Saturday, February 18, 2017

சிவராத்திரி thanks to dinamalar

பிப்., 24 - சிவராத்திரி

சிவன் என்றால் ஜீவன் (உயிர்) மற்றும் மங்கலம் தருபவர் என்று பொருள். உயிர் இருந்தால் தான், உடலுக்கு மங்கலம். அருவமாகவும், அருவுருவமாகவும் இருக்கும் சிவபெருமான், தட்சிணாமூர்த்தி கோலத்தில் ஞானத்தை அருளி, பைரவராகவும், வீரபத்திரராகவும் இருந்து தன் பக்தர்களை காக்கிறார்.
மேலும், லிங்க வடிவில் எழுந்தருளியுள்ள சிவபெருமான், தனக்கும் தன் மனைவிக்கும் இடையே முருகனை, அமர வைத்து, சோமாஸ்கந்தர் என்ற பெயர் பெறுகிறார்.
உருவம் இல்லா ஜோதி வடிவான இறைவனை, திருமந்திரத்தில், 'அன்பே சிவம்' என்கிறார், திருமூலர். வள்ளலாரோ, சிவனிடம், 'அப்பா... நான் வேண்டுதல் கேட்டருள் புரிய வேண்டும்; ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு காட்ட வேண்டும்...' என்று வேண்டுகிறார்.
இத்தகைய சிறப்புடைய சிவனை, மாசி மாத தேய்பிறை சதுர்த்தசியன்று வரும் சிவராத்திரி அன்று விழித்திருந்து வழிபடுகின்றனர் பக்தர்கள்.
பாற்கடலில் இருந்து, சாகா மருந்தான அமுதம் பெற, வாசுகி எனும் பாம்பை கயிறாகவும், மேரு மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்களும், அசுரர்களும் கடலை கடைந்தனர். வாலையும், தலையையும் பிடித்து இழுத்ததால், வலி பொறுக்காத வாசுகி, விஷத்தை கக்கியது. இதனால் தேவர்கள் இறந்து விடுவரே எனக் கருதி அவ்விஷத்தை அருந்தினார், சிவன். பதறிப் போன பார்வதி, கணவரின் கழுத்தைப் பிடிக்க, விஷம் அதற்கு மேல் போகாமல் நீல நிறத்தில் சிறு உருண்டையாக கழுத்திலேயே தங்கி விட்டது. இதனால், நீலகண்டன் என பெயர் பெற்றார், சிவன். கண்டம் என்றால் கழுத்து என்று பொருள்.
இந்நிகழ்ச்சி நடந்தது, ஒரு சதுர்த்தசி திதியில்! அன்று மாலையில், தன் பக்தர்களை மகிழ்விக்க நடனமாடினார், சிவன். இதனால், மகாசிவராத்திரியன்று, மாலையில், முதலில் நடராஜரை வழிபட வேண்டும் என்பது மரபு. தொடர்ந்து, இரவின் முதல் ஜாமத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் ஜாமத்தில் தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் காலத்தில், காளையில் அமர்ந்து அருள்பாலிக்கும் சந்திரசேகரரையும் வழிபட வேண்டும்.
சிவராத்திரியன்று காலையில் விரதத்தை துவங்கி, இரவில் கண்விழித்து,
'சிவாயநம...' என ஜெபித்தபடி, நான்கு கால அபிஷேகத்தை தரிசிக்க வேண்டும். மேலும், சிவபுராணம், தேவாரம் மற்றும் திருவாசகம் படிப்பதும் நன்மை தரும். மறுநாள் காலையில் அன்னதானம் செய்த பின் சாப்பிட வேண்டும்.
இந்நாளில், சிவனுக்கு வில்வார்ச்சனை செய்தால், ஈரேழு ஜென்மத்தில் செய்த பாவம் நீங்கி விடுவதுடன், செல்வ வளமும் பெறுவதோடு, மறுமையில் கைலாயத்தில் வாழும் பேறும் பெறுவர். அத்துடன், பெற்றோருக்கு பெருமை தேடித்தரும் நற்குழந்தைகள் பிறப்பர். மங்களகரமான இவ்விரதத்தை, அனைவரும் அனுஷ்டித்து, சிவன் அருள்பெறுவோம்!

No comments:

Post a Comment