Sunday, February 5, 2017

Last updated : 12:00 (06/01/2017) வாதம், பித்தம், கபம்... மந்திரக் கூட்டணி! நலம் நல்லது-44 #DailyHealthDose thanks vikatan.com


வாதம், பித்தம், கபம்... மந்திரக் கூட்டணி! நலம் நல்லது-44 #DailyHealthDose

`எதைத் தின்றால் `பித்தம்’ தெளியும்?’, `ஒருவேளை `வாத’க் குடைசலாய் இருக்குமோ’, `நெஞ்சில் `கபம்’ கட்டியிருக்கு...’ என்கிற உரையாடல்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து வருகின்றன. ஆனால், நம் மூத்த தலைமுறையில் இந்த மூன்றும் மிக முக்கியமானவை. `வாதம், பித்தம், கபம்’ அல்லது `வளி, அழல், ஐயம்’ எனும் மூன்று விஷயங்களும் நம் பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். உடலின் ஒவ்வொர் அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை. இவற்றைக் குறித்த அடிப்படை அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். 
வாதம் பித்தம் கபம்
`முத்தாது’ என்று தமிழ்ச் சித்த மருத்துவத்திலும், `த்ரீதோஷா’ என்று ஆயுர்வேதத்திலும் பேசப்படும் இந்த மூன்று விஷயங்களைத்தான் 
`மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று’
 
- என்று நம் திருவள்ளுவர் நோயின் அடிப்படையைச் சொல்லியிருக்கிறார். 
வாதம், பித்தம், கபம் 
வாதம், நம் உடலின் இயக்கத்தை, தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை, சரியாக மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக்கொள்ளும். 
பித்தம், தன் வெப்பத்தால் உடலைக் காப்பது, ரத்த ஓட்டம், மன ஓட்டம், செரிமான சுரப்பிகள், நாளமில்லாச் சுரப்பிகள் போன்ற அனைத்தையும் இயக்கும் வேலையைப் பார்க்கும். 
கபம், உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து, எல்லாப் பணிகளையும் தடையின்றிச் செய்ய உதவியாக இருக்கும்.
கீரை
தவிர்க்கவேண்டிய, சாப்பிடவேண்டிய உணவுகள்!
* வாதம், பித்தம், கபம் மூன்றும் சரியான கூட்டணியாகப் பணிபுரிந்தால்தான், உடல் இயக்கம் சீராக நடக்கும். அதற்கு உணவு மிகவும் முக்கியம். ஒருவருக்கு மூட்டுவலி உள்ளது, கழுத்து வலி எனும் ஸ்பாண்டிலைசிஸ் உள்ளது என்றால், வாதம் சீர்கெட்டிருக்கிறது என்று அர்த்தம். அவர், வாதத்தைக் குறைக்கும் உணவைச் சாப்பிட வேண்டும். 
* புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமானத்துக்கு சிரமம் தரும் மாவுப் பண்டங்கனைத் தவிர்க்க வேண்டும். இவை, வாயுவைத் தரும்; வாதத்தைக் கூட்டும். மூட்டுவலி, மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமா நோயாளிகள் இந்த உணவுகளைக் கூடிய வரை தவிர்க்க வேண்டும். வாயுவை வெளியேற்றும் லவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு, சீரகம், முடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது வாதத்தைக் குறைக்க உதவும். 
மிளகு
* பித்தம் அதிகரித்தால், அஜீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னைகள் வரக்கூடும். அல்சர், உயர் ரத்த அழுத்தம் என பித்த நோய்ப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இன்றைய வாழ்வியல் சூழலில் பல நோய்கள் பெருகுவதற்கு பித்தம் மிக முக்கியக் காரணம். பித்தத்தைக் குறைக்க உணவில் காரத்தை, எண்ணெயைக் குறைக்க வேண்டும். கோழிக்கறி கூடவே கூடாது. 
* அதிகமாக கோதுமையைச் சேர்ப்பதுகூட பித்தத்தைக் கூட்டும். அரிசி நல்லது... ஆனால் கைக்குத்தல் அரிசியாகப் பார்த்துச் சாப்பிடுவது நல்லது. கரிசலாங்கண்ணிக்கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி... இவையெல்லாம் பித்தம் தணிக்கும். மனத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியம். 
எலுமிச்சை
சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு... என கபத்தால் வரும் நோய்கள் பல. பால், இனிப்பு, தர்பூசணி, மஞ்சள் பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய், வெள்ளரி, குளிர்பானங்கள், மில்க் ஸ்வீட், சாக்லேட் இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள். இவற்றை மழைக்காலத்திலும், கோடைகாலத்தில் அதிகாலை மற்றும் இரவு வேளையிலும் தவிர்க்கலாம். மிளகு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை இவையெல்லாம் கபம் போக்க உதவும். அலுவலகத்திலிருந்து தும்மல் போட்டுக்கொண்டே வரும் வாழ்க்கைத்துணைக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். தும்மல், அன்றிரவு தூக்கத்தைக் கெடுக்காது. 
வாதம், பித்தம், கபம் - இந்த மூன்று வார்த்தை மந்திரக் கூட்டணியைக் காப்பதில், சமையல்கூடத்துக்கு பங்கு உண்டு. நம் பாரம்பரிய அறிவைப் பாதுகாப்போம். அது, நம்மையும் நம் தலைமுறையையும் பாதுகாக்கும். 

No comments:

Post a Comment