Monday, April 24, 2017


‘கையொன்று செய்ய, விழியொன்று நாட’- பட்டினத்தார் பாடல் (Post No.3846)

by Tamil and Vedas
e28ad-seven-layers-of-the-aura
Written by London swaminathan
Date: 24 APRIL 2017
Time uploaded in London:- 7-59 am
Post No. 3846
Pictures are taken from various sources; thanks.

தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உலகத்தில் வேறு எந்த நூல்களிலும் காண முடியாத ஒரு கருத்து காணப்படும். அதாவது,  மனம், மொழி, மெய் (உடல்) மூன்றிலும் தூய்மையுடன் இருத்தல். சம்ஸ்கிருதத்தில் இதை மனோ, வாக், காயம் என்பர். திரிகரண சுத்தி என்றும் சொல்லுவர். ஒருவருக்கு இது இருக்குமாகில் அவர் அபூர்வ சக்தி பெறுவார். மாய மந்திரங்களைச் செய்ய முடியும். இந்த மூன்று உறுப்புகளிலும், கோபம், காமம், லோபம் (பேராசை) இவைகள் இல்லாவிட்டால் அபூர்வ சக்திகள் தானாகவே வரும்; விலங்குகளும் அவருக்குக் கட்டுப்படும். இதைப் பல அடியார்களின் வாழ்வில் காண்கிறோம்.

இதைப் பட்டினத்தார் அழகாகப் பாடுகிறார்:

கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும் யான்
செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே
1df6f-shiva2bbronze2bcolor
பட்டினத்தடிகள் இப்படிப் பாடினாலும் இது நம்மைப் போன்ற சாதாரண மக்களின் நிலையைக் குறிப்பதேயன்றி அவர் அப்படி திரிகரண சுத்தி இல்லாமல் இருந்துவிட்டதாக நாம் நினைத்துவிடக் கூடாது. அது  அவரது முன் பகுதி வாழ்க்கையில் நடந்திருக்கலாம்..

பிற்கால வாழ்வில் அவர் மெய்யுணர்வு பெற்றவரானதாலேதான் இப்படிப்பட்ட அற்புதமான பாக்கள் வெளிவந்தன. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்,  இன்றும் நாம் படிக்கிறோம்.


இதே கருத்தை நீதி வெண்பா பாடலிலும் காணலாம்:-

மனம் வேறு சொல் வேறு மன்னு தொழில் வேறு
வினை வேறு பட்டவர்பால் மேவும் -- அனமே
மனமொன்று சொல்லொன்று வான் பொருளும் ஒன்றே
கனமொன்று மேலவர் தங் கண்

--நீதி வெண்பா

பொருள்:-
அனமே= அன்னம் போன்ற நடையுடைய அழகியே! கேள்!
வினை வேறுபட்டவர்பால்= நல்ல செய்கை இல்லாத கீழோரிடத்தில்
மனம் வேறு சொல் வேறு மன்னு தொழில் வேறு மேவும் = மனமும் சொல்லும் செயலும் வேறு வேறுபட்டதாய் இருக்கும்
கனம் ஒன்று மேலவர் தங்கண் = பெருமை மிக்க பெரியோரிடத்தில்
மனமொன்று சொல்லொன்று வான் பொருளும் ஒன்றே = மனமும், சொல்லும், செயலும் ஒன்றேயாம்.

தமிழில் இதற்கு அழகான மூன்று சொற்கள் உண்டு:
வாய்மை = வாயினால் தீமை செய்யாதிருத்தல்
உண்மை = உள்ளதாற் பொய்யாதொழுகுதல்
மெய்மை = உடலினால் தீங்கு செய்யாதிருத்தல்.

No comments:

Post a Comment