Wednesday, June 12, 2019

உறவுகளின் உன்னதம் thanks to dinamalar.com


உறவுகளின் உன்னதம்...

 Updated : ஜூன் 12, 2019  Added : ஜூன் 12, 2019  கருத்துகள் (1)

ஆறுதல் கூற ஆளில்லை:
தங்கைக்கு திருமணத்தேதி குறித்த பின்பு தந்தையின் சுமைகளை இறக்கி வைக்க தோள் கொடுத்து தாங்கும் கூட்டம்தான் சகோதரர்கள். ஆனால் இன்று ஒவ்வொரு பெண்ணும் சொந்த பந்தம் ஏதுமின்றி, ஆறுதல் கூற ஆளின்றி தவிக்கிறார்கள். நல்ல நிகழ்வுகளாக இருந்தாலும், துக்க நிகழ்வுகளாக இருந்தாலும் அவற்றிற்காக நாம் ஒதுக்கும் நேரம் வெறும் அரைநாள் தான், அதற்கு பின்னால் நீ யாரோ? நான் யாரோ? என்று கூறிவிட்டு இயந்திரத்தில் பணம் எடுப்பதற்காக இயந்திரத்தனமாய் வாழ்கிறது ஒரு கூட்டம்.

அண்ணன், தம்பிகள்:
அந்த நாளில் ஒவ்வொரு ஆணுக்கும் கஷ்டம் என்று வந்தால் அதில் பங்கு கொள்வதற்கும், கை கொடுத்து காப்பாற்றுவதற்கும், காலுான்றி நிற்பதற்கும் காரணமாக இருந்தவர்கள்தான் அண்ணன், தம்பிகள். ஆனால் இனிமேல் அப்படியெல்லாம் ஒரு உறவுக்கு வழியுமில்லை, வாய்ப்பும் இல்லை. ஒரு குழந்தைக்கு இருக்கும் ஒரே ஒரு உறவு அப்பா, அம்மா மட்டும்தான், அந்த ஒரு குழந்தையையும் படிக்கும் காலத்தில் விடுதியில் சேர்த்து இயந்திரமாக்குகிறேம். தந்தையும், தாயும் வேலைக்குச் சென்றல் கூட எந்த ஒரு விலங்கும், பறவையும் தனது குழந்தைகளை காப்பகத்தில் விட்டுச் சென்றதில்லை. அதன் பின்பு அந்தப் பிள்ளை வளர்ந்து நம்மை முதியோர் காப்பகத்தில் சேர்த்து விட்டு அந்நியச் செலாவணியை சம்பாதிக்க ஆயிரம் மைல்களுக்கு அப்பால் பறக்கிறார்கள். குடும்பத்தில் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால், மண்டியிட்டுக் காத்திருப்பதற்கும், சமையல் செய்வதற்கும், நோயாளியை பராமரிப்பதற்கும் ஆள்மாற்றி விடுவதற்கும், உணவு பரிமாறவும், கடைத்தெருவுக்கு சென்று வருவதற்கும் என்று ஓடி ஓடி பாசத்தை பகிர்ந்து கொண்டது அந்த காலம்.

பாசம் இருக்குமா:
இன்று மருத்துவமனையில் சேர்த்த நோயாளியுடன் அவரது துணை இருந்தாலே உலக அதிசயம். அவர்களுக்கு பணிச்சுமை இருக்கிறதே? அவர்கள் போகாவிட்டால் அலுவலகத்தை யார் பார்த்துக் கொள்வார்கள். பணத்திற்காக பணி செய்பவர்கள் இருக்கலாம், அதில் பாசம் இருக்குமா? பள்ளிக்கு செல்லும் பெற்றோர், ஆசிரியரிடம் தன் குழந்தையை தண்டிப்பதற்கு உரிமை அளித்தனர். அதனால் குழந்தைகள் கண்டிப்புடன் படித்தனர்; அதனால் மேன்மை பெற்றனர். ஆனால் இன்று நானே மகனிடம் கேள்வி கேட்பதில்லை; நீங்கள் ஏன் கேட்க வேண்டும்? என்று ஆசிரியரிடம் கேட்கும் பெற்றோர் விளைவை உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை. சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சிறுவயதில் சண்டை போட்டுக் கொள்ளும் குழந்தைகள் தான் வளர்ந்து விட்ட பிறகு பெற்றோருக்கு ஏதாவது என்றால் ஓடிவந்து பார்ப்பார்கள். கணவன், குடும்பம், குழந்தை என்று அத்தனை விஷயங்கள் இருந்தாலும் பெற்றவர்களுக்காக அத்தனையும் விட்டுவிட்டு முதலில் வந்து நிற்பார்கள். சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்று தனது மகனுக்கு தங்கையின் மகளையும், தனது மகளுக்கு மனைவியின் அண்ணன் மகனையும் மணம் முடித்து அழகு பார்த்த கூட்டம் வாழ்ந்தது அந்தக் காலம்.

பெயர் தெரியாத சொந்தம்:
ஆனால் இன்று சொந்தக்காரர்களின் பெயர் தெரியாது, அவர்களது உறவுமுறை தெரியாது, அவர்கள் முக்கியத்துவமும் தெரியாது. அடுத்தவர்கள் ஆசைகளை விட நம்முடைய பேராசை மேலோங்குகிறது. ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் நாலுகிரவுண்டு நிலத்தில் கடன் வாங்கி வீடுகட்டி வாங்கிய கடனுக்காக வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிச்சு அதுக்கு பின்னால், பிள்ளையை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி விட்டு, வீட்டின் மேற்கூரையை வேடிக்கை பார்ப்பதற்காகவா இத்தனை பாடுபட்டோம் என நினைப்போம்.

யார் அனாதை:
ஒரே ஒரு முறை நம் கடைசி காலத்தை நினைத்துப் பாருங்கள். இந்த உலகம் பணமில்லாத ஒருவனை அனாதை என்று சொல்லுவதில்லை. ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடிகள் வைத்து இருந்தாலும் அனாதைதான் என்பதை மறந்து விடாதீர்கள். வயதான காலத்தில் நாதியற்று போகவா பாடுபட்டு ஓடியோடி உழைக்கிறீர்கள். உறவுகளின் உன்னதத்தை உணருங்கள், உறவுமுறைகளை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். ஆண்டிராய்டு அலைபேசியில் ஆங்கிரி பேர்டு விளையாடுவதை புறந்தள்ளச் சொல்லி விடுமுறை நாளில் உறவினரோடு அவர்கள் வீடுகளுக்குச் சென்று உணவருந்தி, விளையாடி, ஓய்வெடுத்து, கதைபேசி, களிப்படையச் சொல்லுங்கள்.

--எஸ்.ராஜசேகரன், தலைமை ஆசிரியர், இந்து மேல்நிலைப்பள்ளி வத்திராயிருப்

No comments:

Post a Comment