Sunday, March 20, 2016

How to keep good relationship to neighbours from dinamalar 19/03/2016

மனை வாங்குவோர் கவனத்திற்கு!
சில ஆண்டுகளுக்கு முன், புறநகரில் வீட்டு மனை ஒன்றை வாங்கிப் போட்டிருந்தார் நண்பர். அதை பார்த்து வருவதற்காக, சமீபத்தில், என்னையும் அழைத்துச் சென்றார். பக்கத்து மனைக்காரர், நண்பரின் மனையில், இரண்டு அடி அகலத்துக்கு, ஆக்கிரமிப்பு செய்து, கட்டடம் எழுப்பியிருந்தது தெரிய வந்தது.
'என்ன இப்படி செய்துட்டீங்க...' என்று நண்பர் கேட்டதற்கு, 'நாங்கள் சரியாத்தான் கட்டியிருக்கோம்; மத்தவங்க இடத்தை ஆக்கிரமிக்க வேண்டிய அவசியம் இல்ல...' என்று கறாராக பேசினார்.
உடனே, சர்வேயரை வரவழைத்து, இரண்டு பேரின் மனைகளை அளந்ததில், பக்கத்து மனைக்காரரின் அத்துமீறல் தெரிந்தது.
'வீடு கட்டிக் கொடுத்த பில்டர் தப்பு செய்துட்டான்...' என்று பழியை திசை திருப்பிய பக்கத்து வீட்டுக்காரர், 'இரண்டு அடிக்கான பணத்தை கொடுக்கட்டுமா அல்லது அந்த இடம் வரைக்கும் இடிச்சுடட்டுமா...' என்று கேட்க, நண்பர் கூலாக, 'வேணாம்... எங்க இடத்துல கட்டியிருக்கீங்கன்னு நீங்க தெரிஞ்சுக்கணும்ன்னு தான் அளந்து காட்டினேன்...' என்றார் பெருந்தன்மையுடன்!
'பணம் வாங்கியிருக்கலாமே...' என்றேன்.
'தவறு என் மேலயும் இருக்கு; மனையை வாங்கிப் போட்டு, வருஷக் கணக்கா திரும்பிப் பாக்காமல் இருந்துட்டேன். அவ்வப்போது போய் பார்த்திருந்தால், பக்கத்து மனைக்காரர் வீடு கட்டும் போது, ஆரம்பத்திலேயே இதை தடுத்திருக்கலாம். குறைந்தபட்சம், என் இடத்தின் எல்லைகளில் அடையாளக் கல் நட்டு வைத்திருக்கலாம்; அதையும் செய்யல. நஷ்ட ஈடாக பணத்தை வாங்கலாம் தான்; ஆனா, எதிர்காலத்தில், அங்கே வீடு கட்டி குடியேறும் போது, அவரிடம் சுமூகமாக உறவாட முடியாது. அக்கம் பக்கத்தினரிடையே, நல்ல நட்புடன் இருப்பது அவசியம். அதற்காக, கொஞ்சம் விட்டுக் கொடுத்து தான் போகணும்...' என்றார்.
அவர் கூறியதை ஏற்றுக் கொண்டேன்.
— சின்ன சம்பத், சென்னை.

விளையாட்டும் முக்கியமே!
தனியார் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியையான என் தோழியை சமீபத்தில் சந்தித்த போது, மாணவியர் விளையாட்டில் ஆர்வம் காட்டாதது குறித்து ஆதங்கப்பட்டவள், 'பெரும்பாலான உயர் வகுப்பு மாணவியர் விளையாட்டு வகுப்பையே வெறுக்கிறாங்க. வெயிலில் நின்று, உடற்பயிற்சி செய்வதும், விளையாடுவதும், அவங்களுக்கு வேப்பங்காயாய் கசக்குது. ஏதாவது, நொண்டிச் சாக்கு சொல்லி, விளையாட்டு வகுப்பில் இருந்து 'எஸ்கேப்' ஆகின்றனர். இதற்கு, பெற்றோரும் உடந்தை. 'என் பொண்ணுக்கு, 'ஸ்கின்' அலர்ஜி, வெயில் ஒத்துக்காது, மயக்கம் வரும்...' என்று டாக்டர் சர்டிபிகேட் வாங்கி கொடுக்கிறாங்க.
'டீன் - ஏஜ் மாணவியர், வீட்டிலும் விளையாடுறதில்ல; பள்ளியில் விளையாடினாலாவது உடற்பயிற்சி கிடைக்கும் என்று எடுத்துச் சொன்னாலும், செவிடன் காதில் ஊதிய சங்காகத் தான் இருக்கிறது...' என்று அலுத்துக் கொண்டாள்.
முன்பெல்லாம் பெண் குழந்தைகள், வீட்டு வேலை செய்தனர். அதுவே, அவர்களுக்கு உடற்பயிற்சியாகவும் அமைந்தது. ஆனால், இன்றோ உடல் உழைப்பும் இல்ல; விளையாட்டும் கிடையாது. இதனால், வளர்ந்த பின், கர்ப்பப்பை தொந்தரவுகளும், குழந்தை பேறின்மையும், அதிகரிக்கிறது. பெற்றோரே... இனியாவது உங்கள் பெண் குழந்தைகளை, ஆரோக்கியமாக வளருங்கள்!
— எச்.தஸ்மிலா, கீழக்கரை.

No comments:

Post a Comment