Friday, July 27, 2018

உணவு கட்டுப்பாடு இருந்தால் நோயிலிருந்து விடுதலை பெறலாம் கே.எம்.சி.எச்., மருத்துவமனை உறுதி thanks to dinamalar.com

பொது செய்தி 

தமிழ்நாடு

உணவு கட்டுப்பாடு இருந்தால் நோயிலிருந்து விடுதலை பெறலாம் கே.எம்.சி.எச்., மருத்துவமனை உறுதி165

உணவு, கட்டுப்பாடு, இருந்தால், நோயிலிருந்து,விடுதலை பெறலாம்,கே.எம்.சி.எச்., மருத்துவமனை உறுதி
''உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்; மூளையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்,'' என்கிறார் கே.எம்.சி.எச்., மருத்துவர் அருள்செல்வன்.

அவர் கூறியதாவது:
உணவு விஷயத்தில் பலர் தாராளமாக நடந்து கொள்கின்றனர். நாவை கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டும்; மூளையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். பப்ஸ், டீ, வடை, போண்டா, பன், கேக், என தினமும் உட்கொண்டால், ரத்தத்தில் அவை அனைத்தும் ஊறிப்போய் விடும். ரத்தம் கெட்டியாகி, கட்டியாகி ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட துவங்கிவிடும்.
ஒருவர், அதிக கொழுப்புள்ள பொருட்களை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், அது சிறுசிறு கட்டிகளாக ரத்தத்தில் மிதக்க துவங்கி, ரத்த குழாய்களில் படிகிறது. நாளடைவில் படிந்த கட்டிகள், அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது. அல்லது, ரத்தத்தில் சேரும் கொழுப்பானது, ஏதாவது ஒரு நுண்ணிய ரத்தக் குழாயில் சென்று அடைப்பை ஏற்படுத்துகிறது. மூளையில் இப்படி அடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்டோர், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தொடர்ந்து புகையிலை, புகை பழக்கம், ஒரே இடத்தில் அமர்ந்து, ஓய்வு இல்லாமல் வேலை செய்வோர், அதிக கொழுப்பு உள்ளவர்கள், தினமும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பவர்கள் என பலரையும் பாதிக்க கூடியது ரத்தக்குழாய் அடைப்பு.
மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் அடைப்பு, மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில மணி நேரத்துக்குள் சிகிச்சை செய்யாவிட்டால், சொந்தமாக எதையும் செய்ய முடியாத நிலை ஏற்படும். சுயமாக இயங்கவில்லை என்றால், சிரமம் தனக்கு மட்டுமின்றி, குடும்பத்தினருக்கும் ஏற்படும். எனவே மூன்று மணிநேரத்துக்குள் எவ்வளவு விரைவாக சிகிச்சை அளிக்க முடியுமோ, அதற்கேற்ப குணமடையவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மூன்று மணிநேரத்துக்குள் அளிக்கப்படும் சிகிச்சையில், 80 சதவீதம் வரை பாதிப்பை குறைக்கலாம்.
பக்கவாதம், பலருக்கு தொழில் ரீதியான நோயாக கூட உருவாகலாம்; சிலர், தொடர்ந்து மாத்திரை எடுத்து வந்து, திடீரென நிறுத்துவதாலும் ஏற்படலாம். மூளையில் ரத்த ஓட்டம் தடைபடும்போது, பிரச்னைகள் அதிகமாகின்றன. பக்கவாதம் வரும் முன் தடுக்க, தினமும் நடைப்பயிற்சி செய்யுங்கள்.
வாரத்தில் மூன்று நாட்களாவது, 45 நிமிடம் நடைப்பயிற்சி மிகவும் அவசியம். 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு, உணவு விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. கொழுப்புள்ள உணவு பொருட்களை தவிர்த்தல் வேண்டும்.பக்கவாதம் வந்த பின், சிகிச்சைக்குப்பின் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உணவுக்கட்டுப்பாடு மட்டுமின்றி, முடநீக்கியல் பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தினரின் அரவணைப்பால்மட்டுமே, பக்கவாதத்தின் பாதிப்பிலிருந்து ஓரளவு மீள முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மேலும் விபரங்களுக்கு, கே.எம்.சி.எச்., அவிநாசி ரோடு, கோவை.மொபைல் : 7339333485.

No comments:

Post a Comment