Wednesday, December 26, 2018

Posted Date : 06:00 (16/12/2018) குழந்தைகளுக்குத் தனியறை... பரவலாகும் கலாசாரம் thanks to doctor vikatan.com

குழந்தைகளுக்குத் தனியறை... பரவலாகும் கலாசாரம்

அசோகன், மனநல மருத்துவர்குடும்பம்
`பெட்ரூம் கல்ச்சர்’ (Bedroom  Culture) - இந்த வார்த்தைக்கான அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா அல்லது இந்த வார்த்தையை நீங்கள் முன்னெப்போதும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
மேலைநாடுகளிலுள்ள குழந்தைகள்  பதின்பருவத்தை எட்டிப் பார்த்ததுமே அவர்களுக்கென்று தனியறை ஒதுக்கப்பட்டுவிடும். தங்குதல், தூங்குதல் என்று எல்லாமே அந்த அறையில்தான் அவர்களுக்கு நடக்கும். தங்களுக்கான உலகத்தை அவர்கள் அதில் கட்டமைத்துக்கொள்வார்கள். இப்படி சற்று வயது வந்த குழந்தைகள் தனியறையில் தூங்குவதை `பெட்ரூம் கல்ச்சர்’ என்று அவர்கள் அழைக்கிறார்கள். மேலைநாடுகளில் மட்டுமல்ல, நம் ஊரிலும்கூட இப்போது இந்தக் கலாசாரம் வேகமாகப் பரவிவருகிறது. இங்கேயும்கூட வயது வந்த பிள்ளைகளில் பலர் அவர்களுக்கான தனி அறையில்தான் தூங்குகிறார்கள்.

இப்படி குழந்தைகள் தனியறையில் தூங்குகின்ற இந்த பெட்ரூம் கல்ச்சர் நம் ஊரிலிருக்கும் குழந்தைகளுக்கு சரிவருமா... குழந்தைகள் தனியறையில் படுப்பது அவர்களது உடல், மன வளர்ச்சிக்கு நல்லதா, கெட்டதா? மனநல மருத்துவர் அசோகனிடம் பேசினோம்.
``குழந்தைகள் தனியறையில் இருப்பது கெட்டது என்றோ, பெற்றோருடன் சேர்ந்திருப்பது நல்லது என்றோ எதுவும் கிடையாது. ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பொறுத்து இதை இரண்டுவிதங்களாகப் பார்க்கலாம். குழந்தை அதிகச் சிரமமில்லாமல் வளர வேண்டும் என்பதற்காகத் தனியறை ஒதுக்கும் பெற்றோர் இருக்கிறார்கள். குடும்பக் கஷ்டம் தெரிந்து வளர வேண்டும் என்பதற்காக, குழந்தைகளை தங்களுடன் ஒரே அறையில் படுக்கவைத்துக்கொள்ளும் பெற்றோரும் இருக்கிறார்கள். இது அந்தந்தக் குடும்பத்தின் சூழ்நிலை சார்ந்த அணுகுமுறை. 

இன்றைக்கு வீட்டின் ஒவ்வோர் அறையிலும் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும் அளவுக்கு வாழ்க்கைமுறை மாறிவிட்டது. அதைவிட எல்லோர் கைகளிலும் செல்போன்கள் இருக்கின்றன. வசதி குறைந்தவர்கள்கூட செல்போன் வைத்திருக்கிறார்கள். செல்போன் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு இலவச டேட்டாக்களை வாரி வழங்குகின்றன. இதன் காரணமாக ஒரே அறையில் இருந்தால்கூட ஆளுக்கொரு மொபைலை கையில்வைத்தபடி குழந்தைகளும் பெற்றோரும் தனித்து வாழ்கிறார்கள். 

நேரடியாக மனிதர்களைப் பார்த்துப் பேசுவதைவிட, மனிதர்களுக்கு இடையே செல்போன் என்னும் சாதனம்தான் பேசிக்கொண்டிருக்கிறது. முகம் தெரியாத மனிதர்கள் அனுப்பும் செய்திகளை, வீடியோக்களை என்ன ஏது என்றுகூட ஆராயாமல் மற்றவருக்கு அனுப்புகிறோம். அது மட்டுமல்ல, முகம் தெரியாதவர்களைக்கூட முகநூல் வழியாக நட்பாக்கிக்கொள்கிறோம். அந்த அளவுக்கு செல்போனும் இணையமும் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. அதனாலேயே குழந்தைகளைத் தனியறையில் படுக்க வைக்கும்போது அவர்கள் அங்கே என்ன செய்கிறார்கள் என்று கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
`என் குழந்தை ஐபாட் யூஸ் பண்ணுவான்’ என்று நிறைய அம்மாக்கள் பெருமையாகப் பேசுவார்கள். ஆனால், இத்தகைய மின்னணுச் சாதனங்கள் குழந்தைகள் நல்ல முறையில் வளரப் பெரும் தடையாக இருப்பது பற்றி யாரும் யோசிப்பதில்லை. குறிப்பாக 30, 40 ஆண்டுகளில் நடந்த தொழிற்புரட்சி, குழந்தைகளின் உணர்வுகளைத் தற்போது மழுங்கடித்துக் கொண்டிருக்கிறது. நமக்கு என்ன தேவையோ, அது நமக்குக் கிடைப்பதே சிறந்தது. ஆனால், இந்தத் தொழிற்புரட்சி பல்வேறு குப்பைகளை நமக்கும் நம் குழந்தைகளுக்கும் தருகிறது. முன்பெல்லாம் குழந்தைகளை மகிழ்விக்கவும் ஆறுதல் சொல்லவும் தாத்தாவும், பாட்டியும், அத்தையும், சித்தப்பாவும், மற்ற உறவுகளும் இருந்தார்கள். ஆனால், கூட்டுக் குடும்ப வாழ்க்கை தற்போது அழிந்துவிட்டது. வேலைவிட்டு வீடு திரும்பியதும், அவரவர் வாட்ஸ்அப் சாட்டிங்கில் மூழ்கிவிடுகின்றனர். திரைப்படத்துக்குச் செல்லும்போது இடைவேளையில்கூட  செல்போனைப் பார்க்கிறோம். இரவில் கண் விழித்தால்கூட உடனே செல்போனில் என்ன மெசேஜ் வந்திருக்கிறது என்று பார்க்கத் தவறுவதில்லை. இப்படி நாம் மின்னணுச் சாதனங்களுக்கும் இணையத்துக்கும் அடிமையாகிக்கிடக்கிறோம். சுயநலம் நிறைந்து, மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற அடிப்படை மனிதநேயத்தை மறந்து, உணர்ச்சியற்றவர்களாகக் குழந்தைகளை மாற்றிக்கொண்டிருக்கிறது இந்தத் தொழிற்புரட்சி.
தொழிற்புரட்சி காரணமாக குடும்பத்துக்குள் திருட்டுத்தனம் நுழைந்துவிட்டது. நம் பர்ஸைக்கூட பகிரங்கமாக வெளியேவைக்கும் நாம், செல்போனை வீட்டின் ஹால் போன்ற இடங்களில்வைக்க பயப்படுகிறோம். நம் மொபைலை யாராவது எடுத்துவிட்டால், உடனே ஓடிவந்து பிடுங்கிவிடுகிறோம். அந்த அளவுக்கு ஒவ்வொருவரின் செல்போனிலும் ரகசியங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இப்போதெல்லாம் சற்று வளர்ந்த குழந்தைகள்கூட தங்களுக்கென செல்போன் வைத்திருக்கிறார்கள். `உன் செல்போனைக் கொஞ்சம் கொடுப்பா’ என்று அம்மாவோ, அப்பாவோ கேட்கும்போது எத்தகையப் பதற்றமும் இல்லாமல் உங்கள் குழந்தை செல்போனைக் கொடுக்கிறதா என்பதை கவனியுங்கள். செல்போனை உங்களிடம் கொடுக்காமல் திணறினாலோ, அநியாயத்துக்குப் பதறினாலோ குழந்தைகள் வழி தவறுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 

பாத்ரூம் செல்லும்போதுகூட சிலர் கையுடன் செல்போனை எடுத்துச் செல்வார்கள். அதுபோல நடந்தால், உங்கள் குழந்தையின் மீது கவனம்வையுங்கள். ஏனென்றால், உலகம் நீங்கள் நினைப்பதுபோல் இல்லை. இரட்டை அர்த்த வசனங்களுக்காகவும், செக்ஸ் குறித்துப் பேசவும், செக்ஸ் படங்கள் பார்க்கவும், வக்கிர உணர்வுகளை வெளிப்படுத்தவும் என நிறைய வாட்ஸ்அப் குழுக்கள் இருக்கின்றன. எனவே, தனியறையில் படுக்கும் பிள்ளைகளின் செல்போன் எந்த அளவுக்கு அவர்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதை கவனிக்கவேண்டியது பெற்றோரின் மிக முக்கியக் கடமை.  

யாருடைய செல்போன் லாக் செய்யப்படாமல் இருக்கிறதோ, எந்தக் குடும்பத்தில் ஒருவருடைய செல்போனை மற்றொருவர் சுதந்திரமாக எடுத்துப் பயன்படுத்த முடிகிறதோ அந்தக் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே கம்யூனிகேஷன் சிறப்பாக இருக்கிறது என்று அர்த்தம். இந்தப் புரிந்துணர்வு சிறப்பாக இருந்தால், தனியாகத் தூங்கும் நேரத்திலும் குழந்தைகள் இயல்பாக இருப்பார்கள்; தவறு செய்ய மாட்டார்கள். 

முன்பெல்லாம் குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடுவோம். நிறைய பேசுவோம்; அதில் பாதி வெட்டிக்கதைகளாகக்கூட இருக்கும். குழு மனப்பான்மையுடன் இருந்தோம். ஆனால் இப்போது, `நான்’, `எனது’, `எனக்கு’ என்கிற மனப்பான்மையுடன்தான் இருக்கிறோம். சிறியவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால், அந்த வீட்டுப் பெரியவர்கள் ஆற்றி, தேற்றுவார்கள். ஆனால் இப்போதோ, குழந்தைகள் தங்கள் பிரச்னைகளை எதிர்கொள்ளத் தெரியாமல் தவிக்கிறார்கள். சக மனிதன் மேல் நம்பிக்கைவைக்க வேண்டும் என்பது இந்தக்காலக் குழந்தைகளுக்குத் தெரியாமல் போய்விட்டது. தன் பிரச்னையை அம்மாவிடம் சொல்லலாமா... அப்பாவிடம் சொல்லலாமா என்று குழம்பித் தவித்து, கடைசியில் மனஉளைச்சல் காரணமாகத் தற்கொலை முடிவைக்கூட எடுக்கிறார்கள்.

குழந்தைகள் பிரச்னைகளில் சிக்கித் திணறும்போது பெற்றோரின் அன்பும் ஆதரவும் மிக முக்கியமாகத் தேவைப்படும். `பிரச்னைகளை எதிர்கொண்டு வாழப் பழக வேண்டும்’, `இந்த உலகத்தில் யாருக்குத்தான் பிரச்னையில்லை’, `உன்னால் இதிலிருந்து நிச்சயம் மீள முடியும்’ என்பது போன்ற நம்பிக்கை வார்த்தைகளால் அவர்களை நல்வழிக்குத் திருப்ப வேண்டும். 

குழந்தைகள் தனியாகப் படுத்தால் நல்லதல்ல, தனியறையில் இருப்பதால் அவர்கள் தனித்துவிடப்படுவார்கள் என்கிற கூற்றும் உண்மையல்ல. ஒரே அறையில் எல்லோரும் ஒன்றாகப் படுத்துக்கொண்டு குழந்தைகளைத் தனித்துவிடுவதுதான் பிரச்னை. குழந்தைகளுடன் பெற்றோர் நிறைய பேச வேண்டும், அன்பு செலுத்த வேண்டும். அவர்களுடன் நல்ல தொடர்பிலிருக்க வேண்டும். 
தொலைதூரத்தில் படிக்கச் செல்லும் சில குழந்தைகள் பெற்றோர் நினைவுடனேயே இருப்பார்கள். பெற்றோருடன் வசிக்கும் சில குழந்தைகள் அவர்களை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். எனவே, தூரம் ஒரு பொருட்டில்லை. தனி அறை ஒரு விஷயமே அல்ல. எவ்வளவு தள்ளி இருந்தாலும் பெற்றோர்-பிள்ளை உறவு அன்பானதாகவும், நம்பிக்கைக்குரியதாகவும், ஒளிவு மறைவு இல்லாததாகவும்,  `கம்போர்ட் ஸோன்’ (Comfort Zone) ஆகவும் இருக்க வேண்டும். இப்படியாக அவர்களுக்கிடையே நல்ல புரிந்துணர்வு இருந்தால், தன் பெற்றோர் சார்ந்த நல்ல நினைவுகள் குழந்தைகளை நல்லமுறையில் வழிநடத்தும். 
 
பதின்பருவக் குழந்தைகளுக்கு காலையில் நடந்த ஏதோ ஒரு நிகழ்வு குறித்த பயம், குழப்பம், சந்தேகம், நிம்மதியற்ற உறக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். அதிலும் தனியாகத் தூங்கும்போது இந்த உணர்வுகள் அவர்களை அதிகமாக அலைக்கழிக்கும் சூழல்கூட ஏற்படலாம். அப்படியொரு சூழல் ஏற்பட்டால், அதைக் கண்டு பெற்றோர் பதற்றப்படத் தேவையில்லை. குழந்தை தன்  பிரச்னை குறித்து உங்களிடம் பேசுமளவுக்கு அவர்களுக்குத் தேவையான சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும். 

`பள்ளியில் என்னைப் பார்த்து சக மாணவன் காதலிப்பதாகச் சொன்னான். எனக்கு மிகவும் பயமாகிவிட்டது. நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். அதைப் பற்றி யோசித்து யோசித்து எனக்குள் பதற்றம் வந்துவிட்டது. இரவு முழுக்கத் தூங்கவில்லை’ என்று பதின்பருவ வயதிலுள்ள மகள் உங்களிடம் சொன்னால், முதலில் காதுகொடுத்துக் கேளுங்கள். அதன் பிறகு உங்கள் மகளுக்கு தைரியம் கொடுங்கள். 

`இது போன்ற காதல் இந்த வயதுக்கு ஏற்புடையதல்ல. அது முதலில் காதலே இல்லை. அதனால் அந்த வார்த்தைகளை நம்பிவிடாதே. பயம்கொள்ளாதே. நாங்கள் உனக்குத் துணையாக இருக்கிறோம். அதே நேரம் நீயும் கவனமாக இரு’ என்று அவள் மனம் நோகாத அளவுக்குப் பேச வேண்டும். அதை விட்டுவிட்டு, `தனியாகப் படுப்பதால்தான் குழந்தைக்கு இது போன்ற எண்ணங்கள் ஏற்படுகின்றன’ என்று சொல்லக் கூடாது. ஒரு குழந்தைக்குப் பிரச்னை இருந்தால், அந்தக் குழந்தை ஒரே அறையில் பெற்றோருடன் படுத்திருந்தால்கூட பயம், தனிமை உணர்வுடன்தான் இருக்கும் என்கிற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

பதின்பருவக் குழந்தைகள் செல்போன் மற்றும் இணையத்தின் உதவியால் செக்ஸ் பற்றி நிறையவே தெரிந்துகொள்வதாக நாம்  தவறாகப் புரிந்துகொள்கிறோம். பெற்றோருடன் ஒரே அறையில் படுத்துத் தூங்கும் குழந்தை சரியாக இருப்பான். தனியறையில் படுக்கும் குழந்தை கெட்டுப்போய்விடுவான் என்று அர்த்தமில்லை. தொழில்நுட்பம் சார்ந்த வெளியுலகம் அவனுக்கு செக்ஸ் குறித்த நிறைய விஷயங்களை அறிமுகம் செய்ய ஆரம்பிக்கிறது. எது சரி, தவறு என்று பிள்ளை அதன் பிறகு குழம்ப ஆரம்பிக்கிறான். எனவே, செக்ஸ் குறித்த விழிப்புஉணர்வைப் பெற்றோர் குழந்தைகளுக்குக் கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

செக்ஸ் குறித்து பிள்ளைகளிடம் எப்படிப் பேசுவது என்று பெற்றோர் யோசிக்க வேண்டாம். கன்னத்தில் அதிகமாகப் பருக்கள் இருக்கும் ஒருவனின் இரண்டு நாள் தாடியை, பருக்களில் அடிபடாமல் மழிக்கச் சொன்னால் எவ்வளவு கவனமாக அந்த வேலையைச் செய்வோமோ, அதுபோல மிகுந்த கவனமாக, லாகவமாகக் குழந்தைகளிடம் பேச வேண்டும். சில விஷயங்களை நேரடியாகவும், சிலவற்றை மறைமுகமாகவும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். பாலியல் சார்ந்த விஷயங்கள் குறித்து மட்டுமல்ல... தேர்வு பயம், நண்பர்களுக்குள் சண்டை, சக மாணவர்களின் மிரட்டல் போன்ற பல பிரச்னைகளால் பாதிக்கப்படலாம். இவை இரவு நேரத்தில் தூங்கவிடாமல் ஆட்டுவிக்கலாம். இத்தகையப் பிரச்னைகள் குறித்த பயம் அவர்களைத் தூங்கவிடாமல் செய்யும். அப்படியில்லாமல் தனியறையில் பிள்ளைகள் படுப்பதால் அவர்களுக்கு பயம் ஏற்படுவதாக பொத்தாம் பொதுவாகச் சொல்லக் கூடாது.

பள்ளி முடிந்து வீடு திரும்பும் பிள்ளையிடம் ‘ஒழுங்காகப் படித்தாயா, ஸ்டார் வாங்கினாயா, பேரன்ட்ஸ்-டீச்சர்ஸ் மீட்டிங் எப்போது?’ என்பது பற்றித்தான் பெரும்பாலான பெற்றோர் கேட்பார்கள். அப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்காமல், `பள்ளிக்குக் கொண்டு சென்ற மதிய உணவை முழுவதுமாகச் சாப்பிட்டாயா, நன்றாக விளையாடினாயா, பாட வேளைகள் எப்படி இருந்தன, யாராவது மிரட்டினார்களா?’ என்று குழந்தைகளிடம் அன்பாகக் கேட்க வேண்டும். அவன் மனம் நோகும்படி ஏதும் நடந்திருந்தால், அவனுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும். 

பாடப் புத்தகங்களை வாந்தியெடுக்கும் இயந்திரமாகக் குழந்தைகளைத் தயார் செய்யாமல் அவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களா, விளையாடுகிறார்களா, மற்றவர்களுடன் பேசுகிறார்களா, நட்பாக இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். சமுதாயத்துடன் இணைந்து செயல்படும் ஆற்றல் குழந்தைகளிடம் காணப்படுகிறதா, பள்ளி செல்லும்போது மகிழ்ச்சியுடன் செல்கிறார்களா என்பதை கவனிக்கவேண்டியது அவசியம்.

பள்ளியில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், நீங்களே பள்ளி சென்று ஆசிரியர்களிடம் பேசி, அதைச் சரிசெய்ய முயல வேண்டும். குழந்தைகள் செல்லும் இடத்துக்கெல்லாம் நாமும் உடன் செல்ல முடியாது. ஆனால், சிறந்ததொரு வழிகாட்டியாக நம்மால் இருக்க முடியும். பதின்பருவ வயதில் குழந்தைகள் சில நேரம் சறுக்கத்தான் செய்வார்கள். அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க முயற்சி செய்யுங்கள். மற்றபடி தனியறைக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் மனச்சிக்கலுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது’’ என்கிறார் மருத்துவர் அசோகன்.  
  

No comments:

Post a Comment