Wednesday, February 6, 2019

'ஈகோ'வை உடைப்பதே முதல்படி! - நன்றி: தினமலர் - Feb 2019


நன்றி: தினமலர் - Feb 2019

 'ஈகோ'வை உடைப்பதே முதல்படி!


ஆண் - பெண் சமத்துவத்தை கற்பிக்க வழி கூறும், எழுத்தாளர், ச.தமிழ்ச்செல்வன்: கல்வித் துறையில், புதிய பாடத்திட்டம் பற்றிய, ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், ஆண் - பெண் சமத்துவத்தை உருவாக்க, என்ன மாதிரியான பாடத்திட்டம் வைக்கலாம் என்று விவாதிக்கப்பட்டது.பாடத்தில் மட்டும் வைத்தால், ஆண் - பெண் சமத்துவம் வந்து விடாது. குழந்தைகள், பள்ளிக்கு வரும்போது, ஐந்து ஆண்டுகள் முடிந்து விடுகின்றன. எனவே, வீட்டிலிருந்தே இதை துவங்க வேண்டும். பெற்றோர் மத்தியில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வீட்டிலேயே, அம்மாவுக்கான வேலை, அப்பாவுக்கான வேலை என்பதை பார்த்து வளரும் குழந்தைகள், இந்த பேதம் சரி தான் என, நம்பி வளர்கின்றனர். இதை உடைக்க, வீட்டில் உள்ள வேலை எல்லாவற்றையும், இருவரும் பகிர்ந்து செய்ய வேண்டும். இதை வீட்டில் வழக்கப்படுத்தினால், அது, சமூகத்தில் இயல்பான விஷயமாக மாறும்.சமையல் மட்டுமல்ல... பாத்திரம் கழுவுவது, வீட்டைச் சுத்தம் செய்வது என, எல்லா வேலைகளையும், ஆண் குழந்தைக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். 'நாம் வாழ்வதற்காக தான் இந்த வேலைகளைச் செய்கிறோம். இதில் ஆண் வேலை, பெண் வேலை என்று எதுவும் இல்லை' என்ற மனநிலையை உருவாக்க, சிறு வயதிலிருந்தே வீட்டு வேலைகளில் ஆண் குழந்தைகளையும் பங்கெடுக்கச் செய்ய வேண்டும்.இதனால், பெண்ணின் வேலைச்சுமை குறைவதுடன், ஆணும், பெண்ணும் இணைந்து செலவழிக்கும் நேரம் அதிகரிக்கும். நம் சமூகத்தில், இயல்பாகவே ஆண் என்கிற அகந்தை உள்ளது. அந்த அகந்தை, வீட்டில் தான் உருவாகிறது. இந்த அகந்தை தான், ஆணாதிக்கமாகவோ, பாலியல் வன்முறையாகவோ வெளிப்படுகிறது.வேரிலேயே அந்த அகந்தையை அழிப்பதற்கு, ஆண் குழந்தைகளை அனைத்து வேலைகளிலும் ஈடுபடுத்த வேண்டும். உளவியல் ரீதியான மாற்றத்தை, இது உருவாக்கும்.திருமணத்துக்குப் பின,் மனைவியுடன் வீட்டு வேலைகளைப் பகிர, இப்போதைய வளர்ப்பு முறையே ஆண் குழந்தைகளுக்கு மனத்தடையாக அமைந்து விடுகிறது. மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவும் ஆண்களை, 'பொண்டுச்சட்டி' என்பதில் ஆரம்பித்து, பல பெயர்களில் கிண்டல் செய்வதும் வழக்கமாக உள்ளது. இவை மாற வேண்டும். இதுபோன்ற, 'ஈகோ'க் களை, ஆண்கள் மனதில் உடைக்க வேண்டும்.பெண்ணை அடிமைப்படுத்தவும், ஆளுமை செலுத்தவும், அவள் செய்யும் வேலைகளை இழிவுப்படுத்துவதும், அவள் மட்டுமே செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவதும் வஞ்சகமான சிந்தனை. இந்த மனநிலையை உடைக்க வேண்டும். ஆண் - பெண் சமம் என்பதற்கான முதல் படியும், முதல் பாடமும் இதுவே.

No comments:

Post a Comment