Wednesday, January 18, 2017

Advertisement

பதிவு செய்த நாள்

15ஜன
2017 
00:00
எங்கள் உறவினர் வட்டத்தில், ஒரு பெரியவர் இருக்கிறார். அவரிடம், 'ஐயா எப்படி இருக்கீங்க, சவுக்கியமா...' என்று கேட்டால் போதும், 'நரம்பை இழுக்குது; இடுப்பை புடிக்குது; தலை, விண்ணு விண்ணுங்குது; சாப்பிட, தூங்க முடியலை; செலவு வேற எக்கச்சக்கமா ஆகுது... பாருங்க, இந்த மருந்து பில்களை... படிங்க இந்த மருத்துவ பைலை...' என்று, நீட்டி முழக்கி, ஏன் தான் கேட்டோமோ என்று நினைக்கும்படி செய்து விடுவார்.
என் நண்பரின் மகளுக்கு, புற்றுநோய்; ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கேள்விக்குறி தான்! ஆனாலும், அப்பெண்ணை பார்த்து, நலம் விசாரிக்கும் போதெல்லாம், 'இப்ப பரவாயில்லை... நல்லா தூங்குறேன்; ஒழுங்கா சாப்பிடுறேன்...' என்று, பதில் சொல்வார்.
பொதுவாகவே, நமக்கு மற்றவர்களின் பாராட்டை பெற வேண்டும் என்ற உணர்வுக்கு இணையாக, மற்றவர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கும் எண்ணமும், அதிகம் உள்ளது.
நம் சுண்டு விரலில் உள்ள, சிறு பிளாஸ்திரியை பற்றி கூட, பார்க்கிற அத்தனை பேரும் கேட்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, நமக்குள் இருக்கிறது.
சந்தித்து, சிறிது நேரம் ஆகியும், அவர்கள் கேட்காவிட்டால், அவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக, அவர்களின் கண்களில் படும்படியாக, சுண்டு விரலை காட்டி, அவர்களது கவனத்தை ஈர்க்கும், தவறான போக்கும் சிலரிடம் உள்ளது.
உடல் நல குறைவு என்றதும், நேரில் வந்தோ, தொலைபேசியிலாவதோ விசாரிக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, நம்மில் பெரும்பாலோருக்கு உண்டு.
அது மட்டுமல்ல, அவ்வாறு விசாரிப்பவர்கள் தான் நம் மீது உண்மையான பாசம் கொண்டவர்கள்; மற்றவர்கள், அக்கறையற்றவர்கள் என்கிற முடிவிற்கு வந்து, விசாரிக்காதவர்களை கறுப்பு பட்டியலில் தள்ளுகிற மனநிலையும், பலருக்கு உண்டு!
'என் வியாதி பற்றி எல்லாருக்கும் தெரிய வேண்டும்; அதுபற்றி, அவர்கள் அக்கறை காட்ட வேண்டும்...' என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறதல்லவா, இது, அடிப்படையில் தவறானது.
நம் துன்பம் கண்டு, பிறர் துன்புற வேண்டும் என்கிற எண்ணமே, வாழ்க்கை குறித்த தவறான கண்ணோட்டமாகும்.
ஒரு சினிமா பாடல் வரி இது...'எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றெண்ணும் போது, என் அழுகை நின்றது...' இதுவன்றோ, ஆரோக்கிய மன நிலை! முடிந்த வரை, மற்றவர்களுடன், இனிய, மகிழ்ச்சியான செய்திகளை, பகிர்ந்து கொள்ள வேண்டுமே தவிர, நம் வியாதியைப் பற்றி பேசி, பிறரை துன்புறுத்தக் கூடாது.
'கையில என்ன இவ்வளவு பெரிய கட்டு...' என்று, ஒருவர் பதறினால், 'அது ஒண்ணுமில்லை, சின்ன விபத்து; அது கிடக்குது விடுங்க. உங்க பையன் வேலை என்னாச்சு...' என்று, விஷயத்தை திசை திருப்ப வேண்டும்.
'சே... எவ்வளவு வலி, வேதனையிலும், நம் பிரச்னை பற்றி, அக்கறைபடுகிறாரே...' என்று, அவர்கள் உள்ளுக்குள் நெகிழ வேண்டும்.
'நான், என்ன தவறு செய்தேனோ, இப்படியொரு வியாதியில் மாட்டி கொண்டேன்; இது, மற்றவர்களுக்கு வரக் கூடாது. நான், இந்த மருத்துவமனையில் போய் மாட்டி கொண்டேனே... இப்படி அநியாயமாய், 'பில்' தீட்டி விட்டனரே...' என்கிற கோணத்தில், வியாதி புராணம் பாடலாம்; தவறில்லை. 
மாறாக, கேட்கிறவர்களிடம் எல்லாம், அப்போது தான், முதல் முறை சொல்வது போல், நூற்றி ஓராவது முறையும், புராணம் பாட வேண்டியதில்லை.
வியாதி பற்றியே பேசும் வியாதிக்கு, நிவாரணம் சொல்லி விட்டேன்; ஜீரணித்து ஏற்பீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.

No comments:

Post a Comment