Monday, March 28, 2016

KevinCare Renganathan-Business Secrets-1 - Nanayam Vikatan


பிசினஸ் சீக்ரெட்ஸ் - 1
தொழில்முனைவோர்களுக்கு துணை நிற்கும் பிராக்டிகல் தொடர்கவின்கேர்சி.கே.ரங்கநாதன்
வாங்க பிசினஸ் செய்யலாம்!
ல்லா மனிதர்களுக்கும் ஆசை உண்டு. எனக்கும் ஓர் ஆசை உண்டு. நம் நாட்டில் பிசினஸ் செய்கிறவர்களின் எண்ணிக்கை இன்னும் பல நூறு மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பதே என் ஆசை. இதற்கு, பிசினஸ் அல்லது தொழில் செய்வது குறித்த அறிவை நம் மக்களிடையே பரப்ப ஓர் இயக்கமே தொடங்கப்பட வேண்டும். நம் இளைஞர்களுக்கு ஏதோ ஒரு நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை என்றில்லாமல், எதிர்காலக் கனவுகளை நிஜமாக்கும் பிசினஸ் உலகில் தைரியமாக நுழையத் தேவையான சூழல் உருவாக்கித் தரப்பட வேண்டும்.

நான் எழுதும் இந்தப் புதிய தொடரின் மூலம் கல்லூரிப் படிப்பை முடித்த இளைஞர்கள் பிசினஸ் உலகில் காலடி எடுத்துவைக்கும் வழிகளைச்  சொல்லப் போகிறேன். ஏற்கெனவே தொழில் செய்து வருபவர்கள், ஏதாவது தவறு செய்திருந்தால் அந்தத் தவறை திருத்திக்கொண்டு, சரியாக, வெற்றிகரமாகச் செய்யும் வழிகளை என் அனுபவத்திலிருந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். ஆக, நான் கற்றதை உங்களுக்குக் கற்றுத்தர கடை விரித்துவிட்டேன். இதிலிருந்து உங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொள்ள அழைக்கிறேன்.
ஏன் பிசினஸ்?
சன் பார்மா நிறுவனத்தின் அதிபர் திலிப் சங்வி பற்றி உங்களுக்குத் தெரியுமா?
32 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 10,000 ரூபாயில் திலிப் சங்வி தொடங்கிய சன் பார்மா நிறுவனத்தின் இன்றைய சந்தை மூலதன மதிப்பு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல். இந்த நிறுவனத்தின் வருமானம் சுமார் 27,286 கோடி ரூபாய். திலிப் சங்வி என்கிற ஒரு தொழில் அதிபரால் எப்படி இவ்வளவு பெரிய சாதனையைச் செய்ய முடிந்தது?
திலிப்பின் தந்தையார், மும்பையில் மருந்துக் கடை ஒன்றை நடத்தி வந்தார். கல்லூரியில் படிக்கிற காலத்தில் தன் தந்தைக்கு உதவி செய்வதற்காக அந்த மருந்துக் கடையில் வேலை பார்ப்பார் திலிப். அந்தச் சமயங்களில், மருந்து களின் முக்கியத்துவத்தை அவர் சரியாகப் புரிந்துகொண்டார். மருந்து விற்பனை செய்யும் தொழிலில் இருக்கிற நெளிவுசுளிவுகளை பிராக்டிகலாகத் தெரிந்து கொண்டார்.
அவர் படித்து முடித்தவுடன், தன் தந்தையைப்போல மருந்துக்கடை நடத்துவதே தன் லட்சியம் என்று இருந்துவிடவில்லை. வேறு நிறுவனங் களிடமிருந்து மருந்து வாங்கி விற்பதை விட, நாமே மருந்து தயாரித்து விற்றால் என்ன என்று யோசித்தார். இந்த யோசனை அவரை ஒரு சிறிய மருந்து தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்க வைத்தது.
அவரது முதல் முயற்சி சரியாக அமையவே, அடுத்து அதைவிடச் சிறிதும் பெரிதுமாகப் பல முயற்சிகள். அதிலும் வெற்றி கிடைக்க, அடுத்தடுத்து சிறிய மற்றும் பெரிய மருந்து நிறுவனங்களை வாங்கினார். ரான்பாக்ஸி நிறுவனம் இன்று இவர் கையில் இருக்கிறது. இந்த 32 ஆண்டுகளில் உலக அளவில் ஐந்தாவது பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் அதிபராக உயர்ந்திருக்கிறார் திலிப் சங்வி.
பழகிய பாதையிலேயே நடக்கும் நம்மைப் போன்ற ஒரு மனிதராக திலிப் சங்வி இருந்திருந்தால், என்ன செய்திருப்பார்? தன் தந்தையின் மருந்துக் கடையை இன்னும் சிறப்பாக நடத்துவது எப்படி என்றுதான் யோசித்திருப்பார். அதன்மூலம் ஒரு மருந்துக்கடையைப் பத்து மருந்துக் கடையாக விஸ்தரித்திருப்பார். ஆனால், மருந்து விற்பனையை விட்டுவிட்டு, மருந்து தயாரிப்பு என்று அடுத்தக் கட்டத்தை நோக்கி அவர் நகர்ந்ததுதான் இன்றைக்கு எல்லோரும் அவரை பார்க்க வைத்திருக்கிறது.
இன்றைக்கும்கூட மருந்துத் தயாரிப்பை அவர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிற அதே நேரத்தில், பல புதிய தொழில்களில் உள்ள வாய்ப்பு களைக் கவனிக்கத் தவறுவதில்லை. அடுத்தடுத்த பிசினஸ் முயற்சிகள்தான் திலிப் சங்வியை இன்னும் புதிய உயரத்துக்குக் கொண்டுபோயிருக்கிறது. பத்தாயிரம் ரூபாயில் பிசினஸ் தொடங்கிய திலிப், இன்று பல லட்சம் கோடி ரூபாய்க்கு அதிபதி.
எதற்கு திலிப்பின் கதையைச் சொன்னேன் தெரியுமா?
பிசினஸ் செய்வதன் மூலமே பல ஆயிரம் கோடி ரூபாயை ஒருவர் சம்பாதிக்க முடியும் என்பதை எடுத்துச் சொல்லத்தான். இதற்கு விதிவிலக்கு இருக்கலாம். ஆனால், பிசினஸ் மூலம் கிடைக்கும் பணம் வேறு எதிலும் கிடைக்காது என்பது மட்டும் நிச்சயம்.
இன்றைக்கு கல்லூரிப் படிப்பு படித்து முடிக்கிற நிலையில் இருக்கிற நம் இளைஞர்களின் ஒரே எதிர்பார்ப்பு, படித்து முடித்தவுடன் ஒரு நல்ல நிறுவனத் தில் வேலைக்குச் சேர்த்துவிட வேண்டும் என்பதாகவே இருக் கிறது. பெற்றோர்களின் எதிர்பார்ப்பும் அதுவேதான். இத்தனை ஆண்டுகளாகச் செலவு செய்து குழந்தைகளைப் படிக்க வைத்த பெற்றோர்கள், இனிமேலாவது அவர்கள் மூலம் கொஞ்சம் வருமானம் கிடைக்கட்டுமே என்று நினைப்பது நியாயமான ஆசையே.
மேற்கு நாடுகளில், குறிப்பாக, அமெரிக்காவில் இப்படி யோசிப்பதில்லை. அங்கு கல்லூரிப் படிப்பை முடித்த வுடன், வேலைக்குச் செல்லும் நோக்கத்துக்குத் தரும் மரியாதையை பிசினஸ் தொடங்குவதற்கும் தருகிறார்கள். அதனால்தான் அங்கு புதிது புதிதாக பிசினஸ் செய்யும்ஸ்டார்ட் அப்’ (சிறிய அளவிலான புதிய பிசினஸ் முயற்சி) நிறுவனங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. வித்தியாசமான ஐடியாக்களை அடிப்படையாகக் கொண்டு சிறிய அளவில் அவர்கள் தொடங்கும்ஸ்டார்ட் அப்கள் பிற்பாடு மிகப் பெரிய அளவில் வளர்ந்து பல பில்லியன் டாலர்களைச் சம்பாதித்துத் தந்துவிடுகிறது. அமேஸான், கூகுள், ஃபேஸ்புக் என இதற்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல முடியும்.
ஆனால், நம்மவர்கள் பிசினஸில் நுழையத் தயங்க முக்கியக் காரணமே, எடுத்த எடுப்பிலேயே வருமானம் கிடைக்காதே என்பதுதான். தவிர, பிசினஸ் தொடங்க மூலதனமும் வேண்டுமே! அது நம்மிடம் இல்லையே என்று தயங்கி நின்றுவிடுகிறார்கள் நம்மவர்கள்.
ஆனால், சிறிய அளவிலாவது ஒரு தொழிலைத் தொடங்கி, அதை அடுத்தச் சில ஆண்டுகளுக்குச் சரியாகச் செய்தால், அதன்மூலம் உங்களுக்கு நிச்சயம் வருமானம் வரத் தொடங்கும். இந்த வருமானம் உங்கள் தொழில் வளர்ச்சிக்கேற்ப பல மடங்காக உயரும். ஏதோ ஒரு நிறுவனத்தில் உயரதிகாரியாக ஓய்வு பெறும்போது கிடைக்கும் பணத்தைவிட   பல நூறு மடங்கு அதிக பணம் பிசினஸில் கிடைக்கும்.
ஓலைக்குடிசையில் பிறந்த சாதாரண மனிதனைக்கூடப் பொருளாதார உச்சத்துக்குக் கொண்டுபோய்விடுகிற வல்லமை பிசினஸுக்கு உண்டு. ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியும், கடின உழைப்பும், வித்தியாசமாக யோசிக்கும் திறமையும் இருந்தால், திலிப் சங்வி தன் வாழ்நாளில் அடைந்த வெற்றி நம் எல்லோருக்கும் சாத்தியம்தான்!

இதைப் படித்தவுடன், நான் பிசினஸ் செய்யப் போகிறேன் என்று முடிவெடுத்தவர் களுக்கு என் வாழ்த்துக்கள்! ஆனால், பிசினஸில் நுழையும்முன், நீங்கள் எப்படிப் பட்டவராக இருக்க வேண்டும்?

No comments:

Post a Comment