Sunday, November 27, 2016

வார்த்தைகளின் வலிமை; எண்ணங்களின் எழுச்சி thanks to dinamalar


பதிவு செய்த நாள்

18நவ
2016 
01:44

நாம் பேசும் வார்த்தைகளுக்கு வலிமை, நினைக்கும் எண்ணங்களுக்கு எழுச்சி இருக்கிறது என்பதை சில நேரங்களில் உணர்ந்திருப்போம். நல்லதை பேசினால் நல்லதும், கெட்டது பேசினால் கெட்டதும் நடக்கும் என்பது நுாற்றுக்கு, நுாறு உண்மை. ஜப்பான் டாக்டர் மாசாரு இ மோட்டோ என்பவர், மனித எண்ணங்கள், வார்த்தைகள், உணர்வுகள், இசை, பிரார்த்தனை ஆகியவை நீரில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மிகத்தெளிவாக ஆராய்ச்சி செய்துள்ளார்.நீர், அது உள்வாங்கும் தகவல்களுக்கு ஏற்ப தரம் மாறுகிறது என்று கண்டார். உதாரணமாக 'நன்றி' என்று ஒரு துண்டு காகிதத்தில் எழுதி ஒரு குடிநீர் பாட்டிலில் உள் முகமாக ஒட்டி வைத்தார். பின், அந்த நீரை உறைய வைத்து அந்தப் பனிப் படிகத்தை ஒரு பிரத்யேகமான நுண்ணோக்கி மூலம் பார்த்ததில் அது அழகான வடிவத்திலிருப்பதை கண்டார்.அந்த பாட்டிலில் நன்றி என்ற வார்த்தையை எடுத்து விட்டு 'நீ முட்டாள்' என்ற வார்த்தை ஒட்டப்பட்டது. பின்னர் அதன் நீர்ப் படிகத்தை பார்த்த பொழுது அது வடிவமில்லாமல் கலங்கியிருக்கக் கண்டார். இந்த ஆராய்ச்சியின் முடிவில், நீருக்கும் உணர்வு இருக்கிறது என்று நிரூபித்தார்.எண்ணங்களும் வார்த்தைகளும் நீருக்கு வார்த்தைகளின் சக்தியை கிரகிக்கும் திறன் உள்ளது. உள்ளதிலேயே அன்பு, நன்றி என்ற வார்த்தைகள் தான் மிக அழகான நீர்ப்படிகங்களைக் கொண்டிருந்தன. டாக்டர் மோட்டோவின் கொள்கைக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.ஏனென்றால், நம் ஸ்துால உடல் 70 சதவீதம் நீரால் ஆனது. பிறக்கும் முன், குழந்தை கர்ப்பத்தில் நீரில் தான் இருக்கிறது. டாக்டர் இ மோட்டோ எல்லா மூலக்கூறுகளிலும் கலந்திருக்கும் ஒரு சக்தியினையும் அது வெவ்வேறு அதிர்வு நிலையில் இருப்பதையும் விளக்கினார். இதை ஹேடோ சக்தி என்று குறிப்பிட்டார்.இதன் மூலம், நம்முடைய நல்லெண்ணங்களும், வார்த்தைகளும், நம்மிலும், நம்மை சுற்றியுள்ளவர்களிடமும், ஏன் இந்த பிரபஞ்சத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமையுள்ளது. நம்முடைய எண்ணங்கள் அதே போன்ற எண்ணங்களை வேறு இடங்களிலும் ஏற்படுத்தும் திறன் பெற்றவை என்பதை, டாக்டர் இ மோட்டா பின்வரும் உதாரணம் மூலம் தெளிவு படுத்ததுகிறார்.மனதின் அதிர்வலைகள் நாம் பேசும் வார்த்தைகளுக்கு மிகவும் வலிமையிருக்கிறது. நம் மன அதிர்வலைக்கு ஏற்ற ஒத்த அதிர்வலைகள் உள்ளவர்களிடம், நம்முடைய வார்த்தைகள் அதே போன்ற எண்ணங்களைத் துாண்டிவிடும் சக்தியுடையது. உதாரணமாக ஒரு தற்கொலை நடந்திருக்கிறது என்றால் அதைப்பற்றி அதிகம் பேசும் போது, ஊடகங்களில் அது காட்டப்படும் போதும், அதே போன்ற சோர்ந்த மனம் உள்ளவர்கள் மனதில் தற்கொலை எண்ணத்தைத் துாண்டிவிடும். (இது போன்ற சம்பவத்தைக் கேள்விப்பட்டால் சம்பந்தப்பட்ட ஜீவாத்மாவிற்காக பிரார்த்தனை செய்துவிட்டு அதைப்பற்றி நினைக்காமல், பேசாமல் இருப்பது நல்லது).வீட்டில் ஒருவர் எரிச்சலாக பேசினால் மற்றவர்களும் எரிச்சலுடன் பேச ஆரம்பிப்பதைப் பார்க்கிறோம். நம்முடைய எண்ணங்களும், வார்த்தைகளும் ஒத்த அதிர்வலைகள் உள்ள மற்றவர்களைப் பாதிக்கும். அதே போல் மற்றவர்களுடைய எண்ணங்களும், வார்த்தைகளும் நம்மையும் பாதிக்கும் சக்தி பெற்றவை.தியானம் மற்றவர்களுடைய எதிர்மறை எண்ணங்களும், வார்த்தைகளும் நம்மை பாதிக்காமல் காக்க உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, தியானம், பிரார்த்தனை, சேவை, அன்பு, கருணை, நன்றி, நம்பிக்கை போன்ற நற்பண்புகள் மூலம் நம் அதிர்வலைகளை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். இப்படிச் செய்தால் மற்றவர்களின் எதிர்மறை எண்ணங்கள், வார்த்தைகள் நம்மைப் பாதிக்காது.எதிர்மறை எண்ண வார்த்தைகள் பொதுவாக குறைந்த அதிர்வலைகள் உள்ளவர்களிடம் தான் இருக்கும், ஆகவே நம் அதிர்வலைகளை உயர்த்திக் கொள்ளும் பொழுது, மற்றவர்களுடைய எதிர்மறை எண்ண வார்த்தைகள் நம்மைப் பாதிக்காது. டாக்டர் இ மோட்டோ, நம்முடைய பெரும்பான்மையான நோய்களுக்கு காரணம் நம் எதிர்மறை உணர்வுகள் தான் என்று திட்டவட்டமாகக் கூறினார். ஏதோ காரணத்திற்காக நாம் உணர்ச்சிவசப்படும் போது, நம்மில் நுண்ணிய அணு அளவில் (அணுவை விட சிறியது) பாதிப்பை உண்டாக்கும். உணர்ச்சி வசப்படுதல் நீடித்தால் உடல் உறுப்புகளை பாதிக்கிறது.ஒவ்வொரு நோயின் வளர்ச்சிக்குப் பின் நிச்சயம் ஒரு காரணம், சரித்திரம் இருக்கும். எனவே, நாம் இந்த பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால், எளிமையாக நுண் அணுக்கள் நிலையிலேயே குணமாக்க முடியும். முதலில் நம் எதிர்மறை எண்ணங்களும், உணர்வுகளும் தான் நம்முடைய நோய்கள் என்பதை உணர வேண்டும்.60 மில்லியன் செல்கள் அலோபதி மருத்துவத்தில் திசுக்கள் நிலையில் தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாம் நம்முடைய எண்ணங்களையும், உணர்வுகளையும் நேர்மறையாக கையாளத் தெரிந்து கொண்டு, அதை பழக்கத்தில் கொண்டு வந்தால் எவ்வித நோயையும் குணப்படுத்திவிடலாம். நம் ஸ்துால உடலில் 60 மில்லியன் செல்கள் உள்ளன. அவை எப்பொழுதும் துடிப்பான நல்ல அதிர்வலைகளுடன் செயல்பட்டுகிறது. அந்த அதிர்வுகளில் பாதிப்பு ஏற்படும் போது நோய் உண்டாகிறது. நம் ஒட்டு மொத்த வாழ்க்கையும் அதிர்வுகளின் ஆதிக்கத்தில் தான் நடக்கிறது. இருதயம் துடிப்பது நின்றால் மரணம் ஏற்படும் என்கிறோம். நோயாளிகளின் அதிர்வுகளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தாலே எளிதாக குணமாகி விடுவார்.வார்த்தைகளின் வலிமை டாக்டர் இ மோட்டோ, வார்த்தைகளுக்கு மிகவும் சக்தியான அதிர்வலைகள் உள்ளன என்று விளக்குகிறார். நேர்மறையாக இருந்தால் அதன் விளைவுகளும் பலன்களும் மிகவும் அதிகமாக உள்ளது. பிரார்த்தனை மிகவும் அதிகமான 'பாஸிடிவ்' சக்தியை ஏற்படுத்துகிறது என்று கூறுகிறார். ஆகவே புனித நுால்கள், பாடல்களை பாராயணம் செய்வதும் வழக்கமாக பிரார்த்தனை செய்வதும் நமக்குள்ளும், நம்மைச் சுற்றியும் நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்தி தீய சக்தியிலிருந்து காப்பாற்றும்.பிரார்த்தனையின் பலனை எடுத்துக்காட்ட டாக்டர்.இ மோட்டோ ஓர் ஏற்பாடு செய்தார். ஜப்பானிலுள்ள பியூஜிவாரா என்ற அணை பாசி, குப்பையால் மாசுப்பட்டிருந்தது. புத்தமதத்தை சேர்ந்த துறவிகள் பலர் ஒரு குழுவாக வந்த அணையின் அருகிலிருந்து பல நிமிடங்கள் பிரார்த்தனை செய்தனர். பிரார்த்தனைக்கு முன், பின் அணையின் நீர் பரிசோதிக்கப்பட்டது. பிரார்த்தனைக்குப் பின் நீர் சுத்தமாகியிருப்பது ஆராய்ச்சியில் தெரியவந்தது.அன்புடன் சமையல் தண்ணீர் வைத்திருக்கும் கண்ணாடி ஜாடியில் உள்முகமாக அன்பு, நன்றி போன்ற வார்த்தைகளை ஒட்டி வைக்கவும். அதிலிருந்து 5 டம்ளர் நீராவது குடிக்க வேண்டும். சமைக்கும் போது அன்பு கலந்த முழுமனதுடன் சமைத்தால் அந்த உணவில் நேர்மறை சக்தி அதிகமாக இருக்கும். நாம் குடிக்கும், குளிக்கும் நீர், உணவிற்கு நன்றி சொல்லுங்கள். காற்றில் நீரின் ஈரப்பதம் இருக்கிறது. நாம் வாழ்வின் எல்லா விஷயங்களுக்கும் நன்றி சொல்லும் போது, அது நம் காற்று மண்டலத்தில் சக்தியை அதிகப்படுத்தி, நமக்கும் நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் நன்மையைத் தரும்.- முனைவர். ஜெ. விக்னேஷ் சங்கர்மனநல ஆலோசகர், மதுரை.

No comments:

Post a Comment