Tuesday, March 27, 2018

நாணயம் விகடன் - 01 Apr, 2018நடப்புPosted Date : 06:00 (25/03/2018) “அம்மா கற்றுத்தந்த நேர்மை” - பெருமையாய் சொன்ன டெக் மஹேந்திரா உயரதிகாரி

“அம்மா கற்றுத்தந்த நேர்மை” - பெருமையாய் சொன்ன டெக் மஹேந்திரா உயரதிகாரி

‘‘இன்றைக்கு அமெரிக்காவில் இருக்கும் பல பெரிய கம்பெனி களுக்குச் சென்று பல அதிகாரிகளைத் தினமும் சந்திக்கிறேன். பல சமயம் முடிவெடுக்க முடியாத அளவுக்கு பல இக்கட்டான சூழ்நிலைகள் வருகின்றன. அப்போதெல்லாம் சரியான முடிவெடுக்க எனக்கு உதவியாக இருப்பது, என் அம்மா கற்றுத் தந்த பாடம்தான்’’ என்று சொன்னவர் சாதாரண ஆளில்லை, இந்தியாவின் ஐந்தாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக இருக்கும் டெக் மஹேந்திராவின் பிரசிடென்ட் (ஸ்ட்ராடஜிக் வெர்டிகல்ஸ்) சி.டி.எல் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் சி.டி. லட்சுமணன், சமீபத்தில் சென்னை வந்து, தனது நிறுவன ஊழியர்களுடன் பேசினார். அவர் பேசியதிலிருந்து சில துளிகள்...

“இப்போது வெற்றிகரமாகச் செயல்படும் நூறு கம்பெனிகளில் வெறும் 40 கம்பெனிகள்தான் 2030-ம் ஆண்டுவரை நிலைத்து நிற்கும். இது உண்மைதானா என்று யாரும் சந்தேகப்பட வேண்டாம். 15 ஆண்டுகளுக்கு முன்னாள் வெற்றிகரமாகச் செயல்பட்டுவந்த எத்தனை நிறுவனங்கள் இப்போது வெற்றிகரமாக இயங்குகின்றன என்று பார்த்தாலே இது உண்மை என்று புரியும். இன்று வெற்றிகரமான பிசினஸ் சூத்திரமாகக் கருதப்படும் ஃபார்முலா, அடுத்த சில ஆண்டுகளுக்குப் பிறகு செல்லுபடியாகாது.
ஒரு மரத்தில் வட்டம் வரைந்து அதைப் பார்த்து துப்பாக்கியால் சுடு என்றால், கொஞ்சம் பயிற்சி எடுத்து, சுட்டுவிடலாம். ஆனால், ஓடிக்கொண்டிருக்கும் மிருகத்தைச் சுடு என்றால் எவ்வளவுதான் பயிற்சியெடுத்தாலும் சுலபமாக அதைச் சுட்டுவிட முடியாது. உலகம், முன் எப்போதையும்விட வேகமாக எல்லாத் திசைகளிலும் மாறிவருவதால், நம்முடைய இலக்கு என்பது நகரும் இலக்குதான் என (Moving Target) ஆகிவிட்டது. 

நமது வேலையில் தினம் தினம் பல சவால்கள் வரும். எதிர்ப்புகள் வரும். எதிர்மறையான யோசனைகள் வரும். பாதைகளெல்லாம் அடைப்பட்டு, இருள் கவ்வும். எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பதில் குழப்பம் வரும். அதுபோன்ற நேரத்தில் நமது விழுமியங்கள்தான் (Values) நமக்குச் சுடர்விளக்காக வழிகாட்டும். இதை நான் எம்.பி.ஏ வகுப்புகளில் படிக்கவில்லை. என் அம்மாவிடமிருந்து படித்தேன்.   

சென்னை மண்ணடியில் இருக்கும் எங்கள் வீட்டின் ஒருபகுதியை வாடகைக்கு விட வேண்டிய அவசியம்  ஏற்பட்டது. அப்போது ஒரு பெரிய கம்பெனியின் உயரதிகாரி எங்கள் வீட்டை வாடகைக்கு எடுத்து, கம்பெனி குடோன் வைப்பதற்குக் கேட்டார். அவருக்கு வீட்டை வாடகைக்குத் தர என் அப்பா ஒப்புக்கொண்டார். அதற்கான ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திடும்முன், என் அம்மாவிடம் கொண்டுவந்து காட்டினார் என் அப்பா. 

‘‘எல்லாம் நீங்க சொன்னபடிதான் எழுதியிருக்கேன். ஆனா, ஒரே ஒரு வரி மாற்றியிருக்கிறேன் என்று அந்த அதிகாரி சொன்னாரே. அது என்ன வாக்கியம்?’’ என்று கேட்டார் என் அம்மா. ‘‘இந்தக் கிடங்கில் எங்கள் கம்பெனி தயாரிக்கும் எந்தவொரு பொருளையும் வைப்பதற்கு வீட்டின் உரிமையாளர் சம்மதிக்கிறார்’’ என்று திருத்தப்பட்ட வாக்கியத்தை அப்பா வாசித்தார். ‘‘டிடர்ஜென்ட் பவுடர் வைக்கத்தான் வாடகைக்குக் கேட்டாங்க. இப்ப ‘எந்த ஒரு பொருளையும்’னு சேர்த்து எழுதினா எப்படி? அவங்க கம்பெனியில மதுபானங்கள்கூடத்தான் தயாரிப்பாங்க. அதை நம்ம இடத்துல ஸ்டாக் செய்யக்கூடாது’’ என்றார். அப்பா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அம்மா ஒப்புக்கொள்ளவில்லை. 

வேறு வழியில்லாமல், அம்மாவின் கருத்தை அந்த அதிகாரியிடம் சொன்னார் அப்பா. அவருக்குக் கோபம் வந்துவிட்டது. ‘‘என் குடோனில் இதைத்தான் வைக்கலாம், இதையெல்லாம் வைக்கக்கூடாது என்று நீங்கள் எப்படி கண்டிஷன் போடலாம்?’’ என்று கேட்க, உள்ளே இருந்து வெளியே வந்தார் என் அம்மா. ‘‘அய்யா, எங்க குடும்பத்துல ஒருசமயம் சர்க்கரை ஆலை நடத்தினாங்க. அப்ப வீணாப்போகும் கரும்பு சக்கையைச் சாராய ஆலைக்காரங்க வாங்கிட்டுப் போவாங்க. அந்தச் சாராயத்தைக் குடிச்சு எத்தனைக் குடும்பங்கள் கெட்டுச்சுன்னு தெரியாது. அந்தப் பாவமோ என்னவோ, நாங்க நிறையக் கஷ்டங்களை அனுபவிச்சுட்டோம். நீங்க மது பாட்டில்களை குடோனில் வெச்சீங்கன்னா, அதனால எங்கக் குடும்பத்துக்கு பாதிப்புதான் ஏற்படும். அதனால வேணாம்’’ என்று உறுதியாக, அதேசமயம், அவர் புரிந்துகொள்கிற மாதிரி சொன்னார். 

ஒரு நிமிடம் யோசித்த அந்த அதிகாரி, “இந்தக் கிடங்கில் மதுபாட்டில்கள் தவிர, எங்கள் கம்பெனி தயாரிக்கும் எந்த ஒரு பொருளையும் வைப்பதற்கு வீட்டின் உரிமையாளர் சம்மதிக்கிறார்’ என்று மாற்றி எழுதித் தந்தார். 

இன்றைக்கும் தொழில் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் என் அம்மா காட்டிய நேர்மையான வழியைத்தான் நான் பின்பற்றுகிறேன்’’ என்று சொன்னபோது, எல்லோரும் கைதட்டிப் பாராட்டத் தவறவில்லை.

No comments:

Post a Comment