட பக்தியால் ஆழ்வாராகப் போற்றப் பெறுகிறார். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான இவர், திருமாலின் கௌஸ்துப மாலையின் அம்சமாகத் தோன்றியவர். சிறுவயது முதற்கொண்டே ராமபிரானின் மீதும், கிருஷ்ணரின் மீதும் அளவு கடந்த பக்தியைக் கொண்டிருந்தார். நல்லாட்சி புரிந்த இவருக்குப் பாண்டிய மன்னர் தனது மகளைத் திருமணம் செய்து கொடுத்தார். வெற்றித்திருமகளை தன்னருகே வைத்திருந்த குலசேகரர் திருமாலின் அடியார்கள்மீது பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தார்.

ஒருமுறை ராமாயணம் உபந்நியாசம் கேட்டுக் கொண்டிருந்த போது, ராமபிரான் முனிவர்களின் தவத்தைக் கெடுக்கும் அரக்கர்களை அழிக்கப் புறப்படுகிறார் என்ற செய்தியை அறிந்ததும், ராமபிரானுக்கு உதவ உடனே தனது படைகளை ஆயத்தமாகும்படி கட்டளையிட்டார். அந்த அளவுக்கு ராமபிரானிடம் பக்தி செலுத்தினார். எப்போதும் திருமால் அடியார்களுடனே இருந்தால், நாட்டை நிர்வகிப்பது எப்படி? எனவே, இவரைச் சுற்றி இருந்த அடியவர்கள் கூட்டத்தை அப்புறப்படுத்த எண்ணி, இவரது அமைச்சர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர். ஒருமுறை அரண்மனைக்கு வந்திருந்த அடியார்களுடன் குலசேகரர் பகவத் விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தபோது, அமைச்சர்கள் ஒரு நவரத்தின மாலையை ஒளித்து வைத்துவிட்டு, அந்த மாலையை அடியார்கள் திருடிக் கொண்டதாகக் குற்றம் சாட்டினார்கள். அடியார்கள்மீது பழிசுமத்தியது பொறுக்கமாட்டாத குலசேகரர், ஒரு பானையைக் கொண்டு வரச் செய்து அதில் கொடிய விஷமுள்ள கருநாகத்தை இடச் செய்தார். பிறகு 'ராமன்மீது ஆணையாக இந்தத் திருட்டை அடியார்கள் செய்திருக்கமாட்டார்கள்' என்று நான் சொல்வது உண்மையானால், இந்தக் கருநாகம் என்னைத் தீண்டாதிருக்கட்டும்' என்று சொல்லியபடி பானைக்குள் கையை விட்டார். கருநாகம் குலசேகரரை எதுவும் செய்யவில்லை. எனவே நடந்தது அமைச்சர்களின் சூழ்ச்சிதான் என்பதைப் புரிந்துகொண்டு, மகனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு, அரசப் பதவியைத் துறந்து திவ்வியதேச யாத்திரையை மேற்கொண்டார்.

முதலில் திருவரங்கம் சென்றார். அங்கு பவித்ரோற்சவ மண்டபம், மூன்றாம் மதில் உள்ளிட்ட பல்வேறு ஆலய திருப்பணிகளைச் செய்தார். திருவரங்கத்தில்தான் தனது அருமை மகளை ரங்கநாதருக்குத் திருமணம் செய்து மகிழ்ந்தார். இன்றும் சேரகுலவல்லியோடு ரங்கநாதர் காட்சி தருவதைக் காணலாம். பெரியாழ்வார் போலவே தனது மகளை அரங்கனுக்குத் திருமணம் செய்ததால் இவரும் 'மாதவன் மாமன்' எனும் பெருமை பெற்றார். திருமாலின் மீது பக்தி கொண்டு 105 பாசுரங்களைக் கொண்ட 'பெருமாள் திருமொழி' என்னும் பிரபந்தத்தை இயற்றினார். தலம்தோறும் சென்று திருமாலை வணங்கி பேறு பெற்றார். 8 வைணவத் தலங்களைத் தரிசித்துப் பாடி மங்களாசாசனம் செய்தார். திருமலை திருப்பதிக்குச் சென்ற குலசேகர ஆழ்வார் வெங்கடேசப்பெருமாளின் அழகில் மயங்கி பாடல்களைப் பாடினார். எனக்கு தேவ பதவி போன்ற உயர்ந்த பதவிகள் எதுவும் தேவையில்லை. திருவேங்கடத்துப் பொய்கையில் ஒரு மீனாகவோ, அல்லது ஏதேனும் ஒரு தாவரமாகவோ பிறக்கமாட்டேனா என்றெல்லாம் ஏங்கிப் பாடியவர், எப்போதும் திருவேங்கடவன் கருவறைப் படியாக இருந்து தினமும் பெருமாளின் பவள வாய் அழகை தரிசிக்கும் பேறு கிடைக்காதா என்றும் ஏங்கிப் பாடினார்.
'செடியாய வல்வினைகள் தீர்க்குந்திருமாலே
நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே.'
என்றெல்லாம் பாடினார்.
இவரது வேண்டுதல் பெருமாளை உருக்கியது. அதன் காரணமாகவே, குலசேகரரின் பெயரால் அந்தப் படி அழைக்கப்படும் பேறுபெற்றார். ஆம், இன்றும் திருமலையின் வாயிற்படி இவர் பெயராலேயே குலசேகரப்படி என்றே அழைக்கப்படுகிறது. இந்தக் குலசேகரப் படியைக் கடந்து தயிர்சாதம் நிரம்பிய ஒரே ஒரு மண்சட்டியைத் தவிர வேறு எந்த வைர,வைடூரிய, தங்க, வெள்ளி பாத்திரங்கள்கூட செல்வதில்லை.

தயிர் சாதம் நிரம்பிய ஒரே ஒரு மண்சட்டி மட்டுமே குலசேகரப் படியை தாண்டி பெருமாளிடம் செல்வதன் பின்னணியில், ஒரு ஏழை மண்பாண்டத் தொழிலாளி, பெருமாளிடம் கொண்டிருந்த பக்தியின் மகத்துவம் அடங்கியுள்ளது. பீமன் என்ற மண்பாண்டத் தொழிலாளி திருமலை பெருமாளின் மீது தீராத பக்தி கொண்டவன். இவன் செய்து தரும் மண்பாண்டங்கள் பெருமாளின் பூஜைக்குப் பயன்படுத்தப்பட்டது. பாண்டங்கள் செய்தது போக மீதமிருக்கும் மண்ணில் இவன் செய்து சூட்டும் மண் மலர்களை ஏற்றுக்கொண்ட பெருமாள், தொண்டைமான் அரசரின் தங்க மாலைகளைக் கூட ஏற்றுக் கொள்ளவில்லையாம். அத்தனை பேறுபெற்ற பீமனின் நினைவாகவே இன்றும் பெருமாளுக்கு மண்சட்டியிலேயே நைவேத்தியமாக தயிர் சாதம் அளிக்கப்படுகிறது.

ஆலயங்கள் பலவற்றை தரிசித்து மனம் மகிழ்ந்த குலசேகர ஆழ்வார், இறுதியாக திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோயில் திருத்தலம் வந்து அங்குள்ள பெருமானை தரிசித்து வைகுந்தலோகம் சென்றார். அரச போகங்களை எல்லாம் துறந்து அரங்கனின் சேவடிக்கே தன்னை ஒப்படைத்த குலசேகர ஆழ்வார், வைணவ அடியார்களுக்கு எல்லாம் ஓர் ஒப்பற்ற உதாரணப் புருஷர்.
No comments:
Post a Comment