Friday, May 27, 2016

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து!

வாய்விட்டு சிரிப்போம்... அதுவே மருந்து!
Advertisement
 
 
Advertisement
 
 

Advertisement

''சிரிப்பு இதன் சிறப்பை சீர்துாக்கிபார்ப்பதே நமது பொறுப்பு - மனம்கருப்பா வெளுப்பா என்பதைக்காட்டும் கண்ணாடி சிரிப்பு!
சிந்திக்கத் தெரிந்த மனிதகுலத்துக்கேசொந்தமான கையிருப்பு!வேறு ஜீவராசிகள் செய்ய முடியாதசெயலாகும் இந்தச் சிரிப்பு!''
என்ற நகைச்சுவை மன்னன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பாடல், சிரிப்பின் மகத்துவத்தை உணர்த்துகிறது.சுவைபட நகைத்தலே நகைச்சுவை. நல்ல கருத்து+சிரிப்பு= நகைச்சுவை என்றால் வரவேற்பிற்குரியது. எதிராளியின் மனதைப் புண்படுத்தாத வேடிக்கை, விளையாட்டு, தமாஷ், ஹாஸ்யம், கேலி என எல்லாமே நகைச்சுவை வகையைச் சார்ந்தவையே. இன்றைய மாற்று 
மருத்துவ முறைகளில் சிரிப்பும் ஒரு சிகிச்சை முறையாக ஏற்கப்பட்டிருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல, 'வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்' என்பது நம் முன்னோர்கள் சொல்லி வைத்த அனுபவ உண்மைதானே. 'சிரிப்பும் சந்தோஷமும் நோயாளி குணமடைவதைத் துரிதப்படுத்தும்' என்கின்றனர் அமெரிக்க மருத்துவர்கள். 
நகைச்சுவையில் எத்தனையோ பயன்கள் உண்டு. எனினும், 'நல்ல நகைச்சுவை 
சூழ்நிலையின் இறுக்கத்தைப் போக்கிவிடும்' என்பது சிறப்பு.
யோகாவில் 'நகைப்புக்கிரியை' என்று ஒருவித அற்புதக் கிரியை உண்டு. அத்துடன் 'சிரிப்புத் தியானம்' என்ற ஒருவகைத் தியானமும் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. 
ஜப்பானில் 'சிரிக்கும் புத்தர்' என்ற ஒருவர் இருந்தார். அவரது உண்மையான பெயர் 'ஹோட்டே' என்பதாகும். அவர் எப்பொழுதும் வாய்திறந்து பேசமாட்டார். மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று வயிறு குலுங்கும்படித் தனியாகச் சிரிக்க ஆரம்பித்து விடுவார். அவர் சிரிக்க 
ஆரம்பித்தால் நிறுத்த மாட்டார். அதைப் பார்ப்பவர்களும் தாங்களாகவே சிரிக்க ஆரம்பித்து விடுவர். சிரிப்பின் பயன்கள் வாய் விட்டுச் சிரிப்பதன் மூலம், முகத்தில் பொலிவும், கண்களில் ஒளியும் கூடும். மேலும் கண்களில் சாந்தமும், தெளிவும் உண்டாகும். நுரையீரல் 
முழுமையாக விரிந்து, பிராண சக்தியை முழுவதும் கிடைக்கச் செய்கிறது. இருதயம் சிறப்பான முறையில் வேலை செய்கிறது. வயிற்றில் ஜீரண சக்தி துரிதமாக நடைபெறுகிறது. சிறுநீரக செயற்பாடும் நன்கு அமைகிறது. நரம்பு மண்டலமே ஒருவிதப் புத்துணர்ச்சியை பெறுகின்றது. தொண்டைப் பிரச்னைகள், வாய்வு தொந்தரவுகள், மலச்சிக்கல் போன்றவற்றிலிருந்து விடுபட முடிகிறது. சிரிக்கச் சிரிக்க மூளைக்குத் தேவையான ரத்த ஓட்டம், நன்கு துரிதமாகச் செல்கிறது. மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் முழுமையாய் கிடைக்கிறது. இதனால் மூளை புத்துணர்ச்சி அடைவதுடன், ஞாபக சக்தி 
அதிகரிக்கிறது. நகைச்சுவை உணர்வானது, மன ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. மனம் ஆரோக்கியமாக இருந்தால், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
கடுமையான போராட்டங்களையும், பெரும் மன உளைச்சல்களையும் ஒரே ஒரு சிரிப்பு வென்று விடும். அந்தக் காலங்களில், அரசர்கள் மன இறுக்கங்களுக்குள்ளாகி விடுவார்கள் என்பதால், அரசவையில் விதுாஷகன் என்னும் விகடகவிகள் தங்களது நகைச்சுவை உணர்வால் சூழ்நிலையின் இறுக்கத்தை மாற்றி சகஜநிலைக்குக் கொண்டு வரும் பணியைச் செய்தனர்.
சிரிப்பு, உற்சாகம், மலர்ச்சி, மகிழ்ச்சி, ஆளுமை போன்றவற்றை உள்ளடக்கியதே நகைச்சுவை உணர்வு ஆகும். நல்ல நகைச் சுவை உணர்வு கொண்டவன் தான் சிறந்த ஆளுமை படைத்தவனாக இருப்பான் என்கின்றனர் சமூகவியலார். “நகைச்சுவை உணர்வு மட்டும் என்னிடத்தில் இல்லாதிருந்தால் நான் என்றோ இறந்திருப்பேன்” என்று மகாத்மா காந்தி கூறியுள்ள கருத்து இதனை மெய்ப்பிக்கிறது.
இறுக்கம் தளரும் 'ஹியூமர் தெரபி' என்று அழைக்கப்படும் சிரிப்பு மருத்துவம், நோய்களைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜலதோஷம் போன்ற சுவாசம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க, 'இம்மியூனோ குளோபுலின் ஏ' என்ற நோய் எதிர்ப்பு 
சக்தி அவசியம் தேவை. சிரிக்கும் போது உமிழ்நீரில் இதன் அளவு அதிகரிக்கிறது என்கிறது மருத்துவ ஆராய்ச்சி. வலியின் தீவிரத்தைக் குறைப்பதிலும் சிரிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. சிரிக்கும் போது, உடலில் 'எண்டோர்பின்' என்கிற இயற்கையான 'வலிகுறைப்பிகள்' உருவாகின்றன. சிரிப்பதால் தசைகளின் இறுக்கம் தளர்வதோடு, இந்த எண்டோர்பின்களும் சேர்வதால் இரட்டிப்பு பலன் கிடைக்கிறது. மேலும், உயர் ரத்த அழுத்த நோய் வருவதையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது சிரிப்பு என்பது நிரூபணமாகிஉள்ளது.
தலைவர்களும் நகைச்சுவை உணர்வும் பெரும்பாலான தலைவர்களிடம், நகைச்சுவை உணர்வு மேலோங்கியிருந்தது. அவர்கள் எதிராளியின் குறைகளை ஆவேச வார்த்தைகளில் கண்டிப்பதை விட, நகைச்சுவை உணர்வோடு எடுத்துக் காட்டும் போது நல்ல பலன் கிடைக்கும் என்பதை உணர்ந்திருந்தார்கள். 
பால கங்காதர திலகரை உளவு பார்ப்பதற்காக பிரிட்டிஷ் அரசு, ரகசிய போலீஸ்காரர் ஒருவரை சமையல்காரனாக அனுப்பியது. அவனும் ஆறுமாதமாக அவரிடம் வேலை பார்த்தான். அந்த ஆசாமி திலகரிடம், “எசமான், சம்பளம் போதவில்லை, கொஞ்சம் உயர்த்த வேண்டும்” என்றான்.
திலகர் சிரித்துக் கொண்டே, 'என்னப்பா இது, நான் மாதம் ஆறு ரூபாய் தருகிறேன், சர்க்கார் இருபத்தெட்டு ரூபாய் கொடுக்கிறார்கள். இன்னும் திருப்தி
இல்லையா உனக்கு?' என்று கேட்டார். பிறகு அவனைக் காணவேயில்லை.ஆங்கிலேயர் ஒருவர் மிகுந்த ஆணவத்துடன் “சூரியன் ஒரு போதும் அஸ்தமிக்காத ஏகாதிபத்தியத்தை நாங்கள் பெற்றிருக்கிறோம்” என்று பெருமையடித்தார். உடனே சுபாஷ்சந்திர போஸ் “ஆமாம், பிரிட்டிஷ்காரனை இருட்டிலே விட்டு வைக்க, கடவுளுக்குக் கூட நம்பிக்கை இல்லை” என்று நகைச்சுவையாகக் கூறி மடக்கினார். 
காமராஜரிடம் கிராம மக்கள் வந்து “ஐயா, எங்களுக்குச் சுடுகாட்டுப் பாதை சரியாயில்லை. நாங்கள் சுடுகாட்டுக்குச் செல்ல வசதியாய் ஒரு பாதை வேண்டும்,” என்றனர். 
அதற்கு அவர், “சரிதான், நீங்க வாழறதுக்குப் பாதை போட நான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன், நீங்க என்னடான்னா, செத்தவனுக்குப் பாதை போடச் சொல்றீங்க” என்றார் நகைச்சுவையாக.
நேருவின் நகைச்சுவை ஜவஹர்லால் நேருவின் காரை வழிமறித்து, அவரை இறங்கவைத்து, “சுதந்திரம் சுதந்திரம் என்று பேசுகிறீர்களே, சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன கிடைத்தது?” என்று ஆவேசமாகக் கேட்டார் ஒருவர். 
நேரு அவருடைய தோளைத் தட்டித் கொடுத்து, “உனக்கு என்ன கிடைக்கவில்லை என்று நினைக்கிறாய்? ஒரு நாட்டின் பிரதம மந்திரியை வழி மறித்து உன் கருத்தை 
நீ சொல்ல முடிகிறதே, அது தானப்பா சுதந்திரம்” என்றார் நகைச்சுவை இழையோட.மகாத்மா காந்தியிடம் ஆங்கிலப் பத்திரிகையாளர் ஒருவர் கிண்டலாக, “உங்க நாட்டு மக்கள் உங்களைப் போய் தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்களே, உங்களை விட திறமையான தலைவர் அவர்களுக்குக் கிடைக்கவில்லையா'' என்று கேட்டார். அதற்கு காந்தி, “உங்களைப் போன்ற பிரிட்டிஷ்காரர்களைச் சமாளிக்க நானே போதும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்” என்று சிரித்தபடி கூறினார்.
ஒரு குழந்தை சராசரியாகத் தினமும் 400 முறை சிரிக்கிறதாம். ஆனால் பெரியவர்களோ, 15 முறை தான் சிரிக்கிறார்களாம். தினமும் குறைந்தபட்சம் 30 முறையாவது சிரிக்க வேண்டும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகிறார்கள். 
ஆகவே, அனைவரும் சிரியுங்கள்…… சிரியுங்கள்… வாய்விட்டுச் சிரியுங்கள்!-பா. பனிமலர்தமிழ்த்துறைத் தலைவர்,இ.மா.கோ. யாதவர் மகளிர் கல்லூரி,
மதுரைpanimalartamil75@gmail.com

No comments:

Post a Comment