Thursday, August 20, 2015

பாதை இனிது... பயணமும் இனிது..! - 23

நன்றி: சக்தி விகடன் - 01 Sep, 2015
அன்பின் குழந்தையின் செவிலித்தாய் !
பாதை இனிது... பயணமும் இனிது..! - 23சுவாமி ஓங்காராநந்தர்
பெயருக்கு முன்னால் செல்வன் அல்லது செல்வி, திரு அல்லது திருமதி என்று போட்டுக்கொள்வது நம் மரபு. உலகில் வாழ்க்கை நடத்தச் செல்வம் இன்றியமையாதது. 'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பது வள்ளுவர் வாக்கு. 'செல்வத் திருமகளை திடம் கொண்டு சிந்தனை செய்திடுவோம்’ என்று பாடினார் மகாகவி பாரதியார். 
பொருள்செயல்வகை என்னும் அதிகாரத்தில், பொருளின் சிறப்பை யும், அதனை ஈட்டும் முறை பற்றியும் அழகாகக் கூறியுள்ளார் திருவள்ளு வர். எவ்விதச் சிறப்பும் இல்லாதவரைக்கூட, ஒரு மனிதராக மதிக்க வைக்கக்கூடிய ஆற்றல் பொருளுக்கு இருக்கிறது என்கிறார் அவர்.
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள். (திருக்குறள்: 751)
பணம் படைத்தவரைப் போற்றுவதும், அது இல்லாதவரைத் தூற்றுவதும்
உலகத்து மக்களின் இயல்பு என்பதை அடுத்த குறளில் கூறுகிறார்.
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு. (திருக்குறள்: 752)
பணம் பாதாளம் வரை பாயும் என்று கூறுவார்கள். பணம் என்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்துக்குச் சென்று, இருளை நீக்கக்கூடியது, நினைத்த காரியத்தைச் செய்து முடிக்கும் ஆற்றலை உடையது.
பொருள் எனப்படும் பணத்தைக் கொண்டு புண்ணியத்தைச் சேர்க்க வேண்டுமென்றால், இன்பத்தை அனுபவிக்க வேண்டுமென்றால், அது நல்வழியில் ஈட்டிய செல்வமாக இருக்க வேண்டியது மிக முக்கியம். 'தீவினையின்றி ஈட்டல் பொருள்’ என்றார் ஔவையார். முன்பு செய்த நல்வினைப் பயனாகத்தான் இப்பிறவியில், ஒருவர் வசதி படைத்த சூழலில் வாழ்கிறார். இனி வருங்காலமும் அவ்வாறு அமைய வேண்டும்
எனில், புண்ணியம் தேவை. அந்தப் புண்ணியமும் இன்பமும், தீமை இல்லாத வழியில் சேர்த்த பொருளால்தான் கிட்டும் என்பது திருவள்ளு வரின் திட்டவட்டமான கருத்து.
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள். (திருக்குறள்: 754)
பொருளை எந்த வழியில் ஈட்டுகிறோம் என்பது மிக முக்கியம். அருளோடும் அன்போடும் பொருந்தாத வழிகளில் ஈட்டிய செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல், அதனைத் தீமையானது என்று விலக்கிவிட வேண்டும்.
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள இடல் (திருக்குறள்: 755)  என்பது வள்ளுவர் வாக்கு.
அருளுடைமை என்றோர் அதிகாரத்தை அருளியிருக்கிறார் திருவள்ளுவர். அதில் 'அருட்செல்வம் செல்வத்துட் செல்வம்’ என்றும், 'அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை’ என்றும் கூறியுள்ளார். அத்தகைய அருள் அல்லது இரக்கம்  வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் வாடும் தயை என்பது அன்பிலிருந்து உதிப்பது. அருள் என்பது அன்பின் குழந்தை. அருள் எனப்படும் அன்பின் குழந்தை, பொருள் எனப்படும் செவிலித்தாயால் வளர்க்கப்படுகிறது என்று அழகான உவமையோடு, ஆணித்தரமாகக் கூறுகிறார் திருவள்ளுவர்.
அருளென்னும் அன்பின் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு (திருக்குறள்: 757)
அது மட்டுமல்ல, சிறந்த வழியில் பொருளை ஈட்டியவரை, அறமும் இன்பமும் தானே வந்தடைகின்றன என்பது வள்ளுவர் வாக்கு!

No comments:

Post a Comment